கொரோனா எந்த மதம்?

சீனத்திலிருந்து வந்த கொரோனா
எந்த மதம் எனக்குத் தெரியாது !

இந்துவா? முஸ்லிமா?
கிறித்துவமா? புத்த மதமா?
எதுவுமே எனக்குத் தெரியாது.

முஸ்லிம்கள்தான் பரப்பினார்கள் என்று
வாய் கூசாமல் பரப்பினார்கள்.

ஆனால் ஒன்று சகோ..

எரிக்க வேண்டிய உடல்களை எல்லாம்
இடுகாட்டில் புதைத்தார்கள் !

ஆண்கள் தாடி வளர்த்தார்கள் !
பெண்களும் ஆண்களும்
‘நகாப்’ அணிந்தார்கள் !

கூடவேயிருந்து மனைவிக்கு செய்யும்
பணிவிடையும் ‘சுன்னத்’தானே?

எங்கும் நிறைந்தவன் இறைவன்
என்பதை பறைசாற்றும் வண்ணம்
இல்லங்கள் யாவும் வழிபாட்டுத் தலங்கள் !

“சுத்தம் ஈமானில் பாதி”
கைச் சுத்தம் கால்சுத்தம்
காண்போரெலாம் கடைப்பிடித்தனர் !

விபச்சார விடுதிகள்
விடுமுறைகள் தந்தன !

ஆடம்பரக் கல்யாணங்கள்
அர்த்தமற்றுப் போயின !

கொரோனா எந்த மதம்?
எதுவுமே எனக்குத் தெரியாது

#அப்துல்கையூம்

கமாலுத்தீனும் கலைஞர் மு.கருணாநிதியும்

kamal

யாரிந்த கமாலுத்தீன்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்ற சந்தேகம் எழலாம். கருணை ஜமால் எப்படி கலைஞரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்ந்தாரோ அதுபோன்று கமாலுத்தீனும் கலைஞரின் வாழ்க்கையில் ஓர் அங்கம்.   (இதையும் மறுப்பதற்கு இப்போது ஒரு கூட்டம் வரும் பாருங்கள்)

கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும்  சகோதரர்கள். இம்மூவரும்  இணைந்து “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலமது.

கமால் பிரதர்ஸ் படநிறுவனத்தின் விளம்பரம் தினத்தந்தி பிரசுரம் ஆகும் போதெல்லாம் ஆவலுடன் நான் அதை கூர்ந்து கவனிப்பேன். காரணம் அந்த படநிறுவனத்து LOGO-வில் நாகூர் மினாரா போட்டோ இடம் பெற்றிருக்கும். நாகூர்க்காரனான எனக்கு அந்த விளம்பரம் இயற்கையாகவே ஓர் ஈர்ப்பைத் தந்தது.

கமாலுத்தீன் சகோதரர்களின் குடும்பம் வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon)  நகரத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்தார்கள். பெருமளவில் பொருளீட்டினார்கள்.  1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. பெரும் நட்டத்தை இவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிற்காலத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது.

புதையல் (1957), தெய்வப்பிறவி (1960), வாழ்க்கை வாழ்வதற்கே  (1964),  கண்கண்ட தெய்வம் (1967),  நிமிர்ந்து நில் (1968) போன்ற பிரபலமான படங்களைத் தயாரித்தவர்கள் கமால் பிரதர்ஸ். இதில் “தெய்வப்பிறவி” படத்தை ஏ.வி.எம்.நிறுவனத்தாருடன் சேர்ந்து எடுத்தார்கள்.

கலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி அன்பளிப்பாக பரிசளித்தவர்கள் கமால் பிரதர்ஸ்தான் என்று அவர்கள் குடும்பத்திற்கு வேண்டியவர்கள் சொன்னதை நான் காதால் கேட்டிருக்கிறேன். “இல்லை இது தவறான தகவல். கோபாலபுரம் வீடு பராசக்தி, மனோகரா போன்ற வெற்றிப் படங்கள் வெளியான பின்னர் அதில் கிடைத்த வருமானத்தில் கலைஞருடைய சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது” என்றும் சிலர் மறுத்து எழுதியதையும் நான் படித்திருக்கிறேன். அந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.

சிவாஜி, பத்மினி இணைந்து நடித்து கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுத 10.05.1957ல் வெளியான “புதையல்” பெரும் வரவேற்பைக் கண்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் கமாலுத்தீன் சகோதரர்கள். திரைப்பட நடிகரும், பாடகருமான சி.எஸ்.ஜெயராமனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த பாடல் ‘புதையல்’ படத்தில் வரும் “விண்ணோடும் முகிலோடும்” என்ற பாடல். மேலும், கமால் பிரதர்ஸ் தயாரித்த ‘தெய்வப்பிறவி’ படத்தில் வரும் “அன்பாலே தேடிய”, மற்றும் “தன்னைத் தானே” போன்ற பாடல்களும் அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது.

சி,எஸ்.ஜெயராமன் வேறு யாருமல்ல. கலைஞர் மு.கருணாநிதியின் நெருங்கிய உறவினர். அதாவது முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார்.

இப்படம் பிரமாண்டமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதியார், தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆத்மநாதன், ஏ.மருதகாசி போன்ற எல்லோருடைய பாடல்களை இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து இடம்பெறச் செய்தார் கமாலுத்தீன். பின்னணி பாடுவதற்கு சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.சௌந்தர்ராஜன், ராகவன், பி.சுசீலா, எம்.கே.புனிதம், ராணி, எஸ்.ஜே. காந்தா என ஒரு பெரிய பட்டாளத்தையே களம் இறக்கிவிட்டிருந்தார்.

பிற்காலத்தில் கமால் பிரதர்ஸ் மூத்தவர் கமாலுதீன் படம் எடுத்து நொடித்துப் போய் சிரமப் பட்டுக் கொண்டிருந்தார். இந்த விஷயத்தை யாரோ கலைஞரின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள். “கலைஞர் கமாலுத்தீனை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த செய்தி கமாலுத்தீன் காதுகளுக்கும் எட்டியது. இருந்தாலும் கமாலுத்தீனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. “ஆஹா..ஓஹோ என்று செல்வாக்கோடு வாழ்ந்த நாம் அவரிடம் சென்று உதவி கேட்பதா?” என்று எண்ணி கலைஞரை சென்று சந்திக்க அவர் மறுத்துவிட்டார். .

இயக்குனர் கலைஞானம் அவர்கள் கமாலுத்தீனைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். கலைஞருக்கும் கமாலுத்தீனுக்கும் உள்ள தொடர்பையும் எழுதியிருக்கிறார்.  இவர் ஏ.வி.பி.ஆசைத்கம்பி எழுதிய “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற நாடகம் மற்றும் கலைஞரின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவருக்கு அந்த நட்புகளின் ஆழம் நன்றாகவே தெரியும்.

#அப்துல்கையூம்

 

 

 

 

 

 

 

 

 

 

கலைஞர் மு. கருணாநிதியும் கருணை ஜமாலும்

இன்று ஆகஸ்ட் 10. கலைஞரின் “முரசொலி” பத்திரிக்கை தொடங்கப்பட்ட நாள். இந்நாளில் கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கு இடையே இருந்த சரித்திரப்புகழ் கூறும் நட்பினை இங்கே பதிவு செய்வது என் கடமை.

நடிகர் விஜயகாந்த் வாழ்க்கையில் எப்படி இப்ராஹிம் ராவுத்தர் என்ற கேரக்டர் முக்கியமோ, டி.ஆர்.ராஜேந்தர் வாழ்க்கையில் எப்படி ஈ.எம்.இப்ராஹிம் என்ற கேரக்டர் முக்கியமோ அதுபோன்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் வாழ்வில் திருவாரூர் கருணை எம்.ஜமால் என்ற கேரக்டர் மிக மிக முக்கியமானது.

கருணை & கருணா.. ஆஹா.. என்ன ஒரு பெயர் காம்பினேஷன். நட்பின் இலக்கணத்திற்கு கபிலர் & பிசிராந்தையாரை உதாரணம் காட்டுபவர்கள் இவர்களை ஏன் எடுத்துக்காட்டாகச் சொல்வதில்லை?

பிற்காலத்தில் தனக்குச் சொந்தமான அச்சகத்தை தன் ஆத்ம நண்பனின் நினைவாக திருவாரூரில் “கருணாநிதி அச்சகம்” என்ற பெயரில் நடத்தி வந்தது நட்பின் இலக்கணமன்றி வேறு என்னவாம்?

அப்போது கலைஞருக்கு வெறும் 18 வயது. அரும்பு மீசைக்காரர். எழுத்துப் பித்தரான கலைஞர் ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையை ஏந்தியும், “குடியரசு” பத்திரிக்கையை கக்கத்தில் வைத்துக்கொண்டும், கருணை ஜமாலை பக்கத்தில் வைத்துக் கொண்டும் இலக்கிய வேட்கையில் அலைந்து திரிந்த நிலாக்காலம் அது.

திராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் அப்போது மக்களிடையே பிரபலமாக வலம் வந்தன. கலைஞருக்கு எப்படியாவது பத்திரிக்கைத் துறையில் சாதனைகள் புரியவேண்டும் என்ற ஓர் ஆர்வம் ஒரு வெறியாகவே மாறி இருந்தது.

கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கும் இடையேயான நட்புறவு வாலிப வயதில் ஏற்பட்டதல்ல. பால்ய வயது தொட்டே அவர்களுக்குள் தொடர்ந்து வந்த இறுக்கமான உறவு, நெருக்கமான உறவு.

கலைஞருக்கு பத்திரிக்கைத் துறையில் ஈர்ப்பும் ஈடுபாடும் கூடுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் “தாருல் இஸ்லாம்” இதழாசிரியர் பா.தாவுத்ஷா என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். “பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டுபிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்ற அறிவிப்பை தன் இதழில் சவாலாக வெளியிட்டவர். எந்த அளவுக்கு தமிழில் புலமையும், தன் எழுத்தின் மீது அபார நம்பிக்கையும் கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு அறிவிப்பை இந்த மனிதர் இவ்வளவு பகிரங்கமாக வெளியிட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்பொழுது வெளிவரும் பத்திரிக்கைகளின் எழுத்துப்பிழைகளை காண்பதற்கு சீத்தலை சாத்தனார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தலை முழுதும் ரத்தக்களறியாகி அப்போலோ மருத்துவமனையில் எமர்ஜென்சியில் அட்மிட் ஆகியிருப்பார்.

ஈரோட்டில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த “குடியரசு” வார இதழில் கலைஞர் தொடர்ச்சியாக எழுதி வந்தார். அவரது அபார எழுத்தாற்றலால் பின்னர் துணை ஆசிரியாராகவும் பணியில் அமர்ந்தார். தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் திராவிட எழுச்சிக் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய பத்திரிக்கை ஒன்றே பிரதான கருவியாகவும், கிரியாவூக்கியாகவும் விளங்கியது.
.
பத்திரிக்கைத் தொழில் நடத்துவதென்பது அப்போது சாதாரண காரியமல்ல. காகிதம் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டும். நிறைய பணமுதலீடு செய்ய வேண்டும். விநியோகம் செய்வது சிரமமான காரியமாக இருந்தது. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கு உதவ முன்வராத காலத்தில் கைகொடுத்து உதவியது கருணை ஜமால்தான்.

திறமையும் எழுத்தாற்றலும் வாய்ந்த தன் பால்ய நண்பனுக்காக கருணை ஜமால் செய்த உதவி கலைஞரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட முரசொலி, தொடக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. “மாணவநேசன்” என்ற பெயரில் வெளிவந்த இந்த பத்திரிக்கைதான் பின்னர் முரசொலியாக பரிணாமம் அடைந்தது.

இந்த இதழ் பின்னர் பண நெருக்கடியால் நிறுத்தப்பட்டபோது மனமுடைந்துப் போன கலைஞர் பெருத்த சோகத்திற்கு உள்ளானார். நின்று போயிருந்த முரசொலி பத்திரிக்கையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதன் பின்னர் கலைஞர் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதப் போய் விட்டார். அவர் வசனம் எழுதிய முதற்படமொன்று வெளியானது. ஆனால் படத்தின் ‘டைட்டிலில்’ அவருடைய பெயர் காட்டப்படவில்லை. காரணம் அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக அறியப்படவில்லை. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” (1947) படத்திற்கு வசனம் எழுதியபோதும் இதே நிலைமைதான். அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்து ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். அபிமன்யு (1948) படம் வெளிவந்தபோதும் இதே நிலைமைதான் தொடர்ந்தது. ஜூபிடர் பிக்சர்ஸின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் திருப்பூர் தொழிலதிபர்கள் சோமு மற்றும் எஸ்.கே.மொய்தீன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது,

சினிமா உலகத்துக் கூத்தையும், துரோகத்தையும் கண்ட கலைஞர் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டார். இரவும் பகலும் கண்விழித்து, கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாக வசனம் எழுதிக் குவித்தது இவர். பெயரையும் புகழையும் தட்டிக்கொண்டு போவது வேறொருவர்.

நொந்து நூடுல்ஸ் ஆகிப்போன கலைஞர் தன் மனைவி பத்மாவதியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் திருவாரூருக்கே வந்துச் சேர்ந்தார். தன் நண்பர் கருணை ஜமாலிடம் தன் சோகத்தைக் கூறி புலம்பினார். அவரைத் தேற்றி ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து உற்சாகப்படுத்தினார் கருணை ஜமால்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

உடைநெகிழ்ந்தவனுடைய கை எப்படி உடனே சென்று உதவி காக்கின்றதோ அதுபோல உற்ற நண்பனுக்குத் துன்பம் வருகையில் ஓடிச் சென்று துன்பத்தைக் களைவது நட்பு என்ற நட்பு அதிகாரத்திற்கு இணங்க செயற்பட்டவர் கருணை ஜமால்.

கருணை ஜமாலின் முயற்சியால் 14-01-1948 முதல் முரசொலி ஏடு திருவாரூரிலிருந்து அவரது சொந்த அச்சகத்திலேயே வெளியிடப்பட்டது.

நண்பனுக்காக தோளோடு தோள் நின்று, அவரே மேற்பார்வையிட்டு பத்திரிக்கை பிரதிகளை அச்சிட்டுக் கொடுத்தார். தன் சொந்தப் பணத்தில் காகிதங்கள் கொள்முதல் செய்வது முதல், கலைஞருடன் சேர்ந்து பத்திரிக்கைகளை மூட்டைகளாக கட்டி தலையில் சுமந்து, ஆற்றை நீந்திக் கடந்து விநியோகம் செய்வது வரை அவரது வேலை. விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞருக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார்.

முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் பத்திரிக்கை கட்டுகளை சுமந்துச் சென்று விற்பனையாளர்களிடம் சேர்ப்பது வழக்கம். முரசொலி பத்திரிக்கையின் ஆரம்ப காலத்தில் திருவாரூர் தென்னன், சி.டி.மூர்த்தி, முரசொலி சொர்ணம், பெரியண்ணன் போன்றவர்களுக்கும் முரசொலி பத்திரிக்கையின் வளர்ச்சியில் பெரும் பங்குண்டு

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்பதுபோல் கருணை ஜமால் தக்க நேரத்தில் புரிந்த இந்த உதவி கலைஞரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது.

பத்மாவதியை கலைஞர் மணமுடித்தது 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இவர்களுக்குப் பிறந்த மகன் மு.க.முத்து. 1948 செப்டம்பர் மாதம் முதல் மனைவி பத்மாவதி மறைந்த பின்பு தயாளு அம்மாள் அவர்களை மறுமணம் புரிய முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அவரது ஆத்ம நண்பர் கருணை ஜமால்.

கருணை ஜமால் தமிழார்வலர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும்கூட. நாடகக் கலையில் ஆர்வமுள்ளவர். அரங்கண்ணல், கருணை ஜமால், தஞ்சை ராஜகோபால் போன்றோர் திருவாரூர் தேவி நாடக சபாவில் நடிகர்களாக இருந்தவர்கள்.

அப்போது தேவி நாடக சபாவில் பாடல் மற்றும் கதை எழுதும் பொறுப்பில் இருந்தவர் கவி. கா.மு.ஷெரீப். திருவாரூரில் “ஒளி” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் நடத்தி வந்தார்.

கா.மு.ஷெரீப்புக்கு தேவி நாடகக் சபாவில் நல்ல செல்வாக்கு இருந்தது. கலைஞரின் திறமையைக் கண்டு தேவி நாடக சபாவில் சேர்த்து விட்டது கா.மு.ஷெரீப் அவர்கள்தான். இங்குதான் “மந்திரிகுமாரி” நாடகம் முதலில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் மேலாளர் எம்.ஏ.வேணுவையை அழைத்துவந்து பார்வையிட வைத்தார். அதன்பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி..ஆர்.சுந்தரத்திடம் அறிமுகம் செய்து வைத்து மந்திரிகுமாரி (1950) படத்தில் இமாலயப் புகழை கலைஞருக்கு பெற்றுத்தர மூல காரணமாகத் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப் என்பது எல்லோரும் அறிந்த வரலாறு.

“நெஞ்சுக்கு நீதி” சுயசரிதத்தில் கா.முஷெரீப், கருணை ஜமால் இந்த இருவரின் பெயர்களையும் கலைஞர் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை. குறளோவியம் தந்தவருக்கு ‘செய்ந்நன்றி’ பாடம் நடத்த வேண்டுமா என்ன?

கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அண்ணாவின் திராவிடக் கொள்கையை பறைசாற்ற ஏதுவாக இருந்தது.

இதில் இன்னொரு சுவையான தகவலும் நாம் அறிய வேண்டியது அவசியம். கலைஞர் அவர்கள் தன் எழுத்துக்கள் மூலம் அண்ணாவின் கவனத்தை ஈர்த்து பரிச்சயம் அடைந்திருந்தாலும் அவரை முதன் முதலாக நேரில் சந்தித்து அறிமுகமானது எந்த இடத்தில் தெரியுமா? திருவாருரில் நடந்த ஒரு மீலாது விழாவின்போதுதான். அப்பொழுது இஸ்லாமியப் பெருமக்கள் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணாவை வரவழைத்து பேசச் செய்வது ஒரு TREND ஆகவே இருந்தது

இந்திராகாந்தியின் ஆட்சியில் எமர்ஜென்ஸி நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக கட்சியினர் பலரும் மிசா சட்ட்த்தில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். கலைஞர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். அந்த அடைக்கும்தாழ் ஒரு கட்டத்தில் செல்லுபடியாகவில்லை. அப்படிப்பட்ட அடக்கமுறை நேரத்திலும் தன் நண்பர் கருணை ஜமால் வீட்டுத் திருமணத்துக்கு திருவாரூர் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்ற பாங்கு இருவருக்குமிடையே நிலவிய நெருங்கிய நட்புக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்?

#அப்துல்கையூம்

மாப்பு

நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் நாகூர் ஒரு விசித்திரமான ஊர் என்று. வீடு தேடி வரும் பிச்சைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்பதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

எங்களூரில் யாசகம் கேட்டு வருபவர்களிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் வேறு சில ஊர்களிலும் இதுபோன்ற வழக்கம் இருக்கக் கூடும். நான் அறிந்திருக்கவில்லை. நான் பார்த்ததைத்தானே நான் எழுத முடியும்.

யாசகம் கேட்டு வருபவர்களுக்கு மனமுவந்து ஈந்திட வேண்டும். அப்படி நம்மிடம் கொடுக்க ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்கள் மனம் நோகாத வண்ணம் சொல்லி அனுப்ப வேண்டும். இதுதான் அதன் நோக்கம்.

இந்தி/உருது மொழியில் “மாஃப் கரோ” என்றால் “(எங்களை) மன்னியுங்கள்” என்று பொருள். “மாஃப்” என்ற உருதுமொழிச் சொல் நாளடைவில் “மாப்பு” என்று தமிழ் அகராதியிலும் ஏறிவிட்டது. “மாப்பு” என்றால் மன்னிப்பு.

நாகூர்லே பிச்சைக்காரர்கள் வந்து யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு கொடுக்க ஏதுமில்லை என்ற சூழ்நிலையில் “மாப்பு செய்யுங்க பாவா” என்பார்கள். பாவா என்ற வார்த்தை தந்தைக்குச் சமமான சொல்.

“ஒண்ணுமில்லே போயா”, “வேற வீடு பாருப்பா” என்று விரட்டுவதற்கு பதிலாக பண்பான முறையில் இப்படிச் சொல்வது பாராட்ட வேண்டிய ஒன்று

இதுபோன்ற எத்தனையோ உருது/ இந்தி வார்த்தைகள் தமிழோடு கலந்து தமிழ் வார்த்தையாகவே ஐக்கியமாகி விட்டன,

“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்றுரைக்கிறது தொல்காப்பியம்

தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும். சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தம். கெடுபிடி, கதி, சராசரி, சாமான், சீனி, சீட்டு இதெல்லாம் உருது மொழியிலிருந்து வந்ததுதான் என்று கூறினால் நம்மை ஒருமாதிரி பார்ப்பார்கள்.

(பிகு.: மாப்பு என்பதை மாப்பிள்ளை என்பதின் சுருக்கமாகவும் அழைக்கிறார்கள். உதாரணம்: வடிவேலுவின் வசனம் “மாப்பு…. வச்சிட்டாண்டா ஆப்பு”. எப்படி ரவி சாஸ்திரிக்கும் லால் பகதூர் சாஸ்திரிக்கும் சம்பந்தமில்லையோ. எப்படி ரவீந்திரநாத் தாகூருக்கும் ஷர்மிளா தாகூருக்கும் சம்பந்தமில்லையோ அது போல இந்த “மாப்பு”க்கும் நான் சொல்லும் ‘மாப்பு’க்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது)

#அப்துல்கையூம்

Image may contain: 1 person, text that says "oneindia tamu மாப்பு.. வச்சிட்டாண்டா ஆப்பு..!"

பூச்சாண்டி =

“இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் நம்மக்கிட்ட வச்சுக்காதே” என்ற சொல்லாடலை நாம் கேட்டிருப்போம். என் ஆத்ம நண்பரும் இயக்குனருமான ‘அசத்தப்போவது யாரு’ ராஜ்குமார் “வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே” பாடலை கலைஞர்களை ஆட வைத்து பிரபலப்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் நம் மனதில் பசுமையாக இருக்கிறது.

பூச்சாண்டி என்றால் என்ன? குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தால் நம்ம தாய்மார்கள் சொல்வது “ஒழுங்கா சாப்பிடலேன்னா பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்” . குழந்தைகளைப் பொறுத்தவரை பூச்சாண்டி என்றால் கோரமான முகம் கொண்ட பயங்கரமான உருவம்.

எங்க ஊரு பக்கம் பூச்சாண்டிக்கு பதிலாக “மாக்கான்“ என்று சொல்லி பயமுறுத்துவார்கள். மாக்கான் என்றால் மடையன் என்ற பொருளிலும் சொல்வதுண்டு. மலாய் மூல மொழியிலிருந்து “மாக்கான்” என்ற சொல்லை கடன்வாங்கி “சோத்துமுட்டி” என்ற பொருளில் பயன்படுத்துகிறார்களோ என்றுகூட நான் நினைத்ததுண்டு. வயிறு முட்ட சாப்பிட்டு, சட்டையும் அணியாமல் தொந்தி தள்ளிக் கொண்டு வருகிறவனைப் பார்த்தால் குழந்தைகளுக்கு சற்று பயமாகத்தானே இருக்கும்?

வெள்ளைக்காரன் குழந்தைகளுக்கு “Twinklie, Twinkle, Little Star. How I wonder what you are” என்று கற்றுக் கொடுக்குறான். அதனால் அவன் குழந்தைகள் சந்திரனுக்கு போகுதுங்க, விண்வெளி ஆராய்ச்சி பண்ணுதுங்க.

நாம என்னடான்னா “பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்” என்று சொல்லி பிஞ்சு மனதிலேயே பயத்தை விதைக்கிறோம். அக்குழந்தை வளர்ந்து பெரியவனானால் தெனாலி கமல்ஹாசன் போல்தானே வரும்?

இதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

//வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!//

என்று பாடி வைத்துவிட்டு போனான். சங்க காலத்திற்கு பிறகு வந்த 3,4,மற்றும் 5-ஆம் நூற்றாண்டை இருண்டகாலம் என்று சொல்கிறார்கள். சமணம் புத்தமதம் மேலோங்கி இருந்த காலம் அது. சைவம் வைணவம் மீது அடக்குமுறை ஏவி விட்ட காலம் அது. அப்போது விபூதி பூசி வெளியே உலாவுவது தடுக்கப்பட்டிருந்த காலம். அரசரால் தண்டனைக்குள்ளாவார்கள். கர்னாடக (மைசூர்) ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் தங்கள் செல்வாக்கை செலுத்தினார்கள். அன்றைய காலத்தில் சைவ வழிபாட்டாளர்கள் குறிப்பாக சிவனை வழிபாடும் சாதுக்கள்/ ஆண்டிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டி கோவணம் மட்டும் அணிந்து வெற்று மேனியில் விபூதிகள் பூசியவாறு வீதியில் உலா வந்தனர். சமண ஆட்சியாளர்களின் சட்டத்துக்கு அவர்கள் கட்டுப்பட தயாராக இல்லை.. அவர்களைப் பார்த்து மக்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். அரசரின் ஆட்கள் பார்த்துவிட்டால் தாங்களும் தண்டனைக்கு உள்ளாகி விடுமோ என்ற பயத்தில். (இது திரு R.B.V.S. மணியன் சொற்பொழிவிலிருந்து கேட்டது)

#அப்துல்கையூம்

பென் பார்க்கும் படலம்

நான் பென் பார்த்த படலத்தை என்னவென்று சொல்வேன். சுகமான அனுபவம் என்-பேனா? அல்லது மறக்க முடியாத அனுபவம் என்-பேனா?

நாங்கள் பள்ளிக்கூட பரிட்சை எழுதும் காலத்தில் பந்துமுனைத்தூவல் எழுதுகோல் பிடித்து எழுதக்கூடாது. ஊற்றுத்தூவல் எழுதுகோல்தான் பயன்படுத்தணும்.

(ரொம்பவும் போட்டு மண்டையை குழப்பிக்கொள்ள வேண்டாம். வேண்டுமானால் உங்களுக்கு புரியும்படி இனி இங்க் பேனா, பால்பாயிண்ட் பேனா என்றே எழுதுகிறேன்)

மனுஷனுக்கு மண்ணாசை, பொன்னாசை கூடாது என்பார்கள். ஆனால் அக்காலத்தில் எனக்கு பென்னாசை இருந்தது உண்மைதான். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?

நான் அப்போது Writer பேனா வைத்துதான் எழுதிக்கொண்டிருந்தேன். பென் மூடியை சரியாக மூடவில்லை என்றால் பென் மை கசிந்து சட்டைப்பை எல்லாம் நாசமாகி விடும். ஆமாம் பென் பாவம் பொல்லாதது.

எப்படியாவது பைலட் அல்லது ஹீரோ பேனா வாங்கணும் என்று ஆசை என்னுள் ‘மை’யல் கொண்டிருந்தது. சென்னையில் ஒரு சில கடைகளுக்கு என் தந்தையார் அழைத்துச் சென்றார். பென் பிடிக்கவில்லை. “பென்னொன்று கண்டேன் பென்னங்கு இல்லை. என்னென்று நான் சொல்லலாகுமா” என்று மனதுக்குள் பாடலை முனகியபடி நானும் அவருடன் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன்.

அகலப்பாதை பகுதியில் (BROADWAY)   PEN CORNER என்ற கடைக்கு என் தந்தை கூட்டிக்கொண்டு போனார். கடை முழுக்க பென்கள்தான்.  ஒல்லியான பென்கள். குண்டான பென்கள். எல்லாமே MOODY டைப்தான். ஆனால் ஆண்கள்தான் வியாபாரம் செய்தார்கள்.

தந்தையார் ஹீரோ பேனா ஒன்று வாங்கிக் கொடுத்தார். பிறகுதான் நினைத்தேன் பைலட் பேனா வங்கியிருக்கலாமே என்று. பென் புத்தி பின்புத்தி.  பார்க்கர் பேனா கூட கேட்டிருக்கலாம். அது இன்னும் விலை அதிகம்.

இங்க் பேனா என்றால் இத்யாதிகளும் கூடவே சேர்த்து வாங்க வேண்டும். எக்ஸ்ட்ரா நிப்,  நிப் கட்டை. பிரில், இங்க் பாட்டில் இவ்வளவும் அவசியம். பிரில், கேம்லின் அல்லது இந்தியன் இங்க் இவைகள்தான் நல்ல இங்க்.

ஃபில்லர் இல்லாத பேனாவாக இருந்தால் இங்க் ஃபில்லர் வேறு வாங்க வேண்டும்.  நல்ல பிராண்டு இங்க் ஃபில்லர் உள்ள பென் என்றால் பணக்கார வீட்டுப் பையன் என்று அர்த்தம். ராக்ஃபெல்லர் மாதிரி என்று வேண்டுமானலும் வைத்துக் கொள்ளுங்களேன்.

ஊரில் சொற்ப காசுக்கு பெட்டிக் கடைகளில் இங்க் நிறைத்து கொடுப்பார்கள். இங்க் ஃபில்லர் கூட இல்லாமல் லாவகமாக சிந்தாமல் கடைக்காரர் நம்முடைய பேனாவை வாங்கி அதில் ஊற்றிக் கொடுப்பார். ஆச்சரியத்துடன் அவர் திறமையைக் கண்டு வியப்பேன்.  ஊற்றியவுடன் சள்ளென்று இறங்கிவிடும். பென் என்றால் பேயும் இறங்கும் என்பார்களே.

பட்டையாக எழுத வேண்டுமென்றால் நிப்பை தரையில் வைத்து தேய்க்க வேண்டுமாம்.  அல்லது நிப்பின் பிளவை இழுத்து அகலப்படுத்த வேண்டுமாம். நண்பனொருவன் ஐடியா சொன்னான்.

இப்போது லேப்டாப், செல்போன் ரிப்பேர் பண்ணுவதற்காக கடைகள் இருப்பதுபோல பேனா ரிப்பேர் பண்ணக்கூட அப்போது கடைகள் இருந்தன.  என் மகளிடம் இதைச் சொன்னபோது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். “தூக்கி போட்டு விட்டு வேறு பேனா எடுத்து எழுத வேண்டியதுதானே?” என்றாள். அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. பென்னுக்கு பெண்ணே எதிரி போலும்.

இரண்டு மூன்று இங்க் பேனாக்கள் சட்டைப் பையில் குத்தியிருந்தால் அவர் மெத்தப் படித்தவர் என்று அர்த்தம். கணக்குப் பிள்ளை குத்தியிருக்கும் பேனா வேடிக்கையாக இருக்கும். நமீதா மாதிரி குண்டாக இருக்கும்.

மை சரியாக விழவில்லை என்றால் மூக்கு சிந்துவதைப்போல் ஜோராக உதறி வேறு பார்ப்பார்கள். அந்த சமயத்தில் தப்பித்தவறு கூட நாம் அருகில் சென்று விடக்கூடாது, நம் உடம்பெல்லாம் மை களறி ஆகிவிடும். இங்க் பேனாவை வைத்துதான் பெரும்பாலானோர் செக்கில் கையெழுத்து போடுவார்கள். இங்க் பேனாவில் எழுதினால்தான் கையெழுத்து அழகாக வருமாம்.

மை போடும் பேனாவைக் காட்டி “தி இஸ் மை பென்” என்று சொன்னாலே அதுக்கு ஒரு தனி கெத்துதான் போங்க. இப்போது என்னதான் MONT BLANC பால்பாயிண்ட் பென் வைத்து எழுதினாலும் இளமைக்காலத்தில் ரைட்டர் பேனாவில் எழுதிய சுகமே சுகம்.

#அப்துல்கையூம்

(இந்த பென்னின் பெருமை இன்றைய இளைஞர்களுக்கு புரியாது ‘பென்’சன் வாங்கும் முதியோர்களுக்கு நன்கு விளங்கும்.)pen

.

 

 

மராத்திய மன்னர்களின் பங்களிப்பு – பாகம் 2

 முஸ்லீம்களுடனான இணக்கமான உறவு

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களைப் பற்றி முனைவர் ராஜா முகம்மது, கோம்பை எஸ்.அன்வர்,  நாகூர் ரூமி போன்ற அறிஞர் பெருமக்கள் நிறையவே எழுதி இருந்தாலும் என் பங்குக்கு சில புதிய விடயங்களை என் பாணியில் இங்கு வழங்கியிருக்கிறேன்.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் (1676 – 1855), அதற்கு முன்பு ஆண்ட நாயக்கர்கள்  (1532 – 1673) இவர்கள் அனைவரும் முஸ்லிம்களுடன் இணக்கமாகவும், முஸ்லிம் சமுதாயத்தினரின் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் ஆட்சி புரிந்திருக்கின்றார்கள். இவர்களின் ஆட்சி மத நல்லிணக்கத்தின் பொற்கால ஆட்சி எனலாம். இக்கட்டுரையை முழுதாக படிக்கையில் நான் சொல்லும் இந்த உண்மையை நீங்களே உணர முடியும்.

நாகூர் ஆண்டகை வாழ்நாள் காலம்

ஆண்களில் தகையான மனிதராகத் திகழ்ந்த நாகூர் ஆண்தகை அவர்கள் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார்கள். இவர்கள் வாழ்ந்த ஆண்டு  எது என்பதைப் பற்றிய குறிப்பு ஓரளவுக்கு சரியாக கணிக்கப்பட்டாலும் பற்பல ஆவணங்களில் வருடங்கள் சற்று முன்பின் மாறுபடுகின்றன.

பெரும்பாலான ஆங்கிலக் குறிப்புகளில் நாகூர் ஆண்டகையின் காலம் 1490 – 1579 என்று இருக்கின்றது. இதன்படி பார்த்தால் அவர்கள் 89 வருடங்கள் உயிர் வாழ்ந்ததாக அர்த்தம்.

வரலாற்றாய்வாளர், மேனாள் காப்பாட்சியர் புதுக்கோட்டை அருங்காட்சியம், முனைவர் ஜெ. ராஜா முகம்மது அவர்களின் கூற்றுப்படி நாகூர் ஆண்டகை வாழ்ந்த காலம் 1532 – 1600. இதன் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் 68 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.

நாகூர் ஆண்டகையின் வாழ்க்கை வரலாற்றை கன்ஜூல் கறாமத்து என்ற பெயரில் பாடலாக எழுதிய “நான்காம் மதுரை தமிழ்ச்சங்கத்து நக்கீரர்” என போற்றப்படும் நாகூர் குலாம் காதிறு நாவலர்  எழுதிய குறிப்புகளிலிருந்து எழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமி நமக்கு தரும் தகவல்கள் மூலம்  நாகூர் ஆண்டகை 1504 பிறந்து நவம்பர் மாதம் 09 1570-ல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்கள் என்ற விவரம் தெரிய வருகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் அவர்கள் இம்மண்ணில் வாழ்ந்த காலம் 66 ஆண்டுகள்.

‘கன்ஜூல் கறாமத்து’ என்ற பெருநூல். 131 அத்தியாயங்களும், 576 பக்க அளவும் கொண்ட அவர்கள் வரலாற்றை நிறைவாகக் கூறும் நூல்.

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நாகூர்  ஆண்டகை மறைந்த வருடம் .1579 என்று நாம் கணக்கிட்டாலும் அவர்கள் மறைந்து 254 ஆண்டுகள் கழித்து 1833-ஆம் ஆண்டில் பிறந்தவர் நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள்.

ஆகையால் வரலாற்றுத் தேதிகள் அவ்வளவு துல்லியமாக இருக்குமென்று நாம் அறுதியிட்டு கூற முடியாது. அதே சமயம் தஞ்சை சரஸ்வதி மகாலில் காணப்படும் அருஞ்சுவடிகளில் நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், கணக்கு வழக்குகள் ஒவ்வொன்றும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. .அச்சுதப்ப நாயக்கரின் ஆட்சி கால நிகழ்வுகளை வைத்து கணக்கிடப்படும் காலமே சரியானதாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து.

மராத்திய மன்னர்களுடன் நெருக்கம்

நாகூர் ஆண்டகை அவர்களுடன் நாயக்க மன்னர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் உணர்வுபூர்வமானது, மானசீகமானது; விவரிக்க இயலாதது. அதன் பின்னர் மராத்திய மன்னர்களின் காலத்திலும் இந்த நெருக்கம் பாரம்பரிய உறவாக தழைத்து வந்துள்ளது.

வடமாநிலம் மாணிக்கப்பூரில் பிறந்து பல்வேறு நாடுகள் பயணம் மேற்கொண்டு தஞ்சை மண்ணுக்கு வந்த நாகூர் ஆண்டகையவர்கள் தஞ்சை நாயக்க மன்னர்களில் ஒருவரான அச்சுதப்ப நாயக்கரின் (1560-1600) நோயினை தீர்த்து வைத்ததாக வரலாறு கூறுகிறது..

சில பதிவுகளில் அச்சுதப்ப நாயக்கருக்கும் நாகூர் ஆண்டகைக்கும் இடையே உள்ள உறவை சேவப்ப நாயக்கர் (1532-1560) என்றும் தவறாக எழுதப்பட்டுள்ளது.

நாகூர் ஆண்டகையுடன் சீடராக அவர் கூடவே வந்தவர்கள் 404 பேர்கள்.

அப்போது தஞ்சையை ஆண்டு வந்த மன்னர் அச்சுதப்ப நாயக்கர் சுகமின்மையால் உழன்றதாகவும் ஒரு புறாவின் உடலிலே பல்வேறு முட்களைக் கொண்டு குத்தப்பட்டு நோவினை செய்யும் விதத்தில் சூனியம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட நாகூர் நாயகமவர்கள் தன் சீடரை அனுப்பி, அந்த புறாவை கொண்டு வரச்செய்து  ஓதி ஊதி ஒவ்வொரு முள்ளாக அந்த புறா உடம்பிலிருந்து நீக்கி எடுத்து மன்னரை பரிபூரண சுகமடைய வைத்தார்கள் என்ற குறிப்பை அவர்களது வரலாற்று நூலில் நாம் காண முடிகிறது

தன் தீராத நோயை தீர்த்து வைத்த நாகூர் ஆண்டகையின் அற்புதத்தில் அகமகிழ்ந்த அச்சுதப்ப நாயக்கர் ஏராளமான பரிசில் பொருள்களை வழங்கியிருக்கிறார்.

“எனக்கும் என் கூட்டத்தாருக்கும் இப்பரிசுப் பொருள் வேண்டாம் நான் உமது எல்லையிலேயே எங்கேனும் நிரந்தரமாக தங்கிடும் காலம் வரும் என்று எண்ணுகிறேன்.  அவ்வாறிருப்பின் தங்குவதற்கும் தவம் புரிவதற்கும் சிறிது நிலம் தந்தால் போதும்” என்று எடுத்துக்கூற மன்னர் 30 வேலி நிலத்தை காணிக்கையாக கொடுத்துள்ளார். நாகூர் நாயகம் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் நாகூரில் தங்கி மார்க்கப் பணி மேற்கொண்டுள்ளார்கள்.

நாகூர் ஆண்டகை மரணித்த பின்பு தஞ்சையை ஆண்ட பிரதாப் சிங் போன்ஸ்லே மனைவியுடன் நாகூர் தர்காவுக்கு விஜயம் செய்திருக்கிறார். இந்த தரணியை ஆள தனக்கு மகன் பிறந்தால் இந்த தர்காவிலேயே மிகப் பெரிய மினாரா ஒன்றை கட்டித்தருவதாக வேண்டுதலும் வைக்கிறார். அதேபோன்று அவரது வேண்டுதலும் பலிக்க 131 அடியில் மன்னர் கட்டித்தந்த பெரிய மினாரா இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் ஜீவகாருண்யத்தை சரித்திரத்தில் போற்றிப் புகழ்கிறோம்,  நாகூர் மினராக்களில் வந்து அடைக்கலம் புகும் புறாக்களின் தீனிக்காக ஒரு கிராமத்தையே நாகூர் தர்காவுக்காக நன்கொடையளித்த சரபோஜியைப் பற்றி ஏனோ நாம் சிலாகித்துப் பேசுவதில்லை. திட்டச்சேரி நரிமணம் பகுதியில் இருக்கும் புறாக்கிராமம் என்ற சிற்றூர்தான் நாமிங்கு குறிப்பிடும் ஊர்.

//இரண்டாம் துளஜா 1788 ஆம் ஆண்டு 277 ஊர்களை கும்பினிக்கு அளித்தார், 11.06.1779 நாகூரைக் கும்பினிக்கு ஜாகீர் கொடுத்ததற்கு கறார்நாமாவை எழுதிக் கொடுக்காமல் நீங்கள் கும்பினிக்கு கொடுத்த தொகையானது குறைவாகவே காணப்படுகிறது// என்ற குறிப்பு பதிவாகக் காணப்படுகிறது..

தர்காக்களுக்கு நிதியுதவி

தஞ்சாவூரிலுள்ள படே ஹுசைன் தர்கா என்ற தர்காவுக்கு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திலிருந்து தொடர்ந்து நிதியுதவு அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

1773-ஆம் ஆண்டு மல்லிம் சாஹேப் என்பவர் கடைவிதியில் கோட்டையின் பக்கம் ஒரு பள்ளிவாசல் கட்டினார்., அந்த பள்ளிவாசலை நடத்துவதற்கும். அங்கு வரும் ஃபக்கீர்மார்களுக்கு உணவு அளிக்கவும், சாலியமங்கலம் வட்டத்தில் கடதம்பட்டு என்ற ஊரில் 10229 குழிகளும் வல்லார்பட்டு என்ற ஊரில் 2419 குழிகளும் ஆகக்கூடி 12648 குழிகள் இனாமாக அளிக்கப்பட்ட ஆவணங்கள் காணப்படுகின்றன.  இங்கு “முகமதுபுரம்” என்று பெயரில் ஒரு  ஊரையும் மன்னர் உருவாக்கினார்.

கி.பி 1785-ல் திருபந்துருத்தியில் 1963 குழிநிலமும் மரஞ்செடி கொடி வகைகளில் கால் வேலி மூன்றேகால் மா அளவு நிலம் ஹிஸ்லேக்மல் என்ற ஃபக்கீருக்கு இனாமாக  அளிக்கப்பட்டுள்ளது.

சூலமங்கலத்தில் இரண்டே முக்கால் வேலி நிலம் 700 சக்கரம் கொடுத்து விலைக்கு வாங்கி அங்கு தர்காவை ஜப்தியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 1787-ல் ஹஸன்ஸா ஃபக்கீர் வேண்டிக் கொண்டதற்கு இணங்க  ஆணை பிறப்பிக்கப்பட்ட ஆவணமும் நமக்கு கிடைக்கின்றது. .

இங்ஙனம் மாராத்திய மன்னர்களிடம் நிலக்கொடைகள் பெற்ற தர்காக்கள் ஏராளமாக உள்ளன. மத வேறுபாடு இன்றி புரிதலுடன் மிக இணக்கமாக மராத்திய மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.

இஸ்லாமிய ஆண்டுகளைக் குறிக்கும் ஹிஜ்ரி ஆண்டு குறிப்பும் பல ஆவணங்களில் அவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  நவாபுக்களுக்கு எழுதப்பட்ட மடல்களில் இந்த வருடக்கணக்கு இடம் பெற்றிருக்கின்றன.

அல்லா பண்டிகை 

மோடி ஆவணங்களில் “அல்லா பண்டிகை” என்ற குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன. அதென்ன ‘அல்லா பண்டிகை’? என்ற கேள்வி கேட்கலாம். முஹர்ரம் பண்டிகையைத்தான் அப்படி குறிப்பிடுகிறார்கள். .

மராத்திய மன்னர்களைப் பொறுத்தவரை முஹர்ரம் பண்டிகையும் ஒன்றுதான் கந்தூரி விழாவும் ஒன்றுதான். எல்லாமே அல்லா பண்டிகைதான். பம்பாய் நகரத்தில் ஈரானிலிருந்து குடியேறிய ஷியா முஸ்லீம்கள் அப்போது நிறைய இருந்தனர். அந்தக் கலாச்சாரத்தை இஸ்லாமிய மார்க்கத்துடன் இணைத்து தமிழகத்தில் அறிமுகம் செய்தவர்கள் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள்தான்.

//அல்லா பண்டிகைக்காக மன்னர் எல்லா தர்காக்களுக்கும் போய் வருவதுண்டு. அங்ஙனம் போகுங்கால் இனாம் அளிப்பது வழக்கம். அல்லா பண்டிகை நடத்தவும் நன்கொடையும் அளிப்பதுண்டு// என்ற குறிப்பு காணப்படுகிறது.

//அல்லா பண்டிகைக்கு ஃபக்கீர்களுக்கு கொடுப்பதற்காக மாதுஸ்ரீ ஆவு சாஹிப் ரூ30, சைதாம்பாயி சாஹேப் ரூ 30, காமாட்சியம்பா பாயி சாஹேப் ரூ 25, சுலஷணபாயி அம்ணி ராஜா சாஹேப் ரூ 10, சக்வாரம்பா பாயி அம்மணி ராஜே ரூ 10, ஆக 105 என்ற கணக்கு வழக்கை தஞ்சை சரஸ்வதி மகால் சுவடிக்குறிப்பில் காண முடிகிறது. அரசமாதேவிக்களும், அரச குடும்பத்தினரும் தங்களது பங்கை முஹர்ரம் பண்டிகைக்கும், நாகூர் கந்தூரி விழாவுக்கும் நன்கொடை அளிப்பதை வழக்கமாகி வைத்திருந்தனர்.

முஹர்ரம் மாதத்தில் 10-ஆம் நாள் நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைனார் வாளால் வெட்டப்பட்டு இறந்த துக்கத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு ஷியா பிரிவினர் கை வடிவில் உருவம் செய்து அதை “பஞ்சா” என்று அழைத்து பண்டிகையாக கொண்டாடினர். 1852-ஆம் வருட வாக்கில் இப்பழக்கம் தஞ்சை மண்ணில் பரவலாகக் காணப்பட்டது.  டக்கா எனும் இசைக்கருவியும் அவ்விழாவில் இசைக்கப்பட்டது.

முஹர்ரம் பண்டிகையின்போது இதனை கொண்டாடுபவர்களுக்கும், இதைக் கொண்டாடக் கூடாது என்று கூறுபவர்களுக்கிடையே சிறுச் சிறு சச்சரவுகள் ஏற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசரிடம் இம்முறையீடு வைக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றன.

நாகூர்

//1827-ஆம் ஆண்டு நாகூர் சாயபு தர்காவுக்கு சர்க்காரிலிருந்து மூடுகிற வஸ்திரமான பச்சை நிறப் போர்வையை வழக்கப்படி அனுப்புதற்கு சக்கரம் 20தொகை அனுப்பிய வகையில்// என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது.

நாகூர் அதிகாலையிலும் பொழுது சாயும் மாலை வேளையிலும் குண்டு போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த குண்டு என்பது ஹிரோஷிமா நாகாசாகியில் அமெரிக்கா காரன் போட்ட குண்டு போன்றதல்ல. ஊருக்கே கேட்கும்படியான அதிர்வெட்டு அவ்வளவுதான். இந்த பழக்கத்தையும் நாகூருக்கு அறிமுகம் செய்து வைத்தது மராத்திய மன்னர்கள்தான்.

நவராத்திரி அன்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் இந்த குண்டு வெடிக்கும். அரசரது பிறந்த நாளின்போது அரசருக்கு எத்தனை வயதோ அத்தனை குண்டுகள் போடப்படும்.

நாகூரில் அன்றாடம் நகரா வாத்தியம், ஷெனாய், ‘கிழமை ராவு’களில் நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் இன்றும் இசைக்கபடுகின்றன. நாகூர் தர்காவுக்கு முதன்முதலில் நகரா வாத்தியத்தை நன்கொடையாக அளித்த கணக்கு வழக்கும் முறையே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை பாரம்பரிய வழக்கமாக நாகூர் தர்காவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள்தான்.

கந்தூரி சமயத்தில் எடுபிடி பணிகள் செய்ய தஞ்சை அரண்மனையிலிருந்து சேவகர்கள் அனுப்பட்டிருக்கின்றனர். 1834-ஆம் ஆண்டு நாகூர் தர்கா கந்தூரி வைபவத்தின் 9-ஆம் நாளன்று தங்கத்தேர், வெள்ளித்தேர், யானைத் தந்தத் தேர் பெரியது சிறியது, சங்கீதத் தேர் என ஐந்து தேர்கள் வழங்கப்பட்டுள்ளன.

நகரா

இந்த நகரா என்பது வடநாட்டுப் பெயர் என்றாலும் காலங்காலமாக தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பெருமுரசுதான் இது. இன்றும் தமிழகத்து பல பள்ளிவாசல்களிலும் இது காணப்படுகிறது .பெரிய அரைவட்டச் சட்டி போன்ற தோலிசைக் கருவி. கோயில்களின் முன் மரக்கதவுகளை அடுத்துள்ள பகுதிகளில் இந்தக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். கோயில் நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்களை தூரத்தில் இருப்பவர்களும் அறிவிக்க நகரா இசைக்கப்படுகிறது. தாமிரம், பித்தளையால் ஆன அடிப்பகுதியில் தோல் இழுத்து கட்டப்பட்டு,  இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். வளைந்த குச்சிகளால் இசைப்பார்கள். சில நேரம் யானையின் மீது இந்தக் கருவியை வைத்து இசைத்துச் செல்வதும் உண்டு.

நாயக்கர் காலத்திலும் இந்த நகரா இசை பிரபலமாக இருந்தது.   மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு சன்னதி நேர் எதிரில் அமைந்த சிறிய மண்டபத்திற்குப் பெயர் நகரா மண்டபம். மீனாட்சியம்மன் பூஜையின் போது இம்மண்டபத்தில் உள்ள நகரா முரசு நாள்தோறும் அதிகாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும், மாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும் கொட்டப்படும். இம்மண்டபம் நகரா முரசு அடிக்கப் பயன்படுவதால் இம்மண்டபத்திற்கு நகரா மண்டபம் எனப் பெயராயிற்று. மதுரை நாயக்க மன்னர் அச்சுதராயர் காலத்தில் நகரா மண்டபம் கட்டப்பட்டது.

இதேபோன்று நாகூரில் நகரா மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காலையிலும் அந்தி சாயும் வேளையில். ஷெனாய் ஒலியுடன் சேர்ந்தே ஒலிக்கும். மராத்திய மன்னர்களின் ஆட்சியில் “நகார் கானா” என்ற பெயரில் சேமிப்புக் கிடங்கு இருந்தது.  இதில்தான் சகலவிதமான தோல் இசைக் கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும்.

ஆற்காட்டு நவாபுகள் நாகூரை “காதர் நகர்” என்றும் பெயரிட்டு அழைத்தனர். ஆன்மீகப் பெரியராகவும் மார்க்க ஞானியாகவும் விளங்கிய நாகூர் நாயகம் அவர்கள் மூலம் எண்ணற்ற பேர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் வாழ்வில் நடந்ததாக உண்மைக்குப் புறம்பான பல நிகழ்வுகள் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

பிரதாப் சிங்

பிரதாப் சிங் என்ற மராத்திய மன்னரின் பெயரை சில குறிப்புகளில் பிரதாப சிங்கர் என்று மரியாதை நிமித்தம் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருந்தது. அவர் எப்போது எல்விஸ் பிரஸ்லி மாதிரி சிங்கர் ஆனார் என்று நினைத்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

//பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான சிரீமத் சத்ரபதி மகாராசராச சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்// என்று மாராத்திய மன்னர் பிரதாப்சிங்கை போற்றும் வகையில் உள்ள சொற்றொடரை நாகூர் மினாரா கல்வெட்டு ஒன்றில் காணமுடிகின்றது.

நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவுபடுத்தி, 131 அடி பெரிய மினாரைவைக் கட்டி தர்காவின் பராமரிப்புக்கு 15 கிராமங்களையும் மானியமாக அளித்த பெருமை மன்னர் பிரதாப் சிங் அவர்களைச் சாரும். மராத்திய மன்னர்கள் தர்காவிற்கு பல நேரங்களிலும் நன்கொடை அளித்து ஆதரவளித்து வந்திருக்கின்றார்கள்.

நாகூர் பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் பிரதாப் சிங் கட்டிய பெரிய மினாராவை ஆங்கிலேயர்கள் தங்கள் கொடிக்கம்பமாக பயன்படுத்தியதற்கு அப்போதைய மாராத்திய மன்னர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு ஆங்கிலேயர்கள் செவிமடுத்து தங்களின் எண்ணத்தை மாற்ற்றிக் கொண்டுள்ளனர்.

அடுத்தடுத்த பதிவுகளில் மராத்திய மன்னர்களின் வேறு விதமான பங்களிப்பை பார்போம்.

#அப்துல்கையூம்

 

 

 

 

 

 

 

 

 

மராத்திய மன்னர்களின் பங்களிப்பு – பாகம்-1

பேண்டு வாத்திய வரலாறு
———————————————-

எங்களூர்ப் பக்கம் கல்யாணத்தில் பேண்டு வைக்கா விட்டால் அது கல்யாணம் மாதிரியே இருக்காது. (தயவு செய்து B என்ற ஆங்கில எழுத்தின் அழுத்தம் கொடுத்து இதனை வாசிக்கவும். இல்லையெனில் அர்த்தமே மாறி ஏடாகூடமாகி விடும்)

கல்யாண ஊர்வலத்தில் சுருட்டை முடியுடன் குடந்தை ஜேம்ஸின் புதல்வர்கள் கிளரினெட்டை இசைத்துக் கொண்டு நடந்து வந்தால்தான் கல்யாணம் களைகட்டும். நடுராத்திரியில் ஊர்வலம் தெருவழியே போகும். தூங்கிக் கொண்டிருந்த பெண்டுகள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து கண்ணை கசக்கிக் கொண்டு ஜன்னல் வழியே பேண்டு வாத்தியத்தை ரசிப்பார்கள். “கும்பகோணம் ஜேம்ஸ் பேண்டு” என்ற போர்டை ஏந்திக்கொண்டு அந்த வாத்தியக்குழு “பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது” என்ற திரைப்படப் பாடலை ‘பீப்பீ.. பீப்பீ’ என்று முழங்கியவாறு ஊர்வலம் நகர்ந்துக் கொண்டிருக்கும். ஜேம்ஸ் அந்தக் காலத்தில் இசைமுரசு நாகூர் E.M. ஹனிபா குழுவில் கிளாரினெட் வாசித்துக் கொண்டிருந்தவர். அவர் புதல்வர்கள் பேண்டு பாரம்பரியத்தை மெல்லிசை கலந்து தொடர்கிறார்கள்.

இந்தியில் “ஹம் பேண்டு பஜாதேகா” என்றால் “மவனே நான் உன்னை வச்சி செஞ்சிடுவேன்” என்று பொருள். ஆங்கிலத்தில் “You Will Face the Music” என்றால் “மவனே நீ செமையா மாட்டிக்கிட்டே. உனக்கு ஆப்பு நிச்சயம்” என்று பொருள்.

பேண்டு சம்பந்தப்பட்ட பதிவாச்சே என்ற நல்லெண்ணத்தில் என் நண்பர் பேண்டு வாத்தியார் ஹாஜிபால் சாரிடம் சொல்லிக்கொண்டு இந்தப் பதிவை நான் எழுத ஆரம்பித்தேன். “யாரும் தொடாத சப்ஜெக்ட்டு. ஜமாய்ங்க” என்று வாழ்த்தினார். என் பிள்ளைகளை பள்ளிக்கூட பேண்டு வாத்தியக் குழுவில் இணைத்து பயிற்சியளித்தவர் இவர்தான். அந்த விசுவாசம்தான்.

எனக்கு மராத்தியர்களை மிகவும் பிடிக்கும். பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தம் தாக்கரே இவர்களைத் தவிர எல்லா மராத்தியர்களையும் குறிப்பாக நம் மண்ணை ஆண்ட அனைத்து மராத்திய மன்னர்களையும் வெகுவாக பிடிக்கும்.

“ஏன்யா உனக்கு என்னை பிடிக்காது?” என்று ராஜ் தாக்கரே நேரில் வந்துக் கேட்டாலும் “நீதான் தமிழர்களே தாக்கரே, அதனால் உன்னை எனக்கு பிடிக்கலே தாக்கரே” என்று முகத்திற்கு நேராகவே சொல்லி விடுவேன்.

“பேண்டுக்கும் மராத்திய மன்னர்களுக்கும் என்னதான் அப்படி சம்பந்தம்?” என்று நீங்கள் கேட்கலாம். உண்டு சாரே. அதுக்காகத்தானே இவ்வளவு பில்டப்பு. இந்த விவரங்களை நான் சும்மா அவிழ்த்து விடவில்லை (புளுகு மூட்டையை).

இவையாவும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அரிய கையெழுத்துச் சுவடித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கே.எம்.வேங்கடராமையா அவர்கள் சேகரித்த அருஞ் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நான் வரைந்தது.

“இவ்வளவு சீரியசான விஷயத்தை இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்றீங்களே?” என்று நீங்கள் கேட்கலாம். நம் வீக்னஸே அதுதாங்க. எதையும் நமக்கு சீரியசா சொல்லத் தெரியாது. சிரிக்கக்கூடாத இடத்திலும் சிரிச்சு தொலைச்சு காரியத்தைக் கெடுத்திடுவேன்.

திருச்சிக்கு கிழக்கே கொள்ளிடத்துக்கு தெற்கே 1676 முதல் 1855 வரை ஆட்சி மராத்தியர்கள் நம் மண்ணை ஆட்சி புரிந்தனர். அவர்கள் புரிந்த நன்மையை மட்டுமே நான் இங்கு அலசி ஆராய்ந்திருக்கிறேன். ஆட்சியில் கண்ட குறைகளை நான் இங்கு எடுத்துச் சொல்ல விரும்பவில்லை. பொங்குபவர்கள் பொங்குவார்களே என்பதற்காக இதை முன்னெச்செரிக்கையாக நானே இங்கு பொங்கி விட்டேன். .

தஞ்சை மராத்திய மன்னர்களின் வரலாற்றை “Tanjore Maratha Principality” என்ற தலைப்பில் முதன் முதலில் எழுதியது ஹிக்கி என்ற ஆங்கிலேயர். (அவர் பெயர் பக்கி அல்ல ஹிக்கி ) அதன்பின் MARATHA RAJAS OF TANJORE என்ற தலைப்பில் கே.ஆர்.சுப்பிரமணியன். அதற்குப்பின் MARATHA RULE IN CARNATIC என்ற தலைப்பில் சி.கே.சீனிவாசன் போன்றோர் எழுதினார்கள்.

இவையாவும் தஞ்சை சரஸ்வதி மகாலில் பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மோடி ஆவண தமிழாக்கங்களிலிருந்து (இந்த மோடிக்கும் அந்த மோடிக்கும் சம்பந்தமில்லை ஐயா) கையெழுத்துச் சுவடிகளிலிருந்து பெறப்பட்ட அரிய தகவல்களாகும்.

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சட்டைக்காரர்களின் ஆதிக்கம் இங்கு ஏற்பட்ட பின்பு மேனாட்டு இசைக்கருவிகளும் இங்கு அறிமுகம் ஆகத் தொடங்கின. ஆங்கிலேயர்களை சட்டைக்காரர்கள் என்றுதான் நம்மவர்கள் அப்போது அழைக்கலாயினர். குருடர்கள் மத்தியில் ஒற்றைக் கண் உள்ளவன் ராஜா என்பார்கள். அதுபோல பெரும்பாலான தமிழர்கள் மேல்சட்டை அணியாதிருந்த அக்காலத்தில் சட்டை அணிந்திருந்த ஆங்கிலேயர்களை சட்டைக்காரர்கள் என்று அழைத்தார்கள் போலும்

மராத்திய மன்னர்கள் இசைப்பிரியர்களாக இருந்தனர் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. சரஸ்வதி மகாலில் காணப்படும் மராத்திய மன்னர்கள் காலத்து கணக்கு வழக்குகள், ஆவணங்கள் யாவும் நம் கூற்றுக்கு வலு சேர்க்கின்றன.

1770-ஆம் ஆண்டு மேஸ்தர் அந்தோனி சாபத் வாத்தியம் வாசித்ததற்கு ரூ 5 சன்மானம் பெற்றதாக குறிப்பு காணப்படுகிறது.

Fiddle Violin தந்திகளை ராபர்ட் என்ற வெள்ளைக்காரனிடம் வாங்கிய கணக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது. மனுஷன் ரொம்ப கெட்டிக்காரன். வெறும் தந்தி கம்பிகளை பெரும் தொகைக்கு ராஜா தலையில் கட்டிவிட்டான்.

30.04.1822 தேதியன்று திரெளபதாம்பாபுரம் என்ற ஊரில் அக்னிஸ்புருஸ் IRISH BAG PIPE வாசிப்பதற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ 45. அப்போது அது ஒரு பெரிய தொகை.

1823-ஆம் ஆண்டு டாக்டர் சிவஸ்தர் மூலம் HARP வாங்கியதற்கு 200 புலிவராகன் கொடுக்கப்பட்டுள்ளது. அடேங்கப்பா !

தஞ்சையில் பியானோ வாத்தியம் செய்வதில் மேனுவேல் நபராயி என்ற இசைக்கலைஞர் அப்போது வல்லவராகத் திகழ்ந்திருக்கிறார்.

42 பேர்கள் அடங்கிய பேண்டு வாத்தியக் குழு அப்போது இருந்திருக்கிறது.

கர்ணா, டக்கா இவ்விரண்டு வாத்தியங்களும் குதிரையில் வைத்து வாசிக்கப்பட்ட வாத்தியங்கள்.

Clarinet, Flute, French Horn, Trumpet , Irish Bag Pipe போன்ற மேனாட்டு வாத்தியங்கள் அல்லாது வடநாட்டு இசைக்கருவிகளையும் தமிழகத்தில் அறிமுகம் செய்த பெருமை மராத்திய மன்னர்களையேச் சாரும்.

பிரபலமான சாரங்கி இசைக்கலைஞர்கள் யாரென்று நம்மிடம் கேட்டால் சுல்தான்கான், ராம்நாராயண், சாப்ரிகான், சுஹைல் யூசுப்கான், துருபா கோஷ், ரமேஷ் மிஷ்ரா என்று சொல்லிவிடுவோம். அக்காலத்திலேயே இந்துஸ்தானி வாத்தியமான சாரங்கி என்ற இசைக்கருவியை வாசிப்பதில் தமிழகத்தில் குப்புசாமி , கோபாலய்யா போன்றவர்கள் வல்லுனர்களாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.

தமிழகத்து வாத்தியங்களான நாதசுரம், சுருதி, ஜாலர், உடுக்கை, சந்திர சூரிய வாத்தியங்கள், புல்லாங்குழல், திதி , காகலம் போன்றவை அப்போது பரவலாக இருந்த காலம்தான் அது. மிருதங்கம், சாரங்கி, சாபத் முதலிய தோற்கருவிகளும் அப்போது பிரபலம். நாக்கில் வைத்து வாசிக்கப்படும் மோர்சிங் வாத்தியம், ‘ஓம்’ என்ற நாதத்தை எழுப்பும் பஞ்சலோக பிரணவ கந்தா போன்றவை வழக்கத்தில் இருந்துள்ளன.

நாகூரில் தினந்தோறும் ஷெனாய் மற்றும் நகரா எனப்படும் தோல்கருவி “நகரா மேடையில்” இசைக்கப்படுகிறது. இன்றும் அது இசை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாகூர் பெரிய மினாராவைக் கட்டியது தஞ்சையை ஆண்ட மன்னர் பிரதாப்சிங் என்பது நாமறிந்த செய்தி. மராத்திய மன்னர்கள் தொடங்கி வைத்த அந்த பழக்க வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

தஞ்சாவூர் எப்படி தலையாட்டி பொம்மைக்கும், தஞ்சாவூர் தட்டுக்கும் பேர் போனதோ அதுபோன்று தஞ்சாவூர் வீணைக்கும் இசை வரலாற்றில் தனியொரு இடமுண்டு. இதைப்பற்றி வரும் தொடரில் விவரமாக எழுதுகிறேன்.

1776 ஆம் ஆண்டிலேயே வீணைக் கலைஞர்கள் மராத்திய மன்னர்களின் அவையில் இருந்திருக்கிறார்கள். ஹுஜூரில் வீணையின் தந்தி வாங்கி கொடுத்ததற்கு எட்டு பரங்கிப்பேட்டை வராகன் கொடுத்ததாக குறிப்பு காணப்படுகிறது.

மராட்டிய மன்னர்கள் வீணை வாசிப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். எனக்கும் வீணை வாசிக்க வரும். “வீணை” என்று யாராவது தமிழில் எழுதிக் காண்பித்தால் நன்றாக வாசிப்பேன்.

“ஜெயபேரிகை” என்ற பெயரில் வெற்றி முரசு இருந்துள்ளது தம்பூரா வழக்கில் இருந்துள்ளது. பெண்களும் மேளம் வாசித்த்தாக குறிப்புகள் காணப்படுகின்றன.

செள அகில்பாயி என்பவரிடத்தில் சங்கீதப்பெட்டி பழுதுபார்க்க ரூ 7 என்று கணக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கீதப்பெட்டி என்பது ஹார்மோனியமா அல்லது சுருதிப்பெட்டியா என்பது சரிவரத் தெரியவில்லை.

மாராத்திய மன்னர்கள் இசைமேல் இருந்த ஆர்வத்தில் இசை சம்பந்தப்பட்ட நூல்களை அதிக விலை கொடுத்து மேலை நாட்டிலிருந்து வரவழைத்து சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்து வைத்தனர்.

இன்றளவும் மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் பொம்மலாட்டம் என்றால் முதலில் தஞ்சாவூர்தான் நம் நினைவில் சட்டென்று வரும். பொம்மலாட்டம் கலையில் வல்லவர்களாக ராம செட்டி மற்றும் மன்னாரு செட்டி என்பவர்கள் அன்றைய காலத்தில் திகழ்ந்திருக்கின்றார்கள்.

தஞ்சையில் ஏராளமான பேண்டு வாத்தியக் குழுக்கள் இன்றும் உள்ளன. குடந்தையிலும் ஏராளமாகக் காணலாம்.. திருச்சி மேலப்புதூர் மற்றும் பீமநகரில் உள்ள குறுகலானச் சந்தில் நடந்து போனால் திரும்பும் இடமெல்லாம் பேண்டு வாத்தியக் குழுவினரை காண முடிகிறது. இவர்களுடைய வாழ்வாதாரம், பொருளாதாரம் சிறப்பான வகையில் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை. சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டத் தெருவில் வாழும் பேண்டு வாத்தியக் கலைஞர்களின் வாழ்க்கை இதற்கு நல்ல உதாரணம்

ட்ரம்பெட், சட்டி மேளம், தப்பு செட்டு, கானா இசைக்கு டோலாக் செட்டு, பஞ்சாபி மேளம் டோலிக் பாசா, மொரா கோர்ஸ், சைட் ட்ரம், டோல், கட்ட மேளம் (மாட்டுத்தோல் மேளம்) இவையனைத்தும் பேண்டு குழுவில் ஓர் அங்கமாக இணைந்து விட்டது. இப்போது புதிதாக கேரளத்து செண்டை மேளமும் ஊடுறுவி இவர்களுக்கு போட்டியாக வந்து விட்டது.

இப்போது Mickey Mouse, Pink Panther, Teddy Bear போன்ற வேடம் தரித்து கூட்டத்தினரை மகிழ்விப்பது Trend ஆக மாறிவிட்டது. மராத்திய மன்னர்கள் காலத்திலேயே ஆட்டுக்கடா, புலி, கரடி, மான். பன்றி, சிங்கம் போன்ற வேடம் தரித்து மகிழ்விக்கும் கலை இருந்திருக்கின்றது.

மராத்திய மன்னர்கள் அன்று அத்தனை விதமான பாரம்பரியக் கலைகளையும் ஊக்குவித்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை. அடுத்தடுத்த தொடரில் மராத்திய மன்னர்கள் வளர்த்த கர்னாடக இசை, நாட்டியம் நாடகம் முதலியவற்றை அலசுவோம்

#அப்துல்கையூம்