பாரதிக்கு கண்ணம்மா

கண்ணம்மாவைப் பற்றிய பதிவு  இது

விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஒரு தொடரில் “ஓடினாள் ஒடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்ற பராசக்தி வசனத்திற்கேற்ப, இப்னுபதூதா போன்று ஊரு உலகம் எல்லாம் சுற்றிய கண்ணம்மாவைப் பற்றிய பதிவல்ல இது.

பாரதியின் ‘கேர்ள் பிரண்டு’ கண்ணம்மாவைப் பற்றியது. பாரதியின் மனைவியின் பெயர் செல்லம்மா அல்லவா? Who is this Kannammaa?

கண்ணனைத்தான் அவன் கண்ணம்மா என பெண்ணாக உருவகப்படுத்தி பாடினான் என்பது சிலரின்  கூற்று.

இல்லையில்லை.. பராசக்தியைத்தான் அவன்  குழந்தையாக பாவித்து பாரதி எழுதினான் பாட்டு என்பது வேறு சிலரது கூற்று.

ஊஹூம்…  அதெல்லாம் கிடையாது, பாரதியின் சிறுவயது தோழிதான் அந்த  கண்ணம்மா. அவள் ஓர் இளம் விதவை. அவளுக்கு 5 சகோதரர்கள். இனிமேல் அவள் பெயரை பாடலில் பயன்படுத்தக் கூடாது என்று பாரதியை அடித்துக் கூட பார்த்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் பயப்படுபவனா அவன்? என்று வியாக்யானம் சொல்கிறார்கள் இன்னும் சிலர்.

இது உண்மையா பொய்யா என்பதை பாரதியின் பள்ளித்தோழர்கள் சோமசுந்தர பாரதியார் , குருகுகதாஸப்பிள்ளை, விஜயராகவாச்சாரியார், ராமு போன்றவர்கள் சொல்லியிருந்தால்தான் உண்டு.

எது எப்படியோ “கண்ணம்மா” என்ற பெயரை காதலி என்ற பாத்திரத்திற்கு ICON ஆக்கிச் சென்ற பெருமை பாரதிக்கு மட்டுமே உண்டு. பிரியமானவளுக்கு அது ஒரு குறியீடாகி விட்டதென்னவோ முழுக்க முழுக்க உண்மை. 

“கண்ணம்மா”  என்ற குறியீட்டை கவிதையில் முதன் முதலாக பயன்படுத்தியது பாரதியா என்று கேட்டால் அதுவும் கிடையாது. அதற்கு முன்னரே  அழுகுணிச் சித்தர் இந்த கண்ணம்மாவை வைத்து நிறைய பாடல்கள் எழுதிவிட்டார்.

//பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து

மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,

மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்

ஆபையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!

பாழாய் முடியாவோ!//

இந்தப் பாடலிலிருந்துதான் நம்ம கவியரசர் கண்ணதாசனுக்கு

//எந்த ஊர் என்றவனே,

இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட

அறிந்த ஊர் அல்லவா//

என்ற பாடலுக்கு கரு கிடைத்திருக்க வேண்டும் என்பது நம் கணிப்பு.

//மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே

கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே

பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்

மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!//

என்று வரிசையாக கண்ணம்மா  புராணமாகவே  அழுகுணிச்ச்சித்தர் பாடுகிறார்  என்ற போதிலும் கண்ணம்மா என்றால் நம் கண்முன் மின்னலாய் தோன்றி மறைவது பாரதியின் நினைவன்றி வேறில்லை பராபரமே..

காதலைப் பாடாதவன் கவிஞனாக இருக்க முடியாது. கவிஞர்களின் கற்பனைக் காதலிக்கு கண்ணம்மா என்ற பெயரை விட வேறு பொருத்தமான  பெயர் கவிவாணர்களுக்கு வேறு மாட்டவில்லை.

பாரதியின் எத்தனையோ கண்ணம்மா பாடல்களை மெட்டு போட்டு திரைப்படத்தில் இணைத்து விட்டார்கள் சினிமாக்காரர்கள்.  இருந்தபோதிலும் ‘கண்ணம்மா” என்று கவிஞர்கள் எழுதிவிட்டால் போதும் அந்தப் பாடல் சூப்பர் டூப்பராக  அமைந்து விடுகிறது. ரசிகர்களும் மறுபேச்சுக்கு இடமின்றி அதனை ‘ஹிட்’ ஆக்கி விடுகிறார்கள்.  அது கண்ணம்மா ராசி.

//பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா. கேளடி பொன்னம்மா// – (கண்ணதாசன்)

//உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா உதிரம் கொட்டுதடி// (பாரதியின் வரிகளை முதல் வரியாய் கையாளும் கண்ணதாசன்)

//வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி

காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி// (வரிகள்: இளையராஜா)

//கண்ணம்மா.. காதல் என்னும் கவிதை சொல்லடி// (வரிகள்: இளையராஜா)

//வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி–என்னடி மீனாட்சி//-(வாலி)

//ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா// – (வைரமுத்து)

//கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா// – (வாலி)

//ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுலே காதுலே//- (வாலி)

//கண்ணம்மா கண்ணம்மா சொல்லம்மா பதில் சொல்லம்மா// – (நா.முத்துக்குமார்)

//கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா?// – (கபிலன்)

//பூவாக என் காதல் தேனூறூதோ தேனாக தேனாக வானூருதோ

//கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா// (உமாதேவி)

//கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை// –(யுகபாரதி)

இப்படியாக ஒரு மிகப்பெரிய கவிஞர் பட்டாளத்தையே “கண்ணம்மா” பித்துப் பிடித்து அலைய வைத்த காரியத்தை செய்தவன் அந்த மீசைக்கவி..

இந்த கண்ணம்மா வைரஸுக்கு எல்லோருமே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொற்றுநோய்க்கு இன்னும்  வேக்ஸின் கண்டுபிடிக்கவே இல்லை. வேக்ஸின் தேவையுமில்லை. பாடலாசிரியர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், இளையராஜா, கபிலன், அறிவுமதி, யுகபாரதி,  உமாதேவி என இந்த ‘கண்ணம்மா வைரஸ்’ எல்லோருக்குமே  ரிசல்ட்  பாசிட்டீவாகவே வந்துள்ளது.

எப்படி ஆர்தர் கோனான் டாயில் ”ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினாரோ, எப்படி சுஜாதா “கணேஷ் வசந்த்” என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினாரோ, எப்படி தமிழ்வாணன் “சங்கர்லால்”  என்ற பாத்திரத்திற்கு உயிர்க்கொடுத்து உலவ விட்டாரோ அதுபோல “கண்ணம்மா”என்ற பெயரை காதலுக்கு உருவகமாக்கி அழியாததொரு புகழைத் தேடித் தந்தவன் பாரதி.

“கண்ணம்மா” என்ற பெயர் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தீராத ஒரு பாதிப்பை உண்டு பண்ணிய பெயர்.  அவரவர் தன்னுடைய சொந்த காதலியை மனதில் நினைத்துக் கொண்டு இந்தப் பெயரால்தான் கவிதைகள் எழுதித் தள்ளினார்கள். மனைவிமார்களும் சந்தேகப்பட மாட்டார்கள் அல்லவா?   

கலைஞருக்கும் இந்த ‘கண்ணம்மா’ பைத்தியம் பிடித்தது.  1972-ஆம் ஆண்டு “கண்ணம்மா” என்ற பெயரில் திரைக்கதை எழுதினார். அதன் பிறகு “பாரதி கண்ணம்மா” என்ற பெயரில் சேரன் ஒரு திரைப்படம் கூட எடுத்தார்.

அண்மைக் காலத்தில் கண்ணம்மா ட்ரெண்டுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி அலையை ஏற்படுத்தியவர் கவிஞர் அறிவுமதி. இன்னொருவர் கவிஞர் யுகபாரதி. அறிவுமதியின் வார்த்தைக் கோர்வையில் என்னையே நான் மறந்தேன். அந்த பாடல் வரிகளை ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்தால் நான் சொன்னது உண்மை என்று உங்களுக்கு நன்றாகவே புரியும்.

“நான் வானவில்லையே பார்த்தேன்

அதைக் காணவில்லையே வேர்த்தேன்

ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய்

வீசச் சொல்லியா கேட்டேன்?”

இதுபோன்ற பட்டாக்கத்தி சொல்வீச்சு எல்லோருக்கும் எளிதாக வந்து விடாது. அறிவுமதிக்கு வார்த்தைகள் அச்சு வார்த்ததைப்போல் வந்து தானாகவே விழுகிறது. ஆண்தாய் கவிக்கோவின் வளர்ப்பு என்பதினாலோ என்னவோ.

‘ப்ரியமுடன்’ படத்தில் கவிஞர் அறிவுமதி எழுதிய மற்றொரு “கண்ணம்மா”  பாடல் எல்லோரையும் முணுமுணுக்க வைத்த பாடல். “பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா”  என்ற பாடலில் பின்வரும் வரிகள்  இதற்கு எடுத்துக்காட்டு.

//நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே

ஒருநாள் விழிகள் பார்த்தது

என் வாழ்நாள் வசந்தம் ஆனது

என் இலையுதிர்காலம் போனது

உன் நிழலும் இங்கே பூக்குது//

அணிவகுக்கும் வார்த்தைகளின் ஊர்வலங்கள் நம்மை ஏதோ ஒரு டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் செல்கின்றன. 

பாரதி “கண்ணம்மா” என்ற பெயரை காதலுக்கு Screen Saver-ஆக ஆக்கிவிட்டுச் சென்று விட்டான். இது பாரதிக்கு பின்னே வந்த அத்தனை கவிஞர்களுக்கும் போஷாக்கு தந்ததுபோல் ஆகிவிட்டது.

பாரதி செல்லம்மாவோடு வாழ்ந்ததைக் காட்டிலும் கண்ணம்மா என்ற கற்பனை மனைவியோடுதான் அதிகமாக காலந் தள்ளினான். பாரதி நல்ல கவிஞனாக இருந்தான். ஆனால் நல்ல கணவனாக இருக்கவில்லை. அவன் தன்னைப் பற்றியோ, தன் உடல் நலத்தைப் பற்றியோ, தன் தோற்றத்தைப் பற்றியோ, தன் மனைவியைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ சற்றும் கவலைப்படாத மனிதனாக Don’t Care Master ஆகவே வாழ்ந்தான் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவன் டிசைன் அப்படி . அவனுக்கு தெரிந்ததெல்லாம் கவிதை ஒன்றுதான். வீட்டில் சமையலுக்கு மாதாந்திர சாமான்கள் இருக்கிறதா என்றுகூட அவனுக்குத் தெரியாது. செல்லம்மா அன்றி வேறொருத்தி இருந்திருந்தாலோ எப்போதோ அவள் பிறந்தகமான கடையத்திற்கே ஓடிப் போயிருப்பாள். 

கவிஞனுக்கு மனைவியாக இருப்பது உண்மையிலேயே கஷ்டமான காரியம். செல்லம்மாவின் சாதனையைப் பற்றி ஒன்றை இங்கு நான் பதிவு செய்தே ஆக வேண்டும். பாரதி எழுதி வைத்த எத்தனையோ கவிதைகளை செல்லம்மா மட்டும் சேகரித்து, பாதுகாத்து  வைத்திருக்காவிட்டால் நமக்கு பல பொக்கிஷங்கள் கிடைக்காமலேயே  போயிருக்கும்.

பாரதிக்கு எந்த அளவு மொழியுணர்வு, தேச உணர்வு இருந்ததோ, அதே அளவு அவனுக்கு காதல் உணர்வும் உள்ளத்தில் ஊறிக் கிடந்தது. பாரதி பார்ப்பதற்குத்தான்  ‘பித்துக்குளி’ போன்று இருந்தான். ஆனால் அந்த முண்டாசு கவிக்கு உள்ளத்தில் காதல் உணர்வு எப்போதும் பீறிட்ட வண்ணமிருந்தது.

கண்ணம்மா மீது அவன் கொண்ட காதல் அளப்பரியது. பெண்ணின் கன்னம் சிவக்க முத்தமிடலாம். அது கமலஹாசனுக்கு நன்றாகவேத் தெரியும். ஆனால் பாரதி  ‘கன்னங் கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ?’ என்று நம்மிடமே கேட்கிறான். கன்னம் கன்றி போகின்ற அளவுக்கு அந்த முத்தம் இருக்குமேயானால் அந்த முத்தத்திற்கு எந்த அளவுக்கு வீரியம் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . “கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி” என்கிறான். இம்ரான் ஹாஷிமியாவது பரவாயில்லையே என்று நமக்குத் தோன்றுகிறது.

பாரதியைப் பொறுத்தவரை ரதி. ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை எல்லாமே கண்ணம்மாதான். அவள்தான் அவனுக்கு அப்ஸரா. அவள்தான் அவனுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் எல்லாமே.

//நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா!

தன்னையே சசியென்று சரண மெய்தினேன்//.

கண்ணம்மாவிடம் சரணம் அடைந்து விடுகின்றான். இன்றைய இளசுகளின் பாஷையில் சொல்ல வெண்டுமென்றால் “படுத்தேவிட்டாண்டா மொமெண்ட்”.

பாரதி பயங்கர டென்ஷன் பேர்வழி. பாரதியின் கற்பனைக் காதலி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துவிட்டு சொன்ன நேரத்திற்கு வரவில்லையாம். கொஞ்சம் லேட் ஆயிடுத்து. அதனாலென்ன?. அடுத்த நாள் சந்தித்தால் போச்சு. அப்படித்தானே? ஆனால் பாரதி ஏகத்துக்கும் டென்ஷன் ஆகிவிடுகிறான்.

தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே

பார்த்திருந் தால்வருவேன் – வெண்ணிலாவிலே

பாங்கியோ டென்றுசொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா!

மார்பு துடிக்குதடீ!

பார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப் போலவே

பாவை தெரியுதடி!

மேனி கொதிக்குதடீ – தலை சுற்றியே

வேதனை செய்குதடீ!

வானி லிடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா

வந்து தழுவுதுபார்.

எங்கு பார்த்தாலும் அவள் முகம் தான் 3D இமேஜில் தெரிகிறதாம். கவிராஜனுக்கு மயக்கம் வருதாம். B.P. ஏறுதாம், அந்த ஃபீலிங் என்னென்னமோ டார்ச்சர் செய்யுதாம், மார்பு “லப்-டப், லப்-டப் என்று அடித்துக்  கொண்டு ஹாட்பீட் (தங்க விலை போல்) எகிறுதாம். ஜூரம் வேற வந்துடுச்சாம். என்ன பாரதி இதெல்லாம்?

//சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்//

பாரதியின் காதற் பாடல்களில் யாவுமே ஒரே கண்ணம்மா புலம்பல்தான்

//I saw your face in a cloud, as it gently floated by.

And I saw your smile in the Sun, and its warmth lit up the sky.

I felt your touch on the breeze, as it softly kissed my hair//

என்று யாரோ ஒரு ஆங்கிலக் கவிஞன் எழுதிய கவிதை என்  ஞாபகத்திற்கு வந்தது. பாரதியின் கற்பனை அதைவிட உச்சம்           

//நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்//

அவன் இயற்கையின் எழிலிலும் காதலியின் கற்பனை அரவணைப்பிலும்  திளைத்துப் போனவன். அவன் எதை நோக்கினாலும் நோக்க நோக்க களியாட்டம்.

“திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும்” என்ற வரிகளை நாம் கேட்டிருக்கின்றோம். பாரதிக்கு கண்ணம்மா என்ற பெயரைச் சொன்னாலே அமுதமாய் ஜொள்ளு வழிகிறதாம். 

“என்றன் வாயினிலே அமுதூறுதே

கண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே…”

நம்மையும் அறியாமல் கண்ணம்மா என்ற அந்தப் பெயரை உச்சரிக்க வைத்து விடுகிறான் பாரதி.  கண்ணம்மா என்ற சொல் கவிஞர்களின் உள்ளத்தில் வேதிவினை (Chenical Reaction) ஏற்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது  என்பது      நிதர்சனம். அந்த ஐந்தெழுத்து மந்திரம் காதலைக் கசிய வைக்கும் காய்கல்பம்.  

//பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;

தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு//

//வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;

பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு//

//வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு//

என்றெல்லாம் பாட்டுக்கொரு புலவனை புலம்ப வைத்த பாஸ்வோர்ட் ‘கண்ணம்மா’ 

அண்மைக் காலத்தில் இந்த ‘கண்ணம்மா பித்து’ அதிகம் பிடித்து ஆட்டியது கவிஞர் யுகபாரதிக்குத்தான் என்று நினைக்கிறேன். அவர் தன்  வாழ்வில் “கல்யாணத்திற்கு முன் நான் யாரையும் காதலித்தது கிடையாது”  என்று கூறுகிறார். நான் நம்பத் தயாராக இல்லை. காதலிக்கத் தெரியாதவன் எப்படி கத்தை கத்தையாக கண்ணம்மா கவிதைகள் எழுத முடியும்? 

//முளைக்கட்டிய தானியம்போல

மனசின் அத்தனை பரப்பிலிருந்தும்

துளிர்விடும் உன் நினைவுகளை

அடங்கா ஆச்சர்யத்துடன்

அதிசயிக்கிறேன் கண்ணம்மா

வழிகாட்டுதல்களையும்

ஒழுக்க விதிகளையும் முட்டித்தள்ளி

முளைவிடுவதுதான் காதலில்லையா?!

பெருக்கெடுத்து ஓடும்

வெள்ள நேரத்து வாய்க்கால்

எங்கே உடைத்து

எப்படியெப்படி வெளியேறுமென

யார் அறிவார் கண்ணம்மா?//

இப்படியாக ஒவ்வொறு கேள்வியாக, அவருடைய கண்ணம்மாவைப் பார்த்து  அடுக்கிக் கொண்டே போகிறார்.

கண்ணம்மா பாடல்களிலேயே முத்தாய்ப்பாக எல்லோருடைய உள்ளத்திலும் ஒரு சுனாமி தாக்கத்தை உண்டு செய்த பாடலென்று சொன்னால் அது ‘றெக்க’ படத்தில் வரும் இசைப்பாடல்தான் . யுகபாரதி எழுதி இமானின் இசையில் நந்தினி ஸ்ரீதரின் இனிமையான குரலில் வெளிவந்த பாடலைப் போன்று அண்மையில் வெளிவந்த வேறெந்த பாடலும் இதுபோன்ற ஒரு தாக்கத்தை இதுவரையில்  ஏற்படுத்தியதில்லை,

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ,

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ !

செம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி

செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி

பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே

வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா

உன்னை உள்ளம் எண்ணுதம்மா !

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே

மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்

தேவதை நீ தானென வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா

வெட்கம் நெட்டி தள்ளுதம்மா

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ !

இப்பாடலிலுள்ள சில கிளாசிக் வரிகள் யுகபாரதி வேற லெவல் என்பதை உறுதி படுத்துகின்றது. கண்ணம்மா அழகு ஒகே. அவள் நினைப்பு மனதில் தேன்மழையை உண்டாக்குகிறது. அதுவும் ஒகே. வானவில் மாதிரி கலர் கலர் டிரஸ் போட்டு கன்னைப் பறிக்கிறாள். அதுவும் ஒகே. அவள் கால் பட்ட இடமெல்லாம் பூமி சோலைவனம் ஆகி விடுகிறதாம். சூப்பர்

எல்லாத்தையும் விட சூப்பரான வரிகள் இதுதான்.  மூல விக்கிரகம் சாமியாக  வீதி ஊர்வலம் வரும்போது ஊரெல்லாம் கூடி வேடிக்கை பார்க்கும். குறிப்பாக சித்திரை திருவிழாவின் போது மதுரையில் கள்ளழகர் ஊர்வலம் வருகையில் எவ்வளவு கூட்டம் வரும் என்பதை அறிந்திருக்கிறோம். யுகபாரதியின் கண்ணம்மாவின் அழகு கோலத்தை ரசிப்பதற்கு கோயிலில் இருக்கும் சாமியே கோயிலை விட்டு நீங்கி வேடிக்கைப் பார்க்க வந்து விடுகிறதாம், சூப்பரோ சூப்பர் யுகபாரதி.

இப்படிப்பட்ட “கண்ணம்மா” என்ற காதல் பெயருக்கு மயானத்தை அங்கு கொண்டுபோய் வைத்து அதற்கு “கண்ணம்மா பேட்டை” என்று பெயர் வைத்த சென்னைவாசிகளை நினைத்தால்தான் எனக்கு கோவம் கோவமாக வரும்.

#அப்துல்கையூம்  

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s