Crescent School

என் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய நிகழ்வு

Crescent School

Crescent School – First Batch (கடைசி வரிசையில் வலதுபுற ஓரத்தில் நான்)

1967-ஆம் வருடம் ஜூலை மாதம் 30-ஆம் தேதி சென்னை இம்பீரியல் ஹோட்டலில் சென்னை நகர முஸ்லீம் பிரமுகர்களையும், கீழக்கரை வர்த்தக செல்வந்தர்களையும் அழைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறார் ஜனாப் பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்.

பல்வேறு நாடுகளை சுற்றி வந்த அவருக்கு, அங்குள்ள கல்வி நிலையங்களைப் போன்று உயர்தர ஆங்கில மொழி பாடக் கல்வியுடன் விளையாட்டு மற்றும் பல்வேறு திறமைகளையும் மாணவர்களுக்கு வளர்க்கும் வண்ணம்; மாதிரி பள்ளிக்கூடத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்ற அவரது நெடுநாள் ஆசைக்கு அடித்தளம் இட்ட நாள் அது.

பரவலான விழுதுகளுடன் ஓங்கி வளரவிருக்கும் ஒரு ஆலமர விருட்சத்திற்கு அன்று தான் விதையூன்றப்படுகிறது.

“Big things often have small beginnings” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இம்பீரியல் ஹோட்டலில் கூடிய இந்த கூட்டத்தில்தான் “சீதக்காதி டிரஸ்ட்” என்னும் பெயரில் ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டு, அதற்கான முறைப்படி பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்தேறின.

சென்னை மையப்பகுதியிலிருந்து 25 கற்களுக்குள்ளாக இயற்கை சூழ்நிலையில் இக்கல்வி நிலையம் அமைப்பதற்கும், அதுவரையில் தற்காலிகமாக சேத்துப்பட்டில் ஹாரிங்டன் சாலையிலுள்ள “நமாஸி வில்லா” என்ற கட்டடத்தில் இயங்குவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டன,  தொடர்ந்து வரும் கல்வியாண்டில் அதாவது 1968 ஜூலை மாதத்தில் பிரிப்பரேட்டரி வகுப்பும், இரு ஆறாவது வகுப்புகளும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலத்தை பாடமொழியாகக் கொண்டு சென்னை பல்கலைக் கழக மெட்ரிகுலேஷன் தேர்வுகளுக்கு ஆயத்தம் செய்யவும், தமிழறிவு, மார்க்கக் கல்வி, அரபு மொழிப் பயிற்சி, தொழிற்பயிற்சி, பொழுதுபோக்கு அம்சம், உடற்பயிற்சி, விளையாட்டு என சகல கலைகளிலும் தேர்ச்சி பெறவைக்கும் விதத்தில் தலைசிறந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த முடிவாகியது. தமிழறிஞர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் அவர்களை முதல்வராக நியமிக்க முடிவாகியது.

இஸ்லாமிய சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் இதுபோன்ற கல்வி நிலையம் இன்றிமையாத ஒன்று என இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட அத்தனை பேர்களும் பாராட்டிப் பேசினார்கள். இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் என்று உறுதி பூண்டனர்.

இந்த நிகழ்வு இப்படியே இருக்கட்டும்; என் சொந்தக் கதைக்கு இப்போது வருகிறேன்.

எனது தந்தைக்கு என்னை ஆங்கில வழிக் கல்வி கற்பித்து என்னை பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்ற கனவு. எல்லா தந்தைமார்களுக்கும் ஏற்படும் இயற்கையான உணர்வுதான் இது. அப்போது மிகச்சிறந்த கான்வென்ட் ஆக திகழ்ந்தது ஊட்டியில் லவ்டேல் பகுதியில் இருக்கும் “தி லாரன்ஸ் பள்ளிக்கூடம்” மட்டும்தான்.  என் தந்தைக்கு அவ்வளவு தூரம் என்னை அனுப்பி வைக்க மனம் வரவில்லை. எங்களூர் நாகூர் அருகிலுள்ள தஞ்சாவூரில் இருக்கும் The Sacred Heart convent என்ற ஆரம்பப் பாடசாலையில் நிறுவனத்தில் என்னை சேர்த்து விட்டார்கள். அப்பள்ளியின் முதல்வர் வெள்ளைக்கார கன்னியாஸ்திரி.

ஆங்கில வழிக் கல்வியுடன் கிறித்துவ மத கோட்பாடுகளையும் எங்கள் பிஞ்சு மனதில் பதிய வைத்தார்கள். மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். படுக்கை விட்டு எழும்போதும், சாப்பிடுவதற்கு முன்பும், உறங்குவதற்கு முன்பும் ஜெபம் சொல்ல வேண்டும்.  பரிட்சை எழுதும் நாட்களில் மாதக்கோவிலுக்குச் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்யாமல் போனால் நான் பரிட்சையில் பாஸாகவே முடியாது என்ற நம்பிக்கை எனக்குள் பதிந்துப் போயிருந்தது. ஒருமுறை என் நாக்கில் அப்பத்தை வைத்து ஞானஸ்நானம் கூட செய்து வைத்தார்கள்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளியிலிருந்து வேளாங்கண்ணிக்கு  எங்களை சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். மாதாக்கோயில் தரிசனம் முடிந்தபிறகு நாகூருக்கும் சென்றோம். அப்போது என் வீட்டிற்கு சிறிது நேரம் சென்றுவர அவகாசம் கிடைத்தது.

என் வீட்டில் உள்ளவர்களுக்கு என்னைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி. அதோடு அவர்களுக்கு வேறொரு உண்மையான அதிர்ச்சியும் காத்திருந்தது. செலவுக்காக பணம் என் பெற்றோரிடமிருந்து வாங்கி பர்ஸில் வைக்கும் போது அதிலிருந்து ஜபமாலை கீழே விழுந்ததை என் பாட்டி ஜுலைகா பீவி கவனித்து விட்டார். வலுக்கட்டாயமாக என் பர்ஸை பிடுங்கி சோதித்துப் பார்த்ததில் அதில் ஒரு மேரி மாதா படமும் இருந்தது. என் கண் முன்னே அப்போது ஒரு பிரளயமே நடந்து முடிந்தது.

“ஆங்கில வழிக் கல்வி வேண்டுமென்று கான்வெட்டுக்கு அனுப்பி அவனை இப்படி மதமாற்றம் செய்துவிட்டாயே?” என்று என் தந்தையை சரமாரியாகத் திட்டித் தீர்த்துவிட்டார். தன் தவற்றை உணர்ந்த என் தந்தை தலையை தொங்கப்போட்டு நிற்பதைத்தவிர அவருக்கு வேறுவழி தெரியவில்லை. பெரும் எதிர்பார்ப்புடன் வளர்த்த தன் மகனின் நிலைமை இப்படி தடம்புரளும் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.

நானும் அங்கிருந்து கிளம்பி மீண்டும் தஞ்சாவூருக்கு வந்துவிட்டேன். அந்த பள்ளியில் ஆண்களுக்கு ஐந்தாம் வகுப்புவரைதான். அடுத்த வருடம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர வேண்டும்.

நடந்த விஷயங்களை மனக்குமுறலுடன் என் தந்தை தனது நெருங்கிய நண்பர் இசைமுரசு நாகூர் E.M.ஹனிபாவிடம் சொல்லிக்காட்ட “கவலையை விடுங்கள் அதற்கு வழி இருக்கிறது” என்று கூறி தன் நண்பர் பி.எஸ்.ஏ.அப்துல் ரஹ்மான் சென்னையில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கவிருப்பதாகவும் அதில் ஆங்கில வழிக் கல்வியுடன் இஸ்லாமிய மார்க்க கல்விக்கான வசதிகள் உண்டு என்ற நற்செய்தியை கூறி இருக்கிறார். அச்செய்தி என் தந்தையின் வயிற்றில் பாலை வார்த்தது.

நாகூர் ஹனிபாவின் மூத்த மகன் E.M.நெளஷாத்துடன் என்னையும் அவரே “கிரசென்ட் ரெசிடென்ஷியல் ஸ்கூல்” என்ற பெயர் கொண்ட பிறைப்பள்ளியில் அழைத்துச் சென்று சேர்த்தும் விட்டு விட்டார்.

மார்க்கக் கல்வியினை கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குளச்சல் அஹ்மது பாகவி அவர்களிடமிருந்து மாணவர்களாகிய நாங்கள் வாங்கிய பிரம்படி கொஞ்சநஞ்சமல்ல. வாங்கிய ஒவ்வொரு அடியும் எங்களின் சீரிய வாழ்வுக்கு அடித்தளமிட்டது.

இமாம் கஸ்ஸாலி அவர்களின் அரபி பாடல்களும், இமாம் பூஸ்ரி இமாம் அவர்களின் பாடல் வரிகளும் மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும், அப்படித் தவறினால் எங்கள் பாகவி ஹஸ்ரத் பிரம்பினை முதலில் தலைக்கு மேல் சுழன்றுக் கொண்டிருக்கும் மின்விசிறியில் காட்டுவார். “தடக் தடக்கென” சப்தம் வரும். அதே வேகத்தில் எங்களின் இதயங்களும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடும். பாடல் வரிகளை தப்பாக பாடினால் மனுஷன் பின்னி எடுத்து விடுவார்.

விடியற்காலை எழுந்து “சுபுஹு” தொழுகைக்கு ஜமாத்தில் கலந்து கொள்ளவில்லை எனில் அதிகாலை சிற்றுண்டி அவித்த முட்டை கிடைக்காமல் போய்விடும். மார்க்கப்பற்று நாளடைவில் தானாகவே ஒவ்வொரு மாணவர்கள் மனதிலும் வேரூன்றியது. அறியாத வயதில் வழிமாறிப் போனதை எண்ணி எத்தனையோ முறை நான் கண்ணீர் வடித்திருக்கிறேன்.

தஞ்சை கான்வெண்டில் என்னுடன் படித்த பழநி என்ற வகுப்புத்தோழன் பாதிரியார் ஆகிவிட்டதாக பின்னர் கேள்வியுற்றேன். கல்வித் தந்தை பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்களின் முயற்சியால் இப்படியொரு கல்வி நிலையம் தொடங்காமல் போயிருந்தால் இந்நேரம் நானும் ஒரு Rev.ஞானத்தந்தை பாதிரியாராக வெள்ளை அங்கியுடன் பாவமன்னிப்பு வழங்கிக் கொண்டிருப்பேனோ என்ற நினைப்பு என் மனதில் பயத்தை உண்டு பண்ணுகிறது.

  • அப்துல் கையூம், பஹ்ரைன்