கன்னா பின்னா விளக்கம்

மாப்பு

நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் நாகூர் ஒரு விசித்திரமான ஊர் என்று. வீடு தேடி வரும் பிச்சைக்காரர்களிடம் மன்னிப்பு கேட்பதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

எங்களூரில் யாசகம் கேட்டு வருபவர்களிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் வேறு சில ஊர்களிலும் இதுபோன்ற வழக்கம் இருக்கக் கூடும். நான் அறிந்திருக்கவில்லை. நான் பார்த்ததைத்தானே நான் எழுத முடியும்.

யாசகம் கேட்டு வருபவர்களுக்கு மனமுவந்து ஈந்திட வேண்டும். அப்படி நம்மிடம் கொடுக்க ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்கள் மனம் நோகாத வண்ணம் சொல்லி அனுப்ப வேண்டும். இதுதான் அதன் நோக்கம்.

இந்தி/உருது மொழியில் “மாஃப் கரோ” என்றால் “(எங்களை) மன்னியுங்கள்” என்று பொருள். “மாஃப்” என்ற உருதுமொழிச் சொல் நாளடைவில் “மாப்பு” என்று தமிழ் அகராதியிலும் ஏறிவிட்டது. “மாப்பு” என்றால் மன்னிப்பு.

நாகூர்லே பிச்சைக்காரர்கள் வந்து யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு கொடுக்க ஏதுமில்லை என்ற சூழ்நிலையில் “மாப்பு செய்யுங்க பாவா” என்பார்கள். பாவா என்ற வார்த்தை தந்தைக்குச் சமமான சொல்.

“ஒண்ணுமில்லே போயா”, “வேற வீடு பாருப்பா” என்று விரட்டுவதற்கு பதிலாக பண்பான முறையில் இப்படிச் சொல்வது பாராட்ட வேண்டிய ஒன்று

இதுபோன்ற எத்தனையோ உருது/ இந்தி வார்த்தைகள் தமிழோடு கலந்து தமிழ் வார்த்தையாகவே ஐக்கியமாகி விட்டன,

“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்றுரைக்கிறது தொல்காப்பியம்

தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும். சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தம். கெடுபிடி, கதி, சராசரி, சாமான், சீனி, சீட்டு இதெல்லாம் உருது மொழியிலிருந்து வந்ததுதான் என்று கூறினால் நம்மை ஒருமாதிரி பார்ப்பார்கள்.

(பிகு.: மாப்பு என்பதை மாப்பிள்ளை என்பதின் சுருக்கமாகவும் அழைக்கிறார்கள். உதாரணம்: வடிவேலுவின் வசனம் “மாப்பு…. வச்சிட்டாண்டா ஆப்பு”. எப்படி ரவி சாஸ்திரிக்கும் லால் பகதூர் சாஸ்திரிக்கும் சம்பந்தமில்லையோ. எப்படி ரவீந்திரநாத் தாகூருக்கும் ஷர்மிளா தாகூருக்கும் சம்பந்தமில்லையோ அது போல இந்த “மாப்பு”க்கும் நான் சொல்லும் ‘மாப்பு’க்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது)

#அப்துல்கையூம்

Image may contain: 1 person, text that says "oneindia tamu மாப்பு.. வச்சிட்டாண்டா ஆப்பு..!"

பூச்சாண்டி =

“இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் நம்மக்கிட்ட வச்சுக்காதே” என்ற சொல்லாடலை நாம் கேட்டிருப்போம். என் ஆத்ம நண்பரும் இயக்குனருமான ‘அசத்தப்போவது யாரு’ ராஜ்குமார் “வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே” பாடலை கலைஞர்களை ஆட வைத்து பிரபலப்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் நம் மனதில் பசுமையாக இருக்கிறது.

பூச்சாண்டி என்றால் என்ன? குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தால் நம்ம தாய்மார்கள் சொல்வது “ஒழுங்கா சாப்பிடலேன்னா பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்” . குழந்தைகளைப் பொறுத்தவரை பூச்சாண்டி என்றால் கோரமான முகம் கொண்ட பயங்கரமான உருவம்.

எங்க ஊரு பக்கம் பூச்சாண்டிக்கு பதிலாக “மாக்கான்“ என்று சொல்லி பயமுறுத்துவார்கள். மாக்கான் என்றால் மடையன் என்ற பொருளிலும் சொல்வதுண்டு. மலாய் மூல மொழியிலிருந்து “மாக்கான்” என்ற சொல்லை கடன்வாங்கி “சோத்துமுட்டி” என்ற பொருளில் பயன்படுத்துகிறார்களோ என்றுகூட நான் நினைத்ததுண்டு. வயிறு முட்ட சாப்பிட்டு, சட்டையும் அணியாமல் தொந்தி தள்ளிக் கொண்டு வருகிறவனைப் பார்த்தால் குழந்தைகளுக்கு சற்று பயமாகத்தானே இருக்கும்?

வெள்ளைக்காரன் குழந்தைகளுக்கு “Twinklie, Twinkle, Little Star. How I wonder what you are” என்று கற்றுக் கொடுக்குறான். அதனால் அவன் குழந்தைகள் சந்திரனுக்கு போகுதுங்க, விண்வெளி ஆராய்ச்சி பண்ணுதுங்க.

நாம என்னடான்னா “பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்” என்று சொல்லி பிஞ்சு மனதிலேயே பயத்தை விதைக்கிறோம். அக்குழந்தை வளர்ந்து பெரியவனானால் தெனாலி கமல்ஹாசன் போல்தானே வரும்?

இதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

//வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!//

என்று பாடி வைத்துவிட்டு போனான். சங்க காலத்திற்கு பிறகு வந்த 3,4,மற்றும் 5-ஆம் நூற்றாண்டை இருண்டகாலம் என்று சொல்கிறார்கள். சமணம் புத்தமதம் மேலோங்கி இருந்த காலம் அது. சைவம் வைணவம் மீது அடக்குமுறை ஏவி விட்ட காலம் அது. அப்போது விபூதி பூசி வெளியே உலாவுவது தடுக்கப்பட்டிருந்த காலம். அரசரால் தண்டனைக்குள்ளாவார்கள். கர்னாடக (மைசூர்) ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் தங்கள் செல்வாக்கை செலுத்தினார்கள். அன்றைய காலத்தில் சைவ வழிபாட்டாளர்கள் குறிப்பாக சிவனை வழிபாடும் சாதுக்கள்/ ஆண்டிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டி கோவணம் மட்டும் அணிந்து வெற்று மேனியில் விபூதிகள் பூசியவாறு வீதியில் உலா வந்தனர். சமண ஆட்சியாளர்களின் சட்டத்துக்கு அவர்கள் கட்டுப்பட தயாராக இல்லை.. அவர்களைப் பார்த்து மக்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். அரசரின் ஆட்கள் பார்த்துவிட்டால் தாங்களும் தண்டனைக்கு உள்ளாகி விடுமோ என்ற பயத்தில். (இது திரு R.B.V.S. மணியன் சொற்பொழிவிலிருந்து கேட்டது)

#அப்துல்கையூம்

GAP

இன்று GAP என்ற புகழ்ப்பெற்ற Branded Store-க்கு சட்டை எடுக்கச் சென்றேன். இதுவும் GAP பற்றிய பதிவுதான், கேப் என்பது வேறு. கேப்மாரி என்பது வேறு, Just for your information. அந்தக் காலத்திலேயே எதுக்கு எவ்வளவு கேப் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள்.

இடைவெளியைப் பற்றி நம் அரசாங்கமும் ஒரு காலத்தில் மிகவும் கவலைப்பட்டது. இரண்டு குழந்தைகளுக்கிடையே போதுமான இடைவெளி வேண்டும் என பரவலாக விளம்பரம் செய்தார்கள்.

டார்ஜான் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். நீண்ட நெடிய மரத்தில் தொங்கிக் கொண்டே தாவித் தாவி காடு முழுவதையும் கடந்து விடுவான் டார்ஜான்.

ஒரு தென்னை மரத்தை நடுகையில் ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் எவ்வளவு GAP (இடைவெளி) விட வேண்டும் என்ற நுணுக்கத்தை நம் முன்னோர்கள் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள். எத்தனை சென்டி மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்று வேண்டுமானால் அவர்களுக்கு சொல்லத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதை அழகாக அவர்களுக்கு சொல்லத் தெரிந்திருந்தது. கவித்துவமாக எடுத்துரைக்க கற்றிருந்தார்கள்.

ஒரு தென்னை மரத்திற்கும் மற்றொரு தென்னை மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் தெரியுமா? அணில் தாவா இடைவெளி விட வேண்டுமாம். அதாவது ஒரு தென்னை மரத்திற்கும் மற்றொரு தென்னை மரத்திற்கும் அணில் தாவ முடியாத அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும் என்பது அவர்கள் வகுத்த நியதி.

ஆயிரம் தென்னைமரம் வைத்திருக்கும் ஒரு விவசாயியின் சொத்தானது ஐந்து மன்னர்களின் சொத்துக்குச் சமம் என்பார்கள்

‘நண்டு ஓட நெல் நடணும்;
நரி ஓட கரும்பு நடணும்;
வண்டி ஓட வாழை நடணும்;
தேர் ஓட தென்னை நடணும்’

நாற்று நடுகையில் நண்டு புகுந்து ஓடும் அளவுக்கு GAP தேவையாம். கரும்பு நடுகையில் நடுவில் நரி புகுந்து ஓடும் அளவுக்கு GAP வேண்டுமாம். வாழைமரம் நடுகையில் நடுவில் மாட்டு வண்டி உருண்டோடும் அளவுக்கு GAP இருக்க வேண்டுமாம். கடைசியில் தென்னை. இரண்டு தென்னைகளுக்கும் இடையில் ஒரு தேரே ஓடும் அளவுக்கு GAP வேண்டுமாம்.

அடேங்கப்பா !! அப்படியென்றால் ஆயிரம் தென்னை நடுமளவுக்கு வசதி படைத்த விவசாயியின் நிலத்தின் பரப்பளவு எத்தனை ஏக்கர் இருக்கும் என்று நீங்களே கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

எப்படியோ கிடைத்த கேப்பில் ஒரு நல்ல செய்தியைச் சொல்லியாச்சு. இதுக்குப்பேருதான் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது என்பதோ?

#அப்துல்கையூம்

 

No photo description available.

ரவிக்கை

நகரத்து பெண்கள் யாருமே ரவிக்கை அணிவதில்லை. அவர்கள் ப்ளவுஸ்தான் அணிகிறார்கள். அல்லது ஜாக்கெட் அணிகிறார்கள்.

ரவிக்கை என்பது கிராமத்துப் பெண்கள் அணியும் மார்புச் சட்டை என்பதாகவும், நகரத்து நாகரிகப் பெண்மணிகள் அணியும் மேல் சட்டையை ப்ளவுஸ் என்று அழைப்பதும் எழுதப்படாத சட்டமாகி விட்டது.

ரவிக்கை என்று சொல்வதை பெண்கள் கர்நாடகத்தனமாக அல்லது பட்டிக்காட்டுத்தனமாக நினைக்கிறார்கள்.

கடைகளில் கூட “இங்கு மேட்சிங் ப்ளவுஸ் கிடைக்கும்” என்று ஸ்டைலாக ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி எழுதியிருப்பார்களேத் தவிர “இங்கு பொருத்தமான வண்ணத்தில் இரவிக்கை கிடைக்கும்” என யாரும் எழுதி வைப்பதில்லை.

“ரோசாப்பு ரவிக்கைக்காரி” என்ற பெயரில் தேவராஜ் மோகன் இயக்கிய திரைப்படம் கிராமத்துச் சூழ்நிலையில் எடுக்கப்பட்டதாகும். ஒருக்கால் இது பட்டணத்துக் கதையாக இருந்திருந்தால் இப்படத்தின் பெயர் “பிங்க் ப்ளவுஸ்காரி” என்று வைத்திருப்பார்களோ என்னவோ.

ரவிக்கை என்பது தமிழ்ச் சொல்லா? ரகரத்தில் தொடங்கும் சொல் எப்படி தமிழ்ச் சொல்லாக இருக்க முடியும்?. அதனால்தானே ராமன் என்ற பெயரைக்கூட இராமன் என்றே எழுதுகிறோம்? அதனால்தானே ரவிக்கை என்று எழுதுவதற்கு பதிலாக இரவிக்கை என்றே எழுதுகிறோம்?.

ஆராய்ந்துப் பார்த்ததில் இரவிக்கை என்பது தூயதமிழ் சொல் என்றே அறிகிறோம்.

இரவிக்கைக்கு இரண்டு பக்கமும் கை இருக்கும், இறுக்கமான உடை அது.. இரு கை கொண்ட அந்த உடைய அவிழ்ப்பதற்கும், அணிவதற்கும் இலகுவாக பட்டன் அல்லது ஊக்கு பொருத்தப்பட்டிருக்கும்.

இரு + அவிழ் + கை என்ற கூட்டுச் சொற்கள் இரவிழ்க்கை என்றாகி நாளடைவில் ழகர ஒற்று பரிதாபமாக இழந்து இரவிக்கை என்றாகி விட்டது.

இனிமேலாவது BLOUSE CENTRE என்று பெயர்ப்பலகை வைப்பதற்கு பதிலாக “இரவிழ்க்கை மையம்” என்று பெயர் வைக்கிறார்களா என்று பார்ப்போம். கமலஹாசன் கடை திறந்தால் “இரவிழ்க்கை மய்யம்” என்று பெயர் வைக்கக்கூடும்.

ப்ளவுஸ்களில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று கணக்கெடுத்தால் இந்தப் பதிவு நீண்டுக்கொண்டே போகும்.. வாணிஸ்ரீ ப்ளவுஸ், குஷ்பு ப்ளவுஸ், பஃப் வைத்த தீபா ப்ளவுஸ், கண்ணாடி வைத்த ப்ளவுஸ், திருடா திருடி ப்ளவுஸ், முடிச்சு வைத்த ப்ளவுஸ், ஜன்னல் வைத்த ப்ளவுஸ், ஏன் வாசற்கதவே வைத்த ப்ளவுஸ் என்று எழுதிக்கொண்டே போகலாம். முகநூல் நண்பிகளின் சாபத்தையும் வாங்கிக் கொட்டிக் கொள்ளலாம்.

இந்த ப்ளவுஸ் மேட்டர் எல்லாம் உங்களுக்கு எப்படி இவ்வளவு விவரமாகத் தெரியும் என்று கேட்டு தயவுசெய்து என்னை வம்பில் மாட்டி விட்டு விடாதீர்கள். எல்லாம் ஒரு கேள்வி ஞானம்தான் சார்..

#அப்துல்கையூம்

பீலா

 

இந்தப் பதிவுக்கும் பீலா ராஜேஷுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆதலால் முகநூல் நண்பர்கள் எக்குத்தப்பாக போட்டுக் கொடுத்து எடக்கு மடக்காக என்னை வம்பில் மாட்டிவிட வேண்டாம் என்று வேண்டா வெறுப்புடன் கடுப்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மெட்ராஸ் பாஷையில் “பீலா விடாதே” என்பது அன்றாட உரையாடலில் ஒரு பகுதி. “பீலா விடாதே” என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு குறியீட்டுச் சொற்கள் உள்ளன.

உடான்ஸ், பட்டா, புருடா, கப்ஸா, டூப்பு, ரீல் சுத்துறது, பிலிம் காட்டுறது, கதை விடுவது, அள்ளி விடுவது, என்று பல மாதிரியாகவும் சொல்வார்கள். சுருங்கச் சொன்னால் “பீலா விடாதே” என்றால் பொய்ச் சொல்லாதே என்று பொருள்.

யோ போயா
பீலா உடாதா
ஏய் வேணாம்
Reel-அ சுத்தாத

என்ற அனிருத் பாடல் “தானா சேர்ந்த கூட்டம்” என்ற படத்திலும் இடம் பெற்று “பீலா”வை பிரபலப்படுத்தி விட்டது.

“பில்டப் பண்றனோ பீலா விடுறனோ அது முக்கியமில்ல…நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப்பாக்கணும்” என்ற வடிவேலுவின் டயலாக் காட்சி என் கண்முன்னே வந்து போனது .

பீலா என்றால் இந்தியில் மஞ்சள் என்று பொருள். ஆபாசமாக எழுதும் பத்திரிக்கைகளை மஞ்சள் பத்திரிக்கை என்று சொல்வதுண்டு. அது ஏனென்றால் ஆங்கிலத்தில் YELLOW என்பதற்கு கீழ்த்தரமான, கோழைத்தனமான, நேர்மையற்ற, கேவலமான என்ற பொருளும் உண்டு.

இந்த பீலாவுக்கு நாம் சொல்லும் பீலாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பது இதிலிருந்து புரிகிறது.

பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை வெங்காயம் என்பதாகும். வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. அதனுள்ளே ஒன்றுமே இருக்காது. அதுபோல ஒருவர் அளவில்லாமல் அள்ளி விடும் பீலாவில் உண்மை ஏதும் இருக்காது என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டில் வந்திருக்குமோ என்பது என் கருத்து

PEEL என்றால் உரித்தல். இதிலிருந்து பீலா என்ற சொல் பிறந்திருக்கக்கூடும்.

நான் ஒன்றும் தமிழறிஞன் அல்ல. உத்தேசமான ஒரு அனுமானம்தான். தெரிந்தவர்கள் இந்த பீலாவுக்கு பீலா விடாமல் உண்மையான அர்த்த்த்தை சொல்லலாம்.

#அப்துல்கையூம்

உப்புமா

upma

உலகத்திலேயே உப்புமாவுக்குத்தான் சத்ருகள் அதிகம். பவர் ஸ்டாருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதைப்போல உப்புமாவுக்கும் ஒரு சில சில மித்ருகள் – அதாவது அதிதீவிர ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உப்புமா ஆர்வலர்களுடன் இணைந்து “உப்புமா ரசிகர் மன்றம்” என அவர் தனியாக தொடங்கவும் வாய்ப்பிருக்கிறது.

உப்பு + மாவு – இதன் கலவையே உப்புமா ஆகும். கன்னடத்தில் `உப்பிட்டு’, எனவும், தெலுங்கில் `உப்பிண்டி’எனவும், மலையாளத்தில் `உப்புமாவு’எனவும், மராத்தியில் `உப்பீட்’ எனவும் பாவப்பட்ட பயனாளிகளை படுபயங்கரமாக பயமுறுத்தும் பண்டம்தான் இந்த உப்புமா.

உப்புமா பதிவர், உப்புமா பேச்சாளர், உப்புமா கம்பேனி என்றெல்லாம் அடைமொழி வழங்கி உப்புமாவுக்கு மரணபங்கம் ஏற்படுத்துவதற்காகவே ஒரு சிலர் இரவும் பகலுமாக சதித்திட்டம் தீட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உலகத்திலேயே எந்த பண்டத்திற்கு அதிகமான ஜோக் எழுதப்பட்டிருக்கிறது என்று கேட்டால் அது உப்புமாவாகத்தான் இருக்க வாய்ப்புள்ளது. “உப்புமா மீது இப்படியொரு கொலைவெறி மிகவும் தப்புமா” என்று அறிவுரை வழங்க சுதர்சனம் போன்றவர்கள் தயாராகவே இல்லை என்பதுதான் நிதர்சனம். (யாரந்த சுதர்சனம்? என்று கேட்காதீர்கள். ஒரு ரைமிங் வேண்டாமா அதற்குத்தான்)

ஆங்கிலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஃபோபியாக்கள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் உப்புமா ஃபோபியா என்று இதுவரை பட்டியலில் ஏறவில்லை. இவ்விஷயத்தில் விக்கிப்பீடியாகாரன் விடாப்பிடியாக இருக்கிறான் போலும்.

என் பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் எங்களிடம் கடிவினா கேட்பார். “உப்புமாவு ஊசிப் போச்சு – இதை ஆங்கிலத்தில் சொல்லு” என்பார். நாங்கள் பேந்த பேந்த முழிப்போம். பிறகு அவரே “SALT FLOUR NEEDLE GONE” என்று புதிரையும் அவிழ்த்துவிட்டு ஹா..ஹா.. ஹா என சிரிப்பார். அந்தக்காலத்தில் இந்த படுமொக்கை ஜோக்கை கேட்டுவிட்டு நாங்களும் பரிதாபமாய் விழுந்து விழுந்து சிரிப்போம்.

இப்போதெல்லாம் இணையத்தை மேய்ந்தாலே ஒரே உப்புமா கடிஜோக்ஸ்தான். ரூம் போட்டு அல்ல பங்களா போட்டு யோசித்து எழுதுகிறார்கள்.

மனைவி: ஏங்க இன்னிக்கு டிபன் மேகி பண்ணட்டுமா?

கணவன்: ஐய்யய்யோ வேணாம்மா… மேகி ரொம்ப டேஞ்சர்னு சொல்றாங்க… நீ பேப்பர் படிக்கிறதே இல்லையா ?

மனைவி: அப்ப உப்புமா பண்ணட்டுமாங்க ?

கணவர்: பரவாயில்லை டார்லிங். மேகியே பண்ணிடு.போற உசிரு எதுல போனா என்ன.?

இப்படியெல்லாம் உப்புமாவை கலாய்ச்சு எடுக்கிறார்கள். R.I.P.

“ஒன்பதுலயும் சனி உச்சம் பெற்ற ஒருவருக்குத்தான் கோயிலுக்குப் போனாலும் பிரசாதமாக உப்புமாவை கடவுள் தருவார்” என்றெல்லாம் வேறு QUOTE OF THE DAY எனக்கு அனுப்புகிறார்கள்.

பிச்சைக்கரன்: சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு தாயி…

பெண்மணி; இருப்பா உப்புமா எடுத்துட்டு வரேன்..

பிச்சைக்காரன் : உங்களுக்கு சிரமம் வேணா தாயி.. மூணாவது நாளா நான் பட்டினி கிடந்துட்டுப்போறேன்…

உப்புமாவுக்கு மட்டும் வாயிருந்தால் “வேணாம்… நான் அழுதுடுவேன்” என்ற வடிவேலுவின் பன்ச் டயலாக்கை திருவாய் மலர்ந்தருளும்.

எனக்குப் புரியாத புதிர் இது. எப்படி உப்புமாவுக்கு மாத்திரம் இத்தனை HATE MONGERS இந்த பூமிப்பந்திலிருந்து புறப்பட்டார்கள் என்று. அப்படியென்றால் எந்த அளவுக்கு அவர்களை இந்த உப்புமா சத்தியசோதனை செய்திருக்கிறது என்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது.

ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் திடீர் விருந்தாளிகள் படையெடுத்து வரும்போது கைகொடுத்து காப்பாற்றுவது இந்த FAST FOOD தான். Instant உணவாக மேகியை கண்டுபிடிப்பதற்கு முன்னரே உப்புமாவைக் கண்டுபிடித்தவன் தமிழன், (அதுக்காக நீ உண்மையான தமிழனாக இருந்தால் உடனே இதனை ஷேர் பண்ணு என்றெல்லாம் கூறி உங்களை படுத்த மாட்டேன்)

சிலசமயம் என் வீட்டில் காலைச் சிற்றுண்டியின்போது குசினியிலிருந்து கடுகு தாளிக்கும் சத்தம் வந்தாலே எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் “செத்தாண்டா சேகர்” என்று. அந்த சேகர் எஸ்.வி.சேகர் அல்ல. சாட்சாத் நானேதான்

என் டெலிபதி உணர்த்தியது போலவே என் மனைவி உப்புமாவை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு “ஜீனி போடாதீங்க. உங்களுக்கு சுகர் இருக்கு . அப்படியே சாப்பிடுங்க’ என்று எச்சரிக்கை வேறு கொடுப்பார்.. இதைக் கேட்டுவிட்டு நான் புன்னகைப்பேன். வேறு வழி? வள்ளுவர் பெருமான் சொல்லியிருக்காரே “துன்பம் வரும் வேளையிலே சிரிங்க” என்று.

உப்புமா என்றாலே பெரும்பான்மை மக்களுக்கு பேதி, பீதி எல்லாமே வந்துவிடும். என் நண்பர் ரவிச்சந்திரன் போன்ற உப்புமா பிரியர்களுக்கு அன்றலர்ந்த தாமரைபோல் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசிக்கும்.

என்னைபோன்ற ஹாஸ்டலில் படித்தவர்களுக்குத்தான் அந்தக் கொடுமையின் உண்மையான வலி புரியும்.

#அப்துல்கையூம்

சாம்பார்

இட்லிக்கு பதிவு போட்டுவிட்டு சாம்பாருக்கு பதிவு போடாவிட்டால் அது இட்லிக்கு செய்யும் மாபெரும் துரோகம். உண்ட இட்லிக்கு ரெண்டகம் நினைக்கக்கூடாது.

Matches are made in Heaven என்கிறார்கள். புரோட்டாவுக்கு குருமா, பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா, இடியாப்பத்திற்கு பாயா, தயிர் சாதத்திற்கு பட்டை ஊறுகாய், உப்புமாவுக்கு ஜீனி – இப்படியாக ஒவ்வொன்றுக்கும் மேட்சிங் கண்டுபிடித்த அந்த ‘மெட்ரிமோனியல் மேட்ச் மேக்கர்’ யாரென்று நமக்குத் தெரியவில்லை.

குஷ்புக்கு எப்படி சி.சுந்தர் மேட்சிங்கோ அதுபோல குஷ்பு இட்லிக்கு சாம்பார் மேட்சிங் என்ற உண்மை தமிழ்க்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல இங்கிலீஷ் கூறும் இவ்வுலகமும் ஏகத்துக்கும் அறிந்த செய்தியே.

“எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான். !… அங்கே வேலை கிடைக்குது; கூலி கிடைக்குது; இட்லி சாம்பார், சாப்பாடு எல்லாம் கிடைக்குது…, வேறென்ன வேணும் உனக்கு” என்று எம்.ஆர்.ராதா தன் சிறைவாச அனுபவத்தைச் சுவையாகச் சாம்பாருடன் சேர்த்துச் சொன்ன நிகழ்வுதான் என் மூளைக்குள் இருந்த CEREBRUM பகுதியில் சட்டென்று உதித்தது.

கண்ணதாசன் “மஞ்சள் முகமே வருக! மங்கள விளக்கே வருக!” என பாடுவார். அது அவருடைய பார்வை. எம்.ஆர்.ராதாவின் பார்வை வேறு “சாம்பாருக்கு போடுற மஞ்சளை மூஞ்சியிலே பூசிக்கிட்டு வந்து நிக்குறே?” என்ற ரத்தக்கண்ணீர் சாம்பார் வசனத்தை மறக்கத்தான் முடியுமா?

பட்டப்பெயர் வைப்பதில் நம்மை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஜெமினி கணேசன் சினிமா திரையில் தோன்றும்போது யாராவது ஒருத்தர் “சாம்பார்” என்று கூட்டத்தில் ஹை டெசிபளில் அநாயசமாக கத்துவார். சிறுவயதில் கீற்றுக் கொட்டகையில் படம் பார்க்கும்போது இதை நான் அனுபவித்திருக்கிறேன்.

“எனக்கு இட்லி சாம்பார் ரொம்பவும் பிடிக்கும்” என்று எதோ ஒரு பேட்டியில் ஜெமினி எதார்த்தமாக சொல்லப்போக நம்மாளுங்க அதையே அவருக்கு “சாம்பார்” என்று பட்டப்பெயர் வைத்து விமோசனம் அடைந்து விட்டார்கள். அதையெல்லாம் ஜெமினி மிகவும் Sportive ஆகவே எடுத்துக் கொண்டார். டி.ராஜேந்தருக்கு “டண்டணக்கா டணக்குணக்கா” என்று சொல்லும்போது கோவம் பொத்துக்கொண்டு வருவதுபோல் அவர் எந்த நேரத்திலும் ஆத்திரப்பட்டதில்லை.

(இதை எழுதும்போது இன்னொன்றும் என் ஞாபகத்திற்கு வந்தது, ஒரு காலத்தில் ஜெமினி ஸ்டூடியோவின் ஓனர் ஜெமினி கணேசன் என்றும் ஏ.வி.எம். ஸ்டூடியோவின் அதிபர் ஏ.வி.எம்.ராஜன் என்றும் நான் வெள்ளந்தியாக நம்பியதுண்டு)

“சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது மராத்தியர்கள்தான்” என பிரபல சமையல் கலை நிபுணர் குணால் கபூர் என்பவர் உடான்ஸ் விட அந்த எழவையும் நம்மவர்களும் சீரியஸாக நம்பித் தொலைத்து அவரவர் பங்குக்கு மனதில் தோன்றிய கற்பனைக்கு ஏற்றவாறு ‘தீஸீஸ்’ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குணால் கபூர் என்பவர் மராத்திய சிவாஜி பிரியர்கள் பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேயின் சிஷ்ய கோடியோ என்னவோ?

உடுப்பிகாரர்களை கேட்டால் நாங்கள்தான் சாம்பாரின் பிதாமகன்கள் என்கிறார்கள். இனிக்கும் சாம்பாரில் தோய்ந்த அந்த ஊறிய இட்லியும் உன்னத சுவைதான் மறுப்பதற்கில்லை

1530 C.E. தமிழக கல்வெட்டிலேயே சாம்பரம் என்ற சொற்பதம் காணப்படுகிறது. .அதாவது “அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக” என்று கல்வெட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதை K.T.ஆச்சார்யா என்ற ஆய்வாளர் மேற்கண்ட ஆதாரத்துடன் தெளிவாக எடுத்தியம்பி இருக்கிறார்.

(ஆதாரம் : South Indian Inscriptions, IV, 503, 1530 CE, Srirangam Temple, East Wall, Second Prakara, a Nayak Era Gift to Sri Ranga Natha)

“கறியமுது பல சம்பாரம்” என்றால் பல காய்கறிகளை கொண்டு உணவு படைத்தல்” என்று பொருள்.

“நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக” என்றால் நெய் சேர்ந்த உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்று பொருள்.

தமிழில் சாம்பு என்றால் ‘குறைத்தல்’ அல்லது ‘அரைத்தல்’ என்று பொருள். அரைத்த தேங்காய் அல்லது அரைத்த தானியங்கள் என்பதை குறியீட்டாகச் சொல்கிறது.

இந்த வாட்ஸப் நவீனயுலகில் துப்பறியும் சாம்புதான் சாம்பாரைக் கண்டுபிடித்தார். சாம்புதான் பின்னர் சாம்பாராக மருவியது என்று நான் புதிதாக ஒரு புரளியைக் கிளப்பி விட்டாலும் எல்லோரும் நம்பி விடுவார்கள்.

குணால் கபூர் சொல்லும் டணால் கதை இதுதான்:.

மராத்திய மன்னர் சாம்பாஜி ஒருநாள் அவரது சமையற்காரர் வேலைக்கு வராமல் ‘கட்’ அடித்தபோது அவரே குசியாக குசினிக்குச் சென்று சமைக்க முற்பட்டாராம். Dhal Curry செய்வதற்காக சென்றபோது ஏதோ ஞாபகத்தில் புளியையும் தண்ணீரையும் கலந்து விட்டாராம். கடைசியில் பார்த்தால் அது ஒரு சுவையான திரவமாக உருவெடுத்து விட்டதாம். உடனே சாம்பாஜி என்ற அவரது பெயரால் அதை சாம்பார் என்று பெயர் வைத்து விட்டார்களாம்.

இதற்கு என்னப்பா ஆதாரம் என்று கேட்டால், 17-ஆம் நூற்றாண்டில் சாம்பார் தொடர்பாக எழுதப்பட்ட “போஜன குதூகலம்” மற்றும் “சரபேந்திர பாஸ்திரம்” என்ற இரண்டு நூல்கள் இதற்கு ஆதாரம் என்கிறார்கள்.

யோவ்.. குணாலு யார்கிட்டேயா கதை விடுறே?

இன்னும் கொஞ்சம் விட்டா சர்பத்தை கண்டுபிடிச்சது சரபோஜி, வெங்காயத்தை கண்டுபிடிச்சது வெங்கோஜி என்று நம்மக்கிட்டேயே ரீல் சுத்துவே போலிருக்கே?

நல்லவேளை இட்லியைக் கண்டுபிடித்தது இட்லர் என்று சொல்லாதவரை சந்தோஷம்தான் குணாலு.

இன்னும் வேறு யாராவது சாம்பாரைக் கண்டுபிடித்தது சாம்பல் பள்ளத்தாக்கில் இருந்த பூலான் தேவிதான். அவர் பெயரில் உள்ள சாம்பல் என்ற சொல்தான் சாம்பார் ஆகியது என்று அறிக்கை விட்டாலும் விடலாம். அதற்கு முன்பு நாம் ஜூட் விடலாம்.

#அப்துல்கையூம்

தோசை


தோசை என்ற பெயர் ஏன் வந்தது?

வடநாட்டவர் ஒருவர் சொன்ன கதை இது. தோசைக்கல்லில் மாவை ஊற்றியதும் “சை” என்று ஒரு சப்தம் வருமல்லவா?. இந்தியில் சொன்னா அது “ஏக்… சை”. இரண்டாவது முறை அதை சட்டுவத்தால் திருப்பிப் போடும்போது மற்றொரு சவுண்டு “சை” என்று வரும். அது “தோ.. சை” (அதாவது இரண்டுமுறை “சை” என்ற சப்தம்). அதனால்தான் தோசை என்ற பெயர் வந்ததாம்.

இப்படித்தான் ஒரு கதையை அவிழ்த்துவிட்டு என் காதில் அவர் பூ சுற்றினார். இந்தக் கதையை சொல்வதற்கு குறிப்பாக என்னை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குப் புரியவில்லை. என்னைப் பார்த்தால் தொட்டபெட்டா மலையிலிருந்து போர்வை போர்த்திக்கொண்டு வந்தவன் போல தெரிந்ததோ என்னவோ?

தமிழர்களாகிய நமக்கு அம்ரீஷ்பூரி அதாவது வில்லன் யார் என்று சொன்னால் இந்த உடுப்பிகாரர்கள்தான். இந்த உடுப்பிகாரர்களால்தான் நான் செம கடுப்பில் இருக்கிறேன். ஏன் கேக்குறீங்க.? இந்த தோசையைக் கண்டுபிடித்த கலீலியோவும் அவிங்கதானாம். சாம்பாரைக் கண்டுபிடித்த கொலம்பஸும் அவிங்கதானாம், இது டூ மச் மாத்திரமல்ல. த்ரீ மச்-ங்குறேன்

மோஸஸை முஸ்லீம்கள் மூஸா என்று அழைப்பது போல் தோசையை வடநாட்டவர் தோஸா என்று செல்லமாக அழைக்கிறார்கள். காசா பணமா? எப்படியாவது அழைச்சிட்டு போகட்டும்,

ஒருமுறை சிம்லாவில் இந்தியன் காஃபி ஹவுஸுக்கு சிற்றுண்டி அருந்த நான் சென்றபோது கூட்டம் கூட்டமாக தோசையை விரும்பிச் சாப்பிட வந்தவர்கள் பெரும்பாலும் வடநாட்டவர். அந்த ஓட்டலில் வரிசையாக புகைப்படங்கள் மாட்டி வைத்திருந்தனர். ஜவகர்லால் நேரு, முஹம்மது அலி ஜின்னா, லால் பகதூர் சாஸ்திரி என அனைத்து பிரபலங்களின் புகைப்படங்களையும் மாட்டியிருந்ததைக் காண முடிந்தது.

டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள ஹல்திராம் உணவகத்திற்கு சென்று பார்த்தாலும் தோசை சாப்பிட வரும் வடநாட்டவர் ஏராளம். குறிப்பாக சர்தார்ஜீக்களை நாம் பெருமளவில் காண முடிகிறது, எத்தனை நாட்களுக்கு பாவம் அவர்கள் வெறுமனே சப்பாத்தியையும் பருப்பையும் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்?

ஒரு தடவையாவது திருச்சி திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் ஹோட்டலுக்குச் சென்று நெய்தொசை சாப்பிட வேண்டும் என்ற ஆசை என் மனதுக்குள் கருவேப்பிலையாய் மிதக்கிறது. ட்ராஃப்கோ ஸ்ரீதர் (Sridhar Trafco) பரிந்துரை செய்தால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கத்தான் செய்யும்.

சுருங்கச் சொன்னால் தோசை என்பது கமல் மாதிரி. மாவு ஒன்றுதான் ஆனால் அது தசாவதாரம் எடுக்கும் வல்லமை படைத்தது.. ஒரு பக்கம் வார்த்து எடுத்தால் அது தோசை. கொஞ்சம் மொத்தமாக ஊற்றி இரண்டு பக்கமும் வார்த்து எடுத்தால் அது ‘வீட்டு தோசை’. அதையே கொஞ்சம் சிறிதாக இரண்டாக வார்த்தால் அது ‘செட் தோசை’. தடிமனாக ஊற்றினால் அது “ஊத்தாப்பம்’. தோசையை மெலிதாக்கி சற்று பெரிதாக போட்டால் அது ‘ரோஸ்ட்’. இன்னும் சற்று மெலிதாக்கி இன்னும் பெரிதாக வார்த்தால் அது ‘பேப்பர் ரோஸ்ட்’. இன்னும் ஒரு படி மேலே போயி வெங்காயம் போட்டால் அது வெங்காய தோசை. பொடி போட்டால் அது பொடி தோசை. மசாலா போட்டால் அது மசாலா தோசை. இப்படியாக தோசை மாவு பல ரூபத்தில் அவதாரம் எடுக்கும்.

DOSA PLAZA தங்களிடம் 104 வகையான தோசை வகைகள் உள்ளதாக விளம்பரப்படுத்துகிறார்கள்.

தமிழர்களின் பிரதான உணவான தோசைக்கு 1200 ஆண்டுகால ஜாம் ஜாம் வரலாறு உண்டு என்பதை இந்த உடுப்பீஸ் அறிந்திருக்க வாய்ப்பில்லை ராஜா.

தோய் செய் என்ற சொல்லாடல்தான் தோசை ஆனது.

தோய் – அதாவது தோய வைத்து (புளிக்கவைத்து) செய்வதால் தோய் + செய் என்ற பெயர் வந்ததாம். இதை நான் சொல்லவில்லை. சொல்லாராய்ச்சி வல்லுனர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் விளக்கம் தருகிறார்கள்..

கூளப்பநாயக்கன் காதல் – விறலிவிடு தூது என்ற நூலில் தோசையைப் பற்றிய குறிப்பு வருகிறது. (எழுதியவர் : சுப்ரதீபக் கவிராயர்)

“-அப்பம்
வடைசுகியன் தோசை வகைகள்பணி யாரம்
கடையிலே கொண்டுமடி கட்டி – சடுதியிற்போய் ”
[நாகமகூளப்ப நாயகன் விறலிவிடு தூது – கண்ணி – 335 ]

கூளப்ப நாய(க்)கனின் காலம் 1728 என்பதை அறிக,. 1542-ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் 35 தோசைகளை, 24 ஏகாதசிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற மற்றொரு குறிப்பு கிடைக்கிறது.

பிங்கல நிகண்டின் காலம் 10ஆம் நூற்றாண்டு. அதில் “கஞ்சம் தோசை” என்ற சொற்பதம் காணப்படுகிறது.

மேலும், திவாகர நிகண்டில் (கி.பி.8-ஆம் நூற்றாண்டு)

“பூரிகம் நொலையல் கஞ்சம் தோசை
பேதப் பெயர்வகை அப்பம் ஆகும்“

என அப்பத்தின் வகைகளை நான்காகப் பிரித்து அதில் நான்கினுள் ஒன்றாக தோசை வருகிறது. இப்படியெல்லாம் சங்க கால சரித்திரம் தமிழர்களுக்கு அக்மார்க் சான்றாக இருக்கையில் டாம் டிக் ஹரி என கண்டவங்களும் நம் பாரம்பரிய தோசையை உரிமை கொண்டாடுவது கடுப்பைக் கிளப்பாதா என்ன?

மவனே! இனிமே யாராவது தோசையை நான்தான் கண்டுபிடிச்சேன். இட்லியை நான்தான் டிஸ்கவர் செஞ்சேன், சாம்பாரை நான்தான் இன்வென்ட் செஞ்சேன் என்று யாராவது சொல்லுங்க அப்புறமா இருக்கு கச்சேரி,

#அப்துல்கையூம்

தோசைக்கல்

dosa

தோசைக்கல் என்பது மனைவி மாதிரி.
அதை ஒழுங்கா பழக்க வேண்டும்.
நம்ம போக்குக்கு கொண்டு வருவதற்கு நாட்கள் பல ஆகும்
பழக்குதற்கு நமக்கு பொறுமை வேணும். நல்லா பழகுனதற்கு அப்புறம்
நாம சொல்றபடி கேட்கும்.
பழசாயிடுச்சுன்னு யாரும்
தூக்கிப் போட்டுட மாட்டாங்க.
பழசு ஆக ஆகத்தான் அதோட அருமை
நமக்கு புரிகிறது
தோசைக்கல்லுக்கு கோவம்
மூக்குக்கு மேலே வரும்.
வரிசையா சப்பாத்தியை சுட்டுட்டு
அப்புறமா தோசையை சுட்டுப் பாருங்க.. பயங்கர டென்ஷன் ஆயிடும்.
மக்கர் பண்ணும்.
அதோட கோவத்தை தோசை மேலே காட்டும். தோசையை நீங்க பிய்ச்சுப் பிய்ச்சு
எடுக்க வேண்டி வரும்..
கிச்சனுக்கு அழகு தோசைக்கல்.
தோசைக்கல் சீக்கிரம் சூடாயிடும்.
மனைவியோட கேரக்டரோடு மேட்ச்சாகும்.
சப்பாத்தியை புரட்டி எடுக்குற மாதிரி நம்மையும் சில சமயம் புரட்டி புரட்டி எடுக்கும். இது விஷயத்தில் நாம
ரொம்ப கவனமா இருக்கணும்.
மனைவியை அல்ல .
தோசைக்கல்லை.
ரெண்டையும் போட்டு குழப்பி
வம்பிலே என்னை மாட்டி விட்டுடாதீங்க.

பேக்கு

“கன்னா பின்னா விளக்கம்” என்ற தலைப்பில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில விசித்திரமான சொற்களுக்கு விளக்கம் தந்து வருகிறேன்.

“அது சரியான பேக்கு ” என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். வெறும் பேக்கு என்று சொன்னாலும் பரவாயில்லை. “அது” என்ற வார்த்தையை வேறு போட்டு அஃறிணை ஆக்கி, அவர்களை (அதாவது உயர்திணை அல்லாத பகுத்தறிவற்ற) ஜடமாக்கி விடுகிறோம். பாவம்.. பேக்குகள்.

அது சரி. “பேக்கு” என்றால் என்னதான் அர்த்தம்.?

இதுகூட தெரியாத பேக்காக இருக்கின்றோமே என்று பலமுறை நான் எண்ணிப் பார்த்ததுண்டு. ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்பார்கள். எனவே “பேக்கு” என்பதற்கு நிச்சயம் ஏதாவது காரண காரியம் இருந்தாக வேண்டும்

நானும் ‘ஆத்திச்சூடி’ முதல் ‘திருக்குறள்’ வரை தேடித்தேடி பார்த்தேன். “பேக்கு” என்ற வார்த்தையே கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் பேக்குகள் இல்லையோ என்னவோ.

பரமார்த்த குரு கதைகள் எழுதிய வீரமாமுனிவர் கூட மட்டி, மடையன், முட்டாள், மூடன், மண்டு என்று ஐந்து சீடர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறாரே தவிர பேக்கு பற்றி குறிப்பிடவே இல்லை.

இந்த காலத்திலோ எக்கச்சக்கமான பேக்குகள் இருக்கிறார்கள். குறிப்பாக முகநூலில் நிறையவே இருக்கிறார்கள். எது வந்தாலும் நம்பி விடுகிறார்கள். உடனே “ஷேர்” கூட செய்து விடுகிறார்கள். “ஷேர்” டீல் செய்வதில் ஹர்ஷத் மேத்தாவை விட என் நண்பர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். மு.மேத்தா சீறாப்புராணம் எழுதினார் என்று சொன்னால் கூட நம்பி விடுவார்கள். அடி ஆத்தா..!

இந்தியில் FEKU என்ற வார்த்தை இருக்கிறது. FEKU என்று சொன்னால் இஷ்டத்துக்கு அள்ளி விடுவது. ஒரு அரசியல் பிரமுகர் இப்படித்தான் கூட்டத்துக்கு கூட்டம் அள்ளி விட்டுக் கொண்டு இருக்கிறார், (வேண்டாம்.. மாட்டி விட்டுடாதீங்க) அதற்குப் பெயர் “FEKU”.

ஆனால் “பேக்கு” என்றால் வேறு. பேக்கு என்பதற்கு ஏராளமான மாற்றுச் சொற்கள் உள்ளன. இளிச்சவாயன், புத்தி கூர்மையில்லாதவன், அறிவில்லாதவன், சாமர்த்தியமில்லாதவன், மடையன், பேயன், கேனையன், லூசு, மாக்கான் இப்படி இன்னும் எத்தனையோ.

இந்த பேக்குக்கும் பெண்கள் வைத்திருக்கும் டம்பப் பைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று இதனால் தெரிவித்துக் கொள்வதாவது.

இந்தியில் BEKAAR என்ற மூலச்சொல்லிலிருந்து “வீணாப்போனவன்” என்ற பொருளிலிருந்து இந்த “பேக்கு” என்ற வார்த்தை பிறந்திருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அப்படியில்லையாம்.

“மடையா..!” என்று யாரையாவது விளித்தால் அவருக்கு புசுக்கென்று கோவம் வந்துவிடும். ”நீ சரியான பேக்கு” என்று சொல்லிப் பாருங்கள். அந்த பேக்குக்கு கோவம் வருவதில்லை. மாறாக அந்த பேக்கும் சேர்ந்து பேக்கு மாதிரி இளிக்கும். அதுதான் ‘பேக்’கின் மகிமை

அறிவில் முதிர்ச்சியில்லாதவனை “அரை வேக்காடு” என்று சொல்வதை நாம் கேள்வியுற்றிருப்போம். ஸ்டைலாக “HALF BOIL” என்றும் சொல்வார்கள்.

Bake என்றால் வேக வைத்து சுடுவது. அரைகுறையாக BAKE செய்தால் எப்படியிருக்கும்? சகிக்காது.

பேக்குகளும் அப்படித்தான். அறிவு முதிர்ச்சியில்லாமல் அரைகுறை வேக்காடாக இருப்பார்கள்.

தொடரும்….

#அப்துல் கையூம்