எத்தனையோ பின்னணி பாடகர்கள், பாடகிகள் திரைப்பட இசையுலகுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே சாதனைகள் புரிவதில்லை; சரித்திரம் படைப்பதில்லை. அந்த மகத்தான வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே வரமாக வாய்க்கிறது.
1950-களின் பிற்பகுதியில் தொடங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒலிக்கும் புலப்பாக்க சுசிலா அம்மாவின் குரல்… இனிமையின் இலக்கணம். தாலாட்டு, காதற்பாட்டு, நெஞ்சை நெகிழ வைக்கும் சோகப்பாட்டு, பக்திப்பாட்டு மற்றும் குதூகலம் கொப்பளிக்கும் இளமைப்பாட்டு என்று எது கொடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்தவர் பி.சுசிலா அம்மையார்.
பாடகிகளின் வரிசையில், வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் தென்னிந்தியாவில் பி.சுசிலா – இவர்கள் இருவரது சாதனையை முறியடிக்க இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.“சிரித்தாலும் போதுமே” (நீதிக்குப் பின் பாசம்) , “சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே” (எங்கிருந்தாலும் வாழ்க) போன்ற பாடல்களில் பி.சுசிலா அப்பாடலுக்கிடையே அசல்ட்டாக உதிர்க்கும் சிரிப்பே அலாதியானது. எதார்த்தமாக இருக்கும்.
அதேபோன்று, “உன்னைக் கண் தேடுதே” (கணவனே கண் கண்ட தெய்வம்) , “ஜவ்வாது மேடையிட்டு” (பணத்தோட்டம்), “நினைத்தால் சிரிப்பு வரும்” (பாமா விஜயம்) போன்ற பாடல்களில் மதுபோதையில் ஒரு பெண் பாடும் அதே உணர்வை அவர் அம்சமாக ஏற்படுத்தி நம் எல்லோரையும் அசத்தியிருப்பார் “மலர்ந்தும் மலராத” பாடலில் “மாமன் தங்கை மகளான” என்ற வரிகளுக்குப் பின்னால் வரும் விசும்பலை மறக்கத்தான் முடியுமோ?
கண்ணதாசன் அவருக்கு வைத்த கடினமான I.A.S. பரிட்சையில் அவர் Distinction மார்க் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். “வெண்ணிற ஆடை” படத்தில் கண்ணதாசன் எழுதிய “கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல” என்ற பாடலில் ‘னகரம்-ணகரம்’,, ‘லகரம்-ளகரம்’ இவைகளை வைத்து சொற்சிலம்பம் ஆடி, பி.சுசிலாவுக்கு ஒரு சவாலாகவே வார்த்தை விளையாட்டுகளை அமைத்திருந்தார். மிகத் திறமையாக பாடி அதில் அவர் பாஸ் மார்க் வாங்கினார்.
‘கண்ணன்’ – ‘என்னும்’ – ‘மன்னன்’ – ‘பெண்மை’ – ‘எண்ணம்’ – ‘என்ன’ – ‘சின்ன’ – ‘பின்ன’ – ‘என்னை’ – ‘துன்பம்’ – ‘அன்பே’ – ‘நாணம்’ – ‘போனால்’ – ‘அன்றும்’ – ‘இன்றும்’ – ‘தென்றல்’ ……இவையாவும் ‘னகர-ணகர’ வார்த்தை விளையாட்டு.
‘கல்லும்’ – ‘முள்ளும்’ – ‘வெள்ளம்’ – ‘உள்ளம்’ – ‘மெல்ல’ – ‘செல்ல’ – ‘துள்ள’ – ‘கிளிகள்’ …. இவை யாவும் ‘லகர-ளகர’ வார்த்தை விளையாட்டு.
தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட பி.சுசிலா, ஆசான் வைத்து தமிழைக் கற்றுத் தேர்ந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று சின்னத் திரையில் காணும் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் பலருக்கும் ‘தமிழ்’ என்றுகூட சரியாக உச்சரிக்க வருவதில்லை, ‘தமில்’ என்றுதான் உச்சரித்து நம்மை சோதிக்கிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.
எல்லோரும் எல்லா மொழிகளிலும் பாடி விடலாம். அது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை. ஆனால் அந்தந்த மொழிக்கேற்ப அட்சர சுத்தமான உச்சரிப்பு எல்லோருக்கும் வந்து விடாது. இக்கலையில் பி.சுசிலா முனைவர் பட்டம் பெற்றவர் என்றே சொல்ல வேண்டும். அவருடைய தமிழ் உச்சரிப்பைக் கேட்டவர்களிடம் “அவரது தாய் மொழி தமிழ் கிடையாது” என்று நாம் சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.
“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்ற பாடலில் இழைந்துவரும் வடக்கத்திய ஷெனாய் இசை ………“
சொன்னது நீதானா” என்ற பாடலில் மனதை மயிலிறகால் வருடும் சிதார் இசை…….
“அந்த சிவகாமி மகனிடம்” என்ற பாடலில் நெஞ்சை நெகிழ வைக்கும் வீணையின் நாதம்……..
“பார்த்த ஞாபகம் இல்லையோ” என்ற பாடலில் உள்ளத்தை துள்ள வைக்கும் பியானோ இசை…..“அத்தான் என்ன அத்தான்” என்ற பாடலில் வரும் அலைபாயும் அக்கார்டின் இசை….
மேற்கண்ட இப்பாடல்களில் “எது சிறந்தது? வாத்தியமா அல்லது வாத்தியத்தோடு இழைந்து வரும் பி.சுசிலாவின் குரலினிமையா?” என்று யாராவது நம்மிடம் வினா தொடுத்தால் அதற்கு பதில் சொல்ல நாம் திணற வேண்டியிருக்கும்.
“என்னை மறந்ததேன் தென்றலே”, “கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ”, “மன்னவனே அழலாமா” போன்று சோகத்தை பிழியும் பாடல்கள் வேறுண்டோ?
“அழகே வா அருகே வா , “ நானே வருவேன்” போன்ற பாடல்களில் இசையோடு கலந்து திகிலை ஏற்படுத்தும் மாயை பி.சுசிலாவின் குரலுக்கு மாத்திரமே உண்டு. , எத்தனையோ தாலாட்டு பாடல்கள் வந்தாலும் இன்னும் தாய்மார்களுக்கு பிடித்தமான பாடலாக விளங்குவது “அத்தைமடி மெத்தையடி” என்ற ‘கற்பகம் படத்து பாடலும், ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற “அன்பில் மலர்ந்த ரோஜா “ என்ற தாலாட்டு பாடலும்தான். அன்னைமார்கள் குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது “முத்தான முத்தல்லவோ” என்ற முத்தான பாடல்.
அண்ணன்-தங்கை பாசத்திற்கு இன்னும் எடுத்துக்காட்டாக விளங்குகின்ற பாடல் “மலர்ந்தும் மலராத” மற்றும் “அண்ணன் ஒரு கோயில் என்றால்” என்ற பாடல்கள்தான். என்னுடைய பார்வையில் ஜெயலலிதா மற்றும் சரோஜாதேவிக்கு பி.சுசிலாவின் குரலைப் போன்று வேறு எவருடைய குரலும் அவ்வளவு தத்ரூபமாக – பொருத்தமாக – ஒத்துப் போனதில்லை.
சில குரல்கள் சிலரை சிம்மாசனத்திலேயே உட்காரவைத்து அழகு பார்க்கவல்லது. டி.எம்.எஸ். அவர்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொன்ன திமிரான அந்த வசனத்தை “அர்த்தமற்றது” என்று முற்றிலும் நாம் நிராகரிக்க முடியாதுதான்.
“ஆடை முழுதும் நனைய நனைய” என்ற பாடலை பி.சுசிலாவின் தேன் குரலில் செவியுறுகையில் நாமும் வான்மழை நீரில் நனைந்து கும்மாளம் போடுகின்ற ஓர் உணர்வு நமக்குள் ஏற்படுகிறது. “அம்மம்மா காற்று வந்து” என்ற பாடலைக் கேட்கும்போது நாமும் அருவியில் குளித்துக்கொண்டே களிப்பது போல் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது.
P.B. ஸ்ரீனிவாசை விட இனிமையாக மயிலிறகால் மனதை வருடும் பாடகர் வேறு யாருமில்லை என்பேன். ஆனால் அவரது மழலை மொழி உச்சரிப்பு அவருடைய தாய்மொழி தமிழ் இல்லை என்பதை காட்டிக் கொடுத்துவிடும். ஜேசுதாஸ், கண்டசாலா, எஸ்.ஜானகி, சித்ரா இவர்கள் எல்லோருக்குமே இது பொருந்தும். அதற்காக இவர்களது குரலில் இனிமை இல்லை என்று அர்த்தமாகாது.
“குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…” என்ற பாடலில் உதித் நாராயண் தத்து பித்து என அபத்தமாக உளறும் உச்சரிப்பின் இனிமைக்காகவே நான் அப்பாடலை பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டதுண்டு. மழலை மொழியும் ஓர் இனிமைதானே?
கவிஞர் வைரமுத்து “பிரியமான பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லே” என்று எழுதித் தந்த ஒரு பாடலுக்கு அவர் “பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லே ” என்று பாடியது ஒரு ரசிக்கத்தக்க சுவையான காமெடி. அவர் பாடிய பல பாடல்களுக்கு கோனார் நோட்ஸ் போட்டால்தான் பொருள் விளங்க முடியும்.
ஜேசுதாஸ் பாடிய “தெருக்கோயிலே ஓடிவா” வரிகளை இன்னும் யாரும் மறப்பதற்கு தயாராக இல்லை. ஹரிஹரன் தமிழில் பாடும்போதுகூட ஏதோ கஜல் பாடுவது போன்ற ஒர் உணர்வு எனக்கு ஏற்படும். அது எனக்கு மட்டும்தானா அல்லது எல்லோருக்குமா என்று எனக்குத் தெரியாது.
எஸ்.பி.பாலுவும், ஜேசுதாஸும் எத்தனையோ பிரபலமான பாடல்கள் இந்தியில் பாடியிருந்தாலும் கூட , ஜேசுதாஸ் “கோரி தேரா காவ்ன் படா பியாரா” என்று பாடும்போது அவர் ஒரு மலையாளி என்பதை அவரது உச்சரிப்பு பேஷாக காட்டிக் கொடுத்துவிடும்.
தமிழ்த் திரைப்பட இசையின் மூன்றெழுத்து ராஜாங்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்ட எம்.எஸ்.வி. அவர்கள் ஒற்றை வயலின் ராகத்துடன் உலவ விட்ட மனதை விட்டு அகலாத பாடல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய “வான் நிலா நிலா அல்ல” என்ற பாடல் மற்றும் “பி.சுசிலா பாடிய “அன்று ஊமைப் பெண்ணல்லோ” என்ற பாடல் – இவையிரண்டும் சரித்திரப் பாடல்கள்.
என்னதான் துள்ளல் பாட்டு பாடினாலும், குரலில் எத்தனையோ விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டினாலும், உடலில் எந்தவிதமான அசைவும் இன்றி பாடக்கூடிய பழக்கம் பி.சுசிலா, எஸ்.ஜானகி, லதா மங்கேஷ்கர் இவர்கள் எல்லோருக்குமே உண்டு. உஷா உதூப், எல்.ஆர்.ஈஸ்வரி, ஆஷா போஸ்லே – இவர்களுடைய கைகளை கட்டிப்போட்டு “இப்போது பாடுங்கள் பார்க்கலாம்” என்றால் அவர்களால் பாடவே முடியாது.
“உன்னை ஒன்று கேட்பேன்” அல்லது “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து” அல்லது “பார்த்த ஞாபகம் இல்லையோ” என பி.சுசிலா பாடிய ‘புதிய பறவை’ படப்பாடல்கள் ஏதாவதொரு மெல்லிசை கச்சேரி மேடைகளில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
தமிழை வாழ்த்தி எத்தனையோ பாடல்கள் வந்தாலும்கூட ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற பாடலுக்கிணையாக வேறு ஒரு பாடல் இதுவரை வெளிவந்ததில்லை. பாவேந்தரின் பாடலுக்கு பி.சுசிலா செய்த மாபெரும் கான அஞ்சலி அது.
“1963-ல் வெளியான “கற்பகம்” படத்தில் வரும் ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான்…’ பாடல் என் வெற்றிக்கு காரணமாக இருந்த பாடல்” என வாலியே ஒருமுறை கூறியிருக்கிறார். அதற்கு கானசுந்தரி பி.சுசிலாவின் குரலினிமையும் ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
“நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்”, “வசந்தத்தில் ஓர் நாள்”, “எங்கே நீயோ நானும் அங்கே”, “நினைக்கத் தெரிந்த மனமே” போன்ற பாடல்கள் அனைத்துமே என்றுமே நினைவை விட்டு நீங்காத, காலத்தால் அழிக்க முடியாத கானங்கள். “அனுபவம் புதுமை” போன்று விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடல்களும் உண்டு. கொடுத்த பணியை செவ்வென செய்யும் திறன் அவருக்குண்டு
எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் “ஆண்டவனே உன் பாதங்களை” என்ற அவரது பாடல்தான் தமிழ் மக்களின் பிரார்த்தனைப் பாடலாக ஒலித்துக் கொண்டிருந்தது.
2018-ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் பஹ்ரைனில் நடந்த இசை நிகச்சிக்கு பி.சுசிலாவின் இசைநிகழ்ச்சிக்கு அடியேன்தான் தொகுப்பாளனாக பணியாற்றினேன். திறந்த வெளி அரங்கம். சரியான குளிர்காலம் வேறு. இந்த வயதிலும், அதே இனிமை மாறாது அவர் பாடிய தொனி இன்னும் என் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது. உரையாடுகையில் அப்படியொரு பணிவு.
ஒருமுறை என் மனைவியிடம் “உனக்கு பி.சுசிலாவிடம் பிடித்தது எது?” என்று கேட்டபோது, எனக்கு கிடைத்த பதில் “அவர் பட்டுப்புடவை கட்டும் அழகு” என்பது .


118Hilal Musthafa, DrAbdul Razack and 116 others20 comments4 sharesLikeCommentShare