பாலும்,தெளிதேனும் என் ஆசானும்

Gafoor Sahib

இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்

எனது ஆசான் ஹக்கனருள் பெற்ற இறையருட் கவிமணி அப்துல் கபூரின் சொக்கவைக்கும் வரிகளை ஆராய்ந்து அதற்கு விளக்கம் சொல்லப் போனால் பக்கங்கள் காணாது. ஒருவன் தகுதி வாய்ந்த கவிஞன் ஆக வேண்டுமெனிலும் அவன் கன்னித்தமிழ் காவியங்களையும் காப்பியங்களையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் .அதைக் கசடறக் கற்று கரை கண்டிருக்க வேண்டும்.

அவனது எழுத்துக்களில் தாமாகவே அதன் பாதிப்புகள் பிரதிபலிக்கும். அதற்குப் பெயர் “காப்பியடித்தல்” என்பதல்ல. கற்றுணர்ந்த காவியங்களின் காமதேனு வெளிப்பாடு அது. சட்டியில் உள்ளது அகப்பையில் அதுவாகவே வரும்.

இக்கட்டுரையின் இறுதியில் நான் போற்றி மகிழும் என் பேராசிரியரின்  நான்கே நான்கு வரிகளை  மட்டும் ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன். அதற்கு முன் சில எண்ணச்சிதறல்கள்.

பண்டமாற்று முறை (Barter trade) பண்டைய காலத்தில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்த காலம். அச்சடித்த நாணயம் புழக்கத்தில் இல்லாத காலம். ஒளவையார் பேரம் பேசுகிறார். யாரிடம்? ஆனைமுகத்து விநாயகரிடம். என்ன பேரம் அது? நான் உனக்கு நான்கு பொருட்கள் கொடுக்கிறேன் அதற்கு பதிலாக நீ மூன்றே மூன்று பொருட்கள் தந்தால் போதும் என்று.  Very fair deal.

பால், தேன், பாகு, பருப்பு இந்த நான்கு பொருட்கள் தருகிறேன் அதற்கு பதிலாக சங்கம் வளர்த்த இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்  இந்த மூன்றே மூன்று மட்டும் கொடுத்தால் போதும் என்று வாயாடுகிறார். பேரம் பேசுவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான் போலும். வீரத்திற்கு ஆண்கள். பேரத்திற்கு பெண்கள்.

அவ்வையின் காலம் எதுவென்றால் சோழநாட்டில் கம்பரும், ஒட்டக்கூத்தரும், புகழேந்தியும் வாழ்ந்துவந்த காலம்.  மதுரையில் கடைச்சங்கம் வீற்றிருந்த காலம்.

“முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் பெருமையுடன் போற்றி வளர்த்த பைந்தமிழ் மொழியில் எனக்கு புலமையைத் தா” என்றும் ஒளவையின் பாட்டுக்கு பொருள் கொள்ளலாம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா

இந்த பால், தேன், பருப்பு ‘மேட்டரை’ வடலூர் இராமலிங்க வள்ளலாரும் கையாளத் தவறவில்லை.

‘தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பருப்பும் தேனும் கலந்த கலவையை விடச் சுவையானவன் இறைவன்’ என்கிறார்.

பிறிதொருவிடத்தில்

வான்கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை

நான் பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன்கலந்து  பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்

ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்கிறார்.

“மணிக்கவாசகா! நீ எழுதிய திருவாசகத்தை நான் பாடும்பொழுது எப்படியிருக்கிறது தெரியுமா! கரும்புச்சாறு, தேன், பால் இவற்றை இனிக்கின்ற கனிகளோடு கலந்தால் எத்தனைச்சுவையாக, இருக்குமோ அப்படியொரு  இனிப்போ இனிப்பு” என்கிறார்.

பாரதிதாசனுக்கும் இதே உணர்வு ஆட்கொண்டிருக்கிறது. அவனும் சளைத்தவனல்ல. ஒளவையார்,  வடலூர் இராமலிங்க அடிகளார் இவர்களின் பாக்களை படித்து அவனும் பலாச்சுளையாய்ச்  சுவைத்தவன்தான் .

பாரதிதாசனின் வருணனை ஒரு படி மேல். பலாச்சுளை, கனிச்சாறு, தேன், பாகு, பால், இளநீர் இவையாவும் சுவைதான்.  யாரில்லை என்று சொன்னது?  அதைவிட இனிமையானது ஒன்று இருக்கிறதே ! அது என்ன தெரியுமா? அதுதான் தமிழ் என்கிறார்.

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்

பாகிடை ஏறிய சுவையும்,

நனிபசு பொழியும் பாலும் – தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும் – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!

இப்போது இறையருட் கவிமணியின் வருணனைக்கு வருவோம். அவரது கற்பனை அவருக்கே உரித்தான வகையில் இருக்கிறது. பாரதிதாசன் தமிழுக்கு வருணித்ததை நம் பேராசிரியர் அவரது மனதைக் கவர்ந்த நபிகள் நாயகத்தை வருணிக்கிறார். நபிகள் நாயகத்தின் மொழியானது அவருக்கு கனியிடை ஏறிய சுளைபோல, பனிமலர் ஏறிய தேன் போல, நனிபசு பொழியும் பால் போல சுவையானதாக இருக்கிறதாம். “நாயக மாலை”யில் இடம்பெறும் 104-வது பாடலிது.

தேம்பலாவின் சுவைபோலத்

தெவிட்டாத தேன்போல

மேம்பாலின் சுவைபோல

மேன் மொழியின் நாயகமே!

வெறும் நான்கே வரிகள்தான்  இந்த நான்கு வரிகளில் ஒளவையார் முதல் பாரதிதாசன்வரை , அவர் படித்த அனைத்து இலக்கியங்களை அவர் பிரதிபலிக்கின்றார். நபிகள் நாயகத்தின்  மீது அவர் வைத்திருக்கும் தீராத பற்று எப்படிப்பட்டது என்பதையும் இவ்வரிகள் நமக்கு உணர்த்துகிறது. தொட்ட அனைத்து ஊறும் மணற்கேணியாய், கற்ற அனைத்துயும் நம் கண்முன் கவிஞர் அப்துல் கபூர் சாகிப் அவர்கள் கொண்டு வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

–              அப்துல் கையூம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s