சலாம் முஸ்தபா கமாலுக்கு மாத்திரம்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. முருகப்பெருமானுக்கும் தாராளமாகச் சொல்லலாம் சலாம்..
முஸ்லீம்கள் முகமன் கூறுகையில் ஒருவருக்கொருவார் சலாம் கூறிக் கொள்கிறார்கள். முஸ்லீம்கள் மாத்திரமல்ல அருணகிரிநாதரும் (15-ஆம் நூற்றாண்டு) முருகப்பெருமானுக்கு சலாம் கூறி இருக்கிறார். திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்று பாடுவார்கள்.. திருப்புகழில்தான் இவ்வடிகள் இடம் பெறுகின்றன.
சுராதிபதி மாலயனும் மாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமானே!
என்று சலாம் உரைத்து முகமன் கூறுகிறார். திருப்புகழில் ‘சலாம்’ ‘சபாஷ்’ ‘ராவுத்தன்’ போன்ற பிறமொழிச் சொற்கள் முஸ்லிம்களின் தொடர்பால் ஏற்பட்ட சொல்லாடல்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரையில் நடைபெறும் பெற்று வரும் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட “லாயிலாஹா இல்லல்லாஹ்” என்று அரபியில் பொறிக்கப்பட்ட சிரியா நாணயம் உமையாக்கள் ஆட்சியில் கலீஃபா அப்துல் மாலிக் மர்வான் (685–705) என்பவரின் காலத்தை சார்ந்ததாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. அதற்கு முன்பு உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்திலும் (6 November 644 – 17 June 656) வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன.
முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முற்பட்ட காலத்திலும் அராபியர்களும் தமிழர்களுக்கும் வணிகத்தொடர்பு இருந்தது. எனவே இஸ்லாம் முகலாயர்களால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கம், வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற வாதம் பொய் என்பது வெள்ளிடைமலை.,
அருணகிரிநாதர் மட்டுமா சலாம் சொல்கிறார் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமர குருபரரும் சலாம் சொல்கிறார்.
குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு
குமரனை முத்துக்குமரனைப் போற்றுதும்
மேலே காண்பது குமர குருபரரின் “மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்” பாடல். அவர் சலாம் மட்டும் போடவில்லை சபாஷும் போடுகிறார்.
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மகர் சபாசென
என்றும் பாடுகிறார். “சபாசு” என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த சபாஷ் என்ற வார்த்தையும் முஸ்லீம்கள் அறிமுகப்படுத்தியதுதான். சபாஷ் மீனா, சபாஷ் பாபு, சபாஷ் தம்பி, சபாஷ் மாப்பிள்ளே, சபாஷ் நாயுடு, சபாஷ், என ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரே சபாஷ் அமர்க்களமாக இருந்தது நமக்கு நினைவிருக்கலாம்
#அப்துல்கையூம்