தமிழ் மொழியில் போர்த்துகீசியச் சொற்கள்
=========================================
போர்த்துகீசியர்கள் தமிழகத்தில் விட்டுச்சென்ற அடையாளங்களில் ஒன்று மைலாப்பூரிலுள்ள லஸ் பகுதியிலுள்ள 1516-ஆம் அண்டு கட்டப்பட்ட பிரகாச மாதா ஆலயம். LUZ என்ற வார்த்தை “Nossa Senhora da Luz” என்ற போர்த்துகீசிய சொற்றொடரிலிருந்து பெறப்பட்டது. சென்னையில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயமும் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டதுதான்.
1618-ஆம் வருடத்திலிருந்தே போர்த்துகீசியர் தமிழக மண்ணில் காலூன்ற முயற்சி செய்தார்கள் என்ற போதிலும் 1620-ல்தான் அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற முடிந்தது.
நாகை மாவட்டத்தில் ஒரு காலத்தில் போர்த்துகீசியர் ஆதிக்கத்திலிருந்த தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களான பொறையார், காரைக்கால், திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம் பகுதிகளில் ஏராளமான போர்த்துகீசியச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன அவைகள் தமிழ்ச்சொற்களாக உருமாறி ஏட்டிலும் இடம்பெற்று விட்டன. தமிழ்க்கூறும் நல்லுலகத்தில் பரவலாக பேசப்படுகின்றன.
நாகை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி எனும் ஊரைப் பற்றி சற்று விரிவாகச் சொல்ல வேண்டியது அவசியம். .”தரங்கம்பாடி”…… ஆகா ..! என்ன ஒரு கலைநயமிக்க பெயரிது. இந்த பாழாய்ப்போன போர்த்துகீசியர்களின் வாயில் இந்த அழகான தமிழ்ப் பெயர் நுழையாததால் அலங்கோலமாகச் சிதைத்து Tanquebar என ஏதோ TASMAC BAR போன்று மாற்றித் தொலைத்து விட்டார்கள்.
“நீரலைகள் ராகம் பாடும் ஊர்” என்ற பொருளில் விளங்கிய தரங்கம்பாடி என்ற பெயரை டிரங்குபார் என்று பெயர் வைத்த போர்த்துகீசியரை நினைத்தால் நமக்கு பற்றிக்கொண்டு வருகிறது.,
ஆங்கியேர்கள் இங்கு காலூன்றுவதற்கு முன்பே போர்த்துகிசியர்கள் இங்கு தடம் பதித்து விட்டனர். 450 ஆண்டுகள் தொடர்பு என்றால் அதன் சுவடுகள் தெரியாமலா போய்விடும்?.
சப்பாத்து, துவாலை, ஜன்னல், வராந்தா, குசினி, கிராதி, அலமாரி, மேஜை, சாவி, ஜாடி, பீப்பாய், மேஸ்திரி, நிரக்கு, இதுபோன்று கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழ் மொழியோடு ஒன்றரக் கலந்து விட்டன.
இன்னும் எங்கள் ஊரில் செருப்பு, காலணி, ஸ்லிப்பர் என்று கூறுவதைக் காட்டிலும் “சப்பாத்து” என்ற சொல்லாடலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். யாராவது வாலாட்டினால் “சப்பாத்து பிஞ்சு போயிடும் ஜாக்கிரதை” என்பார்கள்
சிற்சில சொற்கள் போர்த்துகீசியம் எது, தமிழ் எது என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு ஒன்றரக் கலந்து விட்டன என்ற கூற்று முற்றிலும் உண்மை.
//என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்//
என்றுதான் வைரமுத்து பாடுகிறாரே தவிர சாளரத்தைக் கேட்டுப்பார் என்று பாடவில்லை
“தரங்கம்” என்றால் நீரலைகள் எழுப்பும் சுகமான ராகம் என்று பொருள். தரங்கம் என்ற பெயரில் கர்நாடக இசையில் ஒரு ராகமே இருக்கிறது. ஜேசுதாஸின் பாடல் பதிவரங்கத்தின் பெயர் தரங்கிணி.. தரங்கம் என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் “புல் புல் தாரா” என்ற இசைக்கருவியின் பெயரும் பிறந்தது.
பெரிய புராணத்தில் “நீர்த்தரங்க நெடுங்கங்கை” என்ற பயன்பாட்டைக் காண முடிகிறது (பெரியபுராணம். தடுத்தாட்கிண்ட புராணம். 165).
கடல் என்ற சொல் “தரங்கம் பரமபதம்” என்றும் கையாளப்பட்டுள்ளது. (அஷ்டப். திருவேங்கடத்தந்.56).
“ கத்தும் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் உளைந்து” என்ற சொற்பதம் பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழில் காண முடிகிறது.
சிலர் திரங்கம்பாடி என்ற பெயரிலிருந்து மருவியதுதான் தரங்கம்பாடி என்று வாதிடுகிறார்கள். அவ்வாதத்தில் போதிய வலுவில்லை. “திரங்கம்” என்றால் வற்றிச் சுருங்குதல் என்று பொருள்.
“தெங்கின் மடல்போற் றிரங்கி” (மணி. 20, 57).
திரங்கு மரனாரிற் பொலியச் சூடி (மலைபடு. 431).
திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு (கம்பரா. காட்சி. 25).
மடமா னம்பிணை மறியொடு திரங்க (ஐங்குறு. 326)
இவையாவும் “திரங்கம்” என்ற சொல்லின் இலக்கியப் பயன்பாடுகள். வற்றிச்சுருங்குதல் என்ற பொருளில் இவ்வூர்ப் பெயர் ஏற்பட்டதல்ல என்பது என் தாழ்மையான கருத்து.
ஆனால் தரங்கம் என்ற சொல்லாடல் கடல் சம்பந்தப்பட்ட நீரலைகளைக் குறித்தே காணப்படுகின்றன. ஆகையால் “தரங்கம்பாடி” என்றால் “நீரலைகள் கவிபாடும் ஊர்” என்ற விளக்கமே சாலப்பொருந்தும்
இதோ கீழ்க்கண்ட பாடல்களில் “தரங்கம்” என்ற சொல்லாடல் பயன்பாட்டில் உள்ளதை உறுதிபடுத்துகின்றது
//இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-
புரம் காவல்(ல்) அழியப் பொடிஆக்கினான்—
தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்
குரங்காடூதுறைக் கோலக் கபாலியே//.
#தேவாரம் 5-63 (1)
//வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளிஅரசே! ஒளி மதியத்-
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!//
#தேவாரம் 1-60_(1)
//தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே//
#தேவாரம் 2-38(4)
//சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்//
#தேவாரம் 1-004 (6)
ஆகையால் தரங்கம்பாடிக்காரர்கள் தங்கள் ஊர் போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்தில் ஏதோ ஒரு காலத்தில் இருந்தாலும் தங்கள் ஊரின் பெயர் அழகான தமிழ்ப்பெயர் என்பதை நினைத்து பெருமை பட்டுக் கொள்ளலாம்.
#அப்துல்கையூம்