யாரிந்த கமாலுத்தீன்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்ற சந்தேகம் எழலாம். கருணை ஜமால் எப்படி கலைஞரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்ந்தாரோ அதுபோன்று கமாலுத்தீனும் கலைஞரின் வாழ்க்கையில் ஓர் அங்கம். (இதையும் மறுப்பதற்கு இப்போது ஒரு கூட்டம் வரும் பாருங்கள்)
கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் சகோதரர்கள். இம்மூவரும் இணைந்து “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலமது.
கமால் பிரதர்ஸ் படநிறுவனத்தின் விளம்பரம் தினத்தந்தி பிரசுரம் ஆகும் போதெல்லாம் ஆவலுடன் நான் அதை கூர்ந்து கவனிப்பேன். காரணம் அந்த படநிறுவனத்து LOGO-வில் நாகூர் மினாரா போட்டோ இடம் பெற்றிருக்கும். நாகூர்க்காரனான எனக்கு அந்த விளம்பரம் இயற்கையாகவே ஓர் ஈர்ப்பைத் தந்தது.
கமாலுத்தீன் சகோதரர்களின் குடும்பம் வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்தார்கள். பெருமளவில் பொருளீட்டினார்கள். 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. பெரும் நட்டத்தை இவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிற்காலத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது.
புதையல் (1957), தெய்வப்பிறவி (1960), வாழ்க்கை வாழ்வதற்கே (1964), கண்கண்ட தெய்வம் (1967), நிமிர்ந்து நில் (1968) போன்ற பிரபலமான படங்களைத் தயாரித்தவர்கள் கமால் பிரதர்ஸ். இதில் “தெய்வப்பிறவி” படத்தை ஏ.வி.எம்.நிறுவனத்தாருடன் சேர்ந்து எடுத்தார்கள்.
கலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி அன்பளிப்பாக பரிசளித்தவர்கள் கமால் பிரதர்ஸ்தான் என்று அவர்கள் குடும்பத்திற்கு வேண்டியவர்கள் சொன்னதை நான் காதால் கேட்டிருக்கிறேன். “இல்லை இது தவறான தகவல். கோபாலபுரம் வீடு பராசக்தி, மனோகரா போன்ற வெற்றிப் படங்கள் வெளியான பின்னர் அதில் கிடைத்த வருமானத்தில் கலைஞருடைய சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது” என்றும் சிலர் மறுத்து எழுதியதையும் நான் படித்திருக்கிறேன். அந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.
சிவாஜி, பத்மினி இணைந்து நடித்து கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுத 10.05.1957ல் வெளியான “புதையல்” பெரும் வரவேற்பைக் கண்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் கமாலுத்தீன் சகோதரர்கள். திரைப்பட நடிகரும், பாடகருமான சி.எஸ்.ஜெயராமனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த பாடல் ‘புதையல்’ படத்தில் வரும் “விண்ணோடும் முகிலோடும்” என்ற பாடல். மேலும், கமால் பிரதர்ஸ் தயாரித்த ‘தெய்வப்பிறவி’ படத்தில் வரும் “அன்பாலே தேடிய”, மற்றும் “தன்னைத் தானே” போன்ற பாடல்களும் அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது.
சி,எஸ்.ஜெயராமன் வேறு யாருமல்ல. கலைஞர் மு.கருணாநிதியின் நெருங்கிய உறவினர். அதாவது முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார்.
இப்படம் பிரமாண்டமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதியார், தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆத்மநாதன், ஏ.மருதகாசி போன்ற எல்லோருடைய பாடல்களை இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து இடம்பெறச் செய்தார் கமாலுத்தீன். பின்னணி பாடுவதற்கு சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.சௌந்தர்ராஜன், ராகவன், பி.சுசீலா, எம்.கே.புனிதம், ராணி, எஸ்.ஜே. காந்தா என ஒரு பெரிய பட்டாளத்தையே களம் இறக்கிவிட்டிருந்தார்.
பிற்காலத்தில் கமால் பிரதர்ஸ் மூத்தவர் கமாலுதீன் படம் எடுத்து நொடித்துப் போய் சிரமப் பட்டுக் கொண்டிருந்தார். இந்த விஷயத்தை யாரோ கலைஞரின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள். “கலைஞர் கமாலுத்தீனை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த செய்தி கமாலுத்தீன் காதுகளுக்கும் எட்டியது. இருந்தாலும் கமாலுத்தீனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. “ஆஹா..ஓஹோ என்று செல்வாக்கோடு வாழ்ந்த நாம் அவரிடம் சென்று உதவி கேட்பதா?” என்று எண்ணி கலைஞரை சென்று சந்திக்க அவர் மறுத்துவிட்டார். .
இயக்குனர் கலைஞானம் அவர்கள் கமாலுத்தீனைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். கலைஞருக்கும் கமாலுத்தீனுக்கும் உள்ள தொடர்பையும் எழுதியிருக்கிறார். இவர் ஏ.வி.பி.ஆசைத்கம்பி எழுதிய “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற நாடகம் மற்றும் கலைஞரின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவருக்கு அந்த நட்புகளின் ஆழம் நன்றாகவே தெரியும்.
#அப்துல்கையூம்