“இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் நம்மக்கிட்ட வச்சுக்காதே” என்ற சொல்லாடலை நாம் கேட்டிருப்போம். என் ஆத்ம நண்பரும் இயக்குனருமான ‘அசத்தப்போவது யாரு’ ராஜ்குமார் “வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே” பாடலை கலைஞர்களை ஆட வைத்து பிரபலப்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் நம் மனதில் பசுமையாக இருக்கிறது.
பூச்சாண்டி என்றால் என்ன? குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தால் நம்ம தாய்மார்கள் சொல்வது “ஒழுங்கா சாப்பிடலேன்னா பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்” . குழந்தைகளைப் பொறுத்தவரை பூச்சாண்டி என்றால் கோரமான முகம் கொண்ட பயங்கரமான உருவம்.
எங்க ஊரு பக்கம் பூச்சாண்டிக்கு பதிலாக “மாக்கான்“ என்று சொல்லி பயமுறுத்துவார்கள். மாக்கான் என்றால் மடையன் என்ற பொருளிலும் சொல்வதுண்டு. மலாய் மூல மொழியிலிருந்து “மாக்கான்” என்ற சொல்லை கடன்வாங்கி “சோத்துமுட்டி” என்ற பொருளில் பயன்படுத்துகிறார்களோ என்றுகூட நான் நினைத்ததுண்டு. வயிறு முட்ட சாப்பிட்டு, சட்டையும் அணியாமல் தொந்தி தள்ளிக் கொண்டு வருகிறவனைப் பார்த்தால் குழந்தைகளுக்கு சற்று பயமாகத்தானே இருக்கும்?
வெள்ளைக்காரன் குழந்தைகளுக்கு “Twinklie, Twinkle, Little Star. How I wonder what you are” என்று கற்றுக் கொடுக்குறான். அதனால் அவன் குழந்தைகள் சந்திரனுக்கு போகுதுங்க, விண்வெளி ஆராய்ச்சி பண்ணுதுங்க.
நாம என்னடான்னா “பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்” என்று சொல்லி பிஞ்சு மனதிலேயே பயத்தை விதைக்கிறோம். அக்குழந்தை வளர்ந்து பெரியவனானால் தெனாலி கமல்ஹாசன் போல்தானே வரும்?
இதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
//வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!//
என்று பாடி வைத்துவிட்டு போனான். சங்க காலத்திற்கு பிறகு வந்த 3,4,மற்றும் 5-ஆம் நூற்றாண்டை இருண்டகாலம் என்று சொல்கிறார்கள். சமணம் புத்தமதம் மேலோங்கி இருந்த காலம் அது. சைவம் வைணவம் மீது அடக்குமுறை ஏவி விட்ட காலம் அது. அப்போது விபூதி பூசி வெளியே உலாவுவது தடுக்கப்பட்டிருந்த காலம். அரசரால் தண்டனைக்குள்ளாவார்கள். கர்னாடக (மைசூர்) ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் தங்கள் செல்வாக்கை செலுத்தினார்கள். அன்றைய காலத்தில் சைவ வழிபாட்டாளர்கள் குறிப்பாக சிவனை வழிபாடும் சாதுக்கள்/ ஆண்டிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டி கோவணம் மட்டும் அணிந்து வெற்று மேனியில் விபூதிகள் பூசியவாறு வீதியில் உலா வந்தனர். சமண ஆட்சியாளர்களின் சட்டத்துக்கு அவர்கள் கட்டுப்பட தயாராக இல்லை.. அவர்களைப் பார்த்து மக்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். அரசரின் ஆட்கள் பார்த்துவிட்டால் தாங்களும் தண்டனைக்கு உள்ளாகி விடுமோ என்ற பயத்தில். (இது திரு R.B.V.S. மணியன் சொற்பொழிவிலிருந்து கேட்டது)
#அப்துல்கையூம்