என் ஆத்ம நண்பர் யுகபாரதியைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அது இன்றுதான் நிறைவேறியது.
காலத்திற்கு ஏற்ற வகையில் கவிஞன் தன்னைத்தானே மாற்றிக் கொள்ள வேண்டும். கண்ணதாசன், வாலி போன்றவர்கள் கடைசிவரையில் சினிமா உலகத்தில் நிலைத்திருந்ததன் இரகசியம் இதுதான்.
“கண்ணே! மணியே! முத்தே! மணியே! அருகில் வா!” என்று பாடுவதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுதெல்லாம் வருத்தப்படாத வாலிபர்களை சென்றடைய வேண்டுமென்றால் “அழகான ராட்சஸியே”, “காதல் பிசாசே” என்றுதான் பாடல் எழுத வெண்டும்
கண்ணதாசன் காலத்தில் “மஞ்சள் முகமே வருகே ! மங்கள விளக்கே வருக” என்று அவர் பாடல் புனைந்தார். இப்போது யுகபாரதி இதுபோன்று எழுதினால் “என்ன சார் கதாநாயகிக்கு என்ன மஞ்சக் காமாலையா? என்று எல்லோரும் அவரை கலாய்ப்பார்கள்.
//தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு//
என்ற அவரது சரவெடி வரிகளை நாம் அசை போடுகையில் நம் மனதுக்குள்ளே ஒரு மத்தாப்பு.
யுகபாரதி எழுதினாரே என்று நானும் “தாவணி போட்ட பொங்கல் வந்தது என் வீட்டுக்கு” என்று பொருத்தமில்லாமல் எழுதினேன்னு வச்சுக்குங்க “சரியான லூசுப் பய” என்று என்னைச் சாடுவார்கள்..
சினிமாவுக்கு பாடல் எழுதும்போது, கச்சிதமான வார்த்தைகளின் தேர்வுதான் அவனை ஒரு சிறந்த கவிஞனாக உருமாற்றுகின்றது. அந்தக் சூட்சமக் கலையை யுகபாரதி நன்றாகவே ஆல்ஃபா தியானம் போல கற்று வைத்திருக்கின்றார். அவருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது.
கண்ணதாசனின் வெற்றிக்கு ‘வார்த்தைகளின் தேர்வு’தான் முக்கிய காரணம். “வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” என்ற வரிகளை நீக்கி விட்டு இதைவிட வேறு நல்ல வார்த்தைகள் போடுங்கள் என்று சொன்னால் வேறு எந்தக் கவிஞனாலும் அது முடியாது.
குத்துப்பாட்டிலும் பத்துப்பாட்டு இலக்கியச்சுவையை கலக்கும் வண்ணம் முத்தான வார்த்தைகள் புகுத்தும் சித்துவேலை வித்தையை அறிந்து வைத்திருக்கும் சத்தான பாரதி இவர்.
“ஒற்றை நாணயம்” “அற்றை திங்கள்” இதுபோன்ற யுகபாரதியின் சங்கத்தமிழ் சொற்சிலம்பம் சற்றே நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கின்றது.
//அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே//.
என்ற புறநானூற்றுப் பாடல் என் ‘ஃப்ளாஷ்பேக்கில் வந்து பிலிம் காட்டிச் சென்றது.
//அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?//
கவிஞர் வைரமுத்து இதுபோன்ற பரிசோதனையை சினிமாப் பாடல்களில் ஏற்கனவே செய்தவர்தான்.
இதே மரபில் வந்த யுகபாரதியின்
//அற்றைத் திங்கள் வானிடம்
அல்லிச் செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்//
என்ற பாடல் நம்மை டிஸ்னிலேண்டுக்கு டூர் அழைத்துச் செல்கின்றது.
சொக்கும் ராகத்திற்கு அவர் வேறு ஏதாவதொரு இசை வாத்தியத்தை உதாரணம் காட்டியுருக்கலாம். வள்ளுவர் சொன்ன “யாழினிது” என்ற பாரம்பரியத்தை இனிதே கடைப்பிடிக்கின்றார்.
ஒரு யுகத்தில் ஒரு பாரதிதான் பிறக்க வேண்டும் என்பதில்லை. இந்த யுகபாரதியும் ஒருவிதத்தில் பாரதிதான். (சந்தான பாரதி, ஆர்.எஸ்.பாரதி, உமா பாரதி இவர்களையெல்லாம் கணக்கில் சேர்க்க மாட்டீர்களா? என்று பாடாய்ப் படுத்தக்கூடாது… சொல்லிப்புட்டேன்)
நாகூர் ஹந்திரி தெரியும். வேதாத்திரி கூட தெரியும். ஆனால் “தேசாந்திரி” என்ற வார்த்தையை முதன் முதலாக யுகபாரதியின் பாடல் வழியாகத்தான் நான் அறிந்துக் கொண்டேன். “தேசாந்திரி” என்பதற்கு நாடோடி அல்லது யாத்திரிகன் என்று பொருளாம். லிஃப்கோ அகராதியில் இல்லாததை எல்லாம் இவர் கீழடி புதையலாய் பதுக்கி வைத்திருக்கிறார்.
//தேசாந்திரி நான்
கால் போகுற காடுகள் மேடுகள்
தேசாந்திரி நான்//
என்ற பாடல் மூலம்தான் இப்பொருள் எனக்குத் தெரிய வந்தது. இந்தியில் “பர்தேசி.. பர்தேசி”என்ற பாடல் நினைவுக்கு வந்தது. Expatriateஆக இருக்கின்ற நானும் பரதேசிதானே?
யுகபாரதியை திரையுலகத்து ஐன்ஸ்டீன். மறுபடியும் பிறந்துவந்த மார்க்கோனி. கவியுலகத்து கலீலியோ என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் புதுப்புது வார்த்தைகளை கண்டுபிடித்த தமிழ்நாட்டு கொலம்பஸ் இவர்.
யுகபாரதியை நேரில் பார்க்கும்போது அவரது விரல்களை கெட்டியாக பிடித்து உலுக்க வேண்டும் என்று எனக்கோர் ஆசை. இதற்குமுன் நாம் கேட்டறியாத புதுப்புது வார்த்தைகள் அவருடைய விரல்களிலிருந்து வந்து கொட்டுகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும்..
அவருடைய “மனப்பத்தாய”த்தில் நெற்களஞ்சியமாக எண்ண முடியாத அளவுக்கு சொற்பருக்கைகள் கொட்டிக் கிடக்கின்றன.
தத்தகாரத்திற்கு எழுதும் அவரது பாடல் வரிகள் டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடி போன்றது. காரம், மணம், குணம் அனைத்தும் நிறைந்து சுள்ளாப்பாக இருக்கும்.
“தேக்குமரம் உடலைத் தந்தது என்று கண்ணதாசன் பாடுவான். “கத்தி” என்ற படத்தில் வரும் இவரது கூர்மையான வரிகளைப் பாருங்கள்.
//காட்டு மரமா வளர்ந்த இவனும்,
ஏத்தி வச்ச மெழுகானேன்.
ஆத்தி எனை நீ பாத்தவுடனே,
காத்தில் வச்ச இறகானேன்//
//கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்//
என்பார் பாவேந்தர் பாரதிதாசனார். காதலன் காதலியிடம் டுபாக்கூர் டயலாக் விடும்போது “வானத்தை வில்லாக்குவேன்” என்றேல்லாம் உடான்ஸ் விடுவான். இப்பாடலில் நாயகன் நாயகியைப் பார்த்து பாடுகிறான்.
//கோர புல்ல ஓர் நொடியில்,
வானவில்லா திரிச்சாயே.
பாறை கல்ல ஒரு நொடியில்,
ஈர மண்ணா கொழைச்சாயே//
என்று தலையில் ‘ஐஸ்’ வைக்கிறான் நாயகன். பாறைக் கல்லை ஈர மண்ணாக நிஜ வாழ்க்கையில் குழைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. காதல் பித்து தலைக்கேறி விட்டால் இதுபோன்ற பிதற்றல்கள் வருவது இயற்கைதான் போலும்.
யுகபாரதியைப் பார்த்தால் “பார் .. அதி சின்னப்பயல்” என்று விளிக்க வேண்டும் போலிருக்கிறது. “ இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்ற சாந்தப் பார்வை.. பூவுக்குள் இப்படி ஒரு பூகம்பம் இருக்கிறது என்பது அவருடைய பாடல் வரிகளின் ரிக்டர் அளவுகோளை வைத்து நம்மால் உணரவே முடிகிறது.
வண்ண உடை அணிந்த பாவையை “வண்ணம் கொண்ட வெண்ணிலவே” என்று கவிஞர் வைரமுத்து பாடினார். இவரோ
//கால் மொளச்ச ரங்கோலியா,
நீ நடந்து வாரே புள்ள.
கல்லு பட்ட கண்ணாடியா
நான் உடைஞ்சு போறேன் உள்ள//
என்று பாடி புதியதொரு தாக்கத்தை நம்மிடையே ஏற்படுத்துகிறார். மாவுக்கோலத்தை விட ‘ரங்கோலி’ மல்டி கலரில் கண்ணைப் பறிக்கும் என்பது உண்மை. பூக்கோலம், மாக்கோலம் என்பதைக் காட்டிலும் “ரங்கோலி” என்ற சொல்லாடல் ” நல்லதொரு சாய்ஸ்.
“நொறுங்கிப் போனேன், “மனமுடைந்து போனேன், என்றெல்லாம் சொல்வதுண்டு. யுகபாரதி இளம் வயதில் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று எத்தனை வீட்டு கண்ணாடியை உடைத்தாரோ தெரியவில்லை.
//கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள//
என்று பாடுகிறார்.
ஆகாயப் பந்தலிலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா என்று பாடுவதெல்லாம் பழைய ஸ்டைல். இவர் “பத்ரி” திரைப்படத்தில்
//ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு//
என்று பாடல் புனைகிறார்.
//மதுர மரிக்கொழுந்து வாசம்//
//பூவே செம்பூவே உன் வாசம் வரும்//
//வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்//
என்றெல்லாம் கவிஞர்கள் பாட்டெழுத கண்டிருக்கிறோம். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான மனமுண்டா இல்லையா என்றுகூட நக்கீரன் போன்றவர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். பெண்கள் மலர் சூடிய கூந்தலோடு நடக்கையில் வாசம் வருவதுண்டு. ஆனால் யுகபாரதியோ
//பார்வையில வாசனைய,
தூவிடுற வசமாக!//
என்ற புதியதொரு சிந்தனையை தருகிறார். பார்வையிலேயே வாசத்தை தூவிவிடும் அவள் எப்பேர்ப்பட்ட ஒரு பேரழகியாக இருக்க வேண்டும் என்று நம்முடைய கற்பனை ரெக்கை கட்டி பறக்கின்றது. இப்படியாக நம் சிந்தனையை உசுப்பிவிடுவதில் படே கில்லாடி இவர்.
எனக்கு வட்டம் என்று சொன்னால் வட்டச் செயலாளர் , மாவட்டச் செயலாளர் இவர்கள்தான் என் ஞாபகத்திற்கு வரும். வட்டம் என்றதும் யுகபாரதிக்கு ஞாபகம் வருவது வட்ட வடிவிலான ஒற்றை நாணயம்.
//புல்லாங்குழலின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்// இந்த வரி இவருக்கு இமாலயப் புகழைத் தந்த வரி.
அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல் ஓட்டை. பல்லாங்குழி, பெளர்ணமி நிலவு, இத்தோடு நிறுத்தியிருந்தால் இவர் ஒரு சாதரணக் கவிஞன். எப்படி கண்ணதாசனுக்கு “பாலிருக்கும் பழமிருக்கும்” என்ற முதலிரவு பாடலில் “காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே” என்ற பொதுவுடமை கருத்தை பாடுகிறாரோ அதுபோல காதற் பாட்டு பாடும்போது இவருக்கு தேசியக்கொடியின் சக்கரமும் ஞாபகத்திற்கு வருவதால் இவரை ஒரு தேசியக் கவிஞன் என்றே பாராட்டத் தோன்றுகிறது.
“ஜோக்கர்” படத்தில் வரும் “என்னங்க சார் உங்க சட்டம்? , என்னங்க சார் உங்க திட்டம்?” என்ற அவரது வரிகள் ஒரு சாமான்யன் சாதாரணமாக கேட்கும் கேள்விபோன்றே எதார்த்தமாக இருக்கின்றது.
ஜோக்கர் ஹல்லா போல்
நல்லோர் கண்டு நகைத்தீரோ
வீழ்வோம் என்று நினைத்தீரோ
“ஹல்லாபோல்” என்றால் “குரலை உயர்த்து” என்று பொருள். 1989-ஆம் ஆண்டு புத்தாண்டு இரவில் கம்யூனிச தோழர் சப்தர் ஹஸ்மி “ஹல்லாபோல்” என்ற வீதி நாடகத்தை தில்லி அருகிலுள்ள சாந்தாபூரில் நடத்திக் கொண்டிருந்தபோது ரெளடிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வை ஒரே வார்த்தையில் ஓர் உணர்ச்சிமிகு பாடலின் முதல்வரியாக தேர்ந்தெடுக்கும் தைரியம் யுகபாரதிக்கு மட்டுமே உண்டு
“வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்ற மகாகவி பாரதியின் வரியைத்தான் “வீழ்வோம் என்று நினைத்தீரோ ?” என்று பன்மையில் கூறுகிறார் யுகபாரதி.
“சொகுசுகாரு தெருவுல / வெவசாயி தூக்குல / வட்டிமேல வட்டிபோட்டு / அடிக்கிறீங்க வயித்துல, நல்ல தண்ணி கெடைக்கல / நல்ல காத்து கெடைக்கல / அரசாங்க சரக்குலதான் / கொல்லுறீங்க சனங்கள”
ஒண்ணும் வேண்டாம். தில்லியில் போராடும் சர்தார்ஜீக்களுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் இப்பாடல்தான் இன்று அவர்களது தேசிய கீதமாக இருந்திருக்கும்.
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம். இவர் கன்னித்தமிழுக்கு தந்ததோ “தெருவாசகம்”..
சினிமாப் பாடல் எழுதுகையில் அதிலுள்ள ஒரு சில வாசகம் தெருவில் போவோர் வருவோரையெல்லாம் முணுமுணுக்க வைக்க வேண்டும். தெருவெல்லாம் ஒலிக்கும் வாசகத்தை தேர்ந்தெடுக்கும் கலையில் யுகபாரதி கைத்தேர்ந்த கவிராஜர்.
#அப்துல்கையூம்