நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் நாகூர் ஒரு விசித்திரமான ஊர் என்று. வீடு தேடி வரும் பிச்சைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்பதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
எங்களூரில் யாசகம் கேட்டு வருபவர்களிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் வேறு சில ஊர்களிலும் இதுபோன்ற வழக்கம் இருக்கக் கூடும். நான் அறிந்திருக்கவில்லை. நான் பார்த்ததைத்தானே நான் எழுத முடியும்.
யாசகம் கேட்டு வருபவர்களுக்கு மனமுவந்து ஈந்திட வேண்டும். அப்படி நம்மிடம் கொடுக்க ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்கள் மனம் நோகாத வண்ணம் சொல்லி அனுப்ப வேண்டும். இதுதான் அதன் நோக்கம்.
இந்தி/உருது மொழியில் “மாஃப் கரோ” என்றால் “(எங்களை) மன்னியுங்கள்” என்று பொருள். “மாஃப்” என்ற உருதுமொழிச் சொல் நாளடைவில் “மாப்பு” என்று தமிழ் அகராதியிலும் ஏறிவிட்டது. “மாப்பு” என்றால் மன்னிப்பு.
நாகூர்லே பிச்சைக்காரர்கள் வந்து யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு கொடுக்க ஏதுமில்லை என்ற சூழ்நிலையில் “மாப்பு செய்யுங்க பாவா” என்பார்கள். பாவா என்ற வார்த்தை தந்தைக்குச் சமமான சொல்.
“ஒண்ணுமில்லே போயா”, “வேற வீடு பாருப்பா” என்று விரட்டுவதற்கு பதிலாக பண்பான முறையில் இப்படிச் சொல்வது பாராட்ட வேண்டிய ஒன்று
இதுபோன்ற எத்தனையோ உருது/ இந்தி வார்த்தைகள் தமிழோடு கலந்து தமிழ் வார்த்தையாகவே ஐக்கியமாகி விட்டன,
“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்றுரைக்கிறது தொல்காப்பியம்
தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும். சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தம். கெடுபிடி, கதி, சராசரி, சாமான், சீனி, சீட்டு இதெல்லாம் உருது மொழியிலிருந்து வந்ததுதான் என்று கூறினால் நம்மை ஒருமாதிரி பார்ப்பார்கள்.
(பிகு.: மாப்பு என்பதை மாப்பிள்ளை என்பதின் சுருக்கமாகவும் அழைக்கிறார்கள். உதாரணம்: வடிவேலுவின் வசனம் “மாப்பு…. வச்சிட்டாண்டா ஆப்பு”. எப்படி ரவி சாஸ்திரிக்கும் லால் பகதூர் சாஸ்திரிக்கும் சம்பந்தமில்லையோ. எப்படி ரவீந்திரநாத் தாகூருக்கும் ஷர்மிளா தாகூருக்கும் சம்பந்தமில்லையோ அது போல இந்த “மாப்பு”க்கும் நான் சொல்லும் ‘மாப்பு’க்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது)
