கண்ணதாசன் நினைவுகள்

கண்ணதாசன் நினைவுகள் – பாகம் 1

கலைவாணன்

“அன்புள்ள அத்தான்:” படத்தில் ஷோபாவுடன் கலைவாணன்

கலைவாணன்

என் இளமைக் காலத்தில் கண்ணதாசன் என்ற மாபெரும் ஆளுமை பொருந்திய மனிதனோடு ஓரிரண்டு முறை பேசிப் பழக வாய்ப்பு கிட்டியதையும், அவரது தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பங்குகொண்டு நான் கவிதை வாசித்ததையும், அவரிடம் “சபாஷ்” வாங்கியதையும் இன்றளவும் பெருமையோடு எண்ணிப் பார்க்கிறேன்.

“வசிட்டர் வாயால் பிரம்மரிஷி” பட்டம் பெற்றதைப் போல் என்று முதுமொழி  சொல்வார்களே அதை அன்று நான் முழுவதுமாக உணர்ந்தேன்.

எனது பள்ளிப் பருவத்தின்போது, வண்டலூர் பிறைப்பள்ளியில் (Crescent Residential School) என்னோடு படித்த சகமாணவர்களுக்கும் அவரைச் சந்தித்து உரையாடுகின்ற அரிய வாய்ப்பு கிடைத்தது, அப்படிப்பட்ட ஓர் அதிர்ஷ்டம் எங்களுக்கு வாய்த்தமைக்கு வலுவான காரணம் ஒன்று உண்டு.

அதற்கான காரணம் என் நண்பன் கலைவாணன் கண்ணதாசன்.

கலைவாணன் என்னைவிட வயதிலும் வகுப்பிலும் ‘ஜூனியர்’. அவன் தந்தையின் தமிழாற்றலுக்கு மனதைப் பறிகொடுத்த நான், கலைவாணனுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தேன். அவனுக்குள்ளும் தன் தந்தைபோலவே கதை, கட்டுரை, கவிதை, நடிப்பு என அனைத்துக் கலைகளிலும் ஆர்வம் குடிகொண்டிருந்தது

எங்களோடு ஹாஸ்டலில் தங்கி ஒன்றாக பழகிய சகமாணவன் அவன். சென்னை மாநகரத்திலேயேதான் கண்ணதாசன் வீடும் இருந்தது. இருந்தபோதிலும் ஹாஸ்டலில் பிறமாணவர்களுடன் தங்கியிருக்கும்போது, அவனது வாழ்க்கையில் உலக அனுபவங்கள் இன்னும் கூடுதலாக கிடைக்கும், எல்லோருடனும் சேர்ந்து பழகும் சந்தர்ப்பம் உண்டாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் அவனை வண்டலூர் கிரெசெண்ட் பள்ளியில் கவியரசர் சேர்த்திருந்தார்.

தன் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைக்கும்  எல்லா தகப்பன்மார்களைப் போலவே கண்ணதாசனும் ஆசைப்பட்டார். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசன் ஒரு சிறந்த கவிஞனாக மட்டுமல்ல. சிறந்த தகப்பனாகவும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

மூன்று பெண்மணிகளை அவர் மணம் முடித்தார், அவருக்கு 14 குழந்தைகள் இருந்தன என்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி சிலர், அவர் சிறந்த குடும்பத் தலைவானாக இருக்கவில்லை என்று குறை கூறுவதை ஒருநாளும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

கண்ணதாசனின் முதல் மனைவி பொன்னழகி என்ற பொன்னம்மா வயிற்றில் உதித்தவன் என் நண்பன் கலைவாணன். அம்மையாருக்கு நான்கு மகன்கள்: கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம். மூன்று மகள்கள்; அலமேலு, தேனம்மை, விசாலாட்சி.

கண்ணதாசன் அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளச் சென்று அவருக்கு அங்கு  மாரடைப்பு  ஏற்பட்டு சிக்காகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.  அப்போது அவரோடு உடனிருந்து கவனித்துக்கொள்ள  இங்கிருந்துச் சென்ற அவரது குடும்பத்தினர் மூன்று பேர்கள்.

அவருடைய மனைவிகள் பார்வதி, வள்ளியம்மை, மற்றும் அவருடைய அன்புக்கு பாத்திரமான செல்ல மகன் கலைவாணன். கவிஞரின் உயிர் பிரிந்து அங்கிருந்து  அவருடைய பூதவுடல் விமானத்தில் தாயகம்  வந்தபோது இவர்களும் விமானத்தில் கூடவே வந்தார்கள்.

கலைவாணன் மீது மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே பற்றும் பாசமும் கவிஞர் வைத்திருந்தார் என்பது என் எண்ணம். எனது இந்தக் கருத்தில் அவரது மற்ற குழந்தைகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் இது எனது சொந்தக் கணிப்பு என்பதை இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

யாசீன் காக்காவும் கண்ணதாசனும்

yaseen-kaka

கீழக்கரை ஆ,மு.அஹ்மது யாசீன்

கலைவாணன் கண்ணதாசனை எங்கள் பள்ளியில் சேர்க்க கவிஞர் பெருமகனாருக்கு ஆலோசனை வழங்கியது கீழக்கரையைச் சேர்ந்த யாசீன் காக்கா அவர்கள்தான். வளநாடு சினி ரிலீஸ், கிரஸெண்ட் மூவீஸ், வச்சிர நாடு பிலிம்ஸ் , செம்பி பிலிம்ஸ், சேது பிலிம்ஸ் போன்ற சினிமா சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவர் அந்த பிரபலம்.  நடிகர் பாலாஜி போன்ற படத்தயாரிப்பாளர்கள் யாசீன் காக்காவுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போல 1970 – 1980 கால கட்டங்களில் தமிழகத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் இவர்களின் தொடர்பு இல்லாமல் வெளிவந்ததில்லை.

%e0%ae%af%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be

பாலாஜி, ரஜினிகாந்துடன் யாசீன் காக்கா புகைப்பட உதவி:சோனகன் மஹ்மூது

திரைப்படத்துறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் கவியரசர் கண்ணதாசனுக்கு யாசீன் காக்கா மிகவும் வேண்டப்பட்ட நபராக இருந்தார். கவிஞர், உயிருக்கு உயிராக நேசித்த நண்பர்களின் பட்டியலில் யாசீன் காக்காவுக்கும் இன்றிமையாத ஓர்    ஒரு இடமுண்டு. கண்ணதாசனுக்கு சினிமாத் துறையில்  பொருளாதார ரீதியாக  நிறைய உதவிகள் அவர் புரிந்திருக்கிறார்.

அக்கால கட்டத்தில் ‘குமுதம்’ இதழில் “என் எனிய நண்பர்கள்” என்ற தலைப்பில் தன் நெஞ்சில் நீங்காது இடம்பெற்றிருந்த நண்பர்களைப் பற்றி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கண்ணதாசன் கவிதை எழுதிவந்தார்.

வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மாதவன், யாசீன் காக்கா போன்றோர் கண்ணதாசனின் இதயத்தில் தனியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள். மற்றவர்களின் பெயர்கள் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அழகுற தமிழில் அட்டகாசமாக கவிதைகள் வடித்தார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததாக யாரைப் பற்றி எழுதப் போகிறார் என்ற ஆர்வத்தில் குமுதம் இதழுக்காக நான் காத்திருப்பேன்.

[யாசீன் காக்காவுக்கும் முன்னாள் திமுக அமைச்சர் மாதவனுக்குமிடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. அது ஒரு தனி ட்ராக். மாதவனை ஒருமையில் “அவன்”, “இவன்” என்று அழைக்குமளவுக்கு இருவருக்குமிடையே நெருக்கம் நிலவி வந்தது]

தனது நண்பர் யாசீன் காக்கா அவர்களைப்பற்றி கண்ணதாசன் “குமுதம்” இதழில் எழுதியிருந்த  ஒரு சில வரிகள் பசுமரத்தாணியாய் என் மனதில் இன்னும்  பதிந்துள்ளது; ஆழமாய் பொதிந்துள்ளது.

yasin

கண்ணதாசனுடன் யாசீன் காக்கா – புகைப்பட உதவி: சோனகன் மஹ்மூது

எப்போதும் புன்சிரிப்பு
எவரிடத்தும் பேசும்போதும்
தப்பாக ஒருவார்த்தை
தவறியேனும் சொல்வதில்லை
தழுவவரும் நண்பருக்கு
தங்கக்கட்டி
முப்பாலில் வள்ளுவனார்
வாழ்க்கை எல்லாம்
முன்பாக காணவரும்
எளிய வாழ்க்கை
அப்பழுக்கில்லா(த) எங்கள் சேதுநாட்டு
யாசீன்பாய் எனதுஇனிய நண்பராவார்

[மேற்கண்ட கவிதையில் ஒன்றிரண்டு சொற்கள் விடுபட்டிக்கலாம், காரணம் இது முறையான மரபுக்கவிதை வடிவில் இருந்தது. நினைவில் இருந்ததை மட்டும் இங்கே வடித்திருக்கிறேன்.]

தன் மனதுக்கு உகந்த நண்பருக்கு இதைவிட ஒரு சிறந்த சன்மானம் என்ன கொடுக்க முடியும்? அதுதான் கண்ணதாசன்.

கண்ணதாசனைக் காணச் சென்ற நான்

ஒருமுறை கண்ணதாசனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு கலைவாணனுடன் காணச் சென்ற அந்த நிகழ்வு மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. அதை நினைத்தாலே இனிக்கும்.

சென்னை தியாகராய நகரில், நடேசன் பூங்காவுக்கு பின்புறம் இருந்தது அவர் வீடு. எழுதுவதற்கு பெரும்பாலும் தனிமையை விரும்பி கவிதா ஓட்டலில் தங்கியிருப்பது கவிஞரின்   வழக்கம். அன்று அவர் தி.நகர் வெங்கட நாராயணா சாலையிலுள்ள வீட்டில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அங்குச் சென்றோம். அம்பாஸிடர் கார் ஒன்று வெளியில் நின்றிருந்தது. வயிற்றுக்கு மேலே உயர்த்திக் கட்டிய வேட்டியோடு வீட்டின் வெளியே அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தார் அந்த கவிப்பேரரசர்.

அருகில் சென்று அவரைப் பார்த்த நான், என்னை நானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்; நான் காண்பது கனவா அல்லது நனவா என்று புரியாமல் திகைத்தேன்.

ஆஜானுபாகுவான உடல்வாகு. கம்பீரமானத் தோற்றம். உருண்டையான முகம். கள்ளம் கபடமற்ற வெளிப்படையான பேச்சு.

கலைவாணனுக்கும் கண்ணதாசனுக்கும் தோற்றத்தில் நிறைய ஒற்றுமை இருந்தது. ‘ஜெராக்ஸ்’ காப்பி எனலாம்.

“ரத்தத் திலகம்”  படத்தில் கோட்டு சூட்டு அணிந்துக்கொண்டு “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று பாடி நடித்த கலைஞனா அவன் என்ற பிரமிப்பு என்னை ஆட்கொண்டு என்னை ‘மெளனி’யாக்கியது.

நாடோறும் சிலோன் வானொலியில் கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது போன்றோர் அனுதினமும் சுவைத்து பாராட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரன் முன் நான் நிற்கின்றேன் என்ற உணர்வு ‘ஹை-ஹீல்ஸ்’ அணியாமலேயே என்னை உயர்த்திக் காண்பித்தது.

அவரது தீவிர ரசிகன் என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். எத்தனையோ கேள்விகள் அவரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டுச்  சென்றேன்.   ஊஹீம்….    எதுவுமே கேட்கத் தோன்றவில்லை.  எனக்கு பேச்சே எழவில்லை.  “பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல” அவரையே பார்த்துக்கொண்டு பிரமித்துப் போய் நின்றேன். அப்பொழுது ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பு  நான்  படித்துக் கொண்டிருந்தேன்.

சிறுகூடல்பட்டி சிந்தனைவாதி பேசப்பேச நான் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாசமலர் படத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”  என்ற அவரது   பாடலுக்கு சிவாஜி கணேசன்    ” உம்…உம்.. உம்..உம்,”  , என்று ‘உம்’ கொட்டிக்கொண்டிருப்பார்.  அதுபோல நான் ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தேன்.

எங்கள் பள்ளிக்கூட வாழ்க்கைப் பற்றி விசாரித்துவிட்டு, அவரது அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்தார். எங்களுக்கு புத்திமதியும் கூறினார்.

அவரை சந்தித்துவிட்டு திரும்பி வருகையில் என்னாலேயே நம்ப முடியவில்லை; நான் பார்த்து பேசிவிட்டு வந்தது தமிழகத்தையே தன் எளிமையான சொற்களால் கட்டுண்டு அடிமைப்படுத்திய அந்த கவிராஜனைத்தானா என்று……

—அப்துல் கையூம்

(நினைவுகள் இன்னும் பல பாகங்களாகத் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)