இன்று ஆகஸ்ட் 10. கலைஞரின் “முரசொலி” பத்திரிக்கை தொடங்கப்பட்ட நாள். இந்நாளில் கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கு இடையே இருந்த சரித்திரப்புகழ் கூறும் நட்பினை இங்கே பதிவு செய்வது என் கடமை.
நடிகர் விஜயகாந்த் வாழ்க்கையில் எப்படி இப்ராஹிம் ராவுத்தர் என்ற கேரக்டர் முக்கியமோ, டி.ஆர்.ராஜேந்தர் வாழ்க்கையில் எப்படி ஈ.எம்.இப்ராஹிம் என்ற கேரக்டர் முக்கியமோ அதுபோன்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் வாழ்வில் திருவாரூர் கருணை எம்.ஜமால் என்ற கேரக்டர் மிக மிக முக்கியமானது.
கருணை & கருணா.. ஆஹா.. என்ன ஒரு பெயர் காம்பினேஷன். நட்பின் இலக்கணத்திற்கு கபிலர் & பிசிராந்தையாரை உதாரணம் காட்டுபவர்கள் இவர்களை ஏன் எடுத்துக்காட்டாகச் சொல்வதில்லை?
பிற்காலத்தில் தனக்குச் சொந்தமான அச்சகத்தை தன் ஆத்ம நண்பனின் நினைவாக திருவாரூரில் “கருணாநிதி அச்சகம்” என்ற பெயரில் நடத்தி வந்தது நட்பின் இலக்கணமன்றி வேறு என்னவாம்?
அப்போது கலைஞருக்கு வெறும் 18 வயது. அரும்பு மீசைக்காரர். எழுத்துப் பித்தரான கலைஞர் ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையை ஏந்தியும், “குடியரசு” பத்திரிக்கையை கக்கத்தில் வைத்துக்கொண்டும், கருணை ஜமாலை பக்கத்தில் வைத்துக் கொண்டும் இலக்கிய வேட்கையில் அலைந்து திரிந்த நிலாக்காலம் அது.
திராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் அப்போது மக்களிடையே பிரபலமாக வலம் வந்தன. கலைஞருக்கு எப்படியாவது பத்திரிக்கைத் துறையில் சாதனைகள் புரியவேண்டும் என்ற ஓர் ஆர்வம் ஒரு வெறியாகவே மாறி இருந்தது.
கலைஞருக்கும் கருணை ஜமாலுக்கும் இடையேயான நட்புறவு வாலிப வயதில் ஏற்பட்டதல்ல. பால்ய வயது தொட்டே அவர்களுக்குள் தொடர்ந்து வந்த இறுக்கமான உறவு, நெருக்கமான உறவு.
கலைஞருக்கு பத்திரிக்கைத் துறையில் ஈர்ப்பும் ஈடுபாடும் கூடுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் “தாருல் இஸ்லாம்” இதழாசிரியர் பா.தாவுத்ஷா என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். “பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டுபிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்ற அறிவிப்பை தன் இதழில் சவாலாக வெளியிட்டவர். எந்த அளவுக்கு தமிழில் புலமையும், தன் எழுத்தின் மீது அபார நம்பிக்கையும் கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு அறிவிப்பை இந்த மனிதர் இவ்வளவு பகிரங்கமாக வெளியிட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்பொழுது வெளிவரும் பத்திரிக்கைகளின் எழுத்துப்பிழைகளை காண்பதற்கு சீத்தலை சாத்தனார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தலை முழுதும் ரத்தக்களறியாகி அப்போலோ மருத்துவமனையில் எமர்ஜென்சியில் அட்மிட் ஆகியிருப்பார்.
ஈரோட்டில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த “குடியரசு” வார இதழில் கலைஞர் தொடர்ச்சியாக எழுதி வந்தார். அவரது அபார எழுத்தாற்றலால் பின்னர் துணை ஆசிரியாராகவும் பணியில் அமர்ந்தார். தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் திராவிட எழுச்சிக் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய பத்திரிக்கை ஒன்றே பிரதான கருவியாகவும், கிரியாவூக்கியாகவும் விளங்கியது.
.
பத்திரிக்கைத் தொழில் நடத்துவதென்பது அப்போது சாதாரண காரியமல்ல. காகிதம் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டும். நிறைய பணமுதலீடு செய்ய வேண்டும். விநியோகம் செய்வது சிரமமான காரியமாக இருந்தது. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கு உதவ முன்வராத காலத்தில் கைகொடுத்து உதவியது கருணை ஜமால்தான்.
திறமையும் எழுத்தாற்றலும் வாய்ந்த தன் பால்ய நண்பனுக்காக கருணை ஜமால் செய்த உதவி கலைஞரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.
1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட முரசொலி, தொடக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. “மாணவநேசன்” என்ற பெயரில் வெளிவந்த இந்த பத்திரிக்கைதான் பின்னர் முரசொலியாக பரிணாமம் அடைந்தது.
இந்த இதழ் பின்னர் பண நெருக்கடியால் நிறுத்தப்பட்டபோது மனமுடைந்துப் போன கலைஞர் பெருத்த சோகத்திற்கு உள்ளானார். நின்று போயிருந்த முரசொலி பத்திரிக்கையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அதன் பின்னர் கலைஞர் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதப் போய் விட்டார். அவர் வசனம் எழுதிய முதற்படமொன்று வெளியானது. ஆனால் படத்தின் ‘டைட்டிலில்’ அவருடைய பெயர் காட்டப்படவில்லை. காரணம் அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக அறியப்படவில்லை. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” (1947) படத்திற்கு வசனம் எழுதியபோதும் இதே நிலைமைதான். அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்து ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். அபிமன்யு (1948) படம் வெளிவந்தபோதும் இதே நிலைமைதான் தொடர்ந்தது. ஜூபிடர் பிக்சர்ஸின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் திருப்பூர் தொழிலதிபர்கள் சோமு மற்றும் எஸ்.கே.மொய்தீன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது,
சினிமா உலகத்துக் கூத்தையும், துரோகத்தையும் கண்ட கலைஞர் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டார். இரவும் பகலும் கண்விழித்து, கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாக வசனம் எழுதிக் குவித்தது இவர். பெயரையும் புகழையும் தட்டிக்கொண்டு போவது வேறொருவர்.
நொந்து நூடுல்ஸ் ஆகிப்போன கலைஞர் தன் மனைவி பத்மாவதியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் திருவாரூருக்கே வந்துச் சேர்ந்தார். தன் நண்பர் கருணை ஜமாலிடம் தன் சோகத்தைக் கூறி புலம்பினார். அவரைத் தேற்றி ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து உற்சாகப்படுத்தினார் கருணை ஜமால்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
உடைநெகிழ்ந்தவனுடைய கை எப்படி உடனே சென்று உதவி காக்கின்றதோ அதுபோல உற்ற நண்பனுக்குத் துன்பம் வருகையில் ஓடிச் சென்று துன்பத்தைக் களைவது நட்பு என்ற நட்பு அதிகாரத்திற்கு இணங்க செயற்பட்டவர் கருணை ஜமால்.
கருணை ஜமாலின் முயற்சியால் 14-01-1948 முதல் முரசொலி ஏடு திருவாரூரிலிருந்து அவரது சொந்த அச்சகத்திலேயே வெளியிடப்பட்டது.
நண்பனுக்காக தோளோடு தோள் நின்று, அவரே மேற்பார்வையிட்டு பத்திரிக்கை பிரதிகளை அச்சிட்டுக் கொடுத்தார். தன் சொந்தப் பணத்தில் காகிதங்கள் கொள்முதல் செய்வது முதல், கலைஞருடன் சேர்ந்து பத்திரிக்கைகளை மூட்டைகளாக கட்டி தலையில் சுமந்து, ஆற்றை நீந்திக் கடந்து விநியோகம் செய்வது வரை அவரது வேலை. விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞருக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார்.
முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் பத்திரிக்கை கட்டுகளை சுமந்துச் சென்று விற்பனையாளர்களிடம் சேர்ப்பது வழக்கம். முரசொலி பத்திரிக்கையின் ஆரம்ப காலத்தில் திருவாரூர் தென்னன், சி.டி.மூர்த்தி, முரசொலி சொர்ணம், பெரியண்ணன் போன்றவர்களுக்கும் முரசொலி பத்திரிக்கையின் வளர்ச்சியில் பெரும் பங்குண்டு
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்பதுபோல் கருணை ஜமால் தக்க நேரத்தில் புரிந்த இந்த உதவி கலைஞரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது.
பத்மாவதியை கலைஞர் மணமுடித்தது 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இவர்களுக்குப் பிறந்த மகன் மு.க.முத்து. 1948 செப்டம்பர் மாதம் முதல் மனைவி பத்மாவதி மறைந்த பின்பு தயாளு அம்மாள் அவர்களை மறுமணம் புரிய முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அவரது ஆத்ம நண்பர் கருணை ஜமால்.
கருணை ஜமால் தமிழார்வலர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும்கூட. நாடகக் கலையில் ஆர்வமுள்ளவர். அரங்கண்ணல், கருணை ஜமால், தஞ்சை ராஜகோபால் போன்றோர் திருவாரூர் தேவி நாடக சபாவில் நடிகர்களாக இருந்தவர்கள்.
அப்போது தேவி நாடக சபாவில் பாடல் மற்றும் கதை எழுதும் பொறுப்பில் இருந்தவர் கவி. கா.மு.ஷெரீப். திருவாரூரில் “ஒளி” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் நடத்தி வந்தார்.
கா.மு.ஷெரீப்புக்கு தேவி நாடகக் சபாவில் நல்ல செல்வாக்கு இருந்தது. கலைஞரின் திறமையைக் கண்டு தேவி நாடக சபாவில் சேர்த்து விட்டது கா.மு.ஷெரீப் அவர்கள்தான். இங்குதான் “மந்திரிகுமாரி” நாடகம் முதலில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் மேலாளர் எம்.ஏ.வேணுவையை அழைத்துவந்து பார்வையிட வைத்தார். அதன்பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி..ஆர்.சுந்தரத்திடம் அறிமுகம் செய்து வைத்து மந்திரிகுமாரி (1950) படத்தில் இமாலயப் புகழை கலைஞருக்கு பெற்றுத்தர மூல காரணமாகத் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப் என்பது எல்லோரும் அறிந்த வரலாறு.
“நெஞ்சுக்கு நீதி” சுயசரிதத்தில் கா.முஷெரீப், கருணை ஜமால் இந்த இருவரின் பெயர்களையும் கலைஞர் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை. குறளோவியம் தந்தவருக்கு ‘செய்ந்நன்றி’ பாடம் நடத்த வேண்டுமா என்ன?
கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அண்ணாவின் திராவிடக் கொள்கையை பறைசாற்ற ஏதுவாக இருந்தது.
இதில் இன்னொரு சுவையான தகவலும் நாம் அறிய வேண்டியது அவசியம். கலைஞர் அவர்கள் தன் எழுத்துக்கள் மூலம் அண்ணாவின் கவனத்தை ஈர்த்து பரிச்சயம் அடைந்திருந்தாலும் அவரை முதன் முதலாக நேரில் சந்தித்து அறிமுகமானது எந்த இடத்தில் தெரியுமா? திருவாருரில் நடந்த ஒரு மீலாது விழாவின்போதுதான். அப்பொழுது இஸ்லாமியப் பெருமக்கள் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணாவை வரவழைத்து பேசச் செய்வது ஒரு TREND ஆகவே இருந்தது
இந்திராகாந்தியின் ஆட்சியில் எமர்ஜென்ஸி நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக கட்சியினர் பலரும் மிசா சட்ட்த்தில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். கலைஞர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். அந்த அடைக்கும்தாழ் ஒரு கட்டத்தில் செல்லுபடியாகவில்லை. அப்படிப்பட்ட அடக்கமுறை நேரத்திலும் தன் நண்பர் கருணை ஜமால் வீட்டுத் திருமணத்துக்கு திருவாரூர் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்ற பாங்கு இருவருக்குமிடையே நிலவிய நெருங்கிய நட்புக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்?
#அப்துல்கையூம்