உலக மகா கவிஞர்களின் வரிசையில் அல்லாமா இக்பாலுக்கென ஓர் உன்னத இடமுண்டு. உறங்கிக் கிடந்த சமுதாயத்தை தட்டி எழுப்பிய தன்மானக் கவிஞன் அவன். இந்திய மண்ணின் மீது இணைபிரியா பாசம் அவனுக்குண்டு. இன்றும் அவன் கவிதைகள் அவன் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன, காலங்கள் கடந்தும் அவனது கருத்துக்கள் நடப்புக்காலத்திற்கு முற்றிலும் பொருந்துகின்றன,
அல்லாமா இக்பாலின் மூதாதையர்கள் காஷ்மீரத்தைச் சேர்ந்த பிராமணர்கள். அப்படிச் சொல்லிக் கொள்வதில் அவருக்கொரு கர்வமுண்டு.
//என்னைப் பாருங்கள் !
ரூம், தப்ரஸ் ஆகிய நாடுகளின்
ஞான வழியில் தேர்ச்சி பெற்ற
இத்தகைய பிராமண மரபினனை
இந்தியாவில் எங்குமே நீங்கள் காணமுடியாது//
என தன் குலப்பெருமை பேசுகிறார். இது என்ன தற்பெருமை? என்று நீங்கள் வினவலாம். கர்வமில்லாத கவிஞன் யார்தான் உண்டு இவ்வுலகில்.
கவியரசு கண்ணதாசன் “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று கர்வத்துடன் கூறினான்.
“சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்” என்று பாரதி பாடினான். பாரதி அறிவாளியா இல்லையா என்பதை நாம் அல்லவா முடிவு செய்ய வேண்டும். அவனே எப்படி தன்னை அறிவாளி என்று கூறிக் கொள்ளலாம் என்ற கேள்வி நம்முள் எழுகிறது அல்லவா?’
நம் கவிப்பேரரசு ஒரு படி மேலே சென்று பாடிவிட்டார். “விடுதலை வீரன் பாரதி” என்ற தலைப்பில் பாடிய அவர்..
//அந்தியிலே பூப்பதெல்லாம் அல்லிப் பூவா?
ஆழியிலே கிடைப்பதெல்லாம் அழகு முத்தா?
சந்தையிலே விற்பதெல்லாம் தேனைப் போலத்
தனி இனிப்பைத் தருகின்ற சரக்கா? இல்லை
சந்தியிலே தவித்ததமிழ்க் கவியை நாட்டில்
சரஞ்சரமாய்த் தொடுத்திங்கே தமிழைக் காத்த
செந்தமிழன் பாரதியைப் போலே நாட்டில்
தேனமுதப் பாவலன் யார், என்னை விட்டால் ?//
என்ன இந்த கவிஞர்களுகெல்லாம் இப்படியொரு தலைக்கனம்? என்றெல்லாம் நாம் கேள்வி கேட்கக் கூடாது, அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் லைசன்சு அது
கவிஞர் அல்லாமா இக்பாலின் பாடல்களில் காணப்படும் சிறப்புகளை நாமிங்கு காண்போம்.
ஏழைப் பாலகனொருவன் ஈதுப்பெருநாள் அன்று பிறையிடம் முறையிடுகிறான். இளம்பிறை அவன் கண்ணுக்கு வாடிவதங்கி மெலிதாக காட்சி அளிக்கிறது.
//இளம் பிறையே!
உனது ஏழ்மையை எண்ணி வருந்தாதே!
நாணிக் கோணித் துவளாதே!
உனக்கே தெரியாமல் உன்னுள்ளே ஒரு
பூரணச்சந்திரன்
புதையுண்டு கிடக்கிறான்.//
இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு அவரது அறிவுரை :
//ஒருவருக்கொருவர்
ஒதுக்கி வெறுக்கும்படி
ஒருபோதும் மதம் நமக்கு
போதனை செய்யவில்லை
நாமெல்லோரும் இந்தியர்கள்
நம் நாடு பெருமைமிகு இந்தியா !!//
இவ்வளவு காலம் ஒற்றுமை நிலவிய நம்நாடு இப்போது மட்டும் சீர்குலைந்தது எப்படி?
//நமதுகாலச் சூழலிலே
பலநூற்றாண்டு காலம்
பகைவன் இங்கிருந்தான்
என்றாலும் நம் வாழ்வு
சீர்குலையாத்து அற்புதமே//
ஆங்கிலேயனினிட அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் கூட சீர்குலையாத நம் சகோதரத்துவ ஒற்றுமை இப்பொழுது இல்லை என்று தீர்க்கதரிசனமாக கூறுகிறாரோ?
//வாருங்கள் தோழர்களே !
பகைமை எனும்
பாழுந்திரையை விலக்குவோம்
பிரிந்தோர் பலரை இணைத்திடுவோம்
வேற்றுமை விட்டுச்சென்ற
வீண்சுவடுகளை அழித்தொழிப்போம்!//
இக்பால் கூறும் கருத்துக்கள் பாரதியின் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றன. இருவருக்கிடையிலும் அப்படியென்ன ஒரு ‘டெலிபதி’ என்று எனக்குப் புரியவில்லை
“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்ற பாரதியின் கூற்றுக்கொப்ப அல்லாமா இக்பாலின் இக்கவிதை இருக்கின்றது.
“பழங்கதைகள் பேசி
கால விரயம் செய்ய வேண்டாம்
மேதினியில் உனை அழிக்க
மேலைநாட்டில் சதிநடக்குது
நடப்பதையும் நீ பாரு
நடக்கவிருப்பதையும் நீ பாரு
நடப்பதை நீ உணராவிட்டால் – இந்திய
நாடே அழிந்து படுவீர்கள் !”
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்ற வரிகளும் இக்பாலின் ‘|”ஸாரே ஜஹான் சே அச்சா; ஹிந்துஸ்தான் ஹமாரா” என்ற வரிகளும் ஒரே கருத்துக்கள்தான்.
அவர் மேற்கத்தியர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை நம்மை அதிரச் செய்கிறது.
“மேற்கத்தியர்களே !
இறைவன் படைத்த இவ்வுலகை
எண்ணாதீர் சந்தைக்கடை என
“உண்மை” என்றும் “நாணயம்” என்றும்
உளமார நீங்கள் நினைக்கும் நினைப்பு
ஒன்றுமில்லாமல் போய்விடும்
மெல்லிய இழையில் கட்டப்படும்
மென்மையான குருவிக்கூடு போல
விரைவிலேயே உங்கள் நாகரிகமும்
தன் வாளினாலேயே
தற்கொலை செய்துக் கொள்ளும்”
இன்றைய டாஸ்மாக் நிலைமையையும் அன்றே அவர் பாடிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
//மதுக்கிண்ணத்தைக் கையிலே ஏந்தி
மறைவிலே ஒதுக்குப்பிறமாய்
மதுவருந்திய காலம் மலையேறிவிட்டது
உலகனைத்தும் மதுக்கடைகளாக
உருமாறி விடும்
ஒவ்வொரும் மதுப்பிரியர்களாக மாறிவிடுவர்//
இளைய சமுதாயத்திற்கு அவரது அறிவுரை இதுதான்
//சமுதாயம் எனப்படும்
சங்கிலித் தொடரினிலே
ஒளிஇசும் மணியாக
உன்னையே நீ இணைத்துக்கொள் !
இல்லையேல்
இலட்சியமற்ற புழுதியாகச் சுழல் !!
முஸ்லீம் சமுதாயத்திற்கு அவர் விடுக்கும் செய்தி இது :
//ஏ! கஃபாவின் காவலனே !
அன்பு கொண்ட அவனிக்கு எதிர்ப்படும்
அனைத்துமே இறுதியானவை
அங்கே பாவமில்லை; புண்ணியமில்லை;
இலாபமில்லை ! நஷ்டமில்லை!//
நாம் மேற்கொண்டிருக்கும் பயணம் சுமூகமானதல்ல என்பது கவிஞருக்குப் புரியும். எத்தனையோ இடர்பாடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
//இடைவிடாது பயணம் செய்தேன் – அதன்
இன்பத்திலே என்மனதை பறிகொடுத்தேன்
போவது எங்கே தெரியவில்லை
புறப்பட்ட இடமும் தெரியவில்லை
பாதையில் இடர்படும் கற்களைத் தவிர//
சாதாரண ஒரு கவிஞனின் மனதில் இத்தகைய கருத்துக்கள் உதிக்க சாத்தியமில்லை. நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரத்தைப்போல அல்லாமா இக்பால் போன்ற கவிஞானிகள் பிறக்கிறார்கள்.
#அப்துல்கையூம்
தொடரும்