பாரதியார் முஸ்லீம்களுக்கு எதிரானவரா..?

அண்மையில் ஒரு காணொளி பார்த்தேன். அதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் இப்படியாக உரையாற்றுகிறார். அதாவது பாரதியாரை தமிழ்நாட்டில் வாழவே விடவில்லை என்பதால் அவர் காசிக்கு புறப்பட்டுச் சென்றாராம். அங்கு போய் காசி விஸ்வநாதர் கோயிலை பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சியொன்று காத்திருந்ததாம். காசி விஸ்வநாதரின் மூல விக்ரகத்தை எடுத்து கிணற்றில் போட்டுவிட்டு அங்கு பள்ளிவாயிலை கட்டி இருப்பதைப் பார்த்து வெகுண்ட பாரதியார் அக்கணமே

//பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டு வோம்//

என்று உணர்ச்சிபொங்க பாடினாராம்.

இந்த பாடல் சத்தியமாக பாரதியாருடையதுதான் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.. ‘பாப்ரி மஸ்ஜிதை’ இடித்தபோதும் கூட இதே பாடல் வரிகளைக் குறிப்பிட்டு மேடையில் பலரும் பிரசங்கமும் செய்து, நம் தொப்புள்கொடி உறவுகளின் உணர்வுகளை உசுப்பேற்றி விட்டனர். அதாவது பாரதி கண்ட கனவு இப்பொழுது நனவாயிற்று என்றனர்.

“இந்தியாவிலுள்ள பள்ளிவாசல்கள் அத்தனையையும் இடித்து விட்டு அங்கு கோயில் கட்டுவீர்களாக” என்று பாரதியார் பாடினார் என்பதை உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

சாதி ஒழிய வேண்டுமென குரல் கொடுத்தவன், காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவன், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி பத்திரிக்கைகளில் தொடர்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளியவன், இஸ்லாமியர்கள் மீது இப்படியொரு வெறுப்புணர்வு கொண்டிருப்பானா என்பது நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்.

பாரதி அந்தக் கருத்தில் பாடவில்லை “கல்விக்கூடங்களை கோயில் போன்று புனிதமாக கருதுவோம்” என்ற பொருளில்தான் பாடினான் என்று சிலர் விளக்கமளிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த விளக்கமும் பொருத்தமானதாக இல்லை..

ஒரு கவிஞன் ஒரு பாடலை இயற்றும்போது “இடம், பொருள், ஏவல்” – அதாவது எந்தச் சூழ்நிலையில் இப்படியொரு கருத்தை முன்வைத்தான் என்பதை நாம் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

“சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி”

என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்படப் பாடல் நம் எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட இதே பொருளில்தான் பாரதியாரின் இப்பாடல் வரிகளும் அமைந்திருக்கின்றன.

“பள்ளி” என்பதற்கு பற்பல அர்த்தங்கள் உள்ளன. கல்விக்கூடம், சமணர்கள் படுக்கும் குகைகள், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம், படுக்கையறை, இவையாவும் “பள்ளி” என்ற வார்த்தைக்கு பொருள் கற்பிப்பதாகும்.

“உறக்கம்” என்ற இந்த வார்த்தையை ஒட்டியே பள்ளியறை, பள்ளியெழு, பள்ளியெழுச்சி, பள்ளிகொண்டான் போன்ற சொற்பதங்கள் அமைந்துள்ளன. “திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா” என்று ஜேசுதாஸ் பாடிய பாடல் என் நினைவுக்கு வருகிறது

//பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்// என்று பாரதி எந்த சூழ்நிலையில் பாடினான் என்பதை நாம் ஆராய்ந்தால் நம் ஐயத்திற்கான பதில் கிடைத்துவிடும்.

பாரதத்திற்கு விடுதலை கிடைத்தபின் நம் நாட்டின் INFRASTRUCTURE எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று பாரதி தொலைநோக்கு பார்வையோடு ஆலோசனை வழங்குகிறான்.

//வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் -எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்//

பாரதி சொல்ல வந்த கருத்துக்களை சற்று கூடுதல் தகவலுடனேயே நான் இங்கு விவரித்துள்ளேன்.

கார்கில் பகுதி மற்றுமல்ல ஹிமாச்சல பிரதேசத்திலும் நாங்கள் எங்கள் வீரர்களை பணியில் அமர்த்தி சீனாக்காரன் நமக்கு சொந்தமான இடங்களை ஆட்டையை போடாத அளவுக்கு பார்த்துக் கொள்வோம் என்பதற்காக “வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்” என்று பாடுகிறான்.

இலங்கை சிங்களவர்கள் நம் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளாமல் இருப்பதற்காக கடல் ரோந்து புரியும் COAST GUARD PATROL அமைப்போம் என்பதற்காக “அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்” என்கிறான்.

மலைப்பிரதேசத்தைப் பற்றி சொல்லியாகி விட்டது. கடல் பிரதேசத்தைப் பற்றியும் சொல்லியாகி விட்டது. மீதியிருப்பது நிலப்பகுதிதான். அதையும் சொல்லியாக வேண்டும் அல்லவா?

“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்” என்கிறான் அதாவது தூங்கிக்கிடக்கும் தரிசு நிலங்களை – சும்மாக் கிடக்கும் நிலத்தைக் கொத்தி சோம்பல் இல்லாம ஏர் நடத்தி அந்த இடங்களை பயிரிட்டு பச்சைவெளியாக்கி புனிதம் சேர்ப்போம் என்கிறான்.

“பள்ளி” என்று பாரதி குறிப்பிடுவது பள்ளிக்கூடத்தையும் அல்ல, பள்ளிவாசலையும் அல்ல மாறாக தூங்கிக்கிடக்கும் தரிசு நிலத்தைத்தான் என்பது சற்று சிந்தித்துப் பார்த்தால் விளங்கும்.

பாரதம் விடுதலை அடைந்த பிறகு எப்படியெல்லாம் தன் நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற பாரதியின் தொலைநோக்கு பாடலில் வரும் வரிகளை இப்படித்தான் நான் பொருள் கொள்ள வேண்டும்.

//ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்// என்று அதே பாடலில் பின்வரும் வரிகளில் பாடுகின்ற அவன் அதே கருத்தை ஏன் இருமுறை பாட வேண்டும்?

“பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று அவன் சொன்னது தரிசு நிலத்தையும், வயற்காட்டின் புனிதத்தையும்தான் என்பது நமக்கு இப்போது தெளிவாகப் புரிகிறது.

“பள்ளி” என்ற சொற்பதத்தை இந்த பாடலில் மட்டும்தான் பாரதி பயன்படுத்தி இருக்கிறான் என்பதல்ல. “புயற்காற்று” மற்றும் “திருப்பள்ளி எழுச்சி” என்ற கவிதைகளிலும் இச்சொல்லை பயன் படுத்தியுள்ளான். திருப்பள்ளி எழுச்சியில் பாரத மாதாவை விளித்து

//இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய் !
ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே !//

என்று பாடுகிறான்.

முஸ்லீம்கள் மீது பாரதியார் துவேஷப்போக்கைக் கொண்டிருந்தார் என்ற ரீதியில் அர்ஜுன் சம்பத் சித்தரிப்பது அந்த புரட்சிக் கவிஞனின் மீது சகதியை அள்ளி வீசுவதற்குச் ஒப்பாகும். பாரதியாரை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. சரித்திரத்தை மாற்றியமைப்போம் என்று அமித்ஷா சொன்னது இந்த அர்த்தத்தில்தானா என்று நம்மை சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

பாரதியார் பிறந்து வளர்ந்த ஊர் எட்டயபுரம். அந்த மண்ணிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. சீறாப்புராணம் யாத்த உமறுப்புலவர் வாழ்ந்த ஊரும் அதுவே. அங்கிருந்த முஸ்லீம் பெருமக்களுடன் இணக்கமான நட்பு கொண்டிருந்தவர் பாரதியார். பாரதியாரை பலரும் “தாடி ஐயர்” என்றே பட்டப்பெயரிட்டு அழைத்தனர்.

புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் பாரதியார் ஒரு முஸ்லீம் அன்பரின் கடையில் ஒன்றாய் அமர்ந்து தேநீர் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்.. புதுவையிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் முஸ்லீம்களுடன் நெருங்கிப் பழகினார் என்ற ஒரே காரணத்துக்காக அக்ரகாரத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டார்.

கடையம் பகுதியில் பாரதியாருக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர். பொட்டல்புதூர் இனாம்தார், செய்யதுசுலைமான் போன்றவர்கள் அவருடன் நெருக்கமாக பழகினார்கள்.

1910-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 தேதியிட்ட விஜயா என்ற பத்திரிக்கையில்
‘முஸ்லீம்களின் சபை’ என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய கட்டுரையைப் படித்துப் பார்த்தால் அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் என்பது நமக்கு புரியும்.

பாரதியார் ஆற்றிய சொற்பொழிவுகளில் நபிகள் பெருமானாருடைய பெயரை உச்சரிக்கும் நேரத்திலெல்லாம் “ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்” என்று அவர்களின் பெயரோடு “ஸலவாத்’ சொல்ல என்றுமே அவர் தவறியதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

அல்லாஹ்வைப்பற்றி அவர் பாடிய பாடல் வரிகளை ஆராய்ந்தால் இஸ்லாத்தைப் பற்றிய அவருடைய புரிதல் எந்த அளவுக்கு ஆழமாக இருந்தது என்பதை நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது..

//பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே!
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி!
கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாத ராயினும் தவ மில்லாதவ ராயினும்
நல்லாருரை நீதி யின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன்//

என எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புகழை அமுதமொழியில் அழகாக பாடுகிறான் அந்த பாட்டுக்கோர் புலவன்.

1920-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி ரவணசமுத்திரம் என்ற ஊரில் சின்னப் பள்ளிவாயிலுக்கு நேரெதிரே ஒரு பொதுக்கூட்டம், அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஹாஜி முகமது மீரான் சாஹிப் ராவுத்தர் அவர்கள்.. பாரதியார் இக்கூட்டத்தில் பேசிய முழு உரையும் 18.3.1920 நாளிட்ட சுதேசமித்திரன் இதழில் வெளியானது.

1920-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி பொட்டல் புதூர் என்ற ஊரில் தெற்குப் புதுமனைத் தெருவில் முஸ்லிம் சங்கம் மற்றொரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

“இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை” என்ற தலைப்பில் பாரதியாரரின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் பேச தொடங்குவதற்கு முன்பு திருமறை வசனங்கள் (கிரா-அத்) ஓதிய பிறகு “அல்லா அல்லாஅல்லா” என்று தானெழுதிய பாடலோடு தன் பேருரையைத் தொடங்குகிறார் பாரதியார்.

“நபிகள் பெருமானரைப் பற்றிய ஆங்கில அறிஞர் எழுதிய ஒரு நூல்தான் இஸ்லாத்தைப்பற்றி அறிந்துக்கொள்ள எனக்கு ஆவலைத் தூண்டியது. அவரது வரலாற்றைப் படித்து நான் மிகுந்த பரவசமுற்றேன்” என்று தன் அனுபவத்தை பகிர்கிறார். அதனைத் தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையில் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வை நயம்பட விவரிக்கத் தொடங்குகிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இஸ்லாத்தின் மீது பாரதியார் கொண்டிருந்த அளவற்ற மதிப்பையும் மரியாதையும் எடுத்துக்காட்ட அவரது இந்த ஒரு சொற்பொழிவே போதுமானது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரை மததுவேஷியாக, இஸ்லாத்திற்கு எதிரான நபராக அர்ஜீன் சம்பத் போன்ற சங்கரிவார் நபர்கள் சித்தரித்துக் காட்ட முயல்வது வரலாற்றை திரித்துக் காட்டும் முயற்சிகளில் ஒன்று. இது இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் குலைத்து சமுகத்தைப் பிளவுபடுத்தும் நோக்கமன்றி வேறில்லை.

#அப்துல்கையூம்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s