நகரத்து பெண்கள் யாருமே ரவிக்கை அணிவதில்லை. அவர்கள் ப்ளவுஸ்தான் அணிகிறார்கள். அல்லது ஜாக்கெட் அணிகிறார்கள்.
ரவிக்கை என்பது கிராமத்துப் பெண்கள் அணியும் மார்புச் சட்டை என்பதாகவும், நகரத்து நாகரிகப் பெண்மணிகள் அணியும் மேல் சட்டையை ப்ளவுஸ் என்று அழைப்பதும் எழுதப்படாத சட்டமாகி விட்டது.
ரவிக்கை என்று சொல்வதை பெண்கள் கர்நாடகத்தனமாக அல்லது பட்டிக்காட்டுத்தனமாக நினைக்கிறார்கள்.
கடைகளில் கூட “இங்கு மேட்சிங் ப்ளவுஸ் கிடைக்கும்” என்று ஸ்டைலாக ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி எழுதியிருப்பார்களேத் தவிர “இங்கு பொருத்தமான வண்ணத்தில் இரவிக்கை கிடைக்கும்” என யாரும் எழுதி வைப்பதில்லை.
“ரோசாப்பு ரவிக்கைக்காரி” என்ற பெயரில் தேவராஜ் மோகன் இயக்கிய திரைப்படம் கிராமத்துச் சூழ்நிலையில் எடுக்கப்பட்டதாகும். ஒருக்கால் இது பட்டணத்துக் கதையாக இருந்திருந்தால் இப்படத்தின் பெயர் “பிங்க் ப்ளவுஸ்காரி” என்று வைத்திருப்பார்களோ என்னவோ.
ரவிக்கை என்பது தமிழ்ச் சொல்லா? ரகரத்தில் தொடங்கும் சொல் எப்படி தமிழ்ச் சொல்லாக இருக்க முடியும்?. அதனால்தானே ராமன் என்ற பெயரைக்கூட இராமன் என்றே எழுதுகிறோம்? அதனால்தானே ரவிக்கை என்று எழுதுவதற்கு பதிலாக இரவிக்கை என்றே எழுதுகிறோம்?.
ஆராய்ந்துப் பார்த்ததில் இரவிக்கை என்பது தூயதமிழ் சொல் என்றே அறிகிறோம்.
இரவிக்கைக்கு இரண்டு பக்கமும் கை இருக்கும், இறுக்கமான உடை அது.. இரு கை கொண்ட அந்த உடைய அவிழ்ப்பதற்கும், அணிவதற்கும் இலகுவாக பட்டன் அல்லது ஊக்கு பொருத்தப்பட்டிருக்கும்.
இரு + அவிழ் + கை என்ற கூட்டுச் சொற்கள் இரவிழ்க்கை என்றாகி நாளடைவில் ழகர ஒற்று பரிதாபமாக இழந்து இரவிக்கை என்றாகி விட்டது.
இனிமேலாவது BLOUSE CENTRE என்று பெயர்ப்பலகை வைப்பதற்கு பதிலாக “இரவிழ்க்கை மையம்” என்று பெயர் வைக்கிறார்களா என்று பார்ப்போம். கமலஹாசன் கடை திறந்தால் “இரவிழ்க்கை மய்யம்” என்று பெயர் வைக்கக்கூடும்.
ப்ளவுஸ்களில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று கணக்கெடுத்தால் இந்தப் பதிவு நீண்டுக்கொண்டே போகும்.. வாணிஸ்ரீ ப்ளவுஸ், குஷ்பு ப்ளவுஸ், பஃப் வைத்த தீபா ப்ளவுஸ், கண்ணாடி வைத்த ப்ளவுஸ், திருடா திருடி ப்ளவுஸ், முடிச்சு வைத்த ப்ளவுஸ், ஜன்னல் வைத்த ப்ளவுஸ், ஏன் வாசற்கதவே வைத்த ப்ளவுஸ் என்று எழுதிக்கொண்டே போகலாம். முகநூல் நண்பிகளின் சாபத்தையும் வாங்கிக் கொட்டிக் கொள்ளலாம்.
இந்த ப்ளவுஸ் மேட்டர் எல்லாம் உங்களுக்கு எப்படி இவ்வளவு விவரமாகத் தெரியும் என்று கேட்டு தயவுசெய்து என்னை வம்பில் மாட்டி விட்டு விடாதீர்கள். எல்லாம் ஒரு கேள்வி ஞானம்தான் சார்..