மராத்திய மன்னர்களின் பங்களிப்பு – பாகம்-1

பேண்டு வாத்திய வரலாறு
———————————————-

எங்களூர்ப் பக்கம் கல்யாணத்தில் பேண்டு வைக்கா விட்டால் அது கல்யாணம் மாதிரியே இருக்காது. (தயவு செய்து B என்ற ஆங்கில எழுத்தின் அழுத்தம் கொடுத்து இதனை வாசிக்கவும். இல்லையெனில் அர்த்தமே மாறி ஏடாகூடமாகி விடும்)

கல்யாண ஊர்வலத்தில் சுருட்டை முடியுடன் குடந்தை ஜேம்ஸின் புதல்வர்கள் கிளரினெட்டை இசைத்துக் கொண்டு நடந்து வந்தால்தான் கல்யாணம் களைகட்டும். நடுராத்திரியில் ஊர்வலம் தெருவழியே போகும். தூங்கிக் கொண்டிருந்த பெண்டுகள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து கண்ணை கசக்கிக் கொண்டு ஜன்னல் வழியே பேண்டு வாத்தியத்தை ரசிப்பார்கள். “கும்பகோணம் ஜேம்ஸ் பேண்டு” என்ற போர்டை ஏந்திக்கொண்டு அந்த வாத்தியக்குழு “பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது” என்ற திரைப்படப் பாடலை ‘பீப்பீ.. பீப்பீ’ என்று முழங்கியவாறு ஊர்வலம் நகர்ந்துக் கொண்டிருக்கும். ஜேம்ஸ் அந்தக் காலத்தில் இசைமுரசு நாகூர் E.M. ஹனிபா குழுவில் கிளாரினெட் வாசித்துக் கொண்டிருந்தவர். அவர் புதல்வர்கள் பேண்டு பாரம்பரியத்தை மெல்லிசை கலந்து தொடர்கிறார்கள்.

இந்தியில் “ஹம் பேண்டு பஜாதேகா” என்றால் “மவனே நான் உன்னை வச்சி செஞ்சிடுவேன்” என்று பொருள். ஆங்கிலத்தில் “You Will Face the Music” என்றால் “மவனே நீ செமையா மாட்டிக்கிட்டே. உனக்கு ஆப்பு நிச்சயம்” என்று பொருள்.

பேண்டு சம்பந்தப்பட்ட பதிவாச்சே என்ற நல்லெண்ணத்தில் என் நண்பர் பேண்டு வாத்தியார் ஹாஜிபால் சாரிடம் சொல்லிக்கொண்டு இந்தப் பதிவை நான் எழுத ஆரம்பித்தேன். “யாரும் தொடாத சப்ஜெக்ட்டு. ஜமாய்ங்க” என்று வாழ்த்தினார். என் பிள்ளைகளை பள்ளிக்கூட பேண்டு வாத்தியக் குழுவில் இணைத்து பயிற்சியளித்தவர் இவர்தான். அந்த விசுவாசம்தான்.

எனக்கு மராத்தியர்களை மிகவும் பிடிக்கும். பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தம் தாக்கரே இவர்களைத் தவிர எல்லா மராத்தியர்களையும் குறிப்பாக நம் மண்ணை ஆண்ட அனைத்து மராத்திய மன்னர்களையும் வெகுவாக பிடிக்கும்.

“ஏன்யா உனக்கு என்னை பிடிக்காது?” என்று ராஜ் தாக்கரே நேரில் வந்துக் கேட்டாலும் “நீதான் தமிழர்களே தாக்கரே, அதனால் உன்னை எனக்கு பிடிக்கலே தாக்கரே” என்று முகத்திற்கு நேராகவே சொல்லி விடுவேன்.

“பேண்டுக்கும் மராத்திய மன்னர்களுக்கும் என்னதான் அப்படி சம்பந்தம்?” என்று நீங்கள் கேட்கலாம். உண்டு சாரே. அதுக்காகத்தானே இவ்வளவு பில்டப்பு. இந்த விவரங்களை நான் சும்மா அவிழ்த்து விடவில்லை (புளுகு மூட்டையை).

இவையாவும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அரிய கையெழுத்துச் சுவடித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கே.எம்.வேங்கடராமையா அவர்கள் சேகரித்த அருஞ் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நான் வரைந்தது.

“இவ்வளவு சீரியசான விஷயத்தை இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்றீங்களே?” என்று நீங்கள் கேட்கலாம். நம் வீக்னஸே அதுதாங்க. எதையும் நமக்கு சீரியசா சொல்லத் தெரியாது. சிரிக்கக்கூடாத இடத்திலும் சிரிச்சு தொலைச்சு காரியத்தைக் கெடுத்திடுவேன்.

திருச்சிக்கு கிழக்கே கொள்ளிடத்துக்கு தெற்கே 1676 முதல் 1855 வரை ஆட்சி மராத்தியர்கள் நம் மண்ணை ஆட்சி புரிந்தனர். அவர்கள் புரிந்த நன்மையை மட்டுமே நான் இங்கு அலசி ஆராய்ந்திருக்கிறேன். ஆட்சியில் கண்ட குறைகளை நான் இங்கு எடுத்துச் சொல்ல விரும்பவில்லை. பொங்குபவர்கள் பொங்குவார்களே என்பதற்காக இதை முன்னெச்செரிக்கையாக நானே இங்கு பொங்கி விட்டேன். .

தஞ்சை மராத்திய மன்னர்களின் வரலாற்றை “Tanjore Maratha Principality” என்ற தலைப்பில் முதன் முதலில் எழுதியது ஹிக்கி என்ற ஆங்கிலேயர். (அவர் பெயர் பக்கி அல்ல ஹிக்கி ) அதன்பின் MARATHA RAJAS OF TANJORE என்ற தலைப்பில் கே.ஆர்.சுப்பிரமணியன். அதற்குப்பின் MARATHA RULE IN CARNATIC என்ற தலைப்பில் சி.கே.சீனிவாசன் போன்றோர் எழுதினார்கள்.

இவையாவும் தஞ்சை சரஸ்வதி மகாலில் பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மோடி ஆவண தமிழாக்கங்களிலிருந்து (இந்த மோடிக்கும் அந்த மோடிக்கும் சம்பந்தமில்லை ஐயா) கையெழுத்துச் சுவடிகளிலிருந்து பெறப்பட்ட அரிய தகவல்களாகும்.

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சட்டைக்காரர்களின் ஆதிக்கம் இங்கு ஏற்பட்ட பின்பு மேனாட்டு இசைக்கருவிகளும் இங்கு அறிமுகம் ஆகத் தொடங்கின. ஆங்கிலேயர்களை சட்டைக்காரர்கள் என்றுதான் நம்மவர்கள் அப்போது அழைக்கலாயினர். குருடர்கள் மத்தியில் ஒற்றைக் கண் உள்ளவன் ராஜா என்பார்கள். அதுபோல பெரும்பாலான தமிழர்கள் மேல்சட்டை அணியாதிருந்த அக்காலத்தில் சட்டை அணிந்திருந்த ஆங்கிலேயர்களை சட்டைக்காரர்கள் என்று அழைத்தார்கள் போலும்

மராத்திய மன்னர்கள் இசைப்பிரியர்களாக இருந்தனர் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. சரஸ்வதி மகாலில் காணப்படும் மராத்திய மன்னர்கள் காலத்து கணக்கு வழக்குகள், ஆவணங்கள் யாவும் நம் கூற்றுக்கு வலு சேர்க்கின்றன.

1770-ஆம் ஆண்டு மேஸ்தர் அந்தோனி சாபத் வாத்தியம் வாசித்ததற்கு ரூ 5 சன்மானம் பெற்றதாக குறிப்பு காணப்படுகிறது.

Fiddle Violin தந்திகளை ராபர்ட் என்ற வெள்ளைக்காரனிடம் வாங்கிய கணக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது. மனுஷன் ரொம்ப கெட்டிக்காரன். வெறும் தந்தி கம்பிகளை பெரும் தொகைக்கு ராஜா தலையில் கட்டிவிட்டான்.

30.04.1822 தேதியன்று திரெளபதாம்பாபுரம் என்ற ஊரில் அக்னிஸ்புருஸ் IRISH BAG PIPE வாசிப்பதற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ 45. அப்போது அது ஒரு பெரிய தொகை.

1823-ஆம் ஆண்டு டாக்டர் சிவஸ்தர் மூலம் HARP வாங்கியதற்கு 200 புலிவராகன் கொடுக்கப்பட்டுள்ளது. அடேங்கப்பா !

தஞ்சையில் பியானோ வாத்தியம் செய்வதில் மேனுவேல் நபராயி என்ற இசைக்கலைஞர் அப்போது வல்லவராகத் திகழ்ந்திருக்கிறார்.

42 பேர்கள் அடங்கிய பேண்டு வாத்தியக் குழு அப்போது இருந்திருக்கிறது.

கர்ணா, டக்கா இவ்விரண்டு வாத்தியங்களும் குதிரையில் வைத்து வாசிக்கப்பட்ட வாத்தியங்கள்.

Clarinet, Flute, French Horn, Trumpet , Irish Bag Pipe போன்ற மேனாட்டு வாத்தியங்கள் அல்லாது வடநாட்டு இசைக்கருவிகளையும் தமிழகத்தில் அறிமுகம் செய்த பெருமை மராத்திய மன்னர்களையேச் சாரும்.

பிரபலமான சாரங்கி இசைக்கலைஞர்கள் யாரென்று நம்மிடம் கேட்டால் சுல்தான்கான், ராம்நாராயண், சாப்ரிகான், சுஹைல் யூசுப்கான், துருபா கோஷ், ரமேஷ் மிஷ்ரா என்று சொல்லிவிடுவோம். அக்காலத்திலேயே இந்துஸ்தானி வாத்தியமான சாரங்கி என்ற இசைக்கருவியை வாசிப்பதில் தமிழகத்தில் குப்புசாமி , கோபாலய்யா போன்றவர்கள் வல்லுனர்களாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.

தமிழகத்து வாத்தியங்களான நாதசுரம், சுருதி, ஜாலர், உடுக்கை, சந்திர சூரிய வாத்தியங்கள், புல்லாங்குழல், திதி , காகலம் போன்றவை அப்போது பரவலாக இருந்த காலம்தான் அது. மிருதங்கம், சாரங்கி, சாபத் முதலிய தோற்கருவிகளும் அப்போது பிரபலம். நாக்கில் வைத்து வாசிக்கப்படும் மோர்சிங் வாத்தியம், ‘ஓம்’ என்ற நாதத்தை எழுப்பும் பஞ்சலோக பிரணவ கந்தா போன்றவை வழக்கத்தில் இருந்துள்ளன.

நாகூரில் தினந்தோறும் ஷெனாய் மற்றும் நகரா எனப்படும் தோல்கருவி “நகரா மேடையில்” இசைக்கப்படுகிறது. இன்றும் அது இசை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாகூர் பெரிய மினாராவைக் கட்டியது தஞ்சையை ஆண்ட மன்னர் பிரதாப்சிங் என்பது நாமறிந்த செய்தி. மராத்திய மன்னர்கள் தொடங்கி வைத்த அந்த பழக்க வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

தஞ்சாவூர் எப்படி தலையாட்டி பொம்மைக்கும், தஞ்சாவூர் தட்டுக்கும் பேர் போனதோ அதுபோன்று தஞ்சாவூர் வீணைக்கும் இசை வரலாற்றில் தனியொரு இடமுண்டு. இதைப்பற்றி வரும் தொடரில் விவரமாக எழுதுகிறேன்.

1776 ஆம் ஆண்டிலேயே வீணைக் கலைஞர்கள் மராத்திய மன்னர்களின் அவையில் இருந்திருக்கிறார்கள். ஹுஜூரில் வீணையின் தந்தி வாங்கி கொடுத்ததற்கு எட்டு பரங்கிப்பேட்டை வராகன் கொடுத்ததாக குறிப்பு காணப்படுகிறது.

மராட்டிய மன்னர்கள் வீணை வாசிப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். எனக்கும் வீணை வாசிக்க வரும். “வீணை” என்று யாராவது தமிழில் எழுதிக் காண்பித்தால் நன்றாக வாசிப்பேன்.

“ஜெயபேரிகை” என்ற பெயரில் வெற்றி முரசு இருந்துள்ளது தம்பூரா வழக்கில் இருந்துள்ளது. பெண்களும் மேளம் வாசித்த்தாக குறிப்புகள் காணப்படுகின்றன.

செள அகில்பாயி என்பவரிடத்தில் சங்கீதப்பெட்டி பழுதுபார்க்க ரூ 7 என்று கணக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கீதப்பெட்டி என்பது ஹார்மோனியமா அல்லது சுருதிப்பெட்டியா என்பது சரிவரத் தெரியவில்லை.

மாராத்திய மன்னர்கள் இசைமேல் இருந்த ஆர்வத்தில் இசை சம்பந்தப்பட்ட நூல்களை அதிக விலை கொடுத்து மேலை நாட்டிலிருந்து வரவழைத்து சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்து வைத்தனர்.

இன்றளவும் மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் பொம்மலாட்டம் என்றால் முதலில் தஞ்சாவூர்தான் நம் நினைவில் சட்டென்று வரும். பொம்மலாட்டம் கலையில் வல்லவர்களாக ராம செட்டி மற்றும் மன்னாரு செட்டி என்பவர்கள் அன்றைய காலத்தில் திகழ்ந்திருக்கின்றார்கள்.

தஞ்சையில் ஏராளமான பேண்டு வாத்தியக் குழுக்கள் இன்றும் உள்ளன. குடந்தையிலும் ஏராளமாகக் காணலாம்.. திருச்சி மேலப்புதூர் மற்றும் பீமநகரில் உள்ள குறுகலானச் சந்தில் நடந்து போனால் திரும்பும் இடமெல்லாம் பேண்டு வாத்தியக் குழுவினரை காண முடிகிறது. இவர்களுடைய வாழ்வாதாரம், பொருளாதாரம் சிறப்பான வகையில் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை. சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டத் தெருவில் வாழும் பேண்டு வாத்தியக் கலைஞர்களின் வாழ்க்கை இதற்கு நல்ல உதாரணம்

ட்ரம்பெட், சட்டி மேளம், தப்பு செட்டு, கானா இசைக்கு டோலாக் செட்டு, பஞ்சாபி மேளம் டோலிக் பாசா, மொரா கோர்ஸ், சைட் ட்ரம், டோல், கட்ட மேளம் (மாட்டுத்தோல் மேளம்) இவையனைத்தும் பேண்டு குழுவில் ஓர் அங்கமாக இணைந்து விட்டது. இப்போது புதிதாக கேரளத்து செண்டை மேளமும் ஊடுறுவி இவர்களுக்கு போட்டியாக வந்து விட்டது.

இப்போது Mickey Mouse, Pink Panther, Teddy Bear போன்ற வேடம் தரித்து கூட்டத்தினரை மகிழ்விப்பது Trend ஆக மாறிவிட்டது. மராத்திய மன்னர்கள் காலத்திலேயே ஆட்டுக்கடா, புலி, கரடி, மான். பன்றி, சிங்கம் போன்ற வேடம் தரித்து மகிழ்விக்கும் கலை இருந்திருக்கின்றது.

மராத்திய மன்னர்கள் அன்று அத்தனை விதமான பாரம்பரியக் கலைகளையும் ஊக்குவித்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை. அடுத்தடுத்த தொடரில் மராத்திய மன்னர்கள் வளர்த்த கர்னாடக இசை, நாட்டியம் நாடகம் முதலியவற்றை அலசுவோம்

#அப்துல்கையூம்

Leave a comment