நான் பென் பார்த்த படலத்தை என்னவென்று சொல்வேன். சுகமான அனுபவம் என்-பேனா? அல்லது மறக்க முடியாத அனுபவம் என்-பேனா?
நாங்கள் பள்ளிக்கூட பரிட்சை எழுதும் காலத்தில் பந்துமுனைத்தூவல் எழுதுகோல் பிடித்து எழுதக்கூடாது. ஊற்றுத்தூவல் எழுதுகோல்தான் பயன்படுத்தணும்.
(ரொம்பவும் போட்டு மண்டையை குழப்பிக்கொள்ள வேண்டாம். வேண்டுமானால் உங்களுக்கு புரியும்படி இனி இங்க் பேனா, பால்பாயிண்ட் பேனா என்றே எழுதுகிறேன்)
மனுஷனுக்கு மண்ணாசை, பொன்னாசை கூடாது என்பார்கள். ஆனால் அக்காலத்தில் எனக்கு பென்னாசை இருந்தது உண்மைதான். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?
நான் அப்போது Writer பேனா வைத்துதான் எழுதிக்கொண்டிருந்தேன். பென் மூடியை சரியாக மூடவில்லை என்றால் பென் மை கசிந்து சட்டைப்பை எல்லாம் நாசமாகி விடும். ஆமாம் பென் பாவம் பொல்லாதது.
எப்படியாவது பைலட் அல்லது ஹீரோ பேனா வாங்கணும் என்று ஆசை என்னுள் ‘மை’யல் கொண்டிருந்தது. சென்னையில் ஒரு சில கடைகளுக்கு என் தந்தையார் அழைத்துச் சென்றார். பென் பிடிக்கவில்லை. “பென்னொன்று கண்டேன் பென்னங்கு இல்லை. என்னென்று நான் சொல்லலாகுமா” என்று மனதுக்குள் பாடலை முனகியபடி நானும் அவருடன் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன்.
அகலப்பாதை பகுதியில் (BROADWAY) PEN CORNER என்ற கடைக்கு என் தந்தை கூட்டிக்கொண்டு போனார். கடை முழுக்க பென்கள்தான். ஒல்லியான பென்கள். குண்டான பென்கள். எல்லாமே MOODY டைப்தான். ஆனால் ஆண்கள்தான் வியாபாரம் செய்தார்கள்.
தந்தையார் ஹீரோ பேனா ஒன்று வாங்கிக் கொடுத்தார். பிறகுதான் நினைத்தேன் பைலட் பேனா வங்கியிருக்கலாமே என்று. பென் புத்தி பின்புத்தி. பார்க்கர் பேனா கூட கேட்டிருக்கலாம். அது இன்னும் விலை அதிகம்.
இங்க் பேனா என்றால் இத்யாதிகளும் கூடவே சேர்த்து வாங்க வேண்டும். எக்ஸ்ட்ரா நிப், நிப் கட்டை. பிரில், இங்க் பாட்டில் இவ்வளவும் அவசியம். பிரில், கேம்லின் அல்லது இந்தியன் இங்க் இவைகள்தான் நல்ல இங்க்.
ஃபில்லர் இல்லாத பேனாவாக இருந்தால் இங்க் ஃபில்லர் வேறு வாங்க வேண்டும். நல்ல பிராண்டு இங்க் ஃபில்லர் உள்ள பென் என்றால் பணக்கார வீட்டுப் பையன் என்று அர்த்தம். ராக்ஃபெல்லர் மாதிரி என்று வேண்டுமானலும் வைத்துக் கொள்ளுங்களேன்.
ஊரில் சொற்ப காசுக்கு பெட்டிக் கடைகளில் இங்க் நிறைத்து கொடுப்பார்கள். இங்க் ஃபில்லர் கூட இல்லாமல் லாவகமாக சிந்தாமல் கடைக்காரர் நம்முடைய பேனாவை வாங்கி அதில் ஊற்றிக் கொடுப்பார். ஆச்சரியத்துடன் அவர் திறமையைக் கண்டு வியப்பேன். ஊற்றியவுடன் சள்ளென்று இறங்கிவிடும். பென் என்றால் பேயும் இறங்கும் என்பார்களே.
பட்டையாக எழுத வேண்டுமென்றால் நிப்பை தரையில் வைத்து தேய்க்க வேண்டுமாம். அல்லது நிப்பின் பிளவை இழுத்து அகலப்படுத்த வேண்டுமாம். நண்பனொருவன் ஐடியா சொன்னான்.
இப்போது லேப்டாப், செல்போன் ரிப்பேர் பண்ணுவதற்காக கடைகள் இருப்பதுபோல பேனா ரிப்பேர் பண்ணக்கூட அப்போது கடைகள் இருந்தன. என் மகளிடம் இதைச் சொன்னபோது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். “தூக்கி போட்டு விட்டு வேறு பேனா எடுத்து எழுத வேண்டியதுதானே?” என்றாள். அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. பென்னுக்கு பெண்ணே எதிரி போலும்.
இரண்டு மூன்று இங்க் பேனாக்கள் சட்டைப் பையில் குத்தியிருந்தால் அவர் மெத்தப் படித்தவர் என்று அர்த்தம். கணக்குப் பிள்ளை குத்தியிருக்கும் பேனா வேடிக்கையாக இருக்கும். நமீதா மாதிரி குண்டாக இருக்கும்.
மை சரியாக விழவில்லை என்றால் மூக்கு சிந்துவதைப்போல் ஜோராக உதறி வேறு பார்ப்பார்கள். அந்த சமயத்தில் தப்பித்தவறு கூட நாம் அருகில் சென்று விடக்கூடாது, நம் உடம்பெல்லாம் மை களறி ஆகிவிடும். இங்க் பேனாவை வைத்துதான் பெரும்பாலானோர் செக்கில் கையெழுத்து போடுவார்கள். இங்க் பேனாவில் எழுதினால்தான் கையெழுத்து அழகாக வருமாம்.
மை போடும் பேனாவைக் காட்டி “தி இஸ் மை பென்” என்று சொன்னாலே அதுக்கு ஒரு தனி கெத்துதான் போங்க. இப்போது என்னதான் MONT BLANC பால்பாயிண்ட் பென் வைத்து எழுதினாலும் இளமைக்காலத்தில் ரைட்டர் பேனாவில் எழுதிய சுகமே சுகம்.
#அப்துல்கையூம்
(இந்த பென்னின் பெருமை இன்றைய இளைஞர்களுக்கு புரியாது ‘பென்’சன் வாங்கும் முதியோர்களுக்கு நன்கு விளங்கும்.)
.