என் கவிதைகள்

இரவு

எத்தனை முறை சொன்னாலும்
இரவுக்கு வராது புத்தி !
மதியாதார் வாசலை
மிதியாதே என்பது
இரவுக்குத் தெரியாதோ?
சூடு சொரணை சற்றும்
இல்லாமல் போனதோ?
ஆண்டாண்டு காலமாய்
அவமானப் பட்டாலும்
அதற்கு உரைக்காது போலும் !

ஒவ்வொரு நாளும்
இரவை விரட்டியடிக்கிறான் சூரியன்!
இருளைக் கிழித்துப் போடுகிறான்!
வெளிச்சத்தால் துரத்தி அடிக்கிறான் !
இருந்தும் ஒவ்வொரு நாளும்
திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப
எட்டிப் பார்க்கிறது
வெட்கங்கெட்ட இரவு.!!

#அப்துல்கையூம்

சொந்த நாட்டு அகதிகள்

சொந்த பந்தம் இருந்தும்
சொந்த நாட்டிலேயே
அகதிகள் ஆன விந்தை
 
இவர்கள்..
வயிற்றைக் குறைக்க
நடைபயிலும் மனிதர்கள் அல்ல !
வயிற்றை வளர்க்கச் சென்ற இடத்தில்
வாழ்வாதாரத்தை இழந்து
வழிதெரியாது விழிபிதுங்கி
நடையாய் நடக்கும்
நம் நாட்டு பிரஜைகள்
 
பாதம் கொப்புளிக்க
பயணப்படும் இவர்கள்
பாவப்பட்ட
பாரத புத்திரர்கள்
 
பணக்காரர்கள் வீட்டில்
பால் பாக்கெட் தீர்ந்தாலும்
பதட்டப்படும் அரசு ~ இவர்களின்
பாதத்தில் கசியும் குருதியைக் கண்டு
பரிதாபம் கொள்வது எப்போது?
 
#அப்துல்கையூம்123

பாப்கார்ன்

popcorn

ஜனனம் –
மரணம் –
இடைப்பட்ட இடைவேளையில்
வாழ்க்கை.
பக்கெட் நிறைய ஜனனம் –
மரணம் –
இடைப்பட்ட இடைவேளையில்
வாழ்க்கை.
பக்கெட் நிறைய பாப்கார்ன் –
பார்க்க பெரிதாகத்தான் இருந்தது.
தின்னத் தொடங்கினேன்… ..
அதற்குள் முடிந்து விட்டதே….!!!
#அப்துல்கையூம்

பார்க்க பெரிதாகத்தான் இருந்தது.
தின்னத் தொடங்கினேன்… ..
அதற்குள் முடிந்து விட்டதே….!!!
#அப்துல்கையூம்

நில்லா காலம்

 

புள்ளி மானாய்த்
துள்ளித் திரிந்த
பள்ளிக்கால நினைவுகளை
உள்ளத்திலிருந்து இன்னும்
தள்ளிக் கூட வைக்கவில்லை
அதற்குள்…
வெள்ளி நரையை
அள்ளியள்ளித் தந்து விட்டு
எள்ளி நகையாடிவிட்டு
நில்லாது ஓடியது
பொல்லாத காலம் !

பாழாய்ப்போன நினைவு

நுழைவாயிலில் இடதுபுற தூணுக்கு
அடியில்தானே வைத்தேன்?

போன வாரம் போல
வைத்த இடத்தை மறந்து விட்டு
தேட வேண்டிய அவசியம் இருக்காதே?

புதுசு வேற…..
வாங்கி இன்னும் ஒரு மாதம் கூட
ஆகவில்லையே?

முன்னதாகவே போய்விட்டால்
எளிதாகத் தேடி கண்டு பிடித்து விடலாம்.

உட்கார்ந்து இருந்ததென்னவோ
பள்ளிவாயில் ஜும்மா பிரசங்கத்தில்

பாழாய்ப்போன நினைவுகளோ
வெளியில் விட்டு வந்த
புதுஜோடி செருப்பைச் சுற்றியே..!!

#அப்துல்கையூம்

கனவுகள் விற்பனைக்கு அல்ல !!

Think

கனவு என்பது யாதென
கருத்தாய் சிந்தித்துப் பார்த்தேன் !
சிந்துபாத் படக்கதையென
நீண்டுக்கொண்டே சென்றது !

கனவுகள் கனவாகவே
இருக்கும் வரைதான்
கனவுகளுக்கு கனவென்று பெயர்

அது நிஜமாகிவிட்டாலோ
மதமாற்றம் ஆனதுபோல்
“நனவு” என்று பெயர் மாற்றம்
நிகழ்ந்துவிடும் !

கனவுதான் அழகு
நிஜத்தைக்காட்டிலும் !
கனவுகள் வானவில் மாதிரி !
தானே வரும்! தானே போகும்!
வண்ணமயமாய் ஜொலிக்கும் !
கனவுகள் ரஜினி மாதிரி
எப்ப வரும் யாருக்கும் தெரியாது !
கனவுகளை கண்காணிக்க
கமல் ஹாசனாலும் முடியாது. !
எந்த கண்காணிப்புக் காமிராவுக்கும்
அது அகப்படாது !

எதிர்ப்பார்ப்பே இல்லாமல்
இலவசமாய் எல்லோருக்கும் வருவது
கனவுமட்டும்தான் !
கனவுகளே ஓர் எதிர்ப்பார்ப்புதானே !

கனவுகள் பறவைகள் அல்ல
ஆனாலும் சிறகுகள் உண்டு !
கனவுகள் ஜோசியம் அல்ல
ஆனால் சிலதுகள் பலிக்கும் !
கனவுகள் கரன்சி அல்ல
ஆனாலும் செல்லுபடியாகும் !

கனவுகளுக்கு
எந்த அரசாங்கத்தாலும்
ஊரடங்கு சட்டம் போட முடியாது !
கனவுகளுக்கு
வீட்டுக்காவல் வைக்க
மோடி அரசாங்கத்தாலும் முடியாது !

கனவுகள்….
மானுட ஜாதியின் பிறப்புரிமை !
கனவுகளுக்கு
கர்ப்பத்தடை மாத்திரை
கண்டுபிடிக்கவே இல்லை !
கால்களே இன்றி நடப்பது
கனவுகள் மட்டும்தான் !

கனவுகளுக்கு பொழிப்புரை எழுத
கால்டுவெல்லாலும் முடியாது

கண்திறக்காமலேயே
கனவுகள் காணமுடியும் !
நீச்சல் தெரியாமலேயே
கனவுகளில் நீந்த முடியும் !
மூச்சடைக்காமலேயே
கனவுகளில் மூழ்க முடியும் !

கனவுகள் ….
சிலந்திவலையைக் காட்டிலும்
நாசுக்கானவை !
சட்டென்று கலைந்து விடுகின்றன !
கனவுக்கு வரைபடம் கிடையாது
அதற்குத்தான்
எல்லைக்கோடுகளே இல்லையே !

கனவுகள் பாரபட்சம்
பார்ப்பது கிடையாது
ஏழை பணக்காரன் என்றதற்கு
பிரித்துப் பார்க்கத் தெரியாது !

இருந்தபோதிலும் …
கனவுகள் மீது
கவிஞனெனக்கு கடுகளவும்
நல்லபிப்பிராயம் கிடையாது !
காரணம்….
கனவுகளை நம்பி
மோசம்போனவர்கள் உண்டு!
காஷ்மீரிகளைப் போல

கனவுகளின் தொன்மை
சத்தியமாய் தெரியாது !
ஆதாம் ஏவாளுக்கும்கூட
அது வந்திருக்கலாம் !

வெறும் கனவுகளூடே பயணித்து
வெறும் கனவுகளூடே லயித்து
வெறும் கனவுகளூடே வாழ்ந்து
விடைபெற்று போனோர் பலருண்டு

கனைவுகள் என்பது மாயை !
கனவுகள் மற்றொரு உலகம் !
கனவுகள் நிஜத்தின் கருவறை !
கனவுகள் நனவுகளின் கர்ப்பக்கிரகம் !

கனவுகளில் வரும் அரங்கமைப்பு
தோட்டாதரணியையும் தோற்கடிக்கும் !

இந்தியாவின் சுதந்திரம்
யாரோ கண்ட கனவுதான்!
இந்தியாவின் இறையாண்மை
யாரோ கண்ட கனவுதான் !
இந்தியாவின் மதச்சார்பின்மை
யாரோ கண்ட கனவுதான் !

என் கனவுகள்
எனக்கும் மட்டும்தான் !
கனவுகள் விற்பனைக்கு அல்ல !!

#அப்துல்கையூம்

நிறங்கள்

colour

அமைதிக்கு

வெள்ளை நிறம் பிடிக்கும்

ஆபாச காமத்திற்கோ

எல்லா நிறமும் பிடிக்கும்

ஆம்..

 

வெள்ளைத் தோல்

மஞ்சள் பத்திரிக்கை

நீலப்படம்

சிவப்பு விளக்குப் பகுதி

பச்சையான பேச்சு

05.01.2015

மரம்

paper

காகித தேவைக்காக
கனிவள மரத்தை வெட்டுகிறீர்களே..!

அதே காகிதத்தில்
அன்புகூர்ந்து எழுதுங்களேன்
“மரங்களை வெட்ட வேண்டாம்” என்று.

-அப்துல் கையூம் (23.11.2016)

 

மனிதச் சங்கிலி

222 223

“மனிதச்சங்கிலி போராட்டமாம்”

முதன்முதலில் தோற்றுவித்ததே
இந்த மலைத் தொடர்கள்தானோ..?

“இயற்கையை அழிக்காதே” என

இயற்கையே போராடத் துவங்கி
எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன?

இன்னும் விடிவுகாலம்
ஏனோ பிறக்கவில்லை …!

#அப்துல்கையூம்

காற்றின் முகவரி

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf

பாலைவன
அஞ்சல் அட்டையில்
காற்றின் முகவரி
எத்துணை அழகு?

இந்த அடுக்குத் தொடர் .. ..
அண்ணாவின்
அடுக்கு மொழியைக் காட்டிலும்
அழகோ அழகு !

அகன்ற மணற்பரப்பை
ஆட்டோகிராப்
ஆக்கியது யார்?

மருந்துச்சீட்டில் 
அவசரமாய் கிறுக்கும்
மருத்துவரின் கையெழுத்து போலல்லாது

உலகிலேயே
அழகான கையெழுத்து
காற்றுக்குத்தான் போலும்.

தூரிகையே இல்லாமல்
ஓவியம் வரையும் சூத்திரம்
காற்றுக்கு மாத்திரமே சாத்தியம்.

நெளிவு சுளிவு
தெரிந்த காற்று
பிழைத்துக் கொள்ளும் !
அரசியல்வாதியின்
பிள்ளையைப்போல !

ஓவியர் ஜெயராஜின்
வளைவுகள் ஆபத்தானவைதான் !

இதோ பாருங்கள்
கவர்ச்சியான வளைவுகளை !
ஆனால் ஆபத்தானவை அல்ல

காற்றுக்கு 
கவிதை எழுத 
கற்றுக் கொடுத்தது
யாராக இருக்கும்?

படிமங்களும்
அடுக்குத் தொடர்களும்
தண்டியலங்காரமும்
அப்பப்பா
அட்டகாசம் போங்க….

#அப்துல்கையூம்
11.11.2009