படுக்கப் பாய் கேட்டேன்
பஞ்சணை தந்தாய்!
பசிக்கு கூழ் கேட்டேன்
பாயசமே தந்தாய்!
வசிக்க குடில் கேட்டேன்
வசதியான மாளிகை தந்தாய்!
அணிவதற்கு கந்தல் கேட்டேன்
துணிக்கடையையே அள்ளித் தந்தாய்!
கேட்டதெல்லாம் கொடுத்தாய்
கேட்க மறந்ததையும் கொடுத்தாய்!
மாறாக நடந்தபோதும்
மன்னிப்பையே அருளினாய்!
நேர்வழியில் தவறியபோதும்
நிறைவான வாழ்க்கையை நீட்டித்தந்தாய்!
பாவக்கடலில் நீந்தியபோதும்
படகைத்தந்து கரைசேர்த்தாய்!
எத்தனை சிறிய வாழ்க்கைத் தடம்?
எப்படி செலுத்துவோம் இத்தனை நன்றிக்கடன்?
இறைவா!
இதற்காவது எங்கள் வாழ்வை
இன்னும் கொஞ்சம் நீட்டித்தர மாட்டாயா?
– அப்துல் கையூம்