தமிழ் மொழியில் போர்த்துகீசியச் சொற்கள்

=========================================

போர்த்துகீசியர்கள் தமிழகத்தில் விட்டுச்சென்ற அடையாளங்களில் ஒன்று மைலாப்பூரிலுள்ள லஸ் பகுதியிலுள்ள 1516-ஆம் அண்டு கட்டப்பட்ட பிரகாச மாதா ஆலயம். LUZ என்ற வார்த்தை “Nossa Senhora da Luz” என்ற போர்த்துகீசிய சொற்றொடரிலிருந்து பெறப்பட்டது.  சென்னையில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயமும் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டதுதான்.

1618-ஆம் வருடத்திலிருந்தே போர்த்துகீசியர் தமிழக மண்ணில் காலூன்ற முயற்சி செய்தார்கள் என்ற போதிலும் 1620-ல்தான் அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற முடிந்தது.

நாகை மாவட்டத்தில் ஒரு காலத்தில் போர்த்துகீசியர் ஆதிக்கத்திலிருந்த தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களான பொறையார், காரைக்கால்,  திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம் பகுதிகளில் ஏராளமான போர்த்துகீசியச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன அவைகள் தமிழ்ச்சொற்களாக உருமாறி ஏட்டிலும் இடம்பெற்று விட்டன. தமிழ்க்கூறும் நல்லுலகத்தில் பரவலாக பேசப்படுகின்றன.

நாகை மாவட்டத்திலுள்ள  தரங்கம்பாடி எனும் ஊரைப் பற்றி சற்று விரிவாகச்  சொல்ல வேண்டியது அவசியம். .”தரங்கம்பாடி”…… ஆகா ..! என்ன ஒரு கலைநயமிக்க பெயரிது. இந்த பாழாய்ப்போன போர்த்துகீசியர்களின் வாயில் இந்த அழகான தமிழ்ப் பெயர் நுழையாததால் அலங்கோலமாகச் சிதைத்து Tanquebar என ஏதோ TASMAC BAR போன்று மாற்றித் தொலைத்து விட்டார்கள்.

“நீரலைகள் ராகம் பாடும் ஊர்” என்ற பொருளில் விளங்கிய தரங்கம்பாடி என்ற பெயரை டிரங்குபார் என்று பெயர் வைத்த போர்த்துகீசியரை நினைத்தால் நமக்கு பற்றிக்கொண்டு வருகிறது.,

ஆங்கியேர்கள் இங்கு காலூன்றுவதற்கு முன்பே போர்த்துகிசியர்கள் இங்கு தடம் பதித்து விட்டனர். 450 ஆண்டுகள் தொடர்பு என்றால் அதன் சுவடுகள் தெரியாமலா போய்விடும்?.

சப்பாத்து, துவாலை, ஜன்னல், வராந்தா, குசினி, கிராதி, அலமாரி, மேஜை, சாவி, ஜாடி, பீப்பாய், மேஸ்திரி, நிரக்கு, இதுபோன்று கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழ் மொழியோடு ஒன்றரக் கலந்து விட்டன.

இன்னும் எங்கள் ஊரில் செருப்பு, காலணி, ஸ்லிப்பர் என்று கூறுவதைக் காட்டிலும் “சப்பாத்து” என்ற சொல்லாடலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். யாராவது வாலாட்டினால் “சப்பாத்து பிஞ்சு போயிடும் ஜாக்கிரதை” என்பார்கள்

சிற்சில சொற்கள் போர்த்துகீசியம் எது, தமிழ் எது என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு ஒன்றரக் கலந்து விட்டன என்ற கூற்று முற்றிலும் உண்மை.

//என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்

என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்//

என்றுதான் வைரமுத்து பாடுகிறாரே தவிர சாளரத்தைக் கேட்டுப்பார் என்று பாடவில்லை

“தரங்கம்” என்றால் நீரலைகள் எழுப்பும் சுகமான ராகம் என்று பொருள். தரங்கம் என்ற பெயரில் கர்நாடக இசையில் ஒரு ராகமே இருக்கிறது. ஜேசுதாஸின் பாடல் பதிவரங்கத்தின் பெயர் தரங்கிணி.. தரங்கம் என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் “புல் புல் தாரா” என்ற இசைக்கருவியின் பெயரும் பிறந்தது.

பெரிய புராணத்தில் “நீர்த்தரங்க நெடுங்கங்கை” என்ற பயன்பாட்டைக் காண முடிகிறது  (பெரியபுராணம். தடுத்தாட்கிண்ட புராணம். 165).

கடல் என்ற சொல் “தரங்கம் பரமபதம்” என்றும் கையாளப்பட்டுள்ளது. (அஷ்டப். திருவேங்கடத்தந்.56).

“ கத்தும் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் உளைந்து” என்ற சொற்பதம் பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழில் காண முடிகிறது.

சிலர் திரங்கம்பாடி என்ற பெயரிலிருந்து மருவியதுதான் தரங்கம்பாடி என்று வாதிடுகிறார்கள். அவ்வாதத்தில் போதிய வலுவில்லை. “திரங்கம்” என்றால் வற்றிச் சுருங்குதல் என்று பொருள்.

“தெங்கின் மடல்போற் றிரங்கி” (மணி. 20, 57).

திரங்கு மரனாரிற் பொலியச் சூடி (மலைபடு. 431).

திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு (கம்பரா. காட்சி. 25).

மடமா னம்பிணை மறியொடு திரங்க (ஐங்குறு. 326)

இவையாவும் “திரங்கம்”  என்ற சொல்லின் இலக்கியப் பயன்பாடுகள். வற்றிச்சுருங்குதல் என்ற பொருளில் இவ்வூர்ப் பெயர் ஏற்பட்டதல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

ஆனால் தரங்கம் என்ற சொல்லாடல் கடல் சம்பந்தப்பட்ட நீரலைகளைக் குறித்தே காணப்படுகின்றன. ஆகையால் “தரங்கம்பாடி” என்றால் “நீரலைகள் கவிபாடும் ஊர்” என்ற விளக்கமே சாலப்பொருந்தும்

இதோ கீழ்க்கண்ட பாடல்களில் “தரங்கம்” என்ற சொல்லாடல் பயன்பாட்டில் உள்ளதை உறுதிபடுத்துகின்றது

//இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-

புரம் காவல்(ல்) அழியப் பொடிஆக்கினான்—

தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்

குரங்காடூதுறைக் கோலக் கபாலியே//.

#தேவாரம் 5-63 (1)

//வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்

ஒண் தரங்க இசை பாடும் அளிஅரசே! ஒளி மதியத்-

துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!//

#தேவாரம் 1-60_(1)

//தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே//

#தேவாரம் 2-38(4)

//சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்//

#தேவாரம்  1-004 (6)

ஆகையால் தரங்கம்பாடிக்காரர்கள் தங்கள் ஊர் போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்தில் ஏதோ ஒரு காலத்தில் இருந்தாலும் தங்கள் ஊரின் பெயர் அழகான தமிழ்ப்பெயர் என்பதை நினைத்து பெருமை பட்டுக் கொள்ளலாம்.

#அப்துல்கையூம்

 

அரிவாள்மணை

நம் வீட்டில் பயன்படும் ஒரு சாதாரண ஆயுதம் அரிவாள்மணை என்பது. அரிவாள்மணையும் தேங்காய் திருக பயன்படும் திருகுமரமும் ஒன்று சேர்ந்து காணப்படும்.

ஆங்கிலத்தில் அரிவாள்மணைக்கு CUTTER என்றும் தேங்காய் திருகும் கருவிக்கு SCRAPPER என்றும் சொல்வார்கள்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல் நாம் அன்றாடம் பயன்படும் ஒரு சாதாரண கருவிக்கு தமிழில் எத்தனை எத்தனைப் பெயர்கள்?

தமிழின் சொல்வளத்திற்கு இது ஒன்றே சான்றாகும்.

அரிவாள் மணையின் (CUTTER) வேறு பெயர்கள்:

அரிமணை, அறுமணை, அரிவாள்மணை, அருவாமணை, அரிவாண்மணை, அருமாமணை, புள்ளம், கூர்வாயிரும்பு, மணைவாள்

[அரி என்றால் அரியப் பயன்படும் கருவி. வாள் என்றால் கத்தரிகை, மணை என்றால் அடிக்கட்டை பலகை, அரிவாள்மணை என்றால் அடிக்கட்டை பலகையில் இணைக்கப்பட்ட கூரிய வாள்]

திருகுப்பலகையின் (SCRAPPER) மற்ற பெயர்கள்:

திருகுமரம், திருகுப்பலகை, துருவுபலகை, திருவலை, தேங்காய்திருகி, தேங்காய்துருவுமணை, திருகுமணை, திருகரிவாள்மணை, திருவாமணை, துருவல்மணை

#அப்துல்கையூம்

தமிழ்ப்பெயர்கள் தாங்கிய ஊர்கள்

ஊர்களின் பெயர் மாற்ற நிகழ்வால் சில அழகான தமிழ்ப்பெயர்கள் தாங்கிய ஊர்கள் நமக்கு அறியக் கிடைத்தன

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஊர்
“நாயகனைப்பிரியாள்”
“அணில் குதிச்சான் பூவானிப்பட்டு”

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே
“சுள்ளெறும்பு”

திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில்
“நெற்குப்பை”

புதுச்சேரியில் இருந்து மைலம் செல்லும் வழியில்
“கண்ணியம்”.

தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்லும் வழியில்
“எப்பொதும் வென்றான்”

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே
“படந்தால்”

(பெரிய ஆலமரம் அவ்வூரில் இருந்ததாம். “படர்ந்த ஆல்” மருவி படந்தால் என்று ஆகிவிட்டது)

திருச்சி என்ற பெயர் எப்படி வந்தது?

திருச்சி என்ற பெயர் எப்படி வந்தது? பலருடைய மனதிலும் எழும் கேள்வி இது.

11-ஆம்நூற்றாண்டில் நத்தர்ஷா வலி என்ற இறைநேசர் அரேபியாவிலிருந்து இங்கு வந்து அடக்கம் ஆகி இருப்பதால் பள்ளிவாசல் என்ற பெயரில் உள்ள பள்ளி என்பது இப்பெயருடன் இணைந்திருக்கலாம் என்று கூட நான் நினைத்ததுண்டு. அப்படியிருக்க வாய்ப்பில்லை. நத்தர்ஷா வலியுல்லா என்ற ஆன்மீகப் பெரியவர் வாழ்ந்த காலம் 969 – 1039.

ஆனால் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவாரப் பாடலில் சிராப்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ அப்பாடல் :

//நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளே(று)
ஒன்றுடை யானை யுமையொரு பாகமுடையானைச்
சென்றடையாத திருவுடை யானை சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் னுள்ளங் குளிரும்மே.//

ஊரின் பெயர்க் காரணத்திற்கு கூறப்படும் மற்றொரு கதை இது :

இராவணனுக்கு பத்து தலை என்று கூறுகிறது புராணம். அதுபோல இராவணனுடைய மகன் திரிஷூருக்கு மூன்று தலையாம். அவன் இங்கு வந்துதான் சிவனை வேண்டி தவம் இருந்தானாம்.

திரி என்றால் மூன்று, சிரா என்றால் தலை. பள்ளி என்றால் தவம். திரி+சிரா+பள்ளி என்கிறார்கள்.

திரு அரங்க நாதன் அருகாமையில் பள்ளி கொண்டுள்ளதால் இப்பெயர் என்கிறார்கள் மற்றும் சிலர்.

ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.

பள்ளி என்ற சொல் சமண வழிபாட்டுடன் தொடர்புடையது என்பது தெளிவான கருத்து. சிரா எனும் சமணத்துறவி இங்கே வாழ்ந்தார் என்றும் அவர் அங்கு சமண மடம் வைத்திருந்தார் என்றும் கூறுகிறார்கள்.
அதுவே திரு + சிரா + பள்ளி என்றானது என்கிறார்கள். (திரு என்பது மரியாதைக்கான சொற்பதம்)

“சாப்பாடு போடப்படும்” என்று பெயர்ப்பலகையில் எழுதியிருந்ததை ஒரு வழிப்போக்கன் “சாப்பா – டுப்போ – டப்பா – டும்) என்று படித்தானாம்.

அதுபோல சம்பந்தமே இல்லாமல் திரு+சிரா+பள்ளியில் காணப்படும் “சி” என்ற எழுத்து திருவோடு ஒட்டிக்கொண்டு “ச்சி “ ஆகி, இந்த மலைக்கோட்டை மாநகர் “திருச்சி” என்று அலங்கோலமாகிவிட்டது.

#அப்துல்கையூம்

இரவு

எத்தனை முறை சொன்னாலும்
இரவுக்கு வராது புத்தி !
மதியாதார் வாசலை
மிதியாதே என்பது
இரவுக்குத் தெரியாதோ?
சூடு சொரணை சற்றும்
இல்லாமல் போனதோ?
ஆண்டாண்டு காலமாய்
அவமானப் பட்டாலும்
அதற்கு உரைக்காது போலும் !

ஒவ்வொரு நாளும்
இரவை விரட்டியடிக்கிறான் சூரியன்!
இருளைக் கிழித்துப் போடுகிறான்!
வெளிச்சத்தால் துரத்தி அடிக்கிறான் !
இருந்தும் ஒவ்வொரு நாளும்
திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப
எட்டிப் பார்க்கிறது
வெட்கங்கெட்ட இரவு.!!

#அப்துல்கையூம்

பீலா

 

இந்தப் பதிவுக்கும் பீலா ராஜேஷுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆதலால் முகநூல் நண்பர்கள் எக்குத்தப்பாக போட்டுக் கொடுத்து எடக்கு மடக்காக என்னை வம்பில் மாட்டிவிட வேண்டாம் என்று வேண்டா வெறுப்புடன் கடுப்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மெட்ராஸ் பாஷையில் “பீலா விடாதே” என்பது அன்றாட உரையாடலில் ஒரு பகுதி. “பீலா விடாதே” என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு குறியீட்டுச் சொற்கள் உள்ளன.

உடான்ஸ், பட்டா, புருடா, கப்ஸா, டூப்பு, ரீல் சுத்துறது, பிலிம் காட்டுறது, கதை விடுவது, அள்ளி விடுவது, என்று பல மாதிரியாகவும் சொல்வார்கள். சுருங்கச் சொன்னால் “பீலா விடாதே” என்றால் பொய்ச் சொல்லாதே என்று பொருள்.

யோ போயா
பீலா உடாதா
ஏய் வேணாம்
Reel-அ சுத்தாத

என்ற அனிருத் பாடல் “தானா சேர்ந்த கூட்டம்” என்ற படத்திலும் இடம் பெற்று “பீலா”வை பிரபலப்படுத்தி விட்டது.

“பில்டப் பண்றனோ பீலா விடுறனோ அது முக்கியமில்ல…நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப்பாக்கணும்” என்ற வடிவேலுவின் டயலாக் காட்சி என் கண்முன்னே வந்து போனது .

பீலா என்றால் இந்தியில் மஞ்சள் என்று பொருள். ஆபாசமாக எழுதும் பத்திரிக்கைகளை மஞ்சள் பத்திரிக்கை என்று சொல்வதுண்டு. அது ஏனென்றால் ஆங்கிலத்தில் YELLOW என்பதற்கு கீழ்த்தரமான, கோழைத்தனமான, நேர்மையற்ற, கேவலமான என்ற பொருளும் உண்டு.

இந்த பீலாவுக்கு நாம் சொல்லும் பீலாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பது இதிலிருந்து புரிகிறது.

பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை வெங்காயம் என்பதாகும். வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. அதனுள்ளே ஒன்றுமே இருக்காது. அதுபோல ஒருவர் அளவில்லாமல் அள்ளி விடும் பீலாவில் உண்மை ஏதும் இருக்காது என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டில் வந்திருக்குமோ என்பது என் கருத்து

PEEL என்றால் உரித்தல். இதிலிருந்து பீலா என்ற சொல் பிறந்திருக்கக்கூடும்.

நான் ஒன்றும் தமிழறிஞன் அல்ல. உத்தேசமான ஒரு அனுமானம்தான். தெரிந்தவர்கள் இந்த பீலாவுக்கு பீலா விடாமல் உண்மையான அர்த்த்த்தை சொல்லலாம்.

#அப்துல்கையூம்

அப்பா

பிள்ளைகளின் சம்பாத்தியத்தில்

காலாட்டிக்கொண்டே

சாப்பிடுகின்றேனாம் !

 

இந்தக் கால்களையே

கேட்டுப் பாருங்கள்

என் பிள்ளைகளின்

எதிர்காலத்திற்காக

எவ்வளவு நடையாய்

நடந்திருப்பேன் என்று

 

#அப்துல்கையூம்

appa

சொந்த நாட்டு அகதிகள்

சொந்த பந்தம் இருந்தும்
சொந்த நாட்டிலேயே
அகதிகள் ஆன விந்தை
 
இவர்கள்..
வயிற்றைக் குறைக்க
நடைபயிலும் மனிதர்கள் அல்ல !
வயிற்றை வளர்க்கச் சென்ற இடத்தில்
வாழ்வாதாரத்தை இழந்து
வழிதெரியாது விழிபிதுங்கி
நடையாய் நடக்கும்
நம் நாட்டு பிரஜைகள்
 
பாதம் கொப்புளிக்க
பயணப்படும் இவர்கள்
பாவப்பட்ட
பாரத புத்திரர்கள்
 
பணக்காரர்கள் வீட்டில்
பால் பாக்கெட் தீர்ந்தாலும்
பதட்டப்படும் அரசு ~ இவர்களின்
பாதத்தில் கசியும் குருதியைக் கண்டு
பரிதாபம் கொள்வது எப்போது?
 
#அப்துல்கையூம்123

புனித ரமலான்

பசித்திருந்து பொறுத்திருந்து
தனித்திருந்து விழித்திருந்து
பாவங்கள் போக்கும் மாதம்!

புசிக்காதோர் வலியறிந்து
மனமுவந்து அள்ளித்தந்து
பரம்பொருளை துதிக்கும் மாதம்!

ஐம்புலன்கள் தானடக்கி
அகமதனை தூய்மையாக்கி
அறச்செயல்கள் புரியும் மாதம்!

இறையோனின் மறைதன்னை
இதயத்தில் நினைவுறுத்தி
ஏற்றங்கள் பெரும் மாதம்!

#அப்துல்கையூம்

என் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

[பிறமொழி கவிதைகளை வாசிப்பதில் எனக்கு அலாதியான விருப்பம். அவைகளை படித்து இரசிக்கையில் அதை அவ்வப்பொது தமிழில் மொழி பெயர்த்து ‘டைரி’யில் நான் குறித்து வைப்பதுண்டு. அப்படி என்னால் மொழிபெயர்க்கப்பட்ட குட்டிக் குட்டி கவிதைகள் சில]

பதட்டப்படாதே நண்பா !
நீ என்னிடம் பகிர்ந்த பரம ரகசியம்
பத்திரமாக இருக்கிறது
என் பங்காளியிடம் !
—————————————————————————-
பொருள் வாங்கச் சென்ற நான்
வெறுங்கையோடு திரும்புகிறேன்
பணமிருக்கும் நேரத்தில் ஆசைவருவதில்லை
ஆசை வரும் நேரத்தில்
பணம் இருப்பதில்லை
—————————————————————————-
இவர்களுக்காக என் கண்களைக்கூட
தானம் செய்யத் தயாராக இருக்கிறேன்.
ஆனால் பாழாய்ப்போன மனிதர்கள் இவர்கள்…
என் கண்கள் காணும் கனவுகளை அல்லவா
கடனாகக் கேட்கிறார்கள் ?
—————————————————————————–
சோகத்தைக்கூட சிரித்தே நடித்து
மழுப்பி விடுகிறேன்
ஆனால் இந்த பாழாய்ப்போன கண்ணீர்தான்
எட்டிப்பார்த்து காட்டிக் கொடுத்து விடுகிறது
—————————————————————————–
எப்படி அது சாத்தியம் பெண்ணே ..?
“எப்படி இருக்கிறாய்” என நான்
விசாரிக்கும் போதெல்லாம்
“நன்றாக இருக்கிறேன்” என்கிறாய்.
நான் உன்னை பிரிந்திருக்கும் வேளையில்கூட
—————————————————————————–
வாய்த்திறந்து மொழிந்தால்தான்
அதன் பெயர் கவிதை எனில்
உன் மெளனத்தின் பெயர் என்னவாம்?
—————————————————————————–
சிலருக்கு என்னை பிடித்துபோய் விட்டது
அதுதான் சிலருக்கு
பிடிக்கவே மாட்டேங்குது
—————————————————————————–
கைரேகையின் கோடுகள்தான்
கண்ணில் தெரிகின்றன
தலையெழுத்தும் புரிந்தால்
எவ்வளவு நல்லதாக இருக்கும்?

மொழிபெயர்ப்பு : #அப்துல்கையூம்