“ஸ்ரீகாந்த்” என்று தட்டச்சு செய்து கோகுல் அண்ணாவிடம் (Google) விசாரணை செய்தால் ‘ரோஜாக்கூட்டம்’ படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் பற்றிதான் கதை கதையாக அளக்கிறார். இன்னும் சற்று ஆழமாக தேடிப்பார்த்தால் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
நடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்!
அவருக்கே ஈடு கொடுத்து பேர் வாங்கிய நடிகர் ஶ்ரீகாந்தை இணையத்தில் தேடுவதற்கு “பழைய நடிகர் ஸ்ரீகாந்த்” என்றுதான் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாமே காலக்கொடுமை ஐயா.
ராஜா என்ற செல்லப்பெயர் கொண்ட வெங்கட்ராமனான இவரை ஸ்ரீகாந்த் என்று பெயர் மாற்றியவர் டைரக்டர் ஸ்ரீதர்.
கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்த இவரை இணையவாதிகள் அதிகம் பொருட்படுத்தவில்லை என்றே தெரிகிறது.
‘வெண்ணிற ஆடை’, ‘நாணல்’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’, ‘அன்புத்தங்கை’, ‘வைரம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘பைரவி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘காதல் கொண்டேன்’ இப்படங்களின் குறிப்புகள் மாத்திரம்தான் அவருடை விக்கிபீடியா பக்கத்தில் காணக் கிடைக்கிறது.
“கண்ணதாசன் என்னை போண்டா வாயன்னு சொன்னாரு ஏன்னு தெரியலே” என்று அப்பாவித்தனமாக வி.ராம்ஜியிடம் ஒரு பேட்டியில் அவர் கூறுகிறார்.
“நேருவைக் கூட நம்ம கவியரசர் “சுட்ட கத்திருக்கா மூஞ்சி” “கருங்குதிரை மூஞ்சி” ‘சப்பிப்போட்ட மாங்கொட்டை மூஞ்சி’ என்று வசைபாடி இருக்காரு சார். அவரு பேச்சையெல்லாம் நீங்க சீரியசா எடுத்துக்காதீங்க ” என்று அவருக்கு நான் ஆறுதல் சொல்லணும்போல் இருந்தது.
ஶ்ரீகாந்த் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எப்போதுமே ஓர் அபிமானம் உண்டு. என் பள்ளிப் பருவத்தில் அவரை நேரில் கண்டிருக்கிறேன், என் சித்தப்பா முகம்மது ஹனீப் அவர்கள் கட்டிடக்கலை பட்டப்படிப்பு முடித்தபின் சென்னை நந்தனத்திலிருந்த குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு ஸ்டெனோவாக பணிபுரிந்தவர் ஶ்ரீகாந்தின் மனைவி. அவருடைய பெயர் சாந்தகுமாரி என்ற ஞாபகம். என் சித்தப்பாவின் வீட்டிற்கு தன் கணவருடன் வந்திருக்கிறார். ஶ்ரீகாந்த் என் சித்தப்பாவின் நண்பர்கூட. பழகுவதற்கு இனிமையானவர்.
“தங்கப் பதக்கம்” படத்தில் ஸ்ரீகாந்தின் நடிப்பை பார்த்து விட்டு ”அடச்சே.. இவனெல்லாம் ஒரு புள்ளையா? செளத்ரி எவ்ளோ நல்ல மனுஷன். அவருக்கு இப்படி ஒரு தறுதலை மகனா? என்று திட்டித் தீர்த்த தாய்க்குலங்கள் ஏராளம்.
சில வருடங்களுக்கு முன்பு கூட தெம்புடன் இளமையாக காட்சி தந்த இவர் இப்போது உருக்குலைந்து காட்சி தருகிறார். முன்புபோல அவருக்கு சரளமாக பேச்சு வருவதில்லை. நா குளறுகிறது. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகி விட்டாரே என்று கண்கள் கசிகிறது. “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடிய ஒளவையார் “கொடிது கொடிது முதுமை கொடிது” என்று ஏனோ பாடாமல் சென்று விட்டார்.
அவருடைய முதல் படமான “வெண்ணிற ஆடை” படத்தில் ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல’ என்ற பாட்டுக்கு நம்ம முன்னாள் முதலமைச்சருடன் ஜோடியாக டூயட் பாட்டு பாடும்போது கோட் சூட் போட்டுக் கொண்டு ஸ்மார்ட்டாக நடித்த காட்சி இன்னும் நம் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது.
அமெரிக்க தூதரகத்தில் ஒரு நல்ல பதவியை வகித்துக் கொண்டிருந்த இவரை, சூழ்நிலை இழுத்துவந்து சினிமாவில் விட்டபோதுதான் ‘அமெச்சூர்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு புரிய வந்தது. அப்போதெல்லாம் ‘அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ ‘அமெச்சூர் டிராமா’ இதுபோன்ற சொல்லாடல் மிகவும் சகஜமாக இருந்தது.
ஒருக்காலத்தில் தன்னை தீவிர காமராஜர் தொண்டராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். எமெர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்தவர். இதனாலேயே பிற்காலத்தில் படங்களில் இவர் சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார் என்று சொல்வார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.
இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற படங்களில் J.K. இவரை பயன்படுத்திக் கொண்டார்.
நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, வியட்நாம் வீடு சுந்தரம், கே.பாலச்சந்தர், கவிஞர் வாலி இவர்கள் எல்லோருமே “வாடா.. போடா என கலாய்க்கும் நண்பர்கள் குழாம்.
இவருடைய ரூமில் உட்கார்ந்துக்கொண்டு கே.பாலச்சந்தர் எழுதிய நாடகங்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘மெழுகுவர்த்தி’, ‘நாணல்’, ‘நவக்கிரகம்’ அனைத்தும் ஹிட் ஆனது. இவையனைத்தும் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.
‘காசேதான் கடவுளடா’ படத்தில் அவருடைய நகைச்சுவை நடிப்பு பிரமாதம். அதன் பிறகு வந்த படத்தில் யாவும் வில்லன் பாத்திரம்தான். படத்தில் ‘கற்பழிப்புக் காட்சியா கூப்பிடு ஶ்ரீகாந்தை’ என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.
வில்லன் பாத்திரத்தில் நடிக்க இவரை அணுகியபோது ‘இந்தப் படத்தில் நான் யாரை கற்பழிக்க வேண்டும் என்று கேட்பேன்’ என்று தன் பொக்கை வாய் திறந்து, குழந்தையாக சிரித்துக்கொண்டே வெகுளித்தனமாக “ஹிந்து தமிழ்” காணொளிக்கு பேட்டி அளிக்கிறார்.
ஞான ஒளி, தம்பிக்கு எந்த ஊரு, ராஜபார்ட் ரங்கதுரை, மல்லிகைப்பூ, பூவா தலையா, மாணவன் இதுபோன்ற எத்தனையோ படங்கள். ‘கோமாதா என் குலமாதா’ படத்திலும் இவர்தான் கதாநாயகன்.
‘பைரவி’ படம் வெளிவந்தபோது ரஜினிகாந்தை விட ஸ்ரீகாந்த்தான் அப்போது பிரபலமான நட்சத்திரம். ‘இவர்களுடன் ஸ்ரீகாந்த்’ என இவருடைய பெயரைத்தான் கொட்டை எழுத்தில் காட்டினார்கள்.
‘பருவகாலம்’, ‘சட்டம் என்கையில்’, ‘மரியா மை டார்லிங்’ போன்ற படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தவர். ‘ராஜநாகம்’ படத்தில் ஹீரோவாக நடித்தபோது இவருக்காக பெரிய கட்-அவுட் வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

‘தங்கப்பதக்கத்திற்கு 2,000 ரூபாய் சம்பளம் வாங்கியபின் அதிக பட்சமாக 10,000 ரூபாய்வரை சம்பளம் வாங்கினேன்’ என்று பெருமையாக கூறுகிறார்.
வில்லன் நடிகராக இருந்த நம்பியாருக்கு எப்படி தெய்வபக்தி அதிகமோ அதுபோல வில்லன் நடிகராக இருந்த ஸ்ரீகாந்துக்கும் தெய்வ பக்தி அதிகம். குருசாமி நம்பியாருடன் சேர்ந்து 40 முறைக்கு மேலாக சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்.
நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம். ஒருகாலத்தில் படப்பிடிப்பு நேரத்தில் சகநடிகர்கள் இவரைக் கண்டால் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்களாம். காரணம் இவரது கடிஜோக்ஸுக்கு பயந்துதான். படவுலகத்தில் இவருக்கு அறுவை மன்னன் என்ற பெயரும் உண்டு..
மூதறிஞர் ராஜாஜி எழுதிய புதினத்தைத் தழுவி ஸ்ரீகாந்த் நடித்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1974ஆம் வெளிவந்த படம் ‘திக்கற்ற பார்வதி’. இவர் நடித்த இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
பாலச்சந்தர், பி.மாதவன், ஸ்ரீதர் போன்ற பெரிய இயக்குனர்கள் இவருடைய திறமையை திறம்பட பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஶ்ரீகாந்துக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் மிகவும் இஷ்டம், வயதான காலத்தில் சின்னத் திரையிலும் தோன்றினார்.
இவருடைய இப்போதைய ஆசை தன் பழைய நண்பர் ரஜினிகாந்தை மீண்டும் காண வேண்டும் என்பதுதான். தன் நண்பர் மேல் இருக்கும் அக்கறையில் ‘எவ்ளோ பெரிய நடிகர். ரஜினிகாந்த் அவர் அரசியலுக்கு வர வேண்டாமே. சிவாஜியால் கூட முடியவில்லையே’ என்று ஆதங்கமாக கூறுகிறார்.
அவருடைய தற்போதைய வயதான கோலத்தை நான் காணொளியில் காணாமலேயே இருந்திருக்கக் கூடாதா?
டிப்டாப்பாக உடை உடுத்திக்கொண்டு, அரும்பி மீசையுடன், அழகாக சீவிய தலைமுடியுடன், மிடுக்கான நடை, தோளை குலுக்கிக் கொண்டு திமிருடன் தெனாவெட்டாக டயலாக் பேசும் அந்த இளமைக்கால ஶ்ரீகாந்த்தான் என் கண்ணில் இன்னும் பசுமையாக நிற்கிறார்.
அப்துல்கையூம்