காதல் எல்லோரும்தான் புரிகிறார்கள்

ஆனால் வித்தியாசம் இதுதான்

சிலர் உயிரைக்கொடுத்து காதல் புரிகிறார்கள்

சிலரை உயிரை வாங்குகிறார்கள்

மறப்பதற்கல்ல நட்பு

பிரிவதற்கல்ல நண்பர்கள்

நட்பு தரும் ஆனந்தம் எம்மாத்திரமெனில்

உனக்கு அழுவதற்கு கூட நேரம் கிடைக்காது போகும்.

இப்போது நான் தலைபோகும் அவசரத்தில் இருக்கிறேன்,

ஓய்வாக இருக்கும்போது யோசித்துச் சொல்கிறேன்

உன்னை நினைவில் கொள்ளும்போது நான்

எதை எதையெல்லாம் மறந்து போகின்றேன் என்று…

  • மிர்ஸா காலிப்

Maine tho yun hi Raakh mein

Feri thi ungliyaan

Dekha jo gaur se

Teri tasveer ban gayi

  •  Saleem Betab

விளையாட்டாய் சாம்பலைப் பரப்பி

வெறும் விரலால்தான் துழாவினேன்

விரைந்து பார்த்ததில் உன்

வியத்தகு ஓவியம் !!

– சலீம் பேதாப்

சிரிக்கும் மனதுக்குள் சோகமும் உண்டு

புன்னகைக்கும் கண்களில் ஈரமும் உண்டு

உன் சிரிப்பு என்றென்றும் நிலைத்திருக்க இறைஞ்சுவேன் நான்

ஏனெனில்.. உன் புன்னகையைக் கண்டு

பித்து பிடித்தவர்களில் அடியேனும் ஒருவன்

Ab judaai ke safar ko

Mere asaan karo

Tum mujhe khwaab me aakar na

Pareshan karo

  • Munawwar Rana

கண்ணே !

நீ பரிசளித்த பிரிவின் பயணத்தை

இலகுவாக்க மாட்டாயா?

கனவிலும் ஏன் வந்து

என்னை காயப்படுத்துகிறாய்?

Dushmanon ne kya

Dushmani ki hai

Doston ne bhi kya

Kami ki hai

  • Habib Jalib

எதிரிகள் புரிந்த துரோகங்கள்தான்

எத்தனை எத்தனை?

நண்பர்களும் புரிந்ததும்

ஒன்றும் குறைச்சலில்லையே !

Shaakhon se toot

Jaayen wo pattey

Nahin hey hum

Aandhi se koi kehde

Ke Auqat me Rahe

  • Rahat Indori

கிளையோடு உதிரும்

இலை அல்ல நான் !

அந்த சூறைகாற்றிடம் சொல்லி வையுங்கள்

அதன் தராதரம் அறிந்து நடந்துக் கொள்ள !

இப்படி மாட்டிக் கொண்டு முழிப்பதற்கு

யாரைத்தான்  நான் குற்றம் சொல்வது?

ஒருவரா? இருவரா?

எத்தனையோ பேர்கள் வந்தார்களே

என் கல்யாணத்தின்போது அட்சதை போட !!

  • கவி ராஹத் இந்தோரி

என் மனதை நெருடிய உருது கவிதை வரிகள்  சிலவற்றை மொழிபெயர்த்து பகிர்ந்தால் என்னவென்று என் மனதில் தோன்றியது. என்னால் வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்க்க முடிந்ததே தவிர அதன் இயல்பான சாரத்தை (Essence) கொண்டுவர முடியவில்லை,

—————–

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 1

கஃபன் துணிதான்

எத்தனை வேடிக்கையானதொரு சாதனம்?

தயாரித்தவன் எவனோ

அதை அவன் விற்றும் விட்டான் 1

வாங்கியவன் எவனோ அவனும் அதை

பயன்படுத்தாமல் விட்டு விட்டான் !

பயன்படுத்தியவன் எவனோ

அதன் பயன் அவனுக்கு தெரியாமலேயே போய்விட்டது 11

கஃபன் துணிதான்

எத்தனை வேடிக்கையானதொரு சாதனம்?

(கஃபன் துணி = சடலத்துணி/ பிண ஆடை)

Kaffan bi kya ajeeb cheez hey

Jisne banaya usney bech diya

Khareedne wale ney isthimaal nahi kiya

Aur jisney isthimaal kiya

Usey maalum hi nahin

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 2

மெளனத்தை விடச்  சிறந்த இறைவழிபாடு

உலகில் வேறெதுவும் கிடையாது !

இதை வானவர்களுக்கு

தங்கள் புண்ணிய பதிவேட்டில்

எப்படி வரவு வைக்கணும் என்ற விவரம்  புரியாது !

ஷைத்தானுக்கு இந்த வணக்கத்தை

எப்படி வழிகெடுப்பது என்ற சூட்சமம்  தெரியாது !

இறைவன் ஒருவனை அன்றி

இந்த மெளன வணக்கத்தின் சாரத்தை

யாராலும் புரிந்துக் கொள்ளவும் முடியாது !

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 3

Shukhr karkey Soya karo

Khudha Subhe utneka mokha

Har kisiko nahin detha

உறங்குவதற்கு முன்பு

படைத்தவனுக்கு நன்றி கூறி உறங்குவீராக !

ஏனெனில் … இறைவன்

அடுத்த நாள் விழிப்பதற்கான சந்தர்ப்பத்தை

எல்லோருக்கும் அளித்து விடுவதில்லை !!

#அப்துல்கையூம்

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 4

Aakhri Aaina bhi Thod diya

Meri thanhayi ab Muqammal hogaya

கடைசியில்…

எஞ்சியிருந்த என் கண்ணாடியையும்

எடுத்து உடைத்து விட்டேன் !

என் தனிமை இப்போது

முழுமை பெற்று விட்டது !

#அப்துல்கையூம்

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 5

மனிதன் சில சமயம்

மெய்யாலுமே தோற்று விடுகிறான் !

மெளனம் சாதித்து சாதித்தே…..

பொறுமையை கடைபிடித்து கடைபிடித்தே…

நம்பிக்கையை வைத்து வைத்தே….

உறவுச் சுமைகளை நிவர்த்திச் செய்தே…

உண்மைகளுக்கு விளக்கம் கொடுத்தே…

தனக்குத்தானே சமாதானம் சொல்லிச் சொல்லியே

சிலசிமயம் தனக்குத்தானே !

(தோற்றும் விடுகிறான்)

#அப்துல்கையூம்

Insaan waqai haar jaathaa hey

Kamosh Rahete Rahete

Sabar Karte karte

Umidey Rakhte Rakhte

Rishtey Nibathey Nibathey

Safaayiyaan Dethey Dethey

Aur Apnoko Manathey manathey

Aur Kabhi kabhi khudsey

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 6

உண்ணும் உணவு வயிற்றுக்குள் போவதற்குள்

எத்தனை எத்தனை நுணுக்கங்கள்

இறைவனவன் வைத்துள்ளான் !

சூடாக இருந்தால்

கைகளுக்குத் தெரிந்து விடும்

கடினமாக இருந்தால்

பற்களுக்குப் புரிந்துவிடும்

கசப்போ துவர்ப்போ

நாவுக்கு தெரிந்துவிடும்

கெட்டுப் போயிருந்தால்

மூக்கு முகர்ந்துவிடும்

ஆனால் ஒன்று…

உணவு வந்த முறை

ஹலாலா?  ஹராமா?

உழைத்துச் சம்பாதித்ததா?

ஊரை அடித்து உலையில் போட்டதா?

முறையானதா? முறையற்றதா?

முடிவு செய்ய வேண்டியது நீதான்..

#அப்துல்கையூம்

ருது கவிதை மொழிபெயர்ப்பு – 7

====================================

நீ… உன்னை நீயே

நடுக்கடல்போல் மாற்றிக்கொள் !

இத்தனை வடிகால்களையும்

ஏற்றுக்கொண்டபின்

ஆர்ப்பரிக்காத நீரலைகளுடன்

அமைதியாக இருப்பதை நீயே பார் !

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 8

====================================

இன்பத்தை எங்ஙனம்

இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டாயோ

அதுபோல

துன்பத்தையும் துவண்டு விடாமல்

துணிவுடன் தோளில் தாங்கு !

ஏனெனில் இரண்டும் உன்னை

இயல்பாக சோதிப்பதற்காகவே

இறைவனால் அனுப்பபட்டது !!

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 9

====================================

Kisisey itni Nafrat na karo

Ke kabhi milna padey tho

Milna sakho

Kisise itni mohabath na karo

Ke kabhi Tanha jeena padey tho

Jeena sakho

அளவுக்கு மீறி

யாரையும் வெறுக்கவும் வெறுக்காதே !

எப்போதாவது மீண்டும் சந்திக்கவிருந்தால்

அவர்களை சந்திக்கவும் முடியாத அளவுக்கு !

அளவுக்கு மீறி

யார் மீதும் பிரியமும் வைக்காதே !

எப்போதாவது அவர்களை பிரிய நேரிட்டால்

அவர்களைப் பிரிந்து வாழ முடியாத அளவுக்கு !

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 10

=======================================

ஹா.. ஹா… ஹா…!

மனிதன்தான் எத்தனை விசித்திரமானவன் !

நினைவுகளை மட்டும்

நெஞ்சில் பூட்டிக் கொள்கிறான் !

நினைவு தந்தவர்களை

மறந்தே போய்விடுகிறான் !!

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 11

=======================================

நமது சமூகத்தில்

செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளின்

விஷமத்தனத்தைக் கூட

வெகுளித்தன குறும்பு என்கிறார்கள் !

ஏழை வீட்டுப் பிள்ளைகளின்

வெகுளியான குறும்புகளைக்கூட

விஷமத்தனம் என்கிறார்கள் !

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 11

======================================

இத்தனை வார்த்தைகள் நம் மொழியில்

இருந்திட்ட போதிலும்

சில சமயம் வார்த்தைகளே இல்லாமல்

போய்விடுகின்றன

ஆம்.. உண்மை !

சில வேளைகளில்

சில மனிதர்களுக்கு

ஆறுதல் சொல்ல முனையும்போது !

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 12

========================================

எல்லாமே எண்ணத்தைப் பொறுத்துதான் நண்பா !

கஃபாவை தரிசித்த பிறகும்

வெறுங் கையோடு திரும்புபவர் உண்டு!

வீட்டினில் இருந்தபடியே

வேண்டிய அளவுக்கு

ஆண்டவன் அருளை

அள்ளிக் கொள்வோரும் உண்டு!

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 13

=====================================

விசித்திரமான உலகம் இது !

நாம் நடை பயிலும்போது

தடுக்கி விழாமல் தாங்கிப் பிடிக்கும்

உலகம்தான் பிற்பாடு

நடக்கத் தொடங்கி நடையாய் நடக்கையில்

எப்போது தடுக்கி விழுவோம் என

எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது !

#அப்துல்கையூம்

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 14

=====================================

தீக்குச்சிகள் எல்லாமே பார்ப்பதற்கு

ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன

சிலதுகள் தீபத்தை கொளுத்துகின்றன

சிலதுகள் சொந்த வீட்டை

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 15

=====================================

வாழ்க்கை எல்லோருக்கும் பாரபட்சமின்றி

வாய்ப்பினை வழங்கத்தான் செய்கிறது

சிலர் பிடுங்கிக் கொள்கிறார்கள்!

சிலர் தவற விட்டு விடுகிறார்கள்!

சிலர் சோம்பலால் வாங்க மறுத்துவிடுகிறார்கள்!

#அப்துல்கையூம்

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 15

=====================================

உன் சந்தோஷ நேரத்தில்

யார் உன் நினைவில் வருகிறாரோ – அவர்

நீ விரும்பும் நபரென்று கருதிக் கொள் !

உன் துக்கத்தின் பிடியில் 

யார் உன் நினைவில் வருகிறாரோ -,அவர்

உன்னை விரும்பும் நபர் என்று கருதிக்கொள் !

#அப்துல்கையூம்

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 16

=====================================

இடர்களை எதிர்கொள்பவர்கள்

வரலாறு படைக்கின்றனர் !

எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள்-வெறும்

வரலாறு படிக்கின்றனர் !

#அப்துல்கையூம்

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 17

====================================

கால் இடறி விழுவதைக்கண்டு

கை கொட்டிச் சிரிக்கிறார்கள் – அவன்

தலையில் எத்தனை சுமை என்பதை

தப்பித்தவறி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !

#அப்துல்கையூம்

உருது கவிதை மொழிபெயர்ப்பு – 18

=====================================

நல்லவேளை

நன்றி கூறுங்கள் எனக்கு !

படும் வேதனைகளை எல்லாம்

பக்கங்களில் வடிக்காததற்கு

அப்படி பதியத் தொடங்கினால்

அத்தனை காகிதங்களிலும்

வார்த்தைகள் கஃபன் அணிந்து

வலம் வந்துக் கொண்டிருக்கும்

ஜனாஸாக்களாக!!

#அப்துல்கையூம்

பூமிக்கு வெகுதூரம்….

வானத்திற்கு அப்பால்…..

சொர்க்கத்தையும்

நரகத்தையும் தேடிக்கொண்டிருந்தேன்.

உள்ளுக்குள்ளே கேட்டது

ஒர் அசரீரி சப்தம்

“உனக்குள்ளேயே இருக்கிறது

சொர்க்கமும்…. நரகமும்….!!”

– உமர் கய்யாம்

சீக்கிரம் கோப்பையை காலியாக்கு!

ஏனெனில்

எங்கிருந்து நீ வந்தாய் என்பதும்

தெரியாது உனக்கு !

எதற்காக வந்தாய் என்பதும்

தெரியாது உனக்கு !

சீக்கிரம் குடித்து விடு !

ஏனெனில்

எதற்கு போகிறாய் என்பதும்

தெரியாது உனக்கு !

எங்கே போகிறாய் என்பதும்

எதுவும் தெரியாது உனக்கு !!

  • உமர் கய்யாம்

எங்கள் இறைவா!

ஏழ்மையில் வாழுகிறோம் நாங்கள் !

இன்பமின்றி துன்பத்தில் துவளுகிறோம் நாங்கள் !

எள்ளி நகையாடப்படுகிறோம் பிறரால்

உனக்காகவே வாழ்ந்து

உனக்காகவே உயிர்விட

சித்தமாகியிருக்கும் எங்களுக்கு

நீ அளிக்கும் பரிசு இதுதானா..?

மாற்றாரின் உலகமாக மாறிவிட்டது

இந்த மண்ணுலகம் !

எங்களைப் பொறுத்த வரையில்

வெறும் கனவுலகம், கற்பனை உலகம்தான்

கடைசியில் மிஞ்சியிருக்கிறது !

வெற்று ஜடமாய்  அவனியில்

நாங்கள் மட்டும் இன்னும்

நடைப்பிணமாய் நடமாடுகிறோம் !

ஏ ! எங்கள் இறைவா !

இரக்கம் கொள் ! இன்முகம் காட்டு !

புத்துணர்வு கண்டு புதுவாழ்வு வாழ

படைத்தோனே உதவி செய் !

கவிஞர் அல்லாமா இக்பால்

தெருவாசக நாயகன் – யுகபாரதி – பாகம் -1

என் ஆத்ம நண்பர் யுகபாரதியைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அது இன்றுதான் நிறைவேறியது.

காலத்திற்கு ஏற்ற வகையில் கவிஞன் தன்னைத்தானே  மாற்றிக் கொள்ள  வேண்டும். கண்ணதாசன், வாலி போன்றவர்கள் கடைசிவரையில் சினிமா உலகத்தில் நிலைத்திருந்ததன் இரகசியம் இதுதான்.

“கண்ணே! மணியே! முத்தே! மணியே! அருகில் வா!” என்று பாடுவதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுதெல்லாம் வருத்தப்படாத வாலிபர்களை சென்றடைய வேண்டுமென்றால் “அழகான ராட்சஸியே”,  “காதல் பிசாசே” என்றுதான் பாடல் எழுத வெண்டும் 

கண்ணதாசன் காலத்தில் “மஞ்சள் முகமே வருகே ! மங்கள விளக்கே வருக” என்று அவர் பாடல் புனைந்தார். இப்போது யுகபாரதி இதுபோன்று எழுதினால் “என்ன சார் கதாநாயகிக்கு என்ன மஞ்சக் காமாலையா? என்று எல்லோரும் அவரை கலாய்ப்பார்கள். 

//தாவணி போட்ட தீபாவளி

வந்தது என் வீட்டுக்கு

கை மொளச்சி கால் மொளச்சி

ஆடுது என் பாட்டுக்கு//

என்ற அவரது சரவெடி வரிகளை நாம் அசை போடுகையில் நம் மனதுக்குள்ளே ஒரு மத்தாப்பு.

யுகபாரதி எழுதினாரே என்று நானும் “தாவணி போட்ட பொங்கல் வந்தது என் வீட்டுக்கு” என்று பொருத்தமில்லாமல் எழுதினேன்னு வச்சுக்குங்க “சரியான லூசுப் பய” என்று என்னைச் சாடுவார்கள்..

சினிமாவுக்கு பாடல் எழுதும்போது,  கச்சிதமான வார்த்தைகளின் தேர்வுதான் அவனை ஒரு சிறந்த கவிஞனாக உருமாற்றுகின்றது. அந்தக் சூட்சமக் கலையை யுகபாரதி நன்றாகவே ஆல்ஃபா தியானம் போல கற்று வைத்திருக்கின்றார். அவருக்கு கிடைத்திருக்கும்  வரப்பிரசாதம் இது.

கண்ணதாசனின் வெற்றிக்கு ‘வார்த்தைகளின் தேர்வு’தான் முக்கிய காரணம். “வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை,  கடைசி வரை யாரோ” என்ற வரிகளை நீக்கி விட்டு இதைவிட வேறு நல்ல வார்த்தைகள் போடுங்கள் என்று சொன்னால் வேறு எந்தக் கவிஞனாலும் அது முடியாது.

குத்துப்பாட்டிலும் பத்துப்பாட்டு இலக்கியச்சுவையை கலக்கும் வண்ணம்  முத்தான வார்த்தைகள் புகுத்தும் சித்துவேலை வித்தையை அறிந்து வைத்திருக்கும் சத்தான பாரதி இவர்.

“ஒற்றை நாணயம்” “அற்றை திங்கள்” இதுபோன்ற யுகபாரதியின்  சங்கத்தமிழ் சொற்சிலம்பம் சற்றே நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கின்றது.

//அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே//.

என்ற புறநானூற்றுப் பாடல் என் ‘ஃப்ளாஷ்பேக்கில் வந்து பிலிம் காட்டிச் சென்றது.

//அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?//

கவிஞர் வைரமுத்து இதுபோன்ற பரிசோதனையை  சினிமாப் பாடல்களில் ஏற்கனவே செய்தவர்தான்.

இதே மரபில் வந்த யுகபாரதியின்

//அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்//

என்ற பாடல் நம்மை டிஸ்னிலேண்டுக்கு டூர் அழைத்துச் செல்கின்றது.

சொக்கும் ராகத்திற்கு அவர் வேறு ஏதாவதொரு இசை வாத்தியத்தை உதாரணம் காட்டியுருக்கலாம். வள்ளுவர் சொன்ன “யாழினிது” என்ற பாரம்பரியத்தை இனிதே கடைப்பிடிக்கின்றார்.

ஒரு யுகத்தில் ஒரு பாரதிதான் பிறக்க வேண்டும் என்பதில்லை. இந்த யுகபாரதியும் ஒருவிதத்தில் பாரதிதான். (சந்தான பாரதி, ஆர்.எஸ்.பாரதி, உமா பாரதி இவர்களையெல்லாம் கணக்கில் சேர்க்க மாட்டீர்களா? என்று பாடாய்ப் படுத்தக்கூடாது… சொல்லிப்புட்டேன்) 

நாகூர் ஹந்திரி தெரியும். வேதாத்திரி கூட தெரியும்.  ஆனால் “தேசாந்திரி”  என்ற வார்த்தையை  முதன் முதலாக யுகபாரதியின் பாடல் வழியாகத்தான்  நான் அறிந்துக் கொண்டேன். “தேசாந்திரி”  என்பதற்கு நாடோடி அல்லது யாத்திரிகன்  என்று பொருளாம். லிஃப்கோ அகராதியில்  இல்லாததை எல்லாம் இவர் கீழடி புதையலாய் பதுக்கி வைத்திருக்கிறார்.

//தேசாந்திரி நான்

கால் போகுற காடுகள் மேடுகள்

தேசாந்திரி நான்//

என்ற பாடல் மூலம்தான் இப்பொருள் எனக்குத் தெரிய வந்தது. இந்தியில் “பர்தேசி.. பர்தேசி”என்ற பாடல் நினைவுக்கு வந்தது.   Expatriateஆக இருக்கின்ற நானும் பரதேசிதானே?

யுகபாரதியை  திரையுலகத்து ஐன்ஸ்டீன். மறுபடியும் பிறந்துவந்த மார்க்கோனி. கவியுலகத்து கலீலியோ  என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் புதுப்புது வார்த்தைகளை கண்டுபிடித்த தமிழ்நாட்டு கொலம்பஸ் இவர். 

யுகபாரதியை நேரில் பார்க்கும்போது அவரது விரல்களை கெட்டியாக பிடித்து உலுக்க வேண்டும் என்று எனக்கோர் ஆசை. இதற்குமுன் நாம் கேட்டறியாத புதுப்புது வார்த்தைகள் அவருடைய விரல்களிலிருந்து வந்து கொட்டுகிறதா என்று   சோதித்துப் பார்க்க வேண்டும்..

அவருடைய “மனப்பத்தாய”த்தில் நெற்களஞ்சியமாக எண்ண முடியாத அளவுக்கு சொற்பருக்கைகள்  கொட்டிக் கிடக்கின்றன.

தத்தகாரத்திற்கு எழுதும் அவரது பாடல் வரிகள் டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடி போன்றது. காரம், மணம்,  குணம் அனைத்தும் நிறைந்து சுள்ளாப்பாக இருக்கும். 

“தேக்குமரம் உடலைத் தந்தது என்று கண்ணதாசன் பாடுவான். “கத்தி” என்ற படத்தில் வரும்  இவரது கூர்மையான வரிகளைப் பாருங்கள். 

//காட்டு மரமா வளர்ந்த இவனும்,

ஏத்தி வச்ச மெழுகானேன்.

ஆத்தி எனை நீ பாத்தவுடனே,

காத்தில் வச்ச இறகானேன்//

//கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்//

என்பார் பாவேந்தர் பாரதிதாசனார். காதலன் காதலியிடம் டுபாக்கூர் டயலாக் விடும்போது “வானத்தை வில்லாக்குவேன்”  என்றேல்லாம் உடான்ஸ் விடுவான். இப்பாடலில் நாயகன் நாயகியைப் பார்த்து  பாடுகிறான்.

//கோர புல்ல ஓர் நொடியில்,

வானவில்லா திரிச்சாயே.

பாறை கல்ல ஒரு நொடியில்,

ஈர மண்ணா கொழைச்சாயே//

என்று தலையில் ‘ஐஸ்’ வைக்கிறான் நாயகன். பாறைக் கல்லை ஈர மண்ணாக நிஜ வாழ்க்கையில் குழைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. காதல் பித்து தலைக்கேறி விட்டால் இதுபோன்ற பிதற்றல்கள் வருவது இயற்கைதான் போலும்.

யுகபாரதியைப் பார்த்தால் “பார் .. அதி சின்னப்பயல்” என்று விளிக்க வேண்டும் போலிருக்கிறது. “ இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்ற சாந்தப் பார்வை.. பூவுக்குள் இப்படி ஒரு பூகம்பம் இருக்கிறது என்பது அவருடைய பாடல் வரிகளின் ரிக்டர் அளவுகோளை வைத்து நம்மால் உணரவே முடிகிறது.

வண்ண உடை அணிந்த பாவையை  “வண்ணம் கொண்ட வெண்ணிலவே” என்று கவிஞர் வைரமுத்து பாடினார். இவரோ

//கால் மொளச்ச ரங்கோலியா,

நீ நடந்து வாரே புள்ள.

கல்லு பட்ட கண்ணாடியா

நான் உடைஞ்சு போறேன் உள்ள//

என்று பாடி புதியதொரு தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறார்.  மாவுக்கோலத்தை விட ‘ரங்கோலி’ மல்டி கலரில் கண்ணைப் பறிக்கும் என்பது உண்மை. பூக்கோலம், மாக்கோலம் என்பதைக் காட்டிலும் “ரங்கோலி” என்ற சொல்லாடல் ” நல்லதொரு சாய்ஸ்.

“நொறுங்கிப் போனேன்,  “மனமுடைந்து போனேன்,  என்றெல்லாம் சொல்வதுண்டு. யுகபாரதி இளம் வயதில் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று எத்தனை வீட்டு கண்ணாடியை உடைத்தாரோ தெரியவில்லை. 

//கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள//

என்று பாடுகிறார்.

ஆகாயப் பந்தலிலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா என்று பாடுவதெல்லாம் பழைய ஸ்டைல். இவர் “பத்ரி” திரைப்படத்தில்

//ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு

ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு//

என்று பாடல் புனைகிறார்.

//மதுர மரிக்கொழுந்து வாசம்//

//பூவே செம்பூவே உன் வாசம் வரும்//

//வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்//

என்றெல்லாம் கவிஞர்கள் பாட்டெழுத கண்டிருக்கிறோம்.  பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான மனமுண்டா இல்லையா என்றுகூட நக்கீரன் போன்றவர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். பெண்கள் மலர் சூடிய கூந்தலோடு நடக்கையில் வாசம் வருவதுண்டு. ஆனால் யுகபாரதியோ

//பார்வையில வாசனைய,

தூவிடுற வசமாக!//

என்ற புதியதொரு சிந்தனையை தருகிறார்.  பார்வையிலேயே வாசத்தை தூவிவிடும் அவள் எப்பேர்ப்பட்ட ஒரு பேரழகியாக இருக்க வேண்டும் என்று நம்முடைய கற்பனை ரெக்கை கட்டி பறக்கின்றது. இப்படியாக நம் சிந்தனையை உசுப்பிவிடுவதில் படே கில்லாடி இவர்.

எனக்கு வட்டம் என்று சொன்னால் வட்டச் செயலாளர் , மாவட்டச் செயலாளர் இவர்கள்தான் என் ஞாபகத்திற்கு வரும்.  வட்டம் என்றதும்  யுகபாரதிக்கு ஞாபகம் வருவது வட்ட வடிவிலான ஒற்றை நாணயம்.

//புல்லாங்குழலின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்//  இந்த வரி இவருக்கு இமாலயப் புகழைத் தந்த வரி.

அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல் ஓட்டை. பல்லாங்குழி, பெளர்ணமி நிலவு, இத்தோடு நிறுத்தியிருந்தால் இவர் ஒரு சாதரணக் கவிஞன். எப்படி கண்ணதாசனுக்கு “பாலிருக்கும் பழமிருக்கும்” என்ற முதலிரவு பாடலில் “காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே” என்ற பொதுவுடமை கருத்தை பாடுகிறாரோ அதுபோல காதற் பாட்டு பாடும்போது இவருக்கு தேசியக்கொடியின் சக்கரமும் ஞாபகத்திற்கு வருவதால் இவரை ஒரு தேசியக் கவிஞன் என்றே பாராட்டத் தோன்றுகிறது.

“ஜோக்கர்” படத்தில் வரும் “என்னங்க சார் உங்க சட்டம்? , என்னங்க சார் உங்க திட்டம்?” என்ற அவரது வரிகள் ஒரு சாமான்யன் சாதாரணமாக கேட்கும் கேள்விபோன்றே எதார்த்தமாக இருக்கின்றது. 

ஜோக்கர் ஹல்லா போல்

நல்லோர் கண்டு நகைத்தீரோ

வீழ்வோம் என்று நினைத்தீரோ

“ஹல்லாபோல்” என்றால் “குரலை உயர்த்து” என்று பொருள். 1989-ஆம் ஆண்டு புத்தாண்டு இரவில்  கம்யூனிச தோழர் சப்தர் ஹஸ்மி “ஹல்லாபோல்” என்ற வீதி நாடகத்தை தில்லி அருகிலுள்ள சாந்தாபூரில்  நடத்திக் கொண்டிருந்தபோது ரெளடிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வை ஒரே வார்த்தையில் ஓர் உணர்ச்சிமிகு பாடலின் முதல்வரியாக தேர்ந்தெடுக்கும் தைரியம் யுகபாரதிக்கு மட்டுமே உண்டு

“வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?”  என்ற மகாகவி பாரதியின் வரியைத்தான்  “வீழ்வோம் என்று நினைத்தீரோ ?” என்று பன்மையில் கூறுகிறார் யுகபாரதி. 

“சொகுசுகாரு தெருவுல / வெவசாயி தூக்குல / வட்டிமேல வட்டிபோட்டு / அடிக்கிறீங்க வயித்துல, நல்ல தண்ணி கெடைக்கல / நல்ல காத்து கெடைக்கல / அரசாங்க சரக்குலதான் / கொல்லுறீங்க சனங்கள”

ஒண்ணும் வேண்டாம். தில்லியில் போராடும் சர்தார்ஜீக்களுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் இப்பாடல்தான் இன்று அவர்களது தேசிய கீதமாக இருந்திருக்கும்.

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்.  இவர் கன்னித்தமிழுக்கு தந்ததோ “தெருவாசகம்”..

சினிமாப் பாடல் எழுதுகையில் அதிலுள்ள ஒரு சில வாசகம் தெருவில் போவோர் வருவோரையெல்லாம் முணுமுணுக்க வைக்க வேண்டும்.  தெருவெல்லாம் ஒலிக்கும் வாசகத்தை தேர்ந்தெடுக்கும் கலையில் யுகபாரதி கைத்தேர்ந்த கவிராஜர்.

#அப்துல்கையூம்  

பாரதிக்கு கண்ணம்மா

கண்ணம்மாவைப் பற்றிய பதிவு  இது

விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஒரு தொடரில் “ஓடினாள் ஒடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்ற பராசக்தி வசனத்திற்கேற்ப, இப்னுபதூதா போன்று ஊரு உலகம் எல்லாம் சுற்றிய கண்ணம்மாவைப் பற்றிய பதிவல்ல இது.

பாரதியின் ‘கேர்ள் பிரண்டு’ கண்ணம்மாவைப் பற்றியது. பாரதியின் மனைவியின் பெயர் செல்லம்மா அல்லவா? Who is this Kannammaa?

கண்ணனைத்தான் அவன் கண்ணம்மா என பெண்ணாக உருவகப்படுத்தி பாடினான் என்பது சிலரின்  கூற்று.

இல்லையில்லை.. பராசக்தியைத்தான் அவன்  குழந்தையாக பாவித்து பாரதி எழுதினான் பாட்டு என்பது வேறு சிலரது கூற்று.

ஊஹூம்…  அதெல்லாம் கிடையாது, பாரதியின் சிறுவயது தோழிதான் அந்த  கண்ணம்மா. அவள் ஓர் இளம் விதவை. அவளுக்கு 5 சகோதரர்கள். இனிமேல் அவள் பெயரை பாடலில் பயன்படுத்தக் கூடாது என்று பாரதியை அடித்துக் கூட பார்த்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் பயப்படுபவனா அவன்? என்று வியாக்யானம் சொல்கிறார்கள் இன்னும் சிலர்.

இது உண்மையா பொய்யா என்பதை பாரதியின் பள்ளித்தோழர்கள் சோமசுந்தர பாரதியார் , குருகுகதாஸப்பிள்ளை, விஜயராகவாச்சாரியார், ராமு போன்றவர்கள் சொல்லியிருந்தால்தான் உண்டு.

எது எப்படியோ “கண்ணம்மா” என்ற பெயரை காதலி என்ற பாத்திரத்திற்கு ICON ஆக்கிச் சென்ற பெருமை பாரதிக்கு மட்டுமே உண்டு. பிரியமானவளுக்கு அது ஒரு குறியீடாகி விட்டதென்னவோ முழுக்க முழுக்க உண்மை. 

“கண்ணம்மா”  என்ற குறியீட்டை கவிதையில் முதன் முதலாக பயன்படுத்தியது பாரதியா என்று கேட்டால் அதுவும் கிடையாது. அதற்கு முன்னரே  அழுகுணிச் சித்தர் இந்த கண்ணம்மாவை வைத்து நிறைய பாடல்கள் எழுதிவிட்டார்.

//பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து

மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,

மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்

ஆபையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!

பாழாய் முடியாவோ!//

இந்தப் பாடலிலிருந்துதான் நம்ம கவியரசர் கண்ணதாசனுக்கு

//எந்த ஊர் என்றவனே,

இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட

அறிந்த ஊர் அல்லவா//

என்ற பாடலுக்கு கரு கிடைத்திருக்க வேண்டும் என்பது நம் கணிப்பு.

//மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே

கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே

பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்

மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!//

என்று வரிசையாக கண்ணம்மா  புராணமாகவே  அழுகுணிச்ச்சித்தர் பாடுகிறார்  என்ற போதிலும் கண்ணம்மா என்றால் நம் கண்முன் மின்னலாய் தோன்றி மறைவது பாரதியின் நினைவன்றி வேறில்லை பராபரமே..

காதலைப் பாடாதவன் கவிஞனாக இருக்க முடியாது. கவிஞர்களின் கற்பனைக் காதலிக்கு கண்ணம்மா என்ற பெயரை விட வேறு பொருத்தமான  பெயர் கவிவாணர்களுக்கு வேறு மாட்டவில்லை.

பாரதியின் எத்தனையோ கண்ணம்மா பாடல்களை மெட்டு போட்டு திரைப்படத்தில் இணைத்து விட்டார்கள் சினிமாக்காரர்கள்.  இருந்தபோதிலும் ‘கண்ணம்மா” என்று கவிஞர்கள் எழுதிவிட்டால் போதும் அந்தப் பாடல் சூப்பர் டூப்பராக  அமைந்து விடுகிறது. ரசிகர்களும் மறுபேச்சுக்கு இடமின்றி அதனை ‘ஹிட்’ ஆக்கி விடுகிறார்கள்.  அது கண்ணம்மா ராசி.

//பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா. கேளடி பொன்னம்மா// – (கண்ணதாசன்)

//உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா உதிரம் கொட்டுதடி// (பாரதியின் வரிகளை முதல் வரியாய் கையாளும் கண்ணதாசன்)

//வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி

காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி// (வரிகள்: இளையராஜா)

//கண்ணம்மா.. காதல் என்னும் கவிதை சொல்லடி// (வரிகள்: இளையராஜா)

//வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி–என்னடி மீனாட்சி//-(வாலி)

//ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா// – (வைரமுத்து)

//கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா// – (வாலி)

//ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுலே காதுலே//- (வாலி)

//கண்ணம்மா கண்ணம்மா சொல்லம்மா பதில் சொல்லம்மா// – (நா.முத்துக்குமார்)

//கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா?// – (கபிலன்)

//பூவாக என் காதல் தேனூறூதோ தேனாக தேனாக வானூருதோ

//கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா// (உமாதேவி)

//கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை// –(யுகபாரதி)

இப்படியாக ஒரு மிகப்பெரிய கவிஞர் பட்டாளத்தையே “கண்ணம்மா” பித்துப் பிடித்து அலைய வைத்த காரியத்தை செய்தவன் அந்த மீசைக்கவி..

இந்த கண்ணம்மா வைரஸுக்கு எல்லோருமே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொற்றுநோய்க்கு இன்னும்  வேக்ஸின் கண்டுபிடிக்கவே இல்லை. வேக்ஸின் தேவையுமில்லை. பாடலாசிரியர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், இளையராஜா, கபிலன், அறிவுமதி, யுகபாரதி,  உமாதேவி என இந்த ‘கண்ணம்மா வைரஸ்’ எல்லோருக்குமே  ரிசல்ட்  பாசிட்டீவாகவே வந்துள்ளது.

எப்படி ஆர்தர் கோனான் டாயில் ”ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினாரோ, எப்படி சுஜாதா “கணேஷ் வசந்த்” என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினாரோ, எப்படி தமிழ்வாணன் “சங்கர்லால்”  என்ற பாத்திரத்திற்கு உயிர்க்கொடுத்து உலவ விட்டாரோ அதுபோல “கண்ணம்மா”என்ற பெயரை காதலுக்கு உருவகமாக்கி அழியாததொரு புகழைத் தேடித் தந்தவன் பாரதி.

“கண்ணம்மா” என்ற பெயர் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தீராத ஒரு பாதிப்பை உண்டு பண்ணிய பெயர்.  அவரவர் தன்னுடைய சொந்த காதலியை மனதில் நினைத்துக் கொண்டு இந்தப் பெயரால்தான் கவிதைகள் எழுதித் தள்ளினார்கள். மனைவிமார்களும் சந்தேகப்பட மாட்டார்கள் அல்லவா?   

கலைஞருக்கும் இந்த ‘கண்ணம்மா’ பைத்தியம் பிடித்தது.  1972-ஆம் ஆண்டு “கண்ணம்மா” என்ற பெயரில் திரைக்கதை எழுதினார். அதன் பிறகு “பாரதி கண்ணம்மா” என்ற பெயரில் சேரன் ஒரு திரைப்படம் கூட எடுத்தார்.

அண்மைக் காலத்தில் கண்ணம்மா ட்ரெண்டுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி அலையை ஏற்படுத்தியவர் கவிஞர் அறிவுமதி. இன்னொருவர் கவிஞர் யுகபாரதி. அறிவுமதியின் வார்த்தைக் கோர்வையில் என்னையே நான் மறந்தேன். அந்த பாடல் வரிகளை ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்தால் நான் சொன்னது உண்மை என்று உங்களுக்கு நன்றாகவே புரியும்.

“நான் வானவில்லையே பார்த்தேன்

அதைக் காணவில்லையே வேர்த்தேன்

ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய்

வீசச் சொல்லியா கேட்டேன்?”

இதுபோன்ற பட்டாக்கத்தி சொல்வீச்சு எல்லோருக்கும் எளிதாக வந்து விடாது. அறிவுமதிக்கு வார்த்தைகள் அச்சு வார்த்ததைப்போல் வந்து தானாகவே விழுகிறது. ஆண்தாய் கவிக்கோவின் வளர்ப்பு என்பதினாலோ என்னவோ.

‘ப்ரியமுடன்’ படத்தில் கவிஞர் அறிவுமதி எழுதிய மற்றொரு “கண்ணம்மா”  பாடல் எல்லோரையும் முணுமுணுக்க வைத்த பாடல். “பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா”  என்ற பாடலில் பின்வரும் வரிகள்  இதற்கு எடுத்துக்காட்டு.

//நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே

ஒருநாள் விழிகள் பார்த்தது

என் வாழ்நாள் வசந்தம் ஆனது

என் இலையுதிர்காலம் போனது

உன் நிழலும் இங்கே பூக்குது//

அணிவகுக்கும் வார்த்தைகளின் ஊர்வலங்கள் நம்மை ஏதோ ஒரு டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் செல்கின்றன. 

பாரதி “கண்ணம்மா” என்ற பெயரை காதலுக்கு Screen Saver-ஆக ஆக்கிவிட்டுச் சென்று விட்டான். இது பாரதிக்கு பின்னே வந்த அத்தனை கவிஞர்களுக்கும் போஷாக்கு தந்ததுபோல் ஆகிவிட்டது.

பாரதி செல்லம்மாவோடு வாழ்ந்ததைக் காட்டிலும் கண்ணம்மா என்ற கற்பனை மனைவியோடுதான் அதிகமாக காலந் தள்ளினான். பாரதி நல்ல கவிஞனாக இருந்தான். ஆனால் நல்ல கணவனாக இருக்கவில்லை. அவன் தன்னைப் பற்றியோ, தன் உடல் நலத்தைப் பற்றியோ, தன் தோற்றத்தைப் பற்றியோ, தன் மனைவியைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ சற்றும் கவலைப்படாத மனிதனாக Don’t Care Master ஆகவே வாழ்ந்தான் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவன் டிசைன் அப்படி . அவனுக்கு தெரிந்ததெல்லாம் கவிதை ஒன்றுதான். வீட்டில் சமையலுக்கு மாதாந்திர சாமான்கள் இருக்கிறதா என்றுகூட அவனுக்குத் தெரியாது. செல்லம்மா அன்றி வேறொருத்தி இருந்திருந்தாலோ எப்போதோ அவள் பிறந்தகமான கடையத்திற்கே ஓடிப் போயிருப்பாள். 

கவிஞனுக்கு மனைவியாக இருப்பது உண்மையிலேயே கஷ்டமான காரியம். செல்லம்மாவின் சாதனையைப் பற்றி ஒன்றை இங்கு நான் பதிவு செய்தே ஆக வேண்டும். பாரதி எழுதி வைத்த எத்தனையோ கவிதைகளை செல்லம்மா மட்டும் சேகரித்து, பாதுகாத்து  வைத்திருக்காவிட்டால் நமக்கு பல பொக்கிஷங்கள் கிடைக்காமலேயே  போயிருக்கும்.

பாரதிக்கு எந்த அளவு மொழியுணர்வு, தேச உணர்வு இருந்ததோ, அதே அளவு அவனுக்கு காதல் உணர்வும் உள்ளத்தில் ஊறிக் கிடந்தது. பாரதி பார்ப்பதற்குத்தான்  ‘பித்துக்குளி’ போன்று இருந்தான். ஆனால் அந்த முண்டாசு கவிக்கு உள்ளத்தில் காதல் உணர்வு எப்போதும் பீறிட்ட வண்ணமிருந்தது.

கண்ணம்மா மீது அவன் கொண்ட காதல் அளப்பரியது. பெண்ணின் கன்னம் சிவக்க முத்தமிடலாம். அது கமலஹாசனுக்கு நன்றாகவேத் தெரியும். ஆனால் பாரதி  ‘கன்னங் கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ?’ என்று நம்மிடமே கேட்கிறான். கன்னம் கன்றி போகின்ற அளவுக்கு அந்த முத்தம் இருக்குமேயானால் அந்த முத்தத்திற்கு எந்த அளவுக்கு வீரியம் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி” என்கிறான். இம்ரான் ஹாஷிமியாவது பரவாயில்லையே என்று நமக்குத் தோன்றுகிறது.

பாரதியைப் பொறுத்தவரை ரதி. ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை எல்லாமே கண்ணம்மாதான். அவள்தான் அவனுக்கு அப்ஸரா. அவள்தான் அவனுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் எல்லாமே.

//நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா!

தன்னையே சசியென்று சரண மெய்தினேன்//.

கண்ணம்மாவிடம் சரணம் அடைந்து விடுகின்றான். இன்றைய இளசுகளின் பாஷையில் சொல்ல வெண்டுமென்றால் “படுத்தேவிட்டாண்டா மொமெண்ட்”.

பாரதி பயங்கர டென்ஷன் பேர்வழி. பாரதியின் கற்பனைக் காதலி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துவிட்டு சொன்ன நேரத்திற்கு வரவில்லையாம். கொஞ்சம் லேட் ஆயிடுத்து. அதனாலென்ன?. அடுத்த நாள் சந்தித்தால் போச்சு. அப்படித்தானே? ஆனால் பாரதி ஏகத்துக்கும் டென்ஷன் ஆகிவிடுகிறான்.

தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே

பார்த்திருந் தால்வருவேன் – வெண்ணிலாவிலே

பாங்கியோ டென்றுசொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா!

மார்பு துடிக்குதடீ!

பார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப் போலவே

பாவை தெரியுதடி!

மேனி கொதிக்குதடீ – தலை சுற்றியே

வேதனை செய்குதடீ!

வானி லிடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா

வந்து தழுவுதுபார்.

எங்கு பார்த்தாலும் அவள் முகம் தான் 3D இமேஜில் தெரிகிறதாம். கவிராஜனுக்கு மயக்கம் வருதாம். B.P. ஏறுதாம், அந்த ஃபீலிங் என்னென்னமோ டார்ச்சர் செய்யுதாம், மார்பு “லப்-டப், லப்-டப் என்று அடித்துக்  கொண்டு ஹாட்பீட் (தங்க விலை போல்) எகிறுதாம். ஜூரம் வேற வந்துடுச்சாம். என்ன பாரதி இதெல்லாம்?

//சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்//

பாரதியின் காதற் பாடல்களில் யாவுமே ஒரே கண்ணம்மா புலம்பல்தான்

//I saw your face in a cloud, as it gently floated by.

And I saw your smile in the Sun, and its warmth lit up the sky.

I felt your touch on the breeze, as it softly kissed my hair//

என்று யாரோ ஒரு ஆங்கிலக் கவிஞன் எழுதிய கவிதை என்  ஞாபகத்திற்கு வந்தது. பாரதியின் கற்பனை அதைவிட உச்சம்           

//நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்//

அவன் இயற்கையின் எழிலிலும் காதலியின் கற்பனை அரவணைப்பிலும்  திளைத்துப் போனவன். அவன் எதை நோக்கினாலும் நோக்க நோக்க களியாட்டம்.

“திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும்” என்ற வரிகளை நாம் கேட்டிருக்கின்றோம். பாரதிக்கு கண்ணம்மா என்ற பெயரைச் சொன்னாலே அமுதமாய் ஜொள்ளு வழிகிறதாம். 

“என்றன் வாயினிலே அமுதூறுதே

கண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே…”

நம்மையும் அறியாமல் கண்ணம்மா என்ற அந்தப் பெயரை உச்சரிக்க வைத்து விடுகிறான் பாரதி.  கண்ணம்மா என்ற சொல் கவிஞர்களின் உள்ளத்தில் வேதிவினை (Chenical Reaction) ஏற்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது  என்பது      நிதர்சனம். அந்த ஐந்தெழுத்து மந்திரம் காதலைக் கசிய வைக்கும் காய்கல்பம்.  

//பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;

தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு//

//வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;

பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு//

//வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு//

என்றெல்லாம் பாட்டுக்கொரு புலவனை புலம்ப வைத்த பாஸ்வோர்ட் ‘கண்ணம்மா’ 

அண்மைக் காலத்தில் இந்த ‘கண்ணம்மா பித்து’ அதிகம் பிடித்து ஆட்டியது கவிஞர் யுகபாரதிக்குத்தான் என்று நினைக்கிறேன். அவர் தன்  வாழ்வில் “கல்யாணத்திற்கு முன் நான் யாரையும் காதலித்தது கிடையாது”  என்று கூறுகிறார். நான் நம்பத் தயாராக இல்லை. காதலிக்கத் தெரியாதவன் எப்படி கத்தை கத்தையாக கண்ணம்மா கவிதைகள் எழுத முடியும்? 

//முளைக்கட்டிய தானியம்போல

மனசின் அத்தனை பரப்பிலிருந்தும்

துளிர்விடும் உன் நினைவுகளை

அடங்கா ஆச்சர்யத்துடன்

அதிசயிக்கிறேன் கண்ணம்மா

வழிகாட்டுதல்களையும்

ஒழுக்க விதிகளையும் முட்டித்தள்ளி

முளைவிடுவதுதான் காதலில்லையா?!

பெருக்கெடுத்து ஓடும்

வெள்ள நேரத்து வாய்க்கால்

எங்கே உடைத்து

எப்படியெப்படி வெளியேறுமென

யார் அறிவார் கண்ணம்மா?//

இப்படியாக ஒவ்வொறு கேள்வியாக, அவருடைய கண்ணம்மாவைப் பார்த்து  அடுக்கிக் கொண்டே போகிறார்.

கண்ணம்மா பாடல்களிலேயே முத்தாய்ப்பாக எல்லோருடைய உள்ளத்திலும் ஒரு சுனாமி தாக்கத்தை உண்டு செய்த பாடலென்று சொன்னால் அது ‘றெக்க’ படத்தில் வரும் இசைப்பாடல்தான் . யுகபாரதி எழுதி இமானின் இசையில் நந்தினி ஸ்ரீதரின் இனிமையான குரலில் வெளிவந்த பாடலைப் போன்று அண்மையில் வெளிவந்த வேறெந்த பாடலும் இதுபோன்ற ஒரு தாக்கத்தை இதுவரையில்  ஏற்படுத்தியதில்லை,

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ,

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ !

செம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி

செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி

பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே

வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா

உன்னை உள்ளம் எண்ணுதம்மா !

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே

மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்

தேவதை நீ தானென வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா

வெட்கம் நெட்டி தள்ளுதம்மா

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ !

இப்பாடலிலுள்ள சில கிளாசிக் வரிகள் யுகபாரதி வேற லெவல் என்பதை உறுதி படுத்துகின்றது. கண்ணம்மா அழகு ஒகே. அவள் நினைப்பு மனதில் தேன்மழையை உண்டாக்குகிறது. அதுவும் ஒகே. வானவில் மாதிரி கலர் கலர் டிரஸ் போட்டு கன்னைப் பறிக்கிறாள். அதுவும் ஒகே. அவள் கால் பட்ட இடமெல்லாம் பூமி சோலைவனம் ஆகி விடுகிறதாம். சூப்பர்

எல்லாத்தையும் விட சூப்பரான வரிகள் இதுதான்.  மூல விக்கிரகம் சாமியாக  வீதி ஊர்வலம் வரும்போது ஊரெல்லாம் கூடி வேடிக்கை பார்க்கும். குறிப்பாக சித்திரை திருவிழாவின் போது மதுரையில் கள்ளழகர் ஊர்வலம் வருகையில் எவ்வளவு கூட்டம் வரும் என்பதை அறிந்திருக்கிறோம். யுகபாரதியின் கண்ணம்மாவின் அழகு கோலத்தை ரசிப்பதற்கு கோயிலில் இருக்கும் சாமியே கோயிலை விட்டு நீங்கி வேடிக்கைப் பார்க்க வந்து விடுகிறதாம், சூப்பரோ சூப்பர் யுகபாரதி.

இப்படிப்பட்ட “கண்ணம்மா” என்ற காதல் பெயருக்கு மயானத்தை அங்கு கொண்டுபோய் வைத்து அதற்கு “கண்ணம்மா பேட்டை” என்று பெயர் வைத்த சென்னைவாசிகளை நினைத்தால்தான் எனக்கு கோவம் கோவமாக வரும்.

#அப்துல்கையூம்  

சாதனைக் குயில்

எத்தனையோ பின்னணி பாடகர்கள், பாடகிகள் திரைப்பட இசையுலகுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே சாதனைகள் புரிவதில்லை; சரித்திரம் படைப்பதில்லை. அந்த மகத்தான வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே வரமாக வாய்க்கிறது.

1950-களின் பிற்பகுதியில் தொடங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒலிக்கும் புலப்பாக்க சுசிலா அம்மாவின் குரல்… இனிமையின் இலக்கணம். தாலாட்டு, காதற்பாட்டு, நெஞ்சை நெகிழ வைக்கும் சோகப்பாட்டு, பக்திப்பாட்டு மற்றும் குதூகலம் கொப்பளிக்கும் இளமைப்பாட்டு என்று எது கொடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்தவர் பி.சுசிலா அம்மையார்.

பாடகிகளின் வரிசையில், வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் தென்னிந்தியாவில் பி.சுசிலா – இவர்கள் இருவரது சாதனையை முறியடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.“சிரித்தாலும் போதுமே” (நீதிக்குப் பின் பாசம்) , “சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே” (எங்கிருந்தாலும் வாழ்க) போன்ற பாடல்களில் பி.சுசிலா அப்பாடலுக்கிடையே அசல்ட்டாக உதிர்க்கும் சிரிப்பே அலாதியானது. எதார்த்தமாக இருக்கும்.

அதேபோன்று, “உன்னைக் கண் தேடுதே” (கணவனே கண் கண்ட தெய்வம்) , “ஜவ்வாது மேடையிட்டு” (பணத்தோட்டம்), “நினைத்தால் சிரிப்பு வரும்” (பாமா விஜயம்) போன்ற பாடல்களில் மதுபோதையில் ஒரு பெண் பாடும் அதே உணர்வை அவர் அம்சமாக ஏற்படுத்தி நம் எல்லோரையும் அசத்தியிருப்பார் “மலர்ந்தும் மலராத” பாடலில் “மாமன் தங்கை மகளான” என்ற வரிகளுக்குப் பின்னால் வரும் விசும்பலை மறக்கத்தான் முடியுமோ?

கண்ணதாசன் அவருக்கு வைத்த கடினமான I.A.S. பரிட்சையில் அவர் Distinction மார்க் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். “வெண்ணிற ஆடை” படத்தில் கண்ணதாசன் எழுதிய “கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல” என்ற பாடலில் ‘னகரம்-ணகரம்’,, ‘லகரம்-ளகரம்’ இவைகளை வைத்து சொற்சிலம்பம் ஆடி, பி.சுசிலாவுக்கு ஒரு சவாலாகவே வார்த்தை விளையாட்டுகளை அமைத்திருந்தார். மிகத் திறமையாக பாடி அதில் அவர் பாஸ் மார்க் வாங்கினார்.

‘கண்ணன்’ – ‘என்னும்’ – ‘மன்னன்’ – ‘பெண்மை’ – ‘எண்ணம்’ – ‘என்ன’ – ‘சின்ன’ – ‘பின்ன’ – ‘என்னை’ – ‘துன்பம்’ – ‘அன்பே’ – ‘நாணம்’ – ‘போனால்’ – ‘அன்றும்’ – ‘இன்றும்’ – ‘தென்றல்’ ……இவையாவும் ‘னகர-ணகர’ வார்த்தை விளையாட்டு.

‘கல்லும்’ – ‘முள்ளும்’ – ‘வெள்ளம்’ – ‘உள்ளம்’ – ‘மெல்ல’ – ‘செல்ல’ – ‘துள்ள’ – ‘கிளிகள்’ …. இவை யாவும் ‘லகர-ளகர’ வார்த்தை விளையாட்டு.

தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட பி.சுசிலா, ஆசான் வைத்து தமிழைக் கற்றுத் தேர்ந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று சின்னத் திரையில் காணும் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் பலருக்கும் ‘தமிழ்’ என்றுகூட சரியாக உச்சரிக்க வருவதில்லை, ‘தமில்’ என்றுதான் உச்சரித்து நம்மை சோதிக்கிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.

எல்லோரும் எல்லா மொழிகளிலும் பாடி விடலாம். அது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை. ஆனால் அந்தந்த மொழிக்கேற்ப அட்சர சுத்தமான உச்சரிப்பு எல்லோருக்கும் வந்து விடாது. இக்கலையில் பி.சுசிலா முனைவர் பட்டம் பெற்றவர் என்றே சொல்ல வேண்டும். அவருடைய தமிழ் உச்சரிப்பைக் கேட்டவர்களிடம் “அவரது தாய் மொழி தமிழ் கிடையாது” என்று நாம் சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்ற பாடலில் இழைந்துவரும் வடக்கத்திய ஷெனாய் இசை ………“

சொன்னது நீதானா” என்ற பாடலில் மனதை மயிலிறகால் வருடும் சிதார் இசை…….

“அந்த சிவகாமி மகனிடம்” என்ற பாடலில் நெஞ்சை நெகிழ வைக்கும் வீணையின் நாதம்……..

“பார்த்த ஞாபகம் இல்லையோ” என்ற பாடலில் உள்ளத்தை துள்ள வைக்கும் பியானோ இசை…..“அத்தான் என்ன அத்தான்” என்ற பாடலில் வரும் அலைபாயும் அக்கார்டின் இசை….

மேற்கண்ட இப்பாடல்களில் “எது சிறந்தது? வாத்தியமா அல்லது வாத்தியத்தோடு இழைந்து வரும் பி.சுசிலாவின் குரலினிமையா?” என்று யாராவது நம்மிடம் வினா தொடுத்தால் அதற்கு பதில் சொல்ல நாம் திணற வேண்டியிருக்கும்.

“என்னை மறந்ததேன் தென்றலே”, “கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ”, “மன்னவனே அழலாமா” போன்று சோகத்தை பிழியும் பாடல்கள் வேறுண்டோ?

“அழகே வா அருகே வா , “ நானே வருவேன்” போன்ற பாடல்களில் இசையோடு கலந்து திகிலை ஏற்படுத்தும் மாயை பி.சுசிலாவின் குரலுக்கு மாத்திரமே உண்டு. , எத்தனையோ தாலாட்டு பாடல்கள் வந்தாலும் இன்னும் தாய்மார்களுக்கு பிடித்தமான பாடலாக விளங்குவது “அத்தைமடி மெத்தையடி” என்ற ‘கற்பகம் படத்து பாடலும், ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற “அன்பில் மலர்ந்த ரோஜா “ என்ற தாலாட்டு பாடலும்தான். அன்னைமார்கள் குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது “முத்தான முத்தல்லவோ” என்ற முத்தான பாடல்.

அண்ணன்-தங்கை பாசத்திற்கு இன்னும் எடுத்துக்காட்டாக விளங்குகின்ற பாடல் “மலர்ந்தும் மலராத” மற்றும் “அண்ணன் ஒரு கோயில் என்றால்” என்ற பாடல்கள்தான். என்னுடைய பார்வையில் ஜெயலலிதா மற்றும் சரோஜாதேவிக்கு பி.சுசிலாவின் குரலைப் போன்று வேறு எவருடைய குரலும் அவ்வளவு தத்ரூபமாக – பொருத்தமாக – ஒத்துப் போனதில்லை.

சில குரல்கள் சிலரை சிம்மாசனத்திலேயே உட்காரவைத்து அழகு பார்க்கவல்லது. டி.எம்.எஸ். அவர்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொன்ன திமிரான அந்த வசனத்தை “அர்த்தமற்றது” என்று முற்றிலும் நாம் நிராகரிக்க முடியாதுதான்.

“ஆடை முழுதும் நனைய நனைய” என்ற பாடலை பி.சுசிலாவின் தேன் குரலில் செவியுறுகையில் நாமும் வான்மழை நீரில் நனைந்து கும்மாளம் போடுகின்ற ஓர் உணர்வு நமக்குள் ஏற்படுகிறது. “அம்மம்மா காற்று வந்து” என்ற பாடலைக் கேட்கும்போது நாமும் அருவியில் குளித்துக்கொண்டே களிப்பது போல் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது.

P.B. ஸ்ரீனிவாசை விட இனிமையாக மயிலிறகால் மனதை வருடும் பாடகர் வேறு யாருமில்லை என்பேன். ஆனால் அவரது மழலை மொழி உச்சரிப்பு அவருடைய தாய்மொழி தமிழ் இல்லை என்பதை காட்டிக் கொடுத்துவிடும். ஜேசுதாஸ், கண்டசாலா, எஸ்.ஜானகி, சித்ரா இவர்கள் எல்லோருக்குமே இது பொருந்தும். அதற்காக இவர்களது குரலில் இனிமை இல்லை என்று அர்த்தமாகாது.

“குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…” என்ற பாடலில் உதித் நாராயண் தத்து பித்து என அபத்தமாக உளறும் உச்சரிப்பின் இனிமைக்காகவே நான் அப்பாடலை பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டதுண்டு. மழலை மொழியும் ஓர் இனிமைதானே?

கவிஞர் வைரமுத்து “பிரியமான பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லே” என்று எழுதித் தந்த ஒரு பாடலுக்கு அவர் “பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லே ” என்று பாடியது ஒரு ரசிக்கத்தக்க சுவையான காமெடி. அவர் பாடிய பல பாடல்களுக்கு கோனார் நோட்ஸ் போட்டால்தான் பொருள் விளங்க முடியும்.

ஜேசுதாஸ் பாடிய “தெருக்கோயிலே ஓடிவா” வரிகளை இன்னும் யாரும் மறப்பதற்கு தயாராக இல்லை. ஹரிஹரன் தமிழில் பாடும்போதுகூட ஏதோ கஜல் பாடுவது போன்ற ஒர் உணர்வு எனக்கு ஏற்படும். அது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்குமா என்று எனக்குத் தெரியாது.

எஸ்.பி.பாலுவும், ஜேசுதாஸும் எத்தனையோ பிரபலமான பாடல்கள் இந்தியில் பாடியிருந்தாலும் கூட , ஜேசுதாஸ் “கோரி தேரா காவ்ன் படா பியாரா” என்று பாடும்போது அவர் ஒரு மலையாளி என்பதை அவரது உச்சரிப்பு பேஷாக காட்டிக் கொடுத்துவிடும்.

தமிழ்த் திரைப்பட இசையின் மூன்றெழுத்து ராஜாங்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்ட எம்.எஸ்.வி. அவர்கள் ஒற்றை வயலின் ராகத்துடன் உலவ விட்ட மனதை விட்டு அகலாத பாடல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய “வான் நிலா நிலா அல்ல” என்ற பாடல் மற்றும் “பி.சுசிலா பாடிய “அன்று ஊமைப் பெண்ணல்லோ” என்ற பாடல் – இவையிரண்டும் சரித்திரப் பாடல்கள்.

என்னதான் துள்ளல் பாட்டு பாடினாலும், குரலில் எத்தனையோ விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டினாலும், உடலில் எந்தவிதமான அசைவும் இன்றி பாடக்கூடிய பழக்கம் பி.சுசிலா, எஸ்.ஜானகி, லதா மங்கேஷ்கர் இவர்கள் எல்லோருக்குமே உண்டு. உஷா உதூப், எல்.ஆர்.ஈஸ்வரி, ஆஷா போஸ்லே – இவர்களுடைய கைகளை கட்டிப்போட்டு “இப்போது பாடுங்கள் பார்க்கலாம்” என்றால் அவர்களால் பாடவே முடியாது.

“உன்னை ஒன்று கேட்பேன்” அல்லது “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து” அல்லது “பார்த்த ஞாபகம் இல்லையோ” என பி.சுசிலா பாடிய ‘புதிய பறவை’ படப்பாடல்கள் ஏதாவதொரு மெல்லிசை கச்சேரி மேடைகளில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

தமிழை வாழ்த்தி எத்தனையோ பாடல்கள் வந்தாலும்கூட ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற பாடலுக்கிணையாக வேறு ஒரு பாடல் இதுவரை வெளிவந்ததில்லை. பாவேந்தரின் பாடலுக்கு பி.சுசிலா செய்த மாபெரும் கான அஞ்சலி அது.

“1963-ல் வெளியான “கற்பகம்” படத்தில் வரும் ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான்…’ பாடல் என் வெற்றிக்கு காரணமாக இருந்த பாடல்” என வாலியே ஒருமுறை கூறியிருக்கிறார். அதற்கு கானசுந்தரி பி.சுசிலாவின் குரலினிமையும் ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

“நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்”, “வசந்தத்தில் ஓர் நாள்”, “எங்கே நீயோ நானும் அங்கே”, “நினைக்கத் தெரிந்த மனமே” போன்ற பாடல்கள் அனைத்துமே என்றுமே நினைவை விட்டு நீங்காத, காலத்தால் அழிக்க முடியாத கானங்கள். “அனுபவம் புதுமை” போன்று விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களும் உண்டு. கொடுத்த பணியை செவ்வென செய்யும் திறன் அவருக்குண்டு

எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் “ஆண்டவனே உன் பாதங்களை” என்ற அவரது பாடல்தான் தமிழ் மக்களின் பிரார்த்தனைப் பாடலாக ஒலித்துக் கொண்டிருந்தது.

2018-ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் பஹ்ரைனில் நடந்த இசை நிகச்சிக்கு பி.சுசிலாவின் இசைநிகழ்ச்சிக்கு அடியேன்தான் தொகுப்பாளனாக பணியாற்றினேன். திறந்த வெளி அரங்கம். சரியான குளிர்காலம் வேறு. இந்த வயதிலும், அதே இனிமை மாறாது அவர் பாடிய தொனி இன்னும் என் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது. உரையாடுகையில் அப்படியொரு பணிவு.

ஒருமுறை என் மனைவியிடம் “உனக்கு பி.சுசிலாவிடம் பிடித்தது எது?” என்று கேட்டபோது, எனக்கு கிடைத்த பதில் “அவர் பட்டுப்புடவை கட்டும் அழகு” என்பது .

#அப்துல்கையூம்

118Hilal Musthafa, DrAbdul Razack and 116 others20 comments4 sharesLikeCommentShare

மறக்க முடியா ராஜநாகம்

“ஸ்ரீகாந்த்” என்று தட்டச்சு செய்து கோகுல் அண்ணாவிடம் (Google) விசாரணை செய்தால் ‘ரோஜாக்கூட்டம்’ படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் பற்றிதான் கதை கதையாக அளக்கிறார். இன்னும் சற்று ஆழமாக தேடிப்பார்த்தால் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

நடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்!


அவருக்கே ஈடு கொடுத்து பேர் வாங்கிய நடிகர் ஶ்ரீகாந்தை இணையத்தில் தேடுவதற்கு “பழைய நடிகர் ஸ்ரீகாந்த்” என்றுதான் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாமே காலக்கொடுமை ஐயா.
ராஜா என்ற செல்லப்பெயர் கொண்ட வெங்கட்ராமனான இவரை ஸ்ரீகாந்த் என்று பெயர் மாற்றியவர் டைரக்டர் ஸ்ரீதர்.


கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்த இவரை இணையவாதிகள் அதிகம் பொருட்படுத்தவில்லை என்றே தெரிகிறது.


‘வெண்ணிற ஆடை’, ‘நாணல்’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’, ‘அன்புத்தங்கை’, ‘வைரம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘பைரவி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘காதல் கொண்டேன்’ இப்படங்களின் குறிப்புகள் மாத்திரம்தான் அவருடை விக்கிபீடியா பக்கத்தில் காணக் கிடைக்கிறது.


“கண்ணதாசன் என்னை போண்டா வாயன்னு சொன்னாரு ஏன்னு தெரியலே” என்று அப்பாவித்தனமாக வி.ராம்ஜியிடம் ஒரு பேட்டியில் அவர் கூறுகிறார்.


“நேருவைக் கூட நம்ம கவியரசர் “சுட்ட கத்திருக்கா மூஞ்சி” “கருங்குதிரை மூஞ்சி” ‘சப்பிப்போட்ட மாங்கொட்டை மூஞ்சி’ என்று வசைபாடி இருக்காரு சார். அவரு பேச்சையெல்லாம் நீங்க சீரியசா எடுத்துக்காதீங்க ” என்று அவருக்கு நான் ஆறுதல் சொல்லணும்போல் இருந்தது.


ஶ்ரீகாந்த் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எப்போதுமே ஓர் அபிமானம் உண்டு. என் பள்ளிப் பருவத்தில் அவரை நேரில் கண்டிருக்கிறேன், என் சித்தப்பா முகம்மது ஹனீப் அவர்கள் கட்டிடக்கலை பட்டப்படிப்பு முடித்தபின் சென்னை நந்தனத்திலிருந்த குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு ஸ்டெனோவாக பணிபுரிந்தவர் ஶ்ரீகாந்தின் மனைவி. அவருடைய பெயர் சாந்தகுமாரி என்ற ஞாபகம். என் சித்தப்பாவின் வீட்டிற்கு தன் கணவருடன் வந்திருக்கிறார். ஶ்ரீகாந்த் என் சித்தப்பாவின் நண்பர்கூட. பழகுவதற்கு இனிமையானவர்.


“தங்கப் பதக்கம்” படத்தில் ஸ்ரீகாந்தின் நடிப்பை பார்த்து விட்டு ”அடச்சே.. இவனெல்லாம் ஒரு புள்ளையா? செளத்ரி எவ்ளோ நல்ல மனுஷன். அவருக்கு இப்படி ஒரு தறுதலை மகனா? என்று திட்டித் தீர்த்த தாய்க்குலங்கள் ஏராளம்.


சில வருடங்களுக்கு முன்பு கூட தெம்புடன் இளமையாக காட்சி தந்த இவர் இப்போது உருக்குலைந்து காட்சி தருகிறார். முன்புபோல அவருக்கு சரளமாக பேச்சு வருவதில்லை. நா குளறுகிறது. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகி விட்டாரே என்று கண்கள் கசிகிறது. “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடிய ஒளவையார் “கொடிது கொடிது முதுமை கொடிது” என்று ஏனோ பாடாமல் சென்று விட்டார்.

அவருடைய முதல் படமான “வெண்ணிற ஆடை” படத்தில் ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல’ என்ற பாட்டுக்கு நம்ம முன்னாள் முதலமைச்சருடன் ஜோடியாக டூயட் பாட்டு பாடும்போது கோட் சூட் போட்டுக் கொண்டு ஸ்மார்ட்டாக நடித்த காட்சி இன்னும் நம் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது.


அமெரிக்க தூதரகத்தில் ஒரு நல்ல பதவியை வகித்துக் கொண்டிருந்த இவரை, சூழ்நிலை இழுத்துவந்து சினிமாவில் விட்டபோதுதான் ‘அமெச்சூர்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு புரிய வந்தது. அப்போதெல்லாம் ‘அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ ‘அமெச்சூர் டிராமா’ இதுபோன்ற சொல்லாடல் மிகவும் சகஜமாக இருந்தது.

ஒருக்காலத்தில் தன்னை தீவிர காமராஜர் தொண்டராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். எமெர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்தவர். இதனாலேயே பிற்காலத்தில் படங்களில் இவர் சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார் என்று சொல்வார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.


இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற படங்களில் J.K. இவரை பயன்படுத்திக் கொண்டார்.
நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, வியட்நாம் வீடு சுந்தரம், கே.பாலச்சந்தர், கவிஞர் வாலி இவர்கள் எல்லோருமே “வாடா.. போடா என கலாய்க்கும் நண்பர்கள் குழாம்.


இவருடைய ரூமில் உட்கார்ந்துக்கொண்டு கே.பாலச்சந்தர் எழுதிய நாடகங்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘மெழுகுவர்த்தி’, ‘நாணல்’, ‘நவக்கிரகம்’ அனைத்தும் ஹிட் ஆனது. இவையனைத்தும் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.


‘காசேதான் கடவுளடா’ படத்தில் அவருடைய நகைச்சுவை நடிப்பு பிரமாதம். அதன் பிறகு வந்த படத்தில் யாவும் வில்லன் பாத்திரம்தான். படத்தில் ‘கற்பழிப்புக் காட்சியா கூப்பிடு ஶ்ரீகாந்தை’ என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.

வில்லன் பாத்திரத்தில் நடிக்க இவரை அணுகியபோது ‘இந்தப் படத்தில் நான் யாரை கற்பழிக்க வேண்டும் என்று கேட்பேன்’ என்று தன் பொக்கை வாய் திறந்து, குழந்தையாக சிரித்துக்கொண்டே வெகுளித்தனமாக “ஹிந்து தமிழ்” காணொளிக்கு பேட்டி அளிக்கிறார்.


ஞான ஒளி, தம்பிக்கு எந்த ஊரு, ராஜபார்ட் ரங்கதுரை, மல்லிகைப்பூ, பூவா தலையா, மாணவன் இதுபோன்ற எத்தனையோ படங்கள். ‘கோமாதா என் குலமாதா’ படத்திலும் இவர்தான் கதாநாயகன்.
‘பைரவி’ படம் வெளிவந்தபோது ரஜினிகாந்தை விட ஸ்ரீகாந்த்தான் அப்போது பிரபலமான நட்சத்திரம். ‘இவர்களுடன் ஸ்ரீகாந்த்’ என இவருடைய பெயரைத்தான் கொட்டை எழுத்தில் காட்டினார்கள்.
‘பருவகாலம்’, ‘சட்டம் என்கையில்’, ‘மரியா மை டார்லிங்’ போன்ற படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தவர். ‘ராஜநாகம்’ படத்தில் ஹீரோவாக நடித்தபோது இவருக்காக பெரிய கட்-அவுட் வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

‘தங்கப்பதக்கத்திற்கு 2,000 ரூபாய் சம்பளம் வாங்கியபின் அதிக பட்சமாக 10,000 ரூபாய்வரை சம்பளம் வாங்கினேன்’ என்று பெருமையாக கூறுகிறார்.


வில்லன் நடிகராக இருந்த நம்பியாருக்கு எப்படி தெய்வபக்தி அதிகமோ அதுபோல வில்லன் நடிகராக இருந்த ஸ்ரீகாந்துக்கும் தெய்வ பக்தி அதிகம். குருசாமி நம்பியாருடன் சேர்ந்து 40 முறைக்கு மேலாக சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்.


நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம். ஒருகாலத்தில் படப்பிடிப்பு நேரத்தில் சகநடிகர்கள் இவரைக் கண்டால் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்களாம். காரணம் இவரது கடிஜோக்ஸுக்கு பயந்துதான். படவுலகத்தில் இவருக்கு அறுவை மன்னன் என்ற பெயரும் உண்டு..
மூதறிஞர் ராஜாஜி எழுதிய புதினத்தைத் தழுவி ஸ்ரீகாந்த் நடித்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1974ஆம் வெளிவந்த படம் ‘திக்கற்ற பார்வதி’. இவர் நடித்த இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
பாலச்சந்தர், பி.மாதவன், ஸ்ரீதர் போன்ற பெரிய இயக்குனர்கள் இவருடைய திறமையை திறம்பட பயன்படுத்திக் கொண்டார்கள்.


ஶ்ரீகாந்துக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் மிகவும் இஷ்டம், வயதான காலத்தில் சின்னத் திரையிலும் தோன்றினார்.

இவருடைய இப்போதைய ஆசை தன் பழைய நண்பர் ரஜினிகாந்தை மீண்டும் காண வேண்டும் என்பதுதான். தன் நண்பர் மேல் இருக்கும் அக்கறையில் ‘எவ்ளோ பெரிய நடிகர். ரஜினிகாந்த் அவர் அரசியலுக்கு வர வேண்டாமே. சிவாஜியால் கூட முடியவில்லையே’ என்று ஆதங்கமாக கூறுகிறார்.
அவருடைய தற்போதைய வயதான கோலத்தை நான் காணொளியில் காணாமலேயே இருந்திருக்கக் கூடாதா?


டிப்டாப்பாக உடை உடுத்திக்கொண்டு, அரும்பி மீசையுடன், அழகாக சீவிய தலைமுடியுடன், மிடுக்கான நடை, தோளை குலுக்கிக் கொண்டு திமிருடன் தெனாவெட்டாக டயலாக் பேசும் அந்த இளமைக்கால ஶ்ரீகாந்த்தான் என் கண்ணில் இன்னும் பசுமையாக நிற்கிறார்.


அப்துல்கையூம்

கொரோனா எந்த மதம்?

சீனத்திலிருந்து வந்த கொரோனா
எந்த மதம் எனக்குத் தெரியாது !

இந்துவா? முஸ்லிமா?
கிறித்துவமா? புத்த மதமா?
எதுவுமே எனக்குத் தெரியாது.

முஸ்லிம்கள்தான் பரப்பினார்கள் என்று
வாய் கூசாமல் பரப்பினார்கள்.

ஆனால் ஒன்று சகோ..

எரிக்க வேண்டிய உடல்களை எல்லாம்
இடுகாட்டில் புதைத்தார்கள் !

ஆண்கள் தாடி வளர்த்தார்கள் !
பெண்களும் ஆண்களும்
‘நகாப்’ அணிந்தார்கள் !

கூடவேயிருந்து மனைவிக்கு செய்யும்
பணிவிடையும் ‘சுன்னத்’தானே?

எங்கும் நிறைந்தவன் இறைவன்
என்பதை பறைசாற்றும் வண்ணம்
இல்லங்கள் யாவும் வழிபாட்டுத் தலங்கள் !

“சுத்தம் ஈமானில் பாதி”
கைச் சுத்தம் கால்சுத்தம்
காண்போரெலாம் கடைப்பிடித்தனர் !

விபச்சார விடுதிகள்
விடுமுறைகள் தந்தன !

ஆடம்பரக் கல்யாணங்கள்
அர்த்தமற்றுப் போயின !

கொரோனா எந்த மதம்?
எதுவுமே எனக்குத் தெரியாது

#அப்துல்கையூம்

கமாலுத்தீனும் கலைஞர் மு.கருணாநிதியும்

kamal

யாரிந்த கமாலுத்தீன்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்ற சந்தேகம் எழலாம். கருணை ஜமால் எப்படி கலைஞரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்ந்தாரோ அதுபோன்று கமாலுத்தீனும் கலைஞரின் வாழ்க்கையில் ஓர் அங்கம்.   (இதையும் மறுப்பதற்கு இப்போது ஒரு கூட்டம் வரும் பாருங்கள்)

கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும்  சகோதரர்கள். இம்மூவரும்  இணைந்து “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலமது.

கமால் பிரதர்ஸ் படநிறுவனத்தின் விளம்பரம் தினத்தந்தி பிரசுரம் ஆகும் போதெல்லாம் ஆவலுடன் நான் அதை கூர்ந்து கவனிப்பேன். காரணம் அந்த படநிறுவனத்து LOGO-வில் நாகூர் மினாரா போட்டோ இடம் பெற்றிருக்கும். நாகூர்க்காரனான எனக்கு அந்த விளம்பரம் இயற்கையாகவே ஓர் ஈர்ப்பைத் தந்தது.

கமாலுத்தீன் சகோதரர்களின் குடும்பம் வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon)  நகரத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்தார்கள். பெருமளவில் பொருளீட்டினார்கள்.  1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. பெரும் நட்டத்தை இவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிற்காலத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது.

புதையல் (1957), தெய்வப்பிறவி (1960), வாழ்க்கை வாழ்வதற்கே  (1964),  கண்கண்ட தெய்வம் (1967),  நிமிர்ந்து நில் (1968) போன்ற பிரபலமான படங்களைத் தயாரித்தவர்கள் கமால் பிரதர்ஸ். இதில் “தெய்வப்பிறவி” படத்தை ஏ.வி.எம்.நிறுவனத்தாருடன் சேர்ந்து எடுத்தார்கள்.

கலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி அன்பளிப்பாக பரிசளித்தவர்கள் கமால் பிரதர்ஸ்தான் என்று அவர்கள் குடும்பத்திற்கு வேண்டியவர்கள் சொன்னதை நான் காதால் கேட்டிருக்கிறேன். “இல்லை இது தவறான தகவல். கோபாலபுரம் வீடு பராசக்தி, மனோகரா போன்ற வெற்றிப் படங்கள் வெளியான பின்னர் அதில் கிடைத்த வருமானத்தில் கலைஞருடைய சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது” என்றும் சிலர் மறுத்து எழுதியதையும் நான் படித்திருக்கிறேன். அந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.

சிவாஜி, பத்மினி இணைந்து நடித்து கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுத 10.05.1957ல் வெளியான “புதையல்” பெரும் வரவேற்பைக் கண்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் கமாலுத்தீன் சகோதரர்கள். திரைப்பட நடிகரும், பாடகருமான சி.எஸ்.ஜெயராமனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த பாடல் ‘புதையல்’ படத்தில் வரும் “விண்ணோடும் முகிலோடும்” என்ற பாடல். மேலும், கமால் பிரதர்ஸ் தயாரித்த ‘தெய்வப்பிறவி’ படத்தில் வரும் “அன்பாலே தேடிய”, மற்றும் “தன்னைத் தானே” போன்ற பாடல்களும் அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது.

சி,எஸ்.ஜெயராமன் வேறு யாருமல்ல. கலைஞர் மு.கருணாநிதியின் நெருங்கிய உறவினர். அதாவது முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார்.

இப்படம் பிரமாண்டமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதியார், தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆத்மநாதன், ஏ.மருதகாசி போன்ற எல்லோருடைய பாடல்களை இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து இடம்பெறச் செய்தார் கமாலுத்தீன். பின்னணி பாடுவதற்கு சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.சௌந்தர்ராஜன், ராகவன், பி.சுசீலா, எம்.கே.புனிதம், ராணி, எஸ்.ஜே. காந்தா என ஒரு பெரிய பட்டாளத்தையே களம் இறக்கிவிட்டிருந்தார்.

பிற்காலத்தில் கமால் பிரதர்ஸ் மூத்தவர் கமாலுதீன் படம் எடுத்து நொடித்துப் போய் சிரமப் பட்டுக் கொண்டிருந்தார். இந்த விஷயத்தை யாரோ கலைஞரின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள். “கலைஞர் கமாலுத்தீனை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த செய்தி கமாலுத்தீன் காதுகளுக்கும் எட்டியது. இருந்தாலும் கமாலுத்தீனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. “ஆஹா..ஓஹோ என்று செல்வாக்கோடு வாழ்ந்த நாம் அவரிடம் சென்று உதவி கேட்பதா?” என்று எண்ணி கலைஞரை சென்று சந்திக்க அவர் மறுத்துவிட்டார். .

இயக்குனர் கலைஞானம் அவர்கள் கமாலுத்தீனைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். கலைஞருக்கும் கமாலுத்தீனுக்கும் உள்ள தொடர்பையும் எழுதியிருக்கிறார்.  இவர் ஏ.வி.பி.ஆசைத்கம்பி எழுதிய “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற நாடகம் மற்றும் கலைஞரின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவருக்கு அந்த நட்புகளின் ஆழம் நன்றாகவே தெரியும்.

#அப்துல்கையூம்

 

 

 

 

 

 

 

 

 

 

கலைஞர் மு. கருணாநிதியும் கருணை ஜமாலும்

இன்று ஆகஸ்ட் 10. கலைஞரின் “முரசொலி” பத்திரிக்கை தொடங்கப்பட்ட நாள். இந்நாளில் கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கு இடையே இருந்த சரித்திரப்புகழ் கூறும் நட்பினை இங்கே பதிவு செய்வது என் கடமை.

நடிகர் விஜயகாந்த் வாழ்க்கையில் எப்படி இப்ராஹிம் ராவுத்தர் என்ற கேரக்டர் முக்கியமோ, டி.ஆர்.ராஜேந்தர் வாழ்க்கையில் எப்படி ஈ.எம்.இப்ராஹிம் என்ற கேரக்டர் முக்கியமோ அதுபோன்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் வாழ்வில் திருவாரூர் கருணை எம்.ஜமால் என்ற கேரக்டர் மிக மிக முக்கியமானது.

கருணை & கருணா.. ஆஹா.. என்ன ஒரு பெயர் காம்பினேஷன். நட்பின் இலக்கணத்திற்கு கபிலர் & பிசிராந்தையாரை உதாரணம் காட்டுபவர்கள் இவர்களை ஏன் எடுத்துக்காட்டாகச் சொல்வதில்லை?

பிற்காலத்தில் தனக்குச் சொந்தமான அச்சகத்தை தன் ஆத்ம நண்பனின் நினைவாக திருவாரூரில் “கருணாநிதி அச்சகம்” என்ற பெயரில் நடத்தி வந்தது நட்பின் இலக்கணமன்றி வேறு என்னவாம்?

அப்போது கலைஞருக்கு வெறும் 18 வயது. அரும்பு மீசைக்காரர். எழுத்துப் பித்தரான கலைஞர் ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையை ஏந்தியும், “குடியரசு” பத்திரிக்கையை கக்கத்தில் வைத்துக்கொண்டும், கருணை ஜமாலை பக்கத்தில் வைத்துக் கொண்டும் இலக்கிய வேட்கையில் அலைந்து திரிந்த நிலாக்காலம் அது.

திராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் அப்போது மக்களிடையே பிரபலமாக வலம் வந்தன. கலைஞருக்கு எப்படியாவது பத்திரிக்கைத் துறையில் சாதனைகள் புரியவேண்டும் என்ற ஓர் ஆர்வம் ஒரு வெறியாகவே மாறி இருந்தது.

கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கும் இடையேயான நட்புறவு வாலிப வயதில் ஏற்பட்டதல்ல. பால்ய வயது தொட்டே அவர்களுக்குள் தொடர்ந்து வந்த இறுக்கமான உறவு, நெருக்கமான உறவு.

கலைஞருக்கு பத்திரிக்கைத் துறையில் ஈர்ப்பும் ஈடுபாடும் கூடுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் “தாருல் இஸ்லாம்” இதழாசிரியர் பா.தாவுத்ஷா என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். “பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டுபிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்ற அறிவிப்பை தன் இதழில் சவாலாக வெளியிட்டவர். எந்த அளவுக்கு தமிழில் புலமையும், தன் எழுத்தின் மீது அபார நம்பிக்கையும் கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு அறிவிப்பை இந்த மனிதர் இவ்வளவு பகிரங்கமாக வெளியிட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்பொழுது வெளிவரும் பத்திரிக்கைகளின் எழுத்துப்பிழைகளை காண்பதற்கு சீத்தலை சாத்தனார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தலை முழுதும் ரத்தக்களறியாகி அப்போலோ மருத்துவமனையில் எமர்ஜென்சியில் அட்மிட் ஆகியிருப்பார்.

ஈரோட்டில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த “குடியரசு” வார இதழில் கலைஞர் தொடர்ச்சியாக எழுதி வந்தார். அவரது அபார எழுத்தாற்றலால் பின்னர் துணை ஆசிரியாராகவும் பணியில் அமர்ந்தார். தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் திராவிட எழுச்சிக் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய பத்திரிக்கை ஒன்றே பிரதான கருவியாகவும், கிரியாவூக்கியாகவும் விளங்கியது.
.
பத்திரிக்கைத் தொழில் நடத்துவதென்பது அப்போது சாதாரண காரியமல்ல. காகிதம் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டும். நிறைய பணமுதலீடு செய்ய வேண்டும். விநியோகம் செய்வது சிரமமான காரியமாக இருந்தது. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கு உதவ முன்வராத காலத்தில் கைகொடுத்து உதவியது கருணை ஜமால்தான்.

திறமையும் எழுத்தாற்றலும் வாய்ந்த தன் பால்ய நண்பனுக்காக கருணை ஜமால் செய்த உதவி கலைஞரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட முரசொலி, தொடக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. “மாணவநேசன்” என்ற பெயரில் வெளிவந்த இந்த பத்திரிக்கைதான் பின்னர் முரசொலியாக பரிணாமம் அடைந்தது.

இந்த இதழ் பின்னர் பண நெருக்கடியால் நிறுத்தப்பட்டபோது மனமுடைந்துப் போன கலைஞர் பெருத்த சோகத்திற்கு உள்ளானார். நின்று போயிருந்த முரசொலி பத்திரிக்கையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதன் பின்னர் கலைஞர் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதப் போய் விட்டார். அவர் வசனம் எழுதிய முதற்படமொன்று வெளியானது. ஆனால் படத்தின் ‘டைட்டிலில்’ அவருடைய பெயர் காட்டப்படவில்லை. காரணம் அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக அறியப்படவில்லை. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” (1947) படத்திற்கு வசனம் எழுதியபோதும் இதே நிலைமைதான். அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்து ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். அபிமன்யு (1948) படம் வெளிவந்தபோதும் இதே நிலைமைதான் தொடர்ந்தது. ஜூபிடர் பிக்சர்ஸின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் திருப்பூர் தொழிலதிபர்கள் சோமு மற்றும் எஸ்.கே.மொய்தீன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது,

சினிமா உலகத்துக் கூத்தையும், துரோகத்தையும் கண்ட கலைஞர் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டார். இரவும் பகலும் கண்விழித்து, கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாக வசனம் எழுதிக் குவித்தது இவர். பெயரையும் புகழையும் தட்டிக்கொண்டு போவது வேறொருவர்.

நொந்து நூடுல்ஸ் ஆகிப்போன கலைஞர் தன் மனைவி பத்மாவதியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் திருவாரூருக்கே வந்துச் சேர்ந்தார். தன் நண்பர் கருணை ஜமாலிடம் தன் சோகத்தைக் கூறி புலம்பினார். அவரைத் தேற்றி ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து உற்சாகப்படுத்தினார் கருணை ஜமால்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

உடைநெகிழ்ந்தவனுடைய கை எப்படி உடனே சென்று உதவி காக்கின்றதோ அதுபோல உற்ற நண்பனுக்குத் துன்பம் வருகையில் ஓடிச் சென்று துன்பத்தைக் களைவது நட்பு என்ற நட்பு அதிகாரத்திற்கு இணங்க செயற்பட்டவர் கருணை ஜமால்.

கருணை ஜமாலின் முயற்சியால் 14-01-1948 முதல் முரசொலி ஏடு திருவாரூரிலிருந்து அவரது சொந்த அச்சகத்திலேயே வெளியிடப்பட்டது.

நண்பனுக்காக தோளோடு தோள் நின்று, அவரே மேற்பார்வையிட்டு பத்திரிக்கை பிரதிகளை அச்சிட்டுக் கொடுத்தார். தன் சொந்தப் பணத்தில் காகிதங்கள் கொள்முதல் செய்வது முதல், கலைஞருடன் சேர்ந்து பத்திரிக்கைகளை மூட்டைகளாக கட்டி தலையில் சுமந்து, ஆற்றை நீந்திக் கடந்து விநியோகம் செய்வது வரை அவரது வேலை. விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞருக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார்.

முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் பத்திரிக்கை கட்டுகளை சுமந்துச் சென்று விற்பனையாளர்களிடம் சேர்ப்பது வழக்கம். முரசொலி பத்திரிக்கையின் ஆரம்ப காலத்தில் திருவாரூர் தென்னன், சி.டி.மூர்த்தி, முரசொலி சொர்ணம், பெரியண்ணன் போன்றவர்களுக்கும் முரசொலி பத்திரிக்கையின் வளர்ச்சியில் பெரும் பங்குண்டு

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்பதுபோல் கருணை ஜமால் தக்க நேரத்தில் புரிந்த இந்த உதவி கலைஞரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது.

பத்மாவதியை கலைஞர் மணமுடித்தது 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இவர்களுக்குப் பிறந்த மகன் மு.க.முத்து. 1948 செப்டம்பர் மாதம் முதல் மனைவி பத்மாவதி மறைந்த பின்பு தயாளு அம்மாள் அவர்களை மறுமணம் புரிய முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அவரது ஆத்ம நண்பர் கருணை ஜமால்.

கருணை ஜமால் தமிழார்வலர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும்கூட. நாடகக் கலையில் ஆர்வமுள்ளவர். அரங்கண்ணல், கருணை ஜமால், தஞ்சை ராஜகோபால் போன்றோர் திருவாரூர் தேவி நாடக சபாவில் நடிகர்களாக இருந்தவர்கள்.

அப்போது தேவி நாடக சபாவில் பாடல் மற்றும் கதை எழுதும் பொறுப்பில் இருந்தவர் கவி. கா.மு.ஷெரீப். திருவாரூரில் “ஒளி” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் நடத்தி வந்தார்.

கா.மு.ஷெரீப்புக்கு தேவி நாடகக் சபாவில் நல்ல செல்வாக்கு இருந்தது. கலைஞரின் திறமையைக் கண்டு தேவி நாடக சபாவில் சேர்த்து விட்டது கா.மு.ஷெரீப் அவர்கள்தான். இங்குதான் “மந்திரிகுமாரி” நாடகம் முதலில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் மேலாளர் எம்.ஏ.வேணுவையை அழைத்துவந்து பார்வையிட வைத்தார். அதன்பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி..ஆர்.சுந்தரத்திடம் அறிமுகம் செய்து வைத்து மந்திரிகுமாரி (1950) படத்தில் இமாலயப் புகழை கலைஞருக்கு பெற்றுத்தர மூல காரணமாகத் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப் என்பது எல்லோரும் அறிந்த வரலாறு.

“நெஞ்சுக்கு நீதி” சுயசரிதத்தில் கா.முஷெரீப், கருணை ஜமால் இந்த இருவரின் பெயர்களையும் கலைஞர் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை. குறளோவியம் தந்தவருக்கு ‘செய்ந்நன்றி’ பாடம் நடத்த வேண்டுமா என்ன?

கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அண்ணாவின் திராவிடக் கொள்கையை பறைசாற்ற ஏதுவாக இருந்தது.

இதில் இன்னொரு சுவையான தகவலும் நாம் அறிய வேண்டியது அவசியம். கலைஞர் அவர்கள் தன் எழுத்துக்கள் மூலம் அண்ணாவின் கவனத்தை ஈர்த்து பரிச்சயம் அடைந்திருந்தாலும் அவரை முதன் முதலாக நேரில் சந்தித்து அறிமுகமானது எந்த இடத்தில் தெரியுமா? திருவாருரில் நடந்த ஒரு மீலாது விழாவின்போதுதான். அப்பொழுது இஸ்லாமியப் பெருமக்கள் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணாவை வரவழைத்து பேசச் செய்வது ஒரு TREND ஆகவே இருந்தது

இந்திராகாந்தியின் ஆட்சியில் எமர்ஜென்ஸி நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக கட்சியினர் பலரும் மிசா சட்ட்த்தில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். கலைஞர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். அந்த அடைக்கும்தாழ் ஒரு கட்டத்தில் செல்லுபடியாகவில்லை. அப்படிப்பட்ட அடக்கமுறை நேரத்திலும் தன் நண்பர் கருணை ஜமால் வீட்டுத் திருமணத்துக்கு திருவாரூர் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்ற பாங்கு இருவருக்குமிடையே நிலவிய நெருங்கிய நட்புக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்?

#அப்துல்கையூம்