டிக்… டிக்… டிக்…

டிக்.. டிக்.. டிக்..

%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d

டிக்.. டிக்.. டிக்..

இதனைப் படிக்கையில் பலருக்கும் 1981-ல் பாரதிராஜா எடுத்த குற்றப்புனைவு திரைப்படம்தான் சட்டென்று நினைவில் வரும்.  ஆனால், என் நினைவில் நிழலாடுவதோ  எம்.ஜி.ஆர். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் “டிக்… டிக்.. டிக்…” ஓசைதான்.

இதற்கு முன் நானெழுதிய பதிவில் கங்கை அமரனுக்கு எம்.ஜி.ஆர். பரிசளித்த கைக்கடிகாரம் “ரோலெக்ஸ்”வாட்ச் என எழுதியிருந்தேன். உண்மையில் அது “ரோலெக்ஸ்”  வாட்ச் கிடையாதாம். “ஒமேகா” வாட்ச்சாம். அதுதான் துல்லியமான தகவலும் கூட. (நானும் என் பதிவில் மாற்றம் செய்து விட்டேன்) OMEGA-வும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் என்பதில் சற்றும் ஐயமில்லை.

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்? நதியின் ஒளியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா.. ?
அடடா ……..

“புன்னகை மன்னன்” படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலை நான் கேட்கும்போதுகூட எம்.ஜி.ஆருடைய  கைக்கடிகாரம்தான் என் மனக்கண்முன்  வந்து ஊஞ்சலாடும்.

மூன்று வருடங்களுக்கு முன்பு  யாரோ கிளப்பி விட்ட ஒரு ‘அண்டப் புளுகு.. ஆகாசப் புளுகு’ , அது வைரலாக பரவி எம்.ஜி.ஆர். ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அந்த புரளி வேறு ஒன்றும் இல்லை.

எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து  “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் ஓடும் சத்தம் கேட்கிறது என்பதுதான்.

mgr-watch

தென் மாநிலங்களில் இருந்தெல்லாம் இந்த “டிக்… டிக்.. டிக்..” சத்தத்தைக் கேட்டு தரிசனம் பெற எம்.ஜி.ஆரின் பக்தக்கோடிகள் எம்.ஜி.ஆர். சமாதிக்கு சுற்றுலா வந்தார்கள்.  சூடம் ஏற்றினார்கள். சில ‘பக்தர்கள் “இன்னும் எம்.ஜி.ஆர். சாகவில்லை;  அது அவரது இதயத்துடிப்பு” என்றுகூட சீரியஸாக நம்பினார்கள்.

எனக்கு அறிமுகமான தமிழ் நண்பர் ஒரு SECOND HAND ROLEX WATCH DEALER. ஒருமுறை அவருடைய கடையில் வைத்திருந்த  ரோலெக்ஸ் வாட்சை  என் கையில் வாங்கி; காதில் வைத்து, அதில்  “டிக்..டிக்..டிக்….” சத்தம் வருதா என்று பார்த்தேன்.

“பேட்டரியால் இயங்கும் QUARTZ வாட்ச்சில் மாத்திரம்தான்  “டிக்..டிக்..டிக்..” சத்தம் வரும்.  சுவிட்ஸர்லாந்தில் தயாராகும் ரோலெக்ஸ் போன்ற விலையுயர்ந்த வாட்ச்சின் உள்ளே இருப்பது தானியங்கி AUTOMATIC  இயந்திரங்கள்.  இரண்டு நாட்கள் அசைவில்லாமல் இருந்தால் அதுவே  தானாகவே நின்றுவிடும்.”

உமா ஷங்கர் ரேஞ்சுக்கு ஒரு பிரசங்கத்தையே அவர் நடத்தி முடித்தார். நான் மேலே கொடுத்திருப்பது அதன் வெறும் சுருக்கும்தான்.

“பிரதர் ..!  நீங்க இப்படி சொல்றீங்க. ஆனா.. எம்.ஜி.ஆர். வாட்ச் இன்னும் “டிக்….டிக்..டிக்..”  என்ற சத்தத்துடன் ஓடிக்கிட்டுத்தானே இருக்கு. அது எப்படி..?

அசடாட்டம்  நான் ஒரு கேள்வியை எடுத்துப் போட்டேன்.  மனுஷன் ஏற இறங்க என்னை ஒரு மாதிரி பார்த்தார்.

“யோவ்.. உன்னைப் பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கு.  லூசாய்யா நீ? காலங்காத்தாலே ஏன்யா என் பிராணானை வாங்குறே?” என்று மனசுக்குள் புலம்பிய அவருடைய மைண்ட் வாய்ஸை என்னால் மானசீகமாக கேட்க முடிந்தது.

ஒரு வேற்றுக்கிரக ஆசாமியைப் பார்ப்பது போல மீண்டும்   ஒரு ஏளனப் பார்வையை என் மீது எடுத்து வீசினார். எனக்கே சற்று “ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்” ஆகிவிட்டது,

சில  வருடங்களுக்கு  முன்பு எம்.ஜி.ஆர். சமாதியின் பளிங்கு மேடையை ஒரு வாலிபர் தகர்த்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து போலீஸ் அங்கு விரைந்தனர். அந்த வாலிபரை பிடித்து போலீஸ் விசாரித்தபோது அவர் பெயர் ராமச்சந்திரன் என்றும் ; அவர் திருத்தணியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

“எம்.ஜி.ஆர். சமாதிக்குள் வாட்ச்  இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வாட்சை எடுப்பதற்காக சமாதியை உடைத்தேன்”என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.

mgr-watch-2

எம்.ஜி.ஆர். சமாதிக்குள்ளிருந்து வரும் “டிக்.. டிக்.. டிக்..”  சத்தத்தைக் கேட்க வரும் எம்.ஜி.ஆர். அபிமானிகளை சந்தித்து பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்து வெளியிட்டது.

”வாரத்துக்கு ரெண்டு வாட்டி தலைவரோட சமாதிக்கு வந்துடுவேன். தலைவருக்காக ஸ்பெஷலா அமெரிக்காக்காரன் கண்டுபிடிச்சது அந்த வாட்ச். அதான் தலைவர் இறந்த பிறகும் வாட்ச் ஓடிட்டு இருக்கு. ஆனா, எங்கப்பா, ‘இன்னும் எம்.ஜி.ஆர். சாகலேங்கிறாரு… அது வேற குழப்பமா இருக்கு!” என்றாராம் பெயிண்டர் வேலை பார்க்கும் சுந்தர் என்ற வாலிபர்.

”புரட்சித் தலைவர், நம்ம நாட்டைப் பத்தின எல்லா ரகசியங்களையும் வாட்ச்சுக்குள்ளதான் வெச்சிருந்தாரு. அதைத் திறந்தா, நம்ம நாட்டு ரகசியம் எல்லாம் லீக் ஆயிடும்னு வாட்சை அவர்கூடவே புதைச்சுட்டாங்க” என்றாராம் இன்னொருவர்.

எஸ்.வி.சேகர் நாடகத்தில் ஒரு ஜோக் வரும். “சூப்பர் மேனுக்கும் ஜென்டில்மேனுக்கும் என்ன வித்தியாசம்”?..

“பேண்டுக்கு மேல ஜட்டி போட்டா சூப்பர் மேன், பேண்டுக்கு உள்ளார ஜட்டி போட்டா அது ஜென்டில்மேன்”என்று பதில் வரும்.

நம்ம ஆளுங்கதான் பாட்டுக்கு எசப்பட்டு பாடுபவர்கள் ஆயிற்றே.  இந்த ஜோக்குக்கு தொடர் ஜோக் ஒன்றும் இயற்றினார்கள்

“அதான் இல்ல, ‘சூப்பர் மேன்’ இங்கிலீஷ் படம், ‘“ஜென்டில்மென்’ தமிழ்ப்படம்” என்று எழுதி.. “யாருகிட்ட…???” என்ற  முத்தாய்ப்பு வேற.

எம்.ஜி.ஆர். சற்று மாறுபட்ட மனிதர்.  நாம கையிலே வாட்ச் கட்டி அதுக்கு மேலை முழுக்கைச் சட்டை போடுவோம். ஏனென்றால் நாம்  Ordinary Man.    வாத்தியார் முழுக்கை சட்டை அணிந்து அதுக்கு மேலே வாட்ச் கட்டுவார். ஏனென்றால் அவர் சூப்பர் மேன்.

நாம இடது கையில் வாட்ச் கட்டுவோம். அவர் வலது கையில் கட்டுவார்.  ஏனென்றால் அவர் ஆயிரத்தில் ஒருவன்.

ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒரு பிரத்தியேக ஸ்டைல் இருக்கும். நாஞ்சில் மனோகரன் கையில் “மந்திரக்கோல்”.  கலைஞருக்கு கறுப்புக் கண்ணாடி.  தமிழ்வாணனுக்கு தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும்.

எம்.ஜி.ஆருக்கோ பட்டு வேட்டி, பட்டு முழுக்கைச் சட்டை.

கறுப்புக் கண்ணாடி  ஜெர்மன் தயாரிப்பு . கோலாலம்பூர் நண்பர் வழங்கிய FUR தொப்பி.  காஷ்மீர் மன்னர் பரிசளித்த ‘பஷ்மினா’ சால்வை.  துபாய் அன்பர் தயாரித்து அனுப்பும் காலணி. சுவிட்ஸர்லாந்தில் தயாரிக்கப்படும் கைக்கடியாரம். இதுதான் அவரது டிரேட் மார்க்.

எம்.ஜி.ஆருக்கு விதவிதமான உயர் ரக கைக்கடிகாரங்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ரோலெக்ஸ், ஒமேகா. ரேடோ, பதேக் பிலிப்ஸ், ஃபேவர் லுபா, மோண்ட் ப்ளாங்க்  இதுபோன்ற – குறிப்பாக chronograph watches – அவரிடம்  ஏராளமாக  இருந்தன. ராமாவரம் தோட்டத்தில் அவர் பயன்படுத்திய சில  பொருட்களை கண்காட்சியாக வைத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆரிடம் உள்ள கெட்ட பழக்கம் என்னவென்றால் அவர் உணர்ச்சிவசப்பட்டு விட்டால், பிரியப்பட்ட யாருக்காவது தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்து, அவர்களை அன்பினால் திக்கு முக்காடச் செய்துவிடுவார்.

இப்படி பரிசுபெறும் அதிர்ஷ்டம் கங்கை அமரனுக்கு மாத்திரமல்ல, எத்தனையோ பேர்களுக்கு வாய்த்திருக்கிறது.

“கலங்கரை விளக்கம்” படத்திற்காக எம்.ஜி.ஆர்.  முன்னிலையில்  காதல் பாட்டு ஒன்றுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போய் விடுகிறது.  அப்போது அருகில் அமர்ந்திருக்கும் பாடலாசிரியர் வாலிக்கு எம்.ஜி.ஆர். ஒரு பரிட்சை வைக்கிறார்.

“இந்த இசைக்கு 15 நிமிடத்தில் பாடல் எழுதித் தந்துவிட்டால்  என் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தை   பரிசாகத் தந்து விடுகிறேன்” என்று கூறுகிறார்.  சவாலை ஏற்றுக் கொண்ட வாலி ‘கிடுகிடு’வென்று குறிந்த நேரத்தில் பாடலை எழுதி முடிக்க , வாலியின் கையில் எம்.ஜி.ஆர். தனது விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கட்டிவிட கவிஞருக்கு அடிக்கிறது ஜாக்பாட் பரிசு.

அப்படி உருவான பாடல்தான் இது:

நான் காற்று வாங்க போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் – அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்த
கன்னி என்ன ஆனாள்..

அதனைத் தொடர்ந்துவரும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை

வாலிக்கு இதுபோன்ற சவால்கள் அல்வா சாப்பிடுவது போன்றது.

கலைஞரின்  மூத்த மகன் மு.க. முத்துவை நடிக்க வைத்து தயாரிக்கப்பட்ட . ‘பிள்ளையோ பிள்ளை’ தொடக்கவிழாவுக்கு எம்.ஜி.ஆரே நேரில் வந்து வாழ்த்தினார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக களத்தில் இறக்கப்பட்டிருக்கும் பந்தயக்குதிரை மு.க.முத்து என்று நன்கு அறிந்து வைத்திருந்தபோதும்,  பட வெளியீட்டு சிறப்புக்காட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். தனது கைக்கடிகாரத்தை  அவருக்கு  பரிசாக அளித்துவிட்டுச் சென்றார்.

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! – நீ

மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!

இப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் வரிகளை கேள்வியுற்ற எம்.ஜி.ஆர். “ஏன்யா எனக்கு எழுதும்போதெல்லாம் இந்த மாதிரி சொற்கள் உனக்கு வந்து விழவில்லையா..?” என்று கவிஞர் காளியை செல்லமாகக் கடித்துக் கொண்டாராம்.

கல்லக்குடி போராட்டத்திற்குப்பின் திருச்சியில் சிறைவாசத்தை முடித்துவிட்டு சென்னை இரயில் நிலையத்திற்கு கலைஞர் வருகிறார்.  கூட்ட நெரிசலிலிருந்து அவரை பாதுகாக்க வேண்டி எம்.ஜி.ஆர் அவரை குண்டுகட்டாகத் தூக்கியபோது, எம்.ஜி.ஆருடைய “ரேடோ” வாட்ச் கீழே விழுந்து காணாமல் போனது.

“அடடா.. என்னாலே உங்களது வெளிநாட்டு கைக்கடிகாரம் காணமல் போய்விட்டதே..?” என்று கலைஞர் பதறிப்போனபோது எம்.ஜி.ஆர். பதட்டப்படாமல் சொன்னது “வெளிநாட்டு கடிக்காரம் போனால் என்ன? உள்நாட்டுத் தலைவர் உங்களைக் காப்பாற்றிய சந்தோஷத்திற்கு எத்தனை கடிகாரத்தையும்  நான் இழக்கத் தயார்”.  எம்.ஜி.ஆரின் அன்பின் வெளிப்பாட்டுக்கு இதுவும் ஒரு TIP OF THE ICEBERG.

mgr-5

எம்.ஜி.ஆர். மரணித்து கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் எம்.ஜி.ஆர் சமாதிக்குள் காதை வைத்து அந்த “டிக்.. டிக்.. டிக்..” சத்தத்தை உருவகப்படுத்தி உளம் மகிழும் பக்தக்கோடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்துல் கையூம்

31.10.2016