முஸ்லீம்களுடனான இணக்கமான உறவு
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களைப் பற்றி முனைவர் ராஜா முகம்மது, கோம்பை எஸ்.அன்வர், நாகூர் ரூமி போன்ற அறிஞர் பெருமக்கள் நிறையவே எழுதி இருந்தாலும் என் பங்குக்கு சில புதிய விடயங்களை என் பாணியில் இங்கு வழங்கியிருக்கிறேன்.
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் (1676 – 1855), அதற்கு முன்பு ஆண்ட நாயக்கர்கள் (1532 – 1673) இவர்கள் அனைவரும் முஸ்லிம்களுடன் இணக்கமாகவும், முஸ்லிம் சமுதாயத்தினரின் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் ஆட்சி புரிந்திருக்கின்றார்கள். இவர்களின் ஆட்சி மத நல்லிணக்கத்தின் பொற்கால ஆட்சி எனலாம். இக்கட்டுரையை முழுதாக படிக்கையில் நான் சொல்லும் இந்த உண்மையை நீங்களே உணர முடியும்.
நாகூர் ஆண்டகை வாழ்நாள் காலம்
ஆண்களில் தகையான மனிதராகத் திகழ்ந்த நாகூர் ஆண்தகை அவர்கள் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார்கள். இவர்கள் வாழ்ந்த ஆண்டு எது என்பதைப் பற்றிய குறிப்பு ஓரளவுக்கு சரியாக கணிக்கப்பட்டாலும் பற்பல ஆவணங்களில் வருடங்கள் சற்று முன்பின் மாறுபடுகின்றன.
பெரும்பாலான ஆங்கிலக் குறிப்புகளில் நாகூர் ஆண்டகையின் காலம் 1490 – 1579 என்று இருக்கின்றது. இதன்படி பார்த்தால் அவர்கள் 89 வருடங்கள் உயிர் வாழ்ந்ததாக அர்த்தம்.
வரலாற்றாய்வாளர், மேனாள் காப்பாட்சியர் புதுக்கோட்டை அருங்காட்சியம், முனைவர் ஜெ. ராஜா முகம்மது அவர்களின் கூற்றுப்படி நாகூர் ஆண்டகை வாழ்ந்த காலம் 1532 – 1600. இதன் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் 68 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.
நாகூர் ஆண்டகையின் வாழ்க்கை வரலாற்றை கன்ஜூல் கறாமத்து என்ற பெயரில் பாடலாக எழுதிய “நான்காம் மதுரை தமிழ்ச்சங்கத்து நக்கீரர்” என போற்றப்படும் நாகூர் குலாம் காதிறு நாவலர் எழுதிய குறிப்புகளிலிருந்து எழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமி நமக்கு தரும் தகவல்கள் மூலம் நாகூர் ஆண்டகை 1504 பிறந்து நவம்பர் மாதம் 09 1570-ல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்கள் என்ற விவரம் தெரிய வருகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் அவர்கள் இம்மண்ணில் வாழ்ந்த காலம் 66 ஆண்டுகள்.
‘கன்ஜூல் கறாமத்து’ என்ற பெருநூல். 131 அத்தியாயங்களும், 576 பக்க அளவும் கொண்ட அவர்கள் வரலாற்றை நிறைவாகக் கூறும் நூல்.
இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நாகூர் ஆண்டகை மறைந்த வருடம் .1579 என்று நாம் கணக்கிட்டாலும் அவர்கள் மறைந்து 254 ஆண்டுகள் கழித்து 1833-ஆம் ஆண்டில் பிறந்தவர் நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள்.
ஆகையால் வரலாற்றுத் தேதிகள் அவ்வளவு துல்லியமாக இருக்குமென்று நாம் அறுதியிட்டு கூற முடியாது. அதே சமயம் தஞ்சை சரஸ்வதி மகாலில் காணப்படும் அருஞ்சுவடிகளில் நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், கணக்கு வழக்குகள் ஒவ்வொன்றும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. .அச்சுதப்ப நாயக்கரின் ஆட்சி கால நிகழ்வுகளை வைத்து கணக்கிடப்படும் காலமே சரியானதாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து.
மராத்திய மன்னர்களுடன் நெருக்கம்
நாகூர் ஆண்டகை அவர்களுடன் நாயக்க மன்னர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் உணர்வுபூர்வமானது, மானசீகமானது; விவரிக்க இயலாதது. அதன் பின்னர் மராத்திய மன்னர்களின் காலத்திலும் இந்த நெருக்கம் பாரம்பரிய உறவாக தழைத்து வந்துள்ளது.
வடமாநிலம் மாணிக்கப்பூரில் பிறந்து பல்வேறு நாடுகள் பயணம் மேற்கொண்டு தஞ்சை மண்ணுக்கு வந்த நாகூர் ஆண்டகையவர்கள் தஞ்சை நாயக்க மன்னர்களில் ஒருவரான அச்சுதப்ப நாயக்கரின் (1560-1600) நோயினை தீர்த்து வைத்ததாக வரலாறு கூறுகிறது..
சில பதிவுகளில் அச்சுதப்ப நாயக்கருக்கும் நாகூர் ஆண்டகைக்கும் இடையே உள்ள உறவை சேவப்ப நாயக்கர் (1532-1560) என்றும் தவறாக எழுதப்பட்டுள்ளது.
நாகூர் ஆண்டகையுடன் சீடராக அவர் கூடவே வந்தவர்கள் 404 பேர்கள்.
அப்போது தஞ்சையை ஆண்டு வந்த மன்னர் அச்சுதப்ப நாயக்கர் சுகமின்மையால் உழன்றதாகவும் ஒரு புறாவின் உடலிலே பல்வேறு முட்களைக் கொண்டு குத்தப்பட்டு நோவினை செய்யும் விதத்தில் சூனியம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட நாகூர் நாயகமவர்கள் தன் சீடரை அனுப்பி, அந்த புறாவை கொண்டு வரச்செய்து ஓதி ஊதி ஒவ்வொரு முள்ளாக அந்த புறா உடம்பிலிருந்து நீக்கி எடுத்து மன்னரை பரிபூரண சுகமடைய வைத்தார்கள் என்ற குறிப்பை அவர்களது வரலாற்று நூலில் நாம் காண முடிகிறது
தன் தீராத நோயை தீர்த்து வைத்த நாகூர் ஆண்டகையின் அற்புதத்தில் அகமகிழ்ந்த அச்சுதப்ப நாயக்கர் ஏராளமான பரிசில் பொருள்களை வழங்கியிருக்கிறார்.
“எனக்கும் என் கூட்டத்தாருக்கும் இப்பரிசுப் பொருள் வேண்டாம் நான் உமது எல்லையிலேயே எங்கேனும் நிரந்தரமாக தங்கிடும் காலம் வரும் என்று எண்ணுகிறேன். அவ்வாறிருப்பின் தங்குவதற்கும் தவம் புரிவதற்கும் சிறிது நிலம் தந்தால் போதும்” என்று எடுத்துக்கூற மன்னர் 30 வேலி நிலத்தை காணிக்கையாக கொடுத்துள்ளார். நாகூர் நாயகம் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் நாகூரில் தங்கி மார்க்கப் பணி மேற்கொண்டுள்ளார்கள்.
நாகூர் ஆண்டகை மரணித்த பின்பு தஞ்சையை ஆண்ட பிரதாப் சிங் போன்ஸ்லே மனைவியுடன் நாகூர் தர்காவுக்கு விஜயம் செய்திருக்கிறார். இந்த தரணியை ஆள தனக்கு மகன் பிறந்தால் இந்த தர்காவிலேயே மிகப் பெரிய மினாரா ஒன்றை கட்டித்தருவதாக வேண்டுதலும் வைக்கிறார். அதேபோன்று அவரது வேண்டுதலும் பலிக்க 131 அடியில் மன்னர் கட்டித்தந்த பெரிய மினாரா இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் ஜீவகாருண்யத்தை சரித்திரத்தில் போற்றிப் புகழ்கிறோம், நாகூர் மினராக்களில் வந்து அடைக்கலம் புகும் புறாக்களின் தீனிக்காக ஒரு கிராமத்தையே நாகூர் தர்காவுக்காக நன்கொடையளித்த சரபோஜியைப் பற்றி ஏனோ நாம் சிலாகித்துப் பேசுவதில்லை. திட்டச்சேரி நரிமணம் பகுதியில் இருக்கும் புறாக்கிராமம் என்ற சிற்றூர்தான் நாமிங்கு குறிப்பிடும் ஊர்.
//இரண்டாம் துளஜா 1788 ஆம் ஆண்டு 277 ஊர்களை கும்பினிக்கு அளித்தார், 11.06.1779 நாகூரைக் கும்பினிக்கு ஜாகீர் கொடுத்ததற்கு கறார்நாமாவை எழுதிக் கொடுக்காமல் நீங்கள் கும்பினிக்கு கொடுத்த தொகையானது குறைவாகவே காணப்படுகிறது// என்ற குறிப்பு பதிவாகக் காணப்படுகிறது..
தர்காக்களுக்கு நிதியுதவி
தஞ்சாவூரிலுள்ள படே ஹுசைன் தர்கா என்ற தர்காவுக்கு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திலிருந்து தொடர்ந்து நிதியுதவு அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
1773-ஆம் ஆண்டு மல்லிம் சாஹேப் என்பவர் கடைவிதியில் கோட்டையின் பக்கம் ஒரு பள்ளிவாசல் கட்டினார்., அந்த பள்ளிவாசலை நடத்துவதற்கும். அங்கு வரும் ஃபக்கீர்மார்களுக்கு உணவு அளிக்கவும், சாலியமங்கலம் வட்டத்தில் கடதம்பட்டு என்ற ஊரில் 10229 குழிகளும் வல்லார்பட்டு என்ற ஊரில் 2419 குழிகளும் ஆகக்கூடி 12648 குழிகள் இனாமாக அளிக்கப்பட்ட ஆவணங்கள் காணப்படுகின்றன. இங்கு “முகமதுபுரம்” என்று பெயரில் ஒரு ஊரையும் மன்னர் உருவாக்கினார்.
கி.பி 1785-ல் திருபந்துருத்தியில் 1963 குழிநிலமும் மரஞ்செடி கொடி வகைகளில் கால் வேலி மூன்றேகால் மா அளவு நிலம் ஹிஸ்லேக்மல் என்ற ஃபக்கீருக்கு இனாமாக அளிக்கப்பட்டுள்ளது.
சூலமங்கலத்தில் இரண்டே முக்கால் வேலி நிலம் 700 சக்கரம் கொடுத்து விலைக்கு வாங்கி அங்கு தர்காவை ஜப்தியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று 1787-ல் ஹஸன்ஸா ஃபக்கீர் வேண்டிக் கொண்டதற்கு இணங்க ஆணை பிறப்பிக்கப்பட்ட ஆவணமும் நமக்கு கிடைக்கின்றது. .
இங்ஙனம் மாராத்திய மன்னர்களிடம் நிலக்கொடைகள் பெற்ற தர்காக்கள் ஏராளமாக உள்ளன. மத வேறுபாடு இன்றி புரிதலுடன் மிக இணக்கமாக மராத்திய மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.
இஸ்லாமிய ஆண்டுகளைக் குறிக்கும் ஹிஜ்ரி ஆண்டு குறிப்பும் பல ஆவணங்களில் அவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நவாபுக்களுக்கு எழுதப்பட்ட மடல்களில் இந்த வருடக்கணக்கு இடம் பெற்றிருக்கின்றன.
அல்லா பண்டிகை
மோடி ஆவணங்களில் “அல்லா பண்டிகை” என்ற குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன. அதென்ன ‘அல்லா பண்டிகை’? என்ற கேள்வி கேட்கலாம். முஹர்ரம் பண்டிகையைத்தான் அப்படி குறிப்பிடுகிறார்கள். .
மராத்திய மன்னர்களைப் பொறுத்தவரை முஹர்ரம் பண்டிகையும் ஒன்றுதான் கந்தூரி விழாவும் ஒன்றுதான். எல்லாமே அல்லா பண்டிகைதான். பம்பாய் நகரத்தில் ஈரானிலிருந்து குடியேறிய ஷியா முஸ்லீம்கள் அப்போது நிறைய இருந்தனர். அந்தக் கலாச்சாரத்தை இஸ்லாமிய மார்க்கத்துடன் இணைத்து தமிழகத்தில் அறிமுகம் செய்தவர்கள் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள்தான்.
//அல்லா பண்டிகைக்காக மன்னர் எல்லா தர்காக்களுக்கும் போய் வருவதுண்டு. அங்ஙனம் போகுங்கால் இனாம் அளிப்பது வழக்கம். அல்லா பண்டிகை நடத்தவும் நன்கொடையும் அளிப்பதுண்டு// என்ற குறிப்பு காணப்படுகிறது.
//அல்லா பண்டிகைக்கு ஃபக்கீர்களுக்கு கொடுப்பதற்காக மாதுஸ்ரீ ஆவு சாஹிப் ரூ30, சைதாம்பாயி சாஹேப் ரூ 30, காமாட்சியம்பா பாயி சாஹேப் ரூ 25, சுலஷணபாயி அம்ணி ராஜா சாஹேப் ரூ 10, சக்வாரம்பா பாயி அம்மணி ராஜே ரூ 10, ஆக 105 என்ற கணக்கு வழக்கை தஞ்சை சரஸ்வதி மகால் சுவடிக்குறிப்பில் காண முடிகிறது. அரசமாதேவிக்களும், அரச குடும்பத்தினரும் தங்களது பங்கை முஹர்ரம் பண்டிகைக்கும், நாகூர் கந்தூரி விழாவுக்கும் நன்கொடை அளிப்பதை வழக்கமாகி வைத்திருந்தனர்.
முஹர்ரம் மாதத்தில் 10-ஆம் நாள் நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைனார் வாளால் வெட்டப்பட்டு இறந்த துக்கத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு ஷியா பிரிவினர் கை வடிவில் உருவம் செய்து அதை “பஞ்சா” என்று அழைத்து பண்டிகையாக கொண்டாடினர். 1852-ஆம் வருட வாக்கில் இப்பழக்கம் தஞ்சை மண்ணில் பரவலாகக் காணப்பட்டது. டக்கா எனும் இசைக்கருவியும் அவ்விழாவில் இசைக்கப்பட்டது.
முஹர்ரம் பண்டிகையின்போது இதனை கொண்டாடுபவர்களுக்கும், இதைக் கொண்டாடக் கூடாது என்று கூறுபவர்களுக்கிடையே சிறுச் சிறு சச்சரவுகள் ஏற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசரிடம் இம்முறையீடு வைக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றன.
நாகூர்
//1827-ஆம் ஆண்டு நாகூர் சாயபு தர்காவுக்கு சர்க்காரிலிருந்து மூடுகிற வஸ்திரமான பச்சை நிறப் போர்வையை வழக்கப்படி அனுப்புதற்கு சக்கரம் 20தொகை அனுப்பிய வகையில்// என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது.
நாகூர் அதிகாலையிலும் பொழுது சாயும் மாலை வேளையிலும் குண்டு போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த குண்டு என்பது ஹிரோஷிமா நாகாசாகியில் அமெரிக்கா காரன் போட்ட குண்டு போன்றதல்ல. ஊருக்கே கேட்கும்படியான அதிர்வெட்டு அவ்வளவுதான். இந்த பழக்கத்தையும் நாகூருக்கு அறிமுகம் செய்து வைத்தது மராத்திய மன்னர்கள்தான்.
நவராத்திரி அன்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் இந்த குண்டு வெடிக்கும். அரசரது பிறந்த நாளின்போது அரசருக்கு எத்தனை வயதோ அத்தனை குண்டுகள் போடப்படும்.
நாகூரில் அன்றாடம் நகரா வாத்தியம், ஷெனாய், ‘கிழமை ராவு’களில் நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் இன்றும் இசைக்கபடுகின்றன. நாகூர் தர்காவுக்கு முதன்முதலில் நகரா வாத்தியத்தை நன்கொடையாக அளித்த கணக்கு வழக்கும் முறையே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை பாரம்பரிய வழக்கமாக நாகூர் தர்காவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள்தான்.
கந்தூரி சமயத்தில் எடுபிடி பணிகள் செய்ய தஞ்சை அரண்மனையிலிருந்து சேவகர்கள் அனுப்பட்டிருக்கின்றனர். 1834-ஆம் ஆண்டு நாகூர் தர்கா கந்தூரி வைபவத்தின் 9-ஆம் நாளன்று தங்கத்தேர், வெள்ளித்தேர், யானைத் தந்தத் தேர் பெரியது சிறியது, சங்கீதத் தேர் என ஐந்து தேர்கள் வழங்கப்பட்டுள்ளன.
நகரா
இந்த நகரா என்பது வடநாட்டுப் பெயர் என்றாலும் காலங்காலமாக தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பெருமுரசுதான் இது. இன்றும் தமிழகத்து பல பள்ளிவாசல்களிலும் இது காணப்படுகிறது .பெரிய அரைவட்டச் சட்டி போன்ற தோலிசைக் கருவி. கோயில்களின் முன் மரக்கதவுகளை அடுத்துள்ள பகுதிகளில் இந்தக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். கோயில் நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்களை தூரத்தில் இருப்பவர்களும் அறிவிக்க நகரா இசைக்கப்படுகிறது. தாமிரம், பித்தளையால் ஆன அடிப்பகுதியில் தோல் இழுத்து கட்டப்பட்டு, இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். வளைந்த குச்சிகளால் இசைப்பார்கள். சில நேரம் யானையின் மீது இந்தக் கருவியை வைத்து இசைத்துச் செல்வதும் உண்டு.
நாயக்கர் காலத்திலும் இந்த நகரா இசை பிரபலமாக இருந்தது. மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு சன்னதி நேர் எதிரில் அமைந்த சிறிய மண்டபத்திற்குப் பெயர் நகரா மண்டபம். மீனாட்சியம்மன் பூஜையின் போது இம்மண்டபத்தில் உள்ள நகரா முரசு நாள்தோறும் அதிகாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும், மாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும் கொட்டப்படும். இம்மண்டபம் நகரா முரசு அடிக்கப் பயன்படுவதால் இம்மண்டபத்திற்கு நகரா மண்டபம் எனப் பெயராயிற்று. மதுரை நாயக்க மன்னர் அச்சுதராயர் காலத்தில் நகரா மண்டபம் கட்டப்பட்டது.
இதேபோன்று நாகூரில் நகரா மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காலையிலும் அந்தி சாயும் வேளையில். ஷெனாய் ஒலியுடன் சேர்ந்தே ஒலிக்கும். மராத்திய மன்னர்களின் ஆட்சியில் “நகார் கானா” என்ற பெயரில் சேமிப்புக் கிடங்கு இருந்தது. இதில்தான் சகலவிதமான தோல் இசைக் கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும்.
ஆற்காட்டு நவாபுகள் நாகூரை “காதர் நகர்” என்றும் பெயரிட்டு அழைத்தனர். ஆன்மீகப் பெரியராகவும் மார்க்க ஞானியாகவும் விளங்கிய நாகூர் நாயகம் அவர்கள் மூலம் எண்ணற்ற பேர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் வாழ்வில் நடந்ததாக உண்மைக்குப் புறம்பான பல நிகழ்வுகள் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
பிரதாப் சிங்
பிரதாப் சிங் என்ற மராத்திய மன்னரின் பெயரை சில குறிப்புகளில் பிரதாப சிங்கர் என்று மரியாதை நிமித்தம் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருந்தது. அவர் எப்போது எல்விஸ் பிரஸ்லி மாதிரி சிங்கர் ஆனார் என்று நினைத்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
//பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான சிரீமத் சத்ரபதி மகாராசராச சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்// என்று மாராத்திய மன்னர் பிரதாப்சிங்கை போற்றும் வகையில் உள்ள சொற்றொடரை நாகூர் மினாரா கல்வெட்டு ஒன்றில் காணமுடிகின்றது.
நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவுபடுத்தி, 131 அடி பெரிய மினாரைவைக் கட்டி தர்காவின் பராமரிப்புக்கு 15 கிராமங்களையும் மானியமாக அளித்த பெருமை மன்னர் பிரதாப் சிங் அவர்களைச் சாரும். மராத்திய மன்னர்கள் தர்காவிற்கு பல நேரங்களிலும் நன்கொடை அளித்து ஆதரவளித்து வந்திருக்கின்றார்கள்.
நாகூர் பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் பிரதாப் சிங் கட்டிய பெரிய மினாராவை ஆங்கிலேயர்கள் தங்கள் கொடிக்கம்பமாக பயன்படுத்தியதற்கு அப்போதைய மாராத்திய மன்னர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு ஆங்கிலேயர்கள் செவிமடுத்து தங்களின் எண்ணத்தை மாற்ற்றிக் கொண்டுள்ளனர்.
அடுத்தடுத்த பதிவுகளில் மராத்திய மன்னர்களின் வேறு விதமான பங்களிப்பை பார்போம்.
#அப்துல்கையூம்