தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக அறிவித்த வடமாநிலம் ஹரியானா என்றால் நீங்கள் யாரும் நம்பப் போவதில்லை. . “யோவ் யாரு காதுலே நீ பூ சுத்துறே? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
வேறு எந்த வடமாநிலமும் இப்படியொரு அந்தஸ்தை தமிழுக்கு கொடுத்ததில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மாநிலம் பஞ்சாபிகள் நிறைந்திருக்கும் நகரம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. தமிழுக்கும் ஹரியானாவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் கேட்பீர்கள். அந்த மாநிலத்தில் தமிழர்கள் கிடையாது. அப்படி இருக்கையில் எந்தவொரு தொடர்பும் இல்லாத ஹரியானா மாநிலத்தில் எப்படி தமிழ் இரண்டாம் ஸ்தானத்தில் ஆட்சிமொழியாக அறிவித்திருக்க முடியும் என்ற கேள்வி நமக்குள் எழலாம். நான் அதனை விளக்குவதற்கு முன்பு ஒரு சிறிய FLASHBACK..
என் மகன் சண்டிகரில் 4 வருடம் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் அடிக்கடி சண்டிகர் போய் வருவேன். அதற்காக நான் சண்டியர் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
அவ்வளவு அழகான PLANNED CITY-யை நான் இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை. நெடுஞ்சாலையில் கடைகள், பெட்டிக்கடைகளை காண முடியாது. ஒவ்வொரு SECTOR-லும் சகல வசதிகள் நிறைந்த SHOPPING COMPLEX-கள் இருக்கும். எங்கு பார்த்தாலும் அழகு படுத்தப்பட்ட ரவுண்டானாக்கள். நோக்குமிடமெல்லாம் பச்சைப்பசேல் என்ற புல்வெளிகள். சாலையோரம் அணிவகுக்கும் நிழல் தரும் மரங்கள். சைக்கிள் மற்றும் சைக்கிள் ரிக்ஷா செல்வதற்கென்று சாலையோரத்தில் தனிப்பாதை. நகர் முழுதும் பாதசாரிகளுக்காக நடைபாதைகள். பிளாஸ்டிக் பைகளை எப்போதோ தடை செய்திருந்த நகரம்,
இவ்வளவு அழகான ஒரு நகரத்தை தலைநகராக பெறுவதற்கு பஞ்சாபும் ஹரியானாவும் சிண்டுபிடித்து சண்டையிட்டார்கள். என் மகன் படித்த PUNJAB ENGINEERING COLLEGE –ல் முன்வாசல் வழியாகச் சென்றால் ஹரியானா மாநிலம். அழகான சாலைகள். பின்வாசல் வழியாகச் சென்றால் பஞ்சாப் மாநிலம். குடிசைகளும், சேரியில் இருப்பதைப் போன்ற முடுக்குகளும், கீற்றுகொட்டகை DHABA-க்களும் இருக்கும்.
சண்டிகர் பஞ்சாபிகளுக்குத்தான் சொந்தம் என்று பஞ்சாபிகள் ஒற்றைக்காலில் நின்றார்கள். “சுபா கிளர்ச்சி” என்ற பெயரில் போராட்டங்கள் நிகழ்ந்தன. பஞ்சாபிகள் ஒருபோதும் அதை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.
பஞ்சாப் மாநிலம், ஹரியானா மாநிலம் இருவரும் இந்நகரத்தை உரிமை கொண்டாட ஏனிந்த வம்பு என இருவரையும் சந்தோஷப்படுத்த பட்டிமன்றத்தில் நடுவர் சாலமன் பாப்பையா கூறும் தீர்ப்பைப் போன்று சண்டிகரை இரு மாநிலத்திற்கும் தலைநகராக்கி, அதை தனி UNION TERRITORY ஆகவும் ஆக்கி, பஞ்சாயத்தை முடித்து விட்டார்கள். பஞ்சாப் முதல்வரின் வீடும், ஹரியானா முதல்வரின் வீடும் அடுத்தடுத்து காணலாம்.
1966-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் உருவானபோது எங்கே பஞ்சாப் இரண்டாம் மொழி ஸ்தானத்திற்கு வந்து விடுமோ என்ற பயத்தில் அப்போதைய முதல்வராக இருந்த பன்சிலால் யாரும் எதிர்ப்பார்த்திராத ஒரு புரட்சிகரமான காரியம் செய்தார்.
உலகத்திலேயே பழைய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இனி ஹரியானா மாநிலத்தின் இரண்டாம் ஆட்சி மொழியாக இருக்கும் என அதிரடியாக அறிவித்து பஞ்சாபிகளையும் ஏனய மாநிலத்தவரையும் திகைக்க வைத்தார். இந்த முடிவை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஹரியானா மக்களுக்கு பஞ்சாபிகளைக் காட்டிலும் தமிழர்களோடு அதிக நெருக்கம் இருக்கிறது என்று ஒரே போடாக போட்டார். யாரும் வாயைத் திறக்க முடியாதபடி செய்தார். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 250 தமிழாசிரியர்களை தமிழகத்திலிருந்து தருவித்து அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கச் செய்து “செக்மேட்” வைத்தார்.
தமிழ் மொழி ஏறக்குறைய 40 ஆண்டுகள் ஹரியானா மாநிலத்தின் இரண்டாம் ஆட்சி மொழியாக சிறப்பான அந்தஸ்த்தை பெற்றிருந்தது.
2010-ஆண்டு பதவியேற்ற பூப்பேந்தர் சிங் ஹுதா பஞ்சாபி மொழியை இரண்டாம் ஆட்சிமொழியாக அறிவித்து தமிழ்மொழிக்கு ‘ஆப்பு’ வைத்தார்.
#அப்துல்கையூம்