நாகூரும் நற்றமிழும்

நாகூரும் நற்றமிழும் பாகம் -1
==============================

நாகூரில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும் தூய தமிழ்ச் சொற்களை தொடராக எழுதலாம் என ஒர் எண்ணம்.

“ரொம்பத்தான் இஹ பீத்திக்கிறாஹா. எங்க ஊருலேயும்தான் இப்படிச் சொல்லுவாஹா” என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியாமல் இல்லை,.

“பீத்திக்கிறீங்க” என்று சொல்றீங்க பாத்தீங்களா இதுவும் தூய தமிழ்ச் சொல்தான். பீற்றுதல் என்றால் அகம்பாவத்துடன் பெருமை பேசுதல் என்று பொருள்.

நான் நாகூரோடு சம்பந்தப்பட்டவனாதலால் நானறிந்த வட்டார வழக்கைத்தான் நான் சொல்ல முடியும்.. உங்கள் ஊரோட சம்பந்தப்பட்ட சொல்லாடல்களை நீங்களும் தாராளமாக பகிரலாம். இதில் பீத்திக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லே சார்.

நாகூர் வட்டார வழக்கில் இந்த “ஏலலே” என்ற சொற்பதம் மிகவும் சர்வ சாதாரணம்.

“உங்களெ வந்து பாக்க ஏலல தங்கச்சி”

“எனக்கு உடம்புக்கு ஏலல”

நாகூர் மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் அடிபடும் சொற்றொடர் இது.

“அஹ ஏலாமையா இருக்குறாஹா” என்று சொன்னால் அவர் உடம்புக்கு முடியாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.

அக்காலத்தில் “ஏலாமை” என்ற சொற்பதத்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் சில செய்யுள்கள் உங்கள் பார்வைக்கு:

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார்
கோள்வேங்கை அன்னையால் நீயும் அருந்தழையாம்
ஏலாமைக்கு என்னையோ நாளை எளிது

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று

இதோ ஒரு குறள் உங்கள் பார்வைக்கு:

எண்ணலெல்லாம் ஏற்றமிக்க எண்ணுக ஏலாதும்
நண்ணற்க நம்பிக்கை நைந்து

இயலுதல் என்ற பொருளில் “ஏலுதல்” என்ற வார்த்தையும், இயலாமை என்ற பொருளில் “ஏலாமை” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மேலேயுள்ள குறளில் “நைந்து” என்ற சொல் தளர்ந்து என்ற பொருளில் வருகிறது.

இந்த பழஞ்சொல் நம் வட்டார வழக்கில் “நைஞ்சு” என்றாகி விட்டது.

“செம்சட்டி (செம்புசட்டி) நைஞ்சு (நைந்து) போச்சு” என்பன போன்ற சொற்றொடர்களை நாம் அன்றாடம் கேட்க முடிகிறது.

“நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி” (புற:376:11).
“நல்கும் வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம் ஒல்கு வாய் ஒல்கல் உறும்” (தி.நூ:17:3).
“நைந்து வீழும் முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்தே” (கோவை:61).: “தேய்ந்த நுண்ணிடை நைந்து உகச் செப்பினை” (சீவ:3:270).

இதுபோன்ற சொல்லாடல் பழந்தமிழ்ப் பாடல்களில் நாம் காண முடிகின்றது.

“ஏலலே” என்பது சங்கத்தமிழ்ச் சொல் என்பதை உங்களுக்கு நான் புரிய வைத்து விட்டேன். இதுக்குமேலே என்னால ஏலலே வாப்பா.

– அப்துல் கையூம்

(இதில் சில கருத்துக்கள் ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் நான் எழுதியதுதான்)

நாகூரும் நற்றமிழும் – பாகம் 2
================================

திருவாளியெத்தன்

“அவன் சரியான திருவாளியெத்தனப்பா” என்பார்கள் எங்களூரில். அது என்ன திருவாளியெத்தன்? திருவாளியெத்தன் என்றால் பக்கா ஃப்ராடு (பக்கா = உருது, ஃப்ராடு ஆங்கிலம்) அல்லது டுபாக்கூர் ஆசாமி என்று பொருள்.

‘இவன் சரியான திருவாளியத்தன்’ என்று சொன்னால் மோசடிப் பேர்வழி என்று பொருள். இச்சொல்லாடல் எப்படி ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம்.

“திருவாளார் எத்தன்” என்பது மருவி திருவாளியத்தன் என்றாகி விட்டது.

மிஸ்டர் எக்ஸ், மிஸ்டர் பொதுஜனம் என்று இன்றைய பத்திரிக்கைகளில் மறைமுகமாக குறிப்பிடுவதுபோல் இந்த சொல்லாடலும் நம்மிடையே வந்தது.

“திருவாளர் எத்தன்” அதாவது “மிஸ்டர் எத்தன்” என்பதன் திரிபே திருவாளியெத்தன். மோசடிப் பேர்வழியை குறிப்பிடும்போதுகூட எத்தனை நாசுக்காக “திருவாளர் எத்தன்” என்று குறிப்பிடுகிறார்கள் பாருங்கள்.

//சமணாதரெத்தராகி நின்றுண்பவர் (தேவா. 854, 10).//
//வினைப்பற்றறுக்கு மெத்தர்களோ பெறுவார் (திருநூற். 4)//.

இப்பாடலில் வரும் சொற்களை பிரித்துப் படித்தால் “எத்தர்” என்ற சொற்பதம் ஏமாற்றுக்காரனை குறிக்கும்.
சங்ககாலத்தில் சற்று மரியாதையாகவே “எத்தர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மூடன் என்று குறிப்பிடாமல் மூடர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள் கயவன் என்று குறிப்பிடவில்லை. கயவர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. இன்றல்ல என்றாவது ஒருநாள் திருந்தி நல்லவராக ஆகிவிட மாட்டார்களா என்ற நப்பாசையில்தான் இந்த மரியாதை..வேறென்ன.? .

இப்படிப்பட்டவர்களை “எம்டன்” என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. “எம்டன்” என்ற ஜெர்மானிய போர்க்கப்பல் உலகமகா யுத்தத்தின்போது பலத்த பாதுகாப்புக்கு இடையே சென்னை அருகே வந்து தன்னுடைய கைவரிசையை காட்டிவிட்டுப் போனது. இப்படிப்பட்ட ஜகஜால கில்லாடியை , ஜகதல பிரதாபனை எம்டன் என்று அழைக்கலாயினர்.

(அடுத்த தொடரில் மேப்படியானைப் பற்றி எழுதுகிறேன்)

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 3
===============================

மேப்படியான்
————————-

நாகூரில் மேப்படியான் (மேற்படியான்) என்ற வழக்குச் சொல் மிகவும் சர்வ சாதாரணம்.

மொழி தெரியாத வெளியூர் ஆசாமிகளை எதிரே வைத்துக் கொண்டு அவருக்கே புரியாதவாறு அவரைக் குறிப்பிட்டு பேச நேரும் போது “மேப்படியான்” என்று சொல்வதுண்டு.

வில்லங்கமான ஆசாமிகள், திருநங்கைகள் இவர்களைக் குறிப்பிடவும் இப்பதம் பயன்பாட்டில் இருக்கிறது.

உண்மையில்… மேற்படி என்றால் மேலே கண்ட படி As on above/ The aforesaid/ abovesaid/ above mentioned என்று பொருள். கீழ்ப்படி என்றால் As below என்று பொருள்.

அக்காலத்தில்அரசாங்க பத்திரம் எழுதும்போது இந்த மேற்படி என்ற சொல்லை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது

Ancient and Medieval Tamil and Sanskrit Inscriptions Relating to South East Asia and China: Noboru Karashima and Y. Subbarayalu

மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஆய்வுக் கட்டுரையில் நாகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஒன்றில் கீழ்க்கண்ட இவ்வாசகம் காணப்படுகிறது. இது 1019-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

//கோப்பரகேசரிபன்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு யாண்டு 7 ஆவது க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு பட்டினக் குற்றத்து நாகபட்டினத்து திருக்காரோண … டைய மஹாதேவர் கோயிலில் கிடாரத்தரையர் கன்மி ஸ்ரீ குருத்தன் கேசுவன்நான அக்ரலேகை எழுந்தருளிவித்த அர்த்தநாரிகளுக்கு அவிபலி அர்ச்சனைக்கு என்று #மேற்படியான் வரக்காட்டின சீனக்கனகம் எண்பத்தேழு கழஞ்சே முக்காலும் #மேற்படியா[ன்] இத்தேவர் கோயிலில் உத்தமாக்ரம் இரண்டு கலமுண்ண போகட்டுக்கு என்று வரக்காட்டின சீனக்கனகம் எண்பத்தேழு களஞ்சே முக்காலும் #மேற்படியான் தேவர்க்கும் ப்ராமணர்க்கும் … தயிரு … என்று வரக்காட்டின உண்டிகைப்போன் [அ]றுபதின் கலஞ்சே முக்காலும் ஆக இப்பொன் இருநூற்று முப்பத்தாறு கலஞ்சே காலும் திருக் காரோணமுடையார்க்கு வேண்டும் திருவாபரணம் உள்ளிட்டன செய்யக் கொண்டு இத்தேவர் பண்டாரத்தை….//

தமிழகம் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில், நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் கடார அரசன் விஜயனின் காணிக்கைகளை ஆவணப்படுத்தும் கல்வெட்டு இது..

மேற்படியான் என்ற சொல் இன்றல்ல நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது என்பது இதிலிருந்து புலனாகிறது.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழ் – பாகம் 4
=============================
நான் ரொம்பத்தான் அலட்டிக்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்

தப்புத்தாளங்கள் படத்தில் கண்ணதாசன் வரிகளில் வரும்

என்னடா பொல்லாத வாழ்க்கை?
இதுக்கு போய் அலட்டிக்கலாமா”

என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் கவிஞர் “அலட்டல்” என்ற லோக்கல் வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் என்றே நினைத்தேன். அது மெட்ராஸ் பாஷை என்றுதான் நானும் நினைத்திருந்தேன். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இச்சொல் அன்றாட வழக்கில் உண்டு.

“அஹ ரொம்பத்தான் அலட்டிக்கிறாஹா” இது நாகூர் வாழ் பெண்டுகளின் வாயிலிருந்து சகஜமாய் வரும் வார்த்தைகள்.

“அலற்றுதல்” என்ற சொற்பதம் மருவி அலட்டலாகிவிட்டது.

“அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே”

என்று நம்மாழ்வாரின் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலே “அலற்றுதல்” என்ற வார்த்தை கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். “அலற்றுதல்” என்பது தூய தமிழ் வார்த்தை. ஆகவே இனி நீங்கள் தாராளமாக அலட்டிக் கொள்ளலாம். தப்பில்லை,

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 5
=================================
ஒடுக்கம்
—————
ஒடுக்கம் என்றால் குறுகிய என்று ஒரு பொருளுண்டு. ஒடுக்கமான சந்து என்றால் அகலம் குறைவான சந்து என்று பொருள்.

ஒடுக்கம் என்றால் மற்றொரு பொருள் ‘அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்ட’ என்று பொருள்.

சங்க கால பொருள் ஒன்று உண்டு. “ஒடுக்கம்” என்றால் கடைசி அல்லது இறுதி என்பது. இந்த அர்த்தம் பொதிந்த வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே சரியான பதத்தில் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.

சிலப்பதிகாரத்தில் ஒடுக்கம் எனும் சொல் ‘முடிவு’ என்ற பொருளில்தான் கையாளப்பட்டுள்ளது.

//ஒடுக்கங்கூறார் உயர்ந்தோர் உண்மையான
முடித்த கேள்வி முழுது ணர்ந்தாரே//

மங்கல வாழ்த்துப் பாடலில்வரும் இந்த சிலப்பதிகார வரிகள் இதற்கு சான்று பகர்கிறது. .

முஸ்லீம்கள் “ஒடுக்கத்து புதன்” என்ற ஒருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.

“ஒடுக்கம்” எனும் வார்த்தைக்கு சங்கத்தமிழில் கடைசி என்பது பொருளாகும். அரபு காலண்டரில் ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு “ஒடுக்கத்து புதன்” என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த நாளை உருதுமொழி பேசுபவர்கள் “ஆக்ரி சஹுஷம்பா” அதாவது இறுதி புதன்கிழமை என்று குறிப்பிடுவார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமையாம். இந்த நாளை கொண்டாடுவது கூடுமா கூடாதா என்ற விவாதம் நமக்கு இப்போது தேவையில்லாத ஒன்று. அந்த சர்ச்சையும் இங்கு வேண்டாம். . இப்பொழுது இந்த கொண்டாட்டம் அறவே குறைந்துவிட்டது.

இளம் பிராயத்தில் நாகூரில் “ஒடுக்கத்து புதன்” என்ற நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதைப் பர்த்திருக்கிறேன்..

ஏதோ ஒரு மையினால் ஓலைச்சுவடியில் அரபி வாசகங்களை எழுதி கழுவிக் குடிக்கச் செய்வார்கள்.

இது சுகாதாரமா? வயிற்றில் சென்று தீங்கு விளைவிக்காதா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்கின்ற வயதில்லை அன்று. நானும் ஓலைச் சுவடியை கரைத்துக் குடித்திருக்கிறேன். “அவன் கரைச்சு குடிச்சவன்” என்ற மரபுத்தொடர் இதனால்தான் வந்ததோ என்னவோ? ஆராய வேண்டும்.

ஒடுக்கத்து புதனன்று ஒட்டடை அடித்து வீட்டைச் சுத்தம் செய்வார்கள். காலையில் எழுந்தவுடன் பலவூட்டு மணம் எனப்படும் சிகைக்காய் போன்ற ஒரு வஸ்துவை தலையில் தேய்த்து குளிக்க வைப்பார்கள். ‘உறட்டி’ என்று அழைக்கப்படும் ஒருவகை மொத்த ரொட்டியை சுடுவார்கள். கிழிந்துப்போன குர்ஆன் வாசக நூல்களை பத்திரமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள். அதோடு அந்த உறட்டியையும் கடலில் கரைப்பார்கள். (உணவுப் பொருட்களை வீண்விரயம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தும் ஒரு மார்க்கத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி வந்ததென்று தெரியவில்லை.)

அது ஒரு நிலாக் காலம். பள்ளிப் பருவத்து ஞாபகங்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன. அன்றைய அந்தி மயங்கும் வேளையில் கடற்கரை களைகட்டும். அங்கும் இங்கும் குவிந்திருக்கும் மணற்குன்றுகளில் இளைஞர்கள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. (No sand Dunes nowadays)

காளையர்கள் ஒரு பக்கம் சடுகுடு ஆடிக் கொண்டிருப்பார்கள். பலூனும் கையுமாய் ஜவ்வு மிட்டாய் வாட்ச்சை மணிக்கட்டில் கட்டிய வண்ணம் சின்னஞ் சிறார்கள் இங்கும் அங்கும் அலைவார்கள். திறந்த மணற்வெளியில் அடிக்கடைகள் முளைக்கும். சீனிமாங்கா, இலந்தைவத்தல், காண்டா, பறாட்டா உருண்டை, வாடா என்று நாகூருக்கே உரிய பிரத்யேகமான பலகாரங்கள் ஜதப்பாக (விமரிசையாக) விற்பனையாகும்.

இக்கொண்டாட்டம் சரியோ, தவறோ, ஊர்மக்களை ஓரிடத்தில் திரட்டி, ஒரு அந்நியோன்னியம் உண்டாக்கி, அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் ஒரு சமுகத் திருவிழாவாகவே (Social Get together) அது எனக்குத் தென்பட்டது.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 6
=================================

கூதல்
————

“செம கூதலா இக்கிதுங்கனி’ என்று நாகூர்க்காரர் வாய்மலர்ந்தால், கடும் குளிராக இருக்கிறது என்று பொருள் கொள்க. குளிர் காற்றை “கூதக்காத்து” என்பார்கள். அனைத்து கிராமங்களில் இச்சொல்லாடல் சர்வ சாதாரணம்.

கேட்பதற்கு ‘கூதல்’ என்ற வார்த்தை தூயதமிழ்ச் சொல் போன்று இல்லை. ஆனாலும் அது தூய தமிழ்ச் சொல்தான்..

நாலாயிரத்திவ்விய பிரபந்தத்திலும் “கூதல்” என்னும் சொல் குளிர் எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது.

//கூர்மழை போல்பனிக் கூதல் எய்திக்
கூசி நடுங்கி யமுனை யாற்றில்//

மேற்கண்ட செற்றொடரில் “கூதல்” என்ற சொல் இடம் பெற்றுள்ளமையைக் காணலாம்.

“கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்” இது சம்பந்த சுவாமிகளின் பாடல் வரிகள்.

நொந்து
—————-
‘மரைக்கா ரொம்பத்தான் நொந்துப் போயிட்டாஹா’ என்ற சொல்லாடல் எங்களூரில் உங்கள் காதில் விழ நேரலாம். “நொந்து நூடுல்ஸ் ஆயிட்டான்” இந்த பஞ்ச் டயலாக் அனைத்து ஊர்களிலும் பிரபலம். அது ஏன் நூடுல்ஸை மட்டும் உதாரணம் காட்டுகிறார்கள்? ரைமிங் என்பதாலா? (Maggie, Lo Mein, Chow Mein, Spaghetti, Mee Goreng இதையும் எடுத்துக்காட்டாக சொல்லலாமே)

“நொந்து” என்பதும் தூய தமிழ்ச்சொல்தான். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? நொந்து போய் விடவேண்டாம். நற்றிணையில் இடம்பெற்றிருக்கும்

‘யார்க்கு நொந்துரைக்கோயானே‘ (211)

என்ற தொடரில் “நொந்துதல்” என்ற வார்த்தை வருந்துதல் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது.

உடுப்பு
————-
“ஹஜ்ஜூ பெருநாளுக்கு உடுப்பு எடுத்திட்டியலா வாப்பா?”என்று வினவினால் “தியாகத் திருநாளுக்கு வேண்டி துணிமணி எடுத்து விட்டீர்களா?” என்று பொருள்.

அது என்னது உடுப்பு?. கேட்டாலே கடுப்பு ஆவுது. டிரஸ்ஸுன்னு தமிழ்லேயே சொல்லலாம்லே என்று யாராவது கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (இது நகைச்சுவை. ஆதலால் இங்கு சற்று சிரித்துவிட்டு நகரவும்)

உடுப்பு எனும் சொல் சங்க காலச் சொற்பதம். மணிமேகலையில்

“மணிக்கோவையுடுப்பொடு” (3. 140)

என்று இடம் பெற்றிருக்கிறது.

“துணிமணி எடுத்தாச்சா?” என்று ஏன் சொல்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தேன். துணி தெரியும். அது என்னது மணி? இனிமேல்தான் அந்த மணியை துழாவ வேண்டும்.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 7
===============================

“பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே”’

நாகூர் கவிஞர் ஆபிதீன் தன் ஊரைப்பற்றி ‘பீத்திக்கிட்டு’ பாடிய பாடலிது. அவர் பெருமை கொள்வதற்கு காரணம் வலுவாக இருக்கிறது. ஆதலால் அவரை குறை கூற முடியாது.

பூம்புகாரின் கடல் அழிவிற்குப் பிறகு நாகப்பட்டினம் துறைமுகம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. தமிழக கடலோரம் வாழ் இஸ்லாமியப் பெருமக்கள் பெரும்பாலும் அக்காலத்தில் சமண மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு தழுவியவர்களே.

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் எண்ணற்ற தூயதமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் தாங்கள் தினந்தோறும் உரையாடும் ஊர்வழக்குப் பேச்சு தூயதமிழ் சொற்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

சமணர்கள் மற்றும் புத்த மதத்தவரின் கேந்திரமாக நாகூர்-நாகை விளங்கியது. ஒருகாலத்தில் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட காலத்தில் நிறைய பேர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார்கள். பள்ளி என்பது சமணர்களின் வழிபாட்டுத்தலம். பள்ளிவாயில், தொழுகை, நோன்பு, ஓதுதல் போன்ற சமணர்கள் பயன்படுத்திய சொற்கள் இஸ்லாமியர்களின் பயன்பாட்டில் வந்தன.

நாங்கள் நீராகாரம் என்று சொல்வதில்லை. ஆகாரம் வடமொழிச் சொல். நீச்சோறு (நீர்ச்சோறு) என்றே சொல்வதுண்டு.

“சாய்” என்றோ “சாயா” என்றோ சொல்வதில்லை. தேத்தண்ணி (தேயிலைத் தண்ணீர்) என்றே பயன்பாட்டில் உள்ளது.

மிளகு ரசம் என்று சொல்வதில்லை. மொளவுத்தண்ணி (மிளகுத்தண்ணீர்) என்றே இங்கு சொல்கிறார்கள்.

இன்னும் எத்தனையோ :

துடைப்பம் என்பதை விளக்குமாறு என்றும்
சாம்பிராணி என்பதை (கொமஞ்சான்) குமைஞ்சான் என்றும்
சாவி என்பதை தொறப்பு (திறப்பு) என்றும்
சாதம் என்பதை சோறு என்றும்
குழம்பு என்பதை ஆணம் என்றும்
பாத்திரம் என்பதை ஏனம் என்றும்
கர்ப்பிணி என்பதை சூலி என்றும் சொல்வதுண்டு.

கருவுற்றவளை கர்ப்பவதி, கர்ப்பிணி என்று அழைப்பதை விட சூல் கொண்ட அவளை சூலி என்றழைப்பதே சாலச் சிறந்தது.

சிகிச்சை என்ற சொல் தமிழல்ல. என் பாட்டி “பண்டுவம்” என்ற சொல் பயன்படுத்தக் கேட்டிருக்கின்றேன். பண்டுவம் என்பது சிகிச்சை என்பதன் முறையான மாற்றுச்சொல்.

சாமான் வாங்கிட்டு வாங்க என்று சொல்ல மாட்டார்கள். பண்டம் வாங்கிட்டு வாங்க என்றுதான் சொல்வார்கள். பண்டம் என்பது சங்ககாலச் சொல். இன்னும் நாகூரில் பண்டக சாலை, கல்பண்டக சாலை (GODOWN) என்று உள்ளது,

“ஒரே ஓசடியா போச்சு” என்று பெண்கள் அலுத்துக் கொள்வார்கள். ஓசை+அடி என்பதே ஓசையடிஆகி பின்னர் ஓசடி ஆகிவிட்டது.

பணியாரம் வகைகளில் வட்லாப்பம் (வட்டில்+ஆப்பம்), போனவம் என்ற உணவு வகையுண்டு.

நானும் போனவம் என்ற இச்சொல் மலேசியா அல்லது இந்தோனேசிய மொழியிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கும் என்று நினைத்தேன். போனகம் என்பது தூய தமிழ்ச்சொல்.

ஒளவையார் ‘கொன்றை வேந்தன்’ பாடலில் இவ்வாறு பாடுகிறார்,

//போனக மென்பது தானுழந் துண்டல்// (69)

அதாவது தானே உழைத்துப் பயிரிட்டு விளைச்சலை உண்ணும் உணவு ‘போனகம்” எனப்படும்.

ஆகா.. என்ன ஒரு அழகான சொல்லாடல் நம் பயன்பாட்டில் உள்ளது என்பதை நினைக்கும்போது நம் உள்ளம் பூரிக்கின்றது.

எங்கள் ஊரில் பெண்கள் உரையாடுகையில் ஆங்கிலத்தில் MISCELLANEOUS என்ற சொல்லுக்கு நிகராக ‘அகடம் பகடம்” என்ற சொற்பதத்தை பயன்படுத்துவார்கள்.

“அகட சக்கர விண்மணி யாவுறை”
“பகட சக்கர முதற்பல பவமெனும் துயரின்”

மேப்படி (மேற்படி) செய்யுள் காஞ்சி புராண நூலில் இடம்பெற்றுள்ளது.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 8
==============================

( இதுமுன்பே எழுதியது. நண்பர் ஃபிதாவுல்லா அவர்களால் மலேயா பத்திரிக்கை ஒன்றில் இது பிரசுரமானது)

ஏசுறாஹா…
============

“ஏசு” என்பதால் இது மார்க்கப் பதிவு என்று நினைக்க வேண்டாம். அந்த “ஏசு” வேற. இந்த “ஏசு” வேற.

“அஹ ஏசுறாஹா”, “என்னை ஏசாதீங்க”, “ஏம்பா ஏசுறே?”

நாகூர் வட்டார மொழியில் இதுபோன்ற பேச்சுக்கள் சர்வ சாதாரணம். திட்டுதல் என்று பொருள்படும் இச்சொல்லை வேறு சில இடங்களில் “வைதல்” –என்று சொல்வதை காதுபட கேட்டிருக்கிறேன். உதாரணம்: “அவிங்க வையுறாங்க” “ஏம்பா வையுறே?”

“வசைபாடுதல்” அல்லது “வஞ்சித்தல்” என்ற சொல் “வைதல்” என்று மருவியிருக்கக்கூடும் என்பது என் கணிப்பு. நிந்தித்தல் என்பது இதன் பொருள். சில இடங்களில் ஏசினான் என்பதை “மானாவாரியா பேசிப்புட்டான்” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
“ஏசுறாஹா” என்று நாகூரில் பயன்பாட்டில் இருக்கும் இச்சொல் தூயதமிழ்ச் சொல்லா என்ற சந்தேகம் ரொம்ப நாளாக எனக்கிருந்தது. இந்த ஒளவையார் பாடலை படித்தபின் அந்த ஐயம் முற்றிலும் தீர்ந்தது.

ஏசி இடலின் இடாமையே நன்று – எதிரில்
பேசும் மனையாளில் பேய்நன்று – நேசமிலா
வங்கணத்தில் நன்று வலியபகை, வாழ்விலாச்
சங்கடத்தில் சாதலே நன்று
…ஒளவையார்

நானும் இதன் முதல் வரியை கேட்ட மாத்திரத்தில் “ஏசி போட்டுக்கிட்டு ரூமிலே தூங்கறத விட ஏசி போடாம தூங்குறதே சாலச் சிறந்தது” என்று ஒளவையார் சொல்கிறாரோ என்று தவறாக நினைத்தேன்.

இப்பாடலின் பொருள்: “ஏசி விட்டு ஒருத்தருக்கு தானம் தருவதை விட, தானம் தராமலிருப்பதே மேல். கணவனுக்கு முன்னால் நின்று மறுத்துப் பேசும் Female மனைவியைக் காட்டிலும் பேயானது ரொம்பவும் மேல். அன்பில்லாத உறவினைக்காட்டிலும் பெரும்பகையே மேல். சங்கடத்தால் நசிந்துபோன வாழ்வைக்காட்டிலும் சாவதே மேல்.

இப்பொழுது ஒளவையார் உயிரோடிருந்திருந்தால் இந்த கடைசி வரிக்காக “அவர் தற்கொலைக்குத் தூண்டினார்” என்று அவர் மீது வழக்கு போட்டிருப்பார்கள்.

ஏசுதல் என்ற சொல்லை ஒளவையார் பயன் படுத்தி இருப்பதால் அது சங்க காலத்து தூயதமிழ்ச்சொல் என்பது நன்கு விளங்குகிறது.

நாகூர் உட்பட்ட ஏனைய ஊர்களிலும் வட்டார வழக்கில் பயன்பாட்டில் இருக்கும் இதுபோன்ற எண்ணற்ற தூயதமிழ்ச் சொற்களை தொகுத்து இதற்கு முன்பும் நிறைய எழுதியிருக்கிறேன்

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 9
=================================

“என்னாங்கனி”, “வாங்கனி”, “போங்கனி” இதைப்பற்றியும் எழுதுங்கள் என்று ஒரு நண்பர் கோரிக்கை வைத்திருந்தார்.

விளித்தல் என்பது ஒரு சுகமான அனுபவம்.

கிரகாம் பெல்லின் காதலியின் பெயர் “ஹலோ” என்பதாகவும், அவர் முதலில் தொலைபேசியில் “ஹலோ” என்று அழைத்ததினால்தான் நாம் எல்லோரும் “ஹலோ” போட்டு உரையாடலை தொலைபேசியில் தொடங்குவதாகவும் யாரோ ஒரு பிரகஸ்பதி கட்டுக்கதையை கிளப்பி விட, அது பல ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் தொற்று நோயாய் பரவி வந்தது.

நான் கூட கிரகாம்பெல் தமிழ்நாட்டில் பிறந்து அவர் காதலியின் பெயர் முனியம்மா என்று இருந்திருந்தால் இந்நேரம் இங்கிலீஷ்காரன் உட்பட அரபி முதற்கொண்டு போனை எடுத்ததும் “முனியம்மா” என்றுதான் அழைத்திருந்திருப்பான் என்று வேடிக்கையாக எழுதியிருந்தேன். கடைசியில் பார்த்தால் அது ‘உடான்ஸ்’ கதையாம். யாரோ ரீல் சுற்றியிருக்கிறார்கள். நாமதான் எதையும் நம்பி விடுவோமே!! “நாசா”காரன் உடனே 24 மணி நேரத்திற்குள் சென்னையை காலி பண்ண சொல்லிவிட்டான் என்றாலும் அப்படியே நம்பி விடுவோம்.

பிராமணர்களிடம் “என்னாங்கானும்” “என்ன ஓய்?” என்ற விளித்தலைக் காணலாம்.

நாகூரில் மட்டும் விசேஷமான இந்த விளித்தல் “என்னாங்கனி” என்பது.

எண்ணத்தின் அளவே செயல் என்பார்கள். (இன்னமன் ஆமானு பின் நியாத்). எண்ணங்கள் உயர்ந்து இருக்க வேண்டும்

நாகூரில் இருக்கும் இந்த சொல்லாடலில் தனிச் சிறப்பு உள்ளது. GHANI என்றால் அரபு மொழியில் செல்வம் மிக்கவன் என்று பொருள். “என்னாங்கானும்” என்பதைப்போல விளித்தல் இருக்கணும். அதே சமயம் அது அர்த்தம் பொதிந்த சொல்லாக இருக்கணும். அதுபோன்ற நல்லண்ணெத்தில் உருவாக்கப்பட்ட சொல்தான் “என்னாங்கனி”.

கனி.. (அதாவது பணக்காரன்) என்று சொல்லச் சொல்ல அந்த சொல்லை “ஆமீன்” என இறைவன் பலிக்கச் செய்துவிட மாட்டானா என்ற நப்பாசையில்தான் இந்த அழகுச் சொல்லாடல்.

நாகூரிலிருந்து 13.7 கிலோ மீட்டரே தூரமுள்ள காரைக்காலில் விளித்தல் சற்று வேறுபடும். “என்னாம்பளே?” என்பார்கள். அதன் பொருள் “என்ன ஆம்பிளே?” என்பதாகும். தன்னை ஆண் பிள்ளை என்று கூறிவிட்டால் ஒருவித பெருமிதம் ஏற்படத்தானே செய்யும்?. “என்ன மாஷே?” என்றும் சொல்வதுண்டு. Monsieur என்றால் பிரஞ்சு மொழியில் “சார்” என்று அர்த்தம்.

ஒவ்வொரு ஊரிலுமா ஒருவிதமான விளித்தலை நாம் காண முடியும். நண்பர்களுக்குள் “என்ன மச்சான்?” “என்ன மச்சி” “என்ன பார்ட்டி?” “என்ன பங்காளி?” முதலியன. திருநெல்வேலியில் “என்னலே?”

மனைவி கணவனை விளிக்கையில் “என்னாங்கரேன்” என்று சொல்வதுண்டு

மெட்ராஸ் பாஷையில் “இன்னாபா?”. “இன்னாநைனா?” “இன்னாமே?” போன்ற சொல்லாடல் பிரபலம்.

நான்கூட வேடிக்கையாய் நண்பர்களிடத்தில் சொல்வதுண்டு. இதுதான் தூய தமிழ்ச் சொல் என்று கூறி அதற்கு இந்த குறளையும் எடுத்துக்காட்டாக கூறி “இன்னா செய்யாமை” என்று ஒரு அதிகாரமே திருவள்ளுவர் வைத்துவிட்டு போனார் என்று சொல்லியிருக்கிறேன்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்”

இன்னாபா நான் சொல்றது மெய்யாலுமே கரிக்ட்டா?

அதைவிட எனக்கு சிரிப்பு வரவழைப்பது என்னவென்றால் இரண்டு ஆண்கள் ஒருவருக்கொருவர் விளிக்கும்போது “என்னம்மா (என்ன + அம்மா) கண்ணு?” என்கிறார்கள்.

இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் விளிக்கையில் “என்னப்பா (என்ன + அப்பா) ஆளையே காணோம்?” என்கிறார்கள்.. What a முரண்? 😂🤣🤣

இப்பொழுதெல்லாம் தேசபக்தி உடையவராக நம்மை காண்பித்துக் கொள்ள வேண்டுமென்றால் “என்ன ஜீ” என்றே கூற வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நாமும் “Anti Indian” ஆக வாய்ப்பு உள்ளது.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 10
==================================

என்ன நக்கலா?, என்ன கிண்டலா? என்று மற்ற ஊர்களில் கேட்கப்படும் கேள்வியை நாகூரில் கேட்பது எப்படி தெரியுமா?

என்ன வெடக்கிறீங்களா?

“வெடக்கிறது” என்பது தூய தமிழ்ச்சொல்லா என்று கேட்டால் ஆமாம் என்பதே நம் பதில்.

விடைப்பது என்றால் கோபமூட்டும் செயல். .(Manifestation of anger) சினந்தால் மூக்கு விடைக்கும் இல்லையா?

சீவக சிந்தாமணியில் 555 பாடலில்

“விடைப்பருந்தானை வேந்தன்” என்ற சொல்லாடல் வருகிறது

முழுப்பாடலிது:

//படைப்பு அருங் கற்பினாள் தன் பாவையைப் பரிவு நீக்கிக்
கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும்
விடைப்பு அருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித்
தொடுத்து அலர் கோதை வீணா பதிக்கு இது சொல்லினானே//

கோபமூட்டி விடப்பட்ட ஏறுதனை தழுவிப்பிடிப்பதை “விடைதழால்” என சங்க இலக்கியம் பகர்கிறது

தமிழக வரலாற்றில் முதன்முதலாக மொக்கை ஜோக் அடித்தது அழகணங்கு ஒளவைப் பாட்டிதான். முருகனிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு லொள்ளு செய்தார்.

இரண்டாவது மொக்கை ஜோக்கை ஏட்டில் ஏற்றியது நாகூர் – நாகை மக்கள்.

காளமேகப் புலவரையே கலாய்த்தவர்கள் இப் பகுதி மக்கள். “சோறு எங்கே விக்கும்?” என்று கேட்ட அவரை “தொண்டையிலே விக்கும்” என்று ஜோக்கடித்து அவரை கலாய்த்தவர்கள்.

எங்கள் ஊர் பக்கம் சென்று யாரிடமாவது பேச்சு கொடுத்தால் கண்ணில் படுபவர்கள் எல்லாம் நமக்கு கிரேஸி மோகனாகவே தெரிவார்கள்.

“கஞ்சி காய்ச்சுறது” “கூடு விடுறது” என்று சொன்னால் இங்கு கலாய்ப்பது என்று பொருள்.

நாகூர்காரர் ஒருவர் மற்றவர் வருவதைப் பார்த்து “அதோ சிங்கம் வருது” என்று சொன்னால் “அரிமா” என்றோ அல்லது “வீரம் பொருந்தியவர் வருகின்றார்” என்றோ அர்த்தமாகாது. சரியான “பேக்கு வருது” என்று பொருள்.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 11
==================================

நாகூரில் கல்யாணம் முடிந்து சில மாதத்திற்குப் பின் புது மாப்பிள்ளைக்கு “புலால் விடும் சடங்கு” நடைபெறும். அதாவது இவ்ளோ நாள் வாய்க்கு ருசியாக ஆட்டுக்கறியும், உல்லானும், குயிலும், கெளதாரியும் மாமியார் வீட்டில் ஜாலியாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த புது மாப்பிள்ளைக்கு “கவுச்சி” அதாவது மீன் சாப்பிட கொடுக்க போகிறார்களாம். (இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருப்பா)

பெரிய பெரிய மீன்களுடன், வரிசையாக தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை ஊரறிய அனுப்பி ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள். பணிப்பெண்கள் கண்ணாடி வேலைப்பாடு செய்த “துத்திப்பு” மூடி மறவையில் கொண்டு வருவார்கள்.

உப்பு முதற்கொண்டு 32 வகை சாமான்களும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து செப்பில் சீர்வரிசையாக வந்திறங்கும். உயர் ரக மீன்கள் இடம் பெற்றிருக்கும். பெண் வீட்டாரின் அழைப்பில் மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர் சூழ ஒன்றாக அமர்ந்து உண்பார்கள்.

ஹலால், பிலால், ஹிலால் போன்று புலாலும் அரபி வார்த்தை என்று நினைக்க வேண்டாம்.

“புலால்” என்பது அழகுத் தமிழ் வார்த்தை. “ஐங்குறு நூறு “ என்னும் நூலில் மருதம் பற்றிய பத்தாவது பாடலில் இடம் பெறுகிறது. புலால் என்றச் சொல் சமணம் மற்றும் புத்த மதத்தினர் அதிகம் பயன்படுத்திய சொல்

பூத்தமாசுத்துப் புலாலஞ் சிறு மீன்
றண்டுமுறை யூரன் (4-5)

இப்பாடலில் புலால் என்னும் சொல் ஆளப்பட்டுள்ளமை ஈண்டுநோக்கற்பாலது. திருவள்ளுவரும் பல இடங்களில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார். புலால் மறுத்தல் என்று ஒரு அதிகாரமே இருக்கிறது.
அடுத்து ‘சோனவ மீனு‘க்கு வருவோம். அரேபிய நாட்டிலிருந்து வாணிப நிமித்தம் தமிழகம் வந்தவர்களை யவனர் என்று அழைத்தனர்.

“அடல்வாள் யவனர், கடிமதில் வாயில் காவலிற்
சிறந்த யவனர், மரக்கல யவனர்’

எனவெல்லாம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த இடம்

‘பயன்அறவு அறியா யவனர் இருக்கை’ என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, (சிலம்பு 5-10).

யவனர்கள் என்றால் கிரேக்கர், உரோமர் என்று சிலர் கூறுவது பொருத்தமில்லாமல் இருக்கின்றது. அவை அராபியருக்கே பொருந்துகிறது.

யவனர்களின் இருக்கை பூம்புகாரில் இருந்தது. பூம்புகாரின் அழிவிற்குப் பிறகு அந்த யவனர்கள் நாகூர், நாகைப் பகுதியில் இடம் பெற்றிருந்தனர்.

பண்டைய காலத்தில் நாகூரில் சொந்தமாக கப்பல் வைத்து வணிகம் செய்த மரக்கலராயர்களும், மாலுமியார்களும், நகுதாக்களும் இருந்தனர். அரேபியாவிலிருந்து பேரீச்சை, பார்லி, முதலியவை இறக்குமதியாகும். இங்கிருந்து மிளகுப் பொதிகளை அவை ஏற்றிச் சென்றன. இச் செய்தியை அகநானூறு

‘யவனர் தந்த வினைமாணன் கலங்கள்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’

எனக் கூறுகிறது. பொற்காசுகளைக் கொண்டு வந்து கொடுத்து மிளகு ஏற்றிச்சென்றதாக குறிப்பிடுகின்றது. (கறி என்பது மிளகைக் குறிக்கும்) (நன்றி முனைவர் ராஜா முகம்மது)

மிகப் பழமை வாய்ந்த காலத்தில் அதாவது நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்பு ஒரு அரபிக் கவிதையில் இதுபோன்ற ஒரு வருணனை காணப் படுகின்றது. புறாக்கள் கூட்டமாக வந்து ஒரு கவிஞரின் வீட்டு முற்றத்தில் எச்சம் இட்டுச் செல்கின்றது. அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருண்டை வடிவமான மிளகுடன் ஒப்பிட்டு பாடுகிறார் கவிஞர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரேபியரின் தொடர்புகளால் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் காண முடிகிறது. தமிழ் மயமாகி இருக்கும் அச்சொற்களை அரபுச் சொற்கள் என அடையாளம் கண்டுக் கொள்ள முடியாத அளவுக்கு நம் சொல்வழக்கில் இரண்டறக் கலந்து விட்டன.
அரபு வார்த்தைகள் சில சங்க காலத் தமிழ் இலக்கியங்களiலும் கையாளப் பட்டுள்ளது என்பதை காணும் போது நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கின்றது.
பந்தர் என்றால் அரபியில் துறைமுகம் என்று அர்த்தம். பதிற்றுப் பத்து என்ற சங்ககால நூலில்.

“இன்னிசை புணரி இரங்கும் பௌவத்து
நுங்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டையை மஹுமூது பந்தர் என்று உருது மொழி பேசுபவர்கள் குறிப்பிடுவதை இங்கு நினைவு கூறலாம். பஹ்ரைனிலுள்ள ஒரு புகழ்ப்பெற்ற கடற்கரை சுற்றாலா தளத்திற்குப் பெயர் AL BANDER RESORT.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 12
================================

காரியம் கவை
————————-

ஒருமுறை என் பிராமணர் நண்பர் ஒருவரிடம் “ஒரு காரியமா போய்க்கொண்டிருக்கிறேன்” என்று எதார்த்த பேச்சு வழக்கில் கூறினேன். அவர் வெகுண்டதை நான் பார்த்தேன். “காரியம்” என்று சொல்லக்கூடாது. அது துக்கிரி வார்த்தை” என்று எனக்கு அறிவுரை வழங்கினார்.

நானும் புரியாமல் விழித்தேன். “காரியம் கவை” என்று எங்களூரில் அழகுத்தொடராக சர்வ சாதாரணமாக கூறுவார்கள்.

“அஹ காரியங் கவையா போயிருக்காஹா” என்று சொன்னால் “அவர் வேலை நிமித்தமாக வெளியே போயிருக்கார்” என்று பொருள். “இதில் அமங்கலம் எங்கே வந்தது?” என்று நினைத்துப் பார்த்ததுண்டு.

“காரியம்” என்பது மரணச் சடங்கு அதாவது இறந்தபின் ஆன்மா ஈடேற்றத்திற்காக செய்யப்படும் கிரியை என்ற பொருளில் உருமாறிவிட்டது. .

“அவரை ஒரு காரியமாகச் சந்திக்கப் போகிறேன்” என்று சொன்னாலோ அல்லது “நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்” என்று பிறரை வாழ்த்தினாலோ மரணச்சடங்கு என்பதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது.

“குழிப்பணியாரம்”, “முருங்கைக்காய்”, “ஜொள்ளு”, “ நாட்டுக்கட்டை” “சரக்கு” “அயிட்டம்” போன்ற சொற்பதங்கள் எப்படி கெட்ட வார்த்தை ஆகிவிட்டதோ அதேபோன்று “ காரியம்” என்ற இந்த வார்த்தையும் கெட்ட வார்த்தை ஆகிவிட்டது.

“காரியம்” தெரியும் அது என்ன கவை? கவை என்பது தமிழ் வார்த்தையா?

ஆம். தூய தமிழ்ச்சொல். “கவை” என்பதற்கு பற்பல அர்த்தங்கள் உள்ளன,

“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சபைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவனன் மரம்.”

இது ஒளவையாரின் பாடல்.

இதற்கு விளக்கம் : “கவையாகிக் கொம்பாகிக் காட்டில் நிக்கும் மரங்கள் மரங்களல்ல . சபை நடுவே , குறிப்பறியாமல் நிற்கும் எவனோருவனும் மரமாக கருதப்படுவான்” என்பது இதன் பொருள்.

கவை என்பதற்கு ஒளவையார் கூறும் பொருள் காரியம் என்ற பொருளில் அல்ல.

ஆனால் தேரையர் சித்தர் என்பவரால் எழுதப்பட்ட பதார்த்த குண சிந்தாமணி எனும் நூலில் இடம்பெற்றிருக்கும் பாடலில் (1499) “கவை” என்ற சொல் காரியம் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. தேரையர் சித்தரின் இயற்பெயர் “ராமதேவன்” என்கிறது என்கிறது ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 – 1931) எழுதப்பட்ட அபிதான சிந்தாமணி எனும் நூல்.

எனவே “கவை” என்பது காரியம் என்ற பொருளில் இடம் பெற்றிருக்கும் தூயதமிழ்ச் சொல் நாகூரில் புழக்கத்திலுள்ளது என்பது கண்கூடு.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் பாகம் – 13
==================================

திட்டு முட்டு
————————
“ஒரே திட்டு முட்டா இருக்குது ” என்றால் எங்க ஊரில் “Iam feeling restless” or “Iam feeling suffocation” என்று பொருள். “ திணறாட்டியம்” என்றும் சொல்வார்கள்.

ஒரு முட்டுச் சந்தில் உங்களை ஓட விட்டு துரத்தினால் என்னாகும்?

என்ன செய்வது, ஏது செய்வதென்றே புரியாமல், திக்குத் தெரியாமல் திகைத்துப் போவீர்கள். உங்கள் மனது ஒரு நிலையில் இருக்காது. மன அழுத்தம் இருக்கும். Yes. Exactly.. அதுதான் திட்டு முட்டு.

இதுபோன்று “தட்டு முட்டு சாமான்கள்”, “எடக்கு முடக்கா பேசுறான்”, “சட்டு புட்டுனு வந்திடு”,, என்ற சொல்வழக்கு எல்லா ஊர்களிலும் வழக்கில் இருப்பதை நாம் காணலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டுமுட்டு திருக்கோயில் என்ற பெயரில் ஒரு கோயில் இருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

பராக்கு
————–
“டேய் பாரக்கு ! எங்காவது பராக்கு பாத்துக்கிட்டு நிக்காதே” என்ற சொல்வழக்கு நாகூரில் மிகவும் பிரபலம். (இந்த பராக்குக்கும் பான் பராக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை யுவர் ஆனர்.)

“பராக்கு” என்ற சொல் வேற்று மொழிச் சொல் போன்று இருக்கிறது அல்லவா?

குறிப்பிட்ட ஒன்றின் மீது கவனத்தை நிலை நிறுத்தாமல் பார்வையை அங்குமிங்குமாக சுழல விடுதல் “பராக்கு” எனப்படும்.

பர + அக்கு = பராக்கு என்றால் பரவலான பார்வை என்று பொருள்படும்.

இச்சொல் கவனமின்மை, கவனக்குறைவு, கவனச்சிதறல், அசட்டை, பாராமுகம், பராகண்டிதம், அசிரத்தை, வேறு நினைவு, மறதி என்ற பொருளில் கையாளப்பட்டு வருகிறது.

அக்கு / அக்கம் – என்பதும் கண்ணைக் குறித்த சிறப்பான தமிழ்ச்சொல்.

கீழ்க்கண்ட சில உதாரணங்கள் நாம் பார்க்கலாம்.

நம் பார்வையில்பட்டு அருகாமையில் தென்படுபவற்றை ‘அக்கம் பக்கம்’ – எனக் குறிப்பிடுகிறோம் அல்லவா?.

காம + அக்கி = காமாக்கி ;
மீன + அக்கி = மீனாக்கி ;
வியல் + அக்கி = வியாலாக்கி —

ஆகிய அழகிய தமிழ்ப் பெயர்களே பிறமொழிப் பலுக்கலின் திரிபுகளால் காமாக்ஷி, மீனாக்ஷி , விசாலாக்ஷி என உருமாறியது என்று மொழி ஆய்வாளர்கள் பகர்கிறார்கள். இதை சிலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

கடை + அக்கம் = கடாக்கம் என்றாகி பின்னர் கடாட்சம் – கடாக்ஷ்ம் என்றானது என்றும் கூறுகிறார்கள்.

திருமந்திரத்தில் வரும் பாடலில் “பராக்கு” என்ற பழந்தமிழ்ச் சொல் காணக் கிடைக்கிறது

//இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேன் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே//.

இந்தப் பாடலில் இரண்டாம் அடியில் வரும், ‘பராக்கு அற’ என்பதில்
பராக்கு வருகிறது.

“கடை கண்ணிக்கு போனோமா வந்தோமா, பராக்கு பார்க்காமல் சட்டு புட்டுனு வீடு வந்து அடைய வேண்டும்”.

இது ஒவ்வொரு மனைவியும் கணவனுக்கு வழங்கும் அறிவுரை.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 14
=====================

பொரத்தி

“அஹ என்ன பொரத்தியா? சொந்தக்காரஹத்தானே?”

இப்படியொரு சொல்வழக்கு உண்டு. “பொரத்தி” அல்லது “பொரத்தியா” என்றால் ‘வெளிமனுஷர்’ என்று பொருள்.

இது அழகான வழக்காடல். “புறத்தி” என்ற சொல்தான் “பொரத்தி” ஆகி விட்டது.

“கரம் சிரம் புறம் நீட்டாதீர்” என்று பேருந்து வண்டிகளில் எழுதியிருப்பார்கள். அகநானூறு, புறநானூறு நாமறிவோம். புறச்சுற்று என்றால் வெளிச்சுற்று. புறதேசம் என்றால் அன்னிய நாடு, புறமுதுகிட்டு ஓடுதல் என்றால் முதுகை காட்டி ஓடுதல், புறத்தியான் என்றால் அந்நியன் என்று பொருள்.

“அகத்தி ஆயிரம் காய் காய்தாலும்
புறத்தி புறத்தியே” என்று ஒரு பழமொழி உண்டு

பவ்மானம்
——————-
என் மனைவி (அவர் நாகூர் அல்ல) கல்யாணமாகி வந்த புதிதில் அவருடைய தோழியைப் பற்றி நலன் வேறொருவர் விசாரிக்கையில் “அஹ ரொம்ப பவுமானக்காரஹ ஆச்சே?” என்று கேட்டதற்கு , அதன் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் “ஆமாம்” என்று சொல்லி விட்டார்.

பிறகு நான் “ஏன் அப்படிச் சொன்னாய்.? இது அவர்கள் காதுக்கு எட்டினால் என்னாகும்?” என்று கேட்டேன். விசாரித்துப் பார்த்ததில். அப்புறம்தான் தெரிந்தது “பவுமானம்” என்றால் என்ன அர்த்தம் என்றே அவர் அறிந்திருக்கவில்லை என்று.

பவ்மானம் என்பது பகுமானம் என்ற அழகுத் தமிழ்ச் சொல்.

வெகுமானம் என்றால் பரிசு என்று பொருள். பகுமானம் என்றால் பெருமை என்று பொருள். ஆனால் அது பெரும்பாலும் தற்பெருமை என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. “அவளுக்கு பவ்மானம் அதிகம்” என்றால் அவர் தற்பெருமை நிறைந்தவர் என்று பொருள்.

“ பாட்டொன்றோ வென்ன பகுமானம்” என்ற வரி பழந்தமிழ் நூலொன்றில் காணக்கிடைக்கிறது,

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 15
==================================

//காரைக்குடியில் பெரும்பாலும் நாச்சியப்பன், நாச்சியம்மை போன்ற பெயர்கள் பரவலாக இருக்கின்றன. இதற்கு ஏதாவது சிறப்பான காரணம் உண்டா? //
என்று முகநூல் அன்பர் திரு கம்பராமன் சண்முகம் அவர்களிடம் ஒரு வினா தொடுத்திருந்தேன்.

இவர் கம்பனடிப்பொடி சா,கணேசன் அவர்களுடைய பேரன். ஒரு காலத்தில் சா.கணேசன் அவர்களைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் இலக்கியவாதி, மட்டுமல்ல, அரசியல்வாதி, காந்தியவாதி, சிற்பக் கலை வல்லுநர், கல்வெட்டாய்வாளர் மற்றும் தமிழகத் தொன்மவியலாளர் என பன்முகம் கொண்ட தமிழறிஞர். கவிக்கம்பன் மீது அபார அன்பு கொண்டவர். காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவியவர். நீதியரசர் நாகூர் மு.மு.இஸ்மாயீல் இவர் மீது பேரன்பு கொண்டிருந்தார்.

சா.கணேசன் அவர்களுடைய பேரன் கம்பராமன் சண்முகம் அவர்களுடைய பதிவில் என்னுடைய இந்த குறிப்பிட்ட கேள்விக்கு வினைதீர்த்தான் வினு என்ற நண்பர் தந்திருக்கும் பதில் இது :

//இங்கு பல ஊர்களில் வழிபடப்படுகிற தாய்த்தெய்வங்கள் நாச்சி என்ற ஒட்டுச் சேர்த்துப் பெயர் பெற்றுள்ளனர். மாணிக்க நாச்சி, வயல் நாச்சி, பர நாச்சி, காட்டு நாச்சி, அழகிய நாச்சி என்று நாச்சி அம்மன்கள் பலப்பல. நாச்சியார்புரத்தில் அம்பாள் பெயரே நாச்சியரம்மன். எனவே அந்த அந்த ஊர்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கள் வழிபாட்டுத் தெய்வத்தின் பெயராக நாச்சியப்பன், நாச்சம்மை பெயர் வைப்பதை முதலில் வழக்கமாக்கிக் கொண்டார்கள். மூதாதையர் பெயர் இங்கு வைப்பதும் வழக்கம் என்பதால் அப்பெயர்கள் வழிவழி வந்துள்ளன//.

நான் விடுத்திருந்த இந்தக் கேள்விக்கும் தமிழக கடலோரம் வாழும் முஸ்லீம்களின் பழக்க வழக்கத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால்தான் கேட்டேன். #நாச்சியார் என்ற பெயர் இப்பகுதிவாழ் முஸ்லீம்களிடத்தில் காணப்படுவதுண்டு.

போர்த்துகீசியர் ஆட்சி நாகூர்/நாகை பகுதியில் கி.பி. 1500 முதல் 1658 வரை நடைபெற்றது. இந்த 158 ஆண்டுகள் இப்பகுதி மக்களுக்கு பெரும் சோதனையாகவே திகழ்ந்தது. வரலாற்றாசிரியர்கள் “போர்த்துகீசியர் கீழைக் கடற்கரையில் பல மீனவர்களைக் கொன்றனர்” என்றும் “நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை இடித்தனர்” என்றும் எழுதி வைத்துள்ளனர்.

போர்த்துகீசியரின் ஆட்சிக்கு உட்பட்ட கால கட்டத்தில் முஸ்லீம்கள் சொல்லவொணா இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். குறிப்பாக கடல் வாணிபத்தில் கொடிகட்டி பறந்த முஸ்லீம்களின் வணிகம் நசுக்கப்பட்டது. முஸ்லீம்கள் தங்களுடைய உண்மையான பெயரை மறைத்து பொதுவான தமிழ்ப் பெயர்கள் வைத்து செல்லப்பெயர்களாக அழைக்கத் தொடங்கினர். அதன் பின்னர் அதுவே இயற் பெயர்களாகவும் ஆயின.

போர்த்துகீசியர்களுடைய அடாவடித்தனத்திற்கு பயந்து எண்ணற்ற அரபுத்தமிழ் இலக்கியங்கள் முஸ்லீம்களாலேயே தீக்கிரையாகியும், கடலில் கரைக்கப்பட்டும் அழிந்து போனது.

#நாச்சியார் என்ற பெயர் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆயிஷா நாச்சியார், கதீஜா நாச்சியார் போன்ற பெயர்கள் பரவலாக வழங்கப்பட்ட காலமது. ஒருவரை ஒருவர் அழைக்கும்போதுகூட “வாங்க சீதேவி” , “வாங்க #நாச்சியா” என்று அழைக்கலாயினர்.

தூயதமிழில் “செல்லத் தங்கம்”, “முத்துத்தங்கம்” “சின்னாச்சி” (சின்ன ஆச்சி), பொன்னாச்சி (பொன்னான ஆச்சி), செல்லாச்சி (செல்ல ஆச்சி), முத்தாச்சி (முத்தான ஆச்சி) சேத்தம்மா (செவத்த அம்மா) , சேத்தப் பொண்ணு, “பெத்தம்ம” (பெற்ற அம்மா), “ரோஜாப் பொண்ணு”, என்று பெண்களை செல்லப் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் இந்தக் காலத்தில்தான் ஏற்பட்டது.

புது வீடு சென்ற குடிப்புகுந்தபோது பிறந்த குழந்தைக்கு புது வீட்டு உம்மனை என்று பெயரிட்டார்கள். ஹஜ்ஜுக்கு போய்விட்டு வந்தபின் பிறந்த குழந்தை ஹாஜி உம்மனை அல்லது ஹாஜிப்பொண்ணு என்று அழைத்தனர். கப்பலுக்கு போய்விட்டு வந்தால் அவர் கப்ப வாப்பா.

அதே போன்று ஆண்களுக்கும் முத்து வாப்பா, செல்ல வாப்பா, சேத்த மரைக்கார், பெரிய மரைக்கார், சின்ன மரைக்கார், முத்து மரைக்கார், பெரிய ராவுத்தர், சின்ன ராவுத்தர், அல்லா பிச்சை, நாகூர் பிச்சை, நயினார் முகம்மது, முத்து முஹம்மது, சேத்தாப்புச்சி (சிவத்த வாப்புச்சி) என்று பெயர் வைத்தனர்.

நாச்சியார் என்றால் மங்கையர்க்கரசி, அல்லது பெண்களில் பெருமைக்குரியவர் என்று பொருள். , கள்ளர், மறவர், அகமுடையார் இவர்களிடத்தில் இப்பெயர்கள் கிடைக்கின்றன. தஞ்சாவுர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊரின் பெயர் நாச்சியார் கோயில். வீரமங்கை வேலு நாச்சியாரை எல்லோரும் அறிவர்.

“விறலி விடு தூது” என்ற நூலில் “விண்மணியாய் வந்தமுத்து வீராயி நாச்சியார்” என்ற வரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

மணிப்பிரளாத் தமிழ் என்ற பேச்சு வழக்கு நடைமுறைக்கு வந்து சமஸ்கிருத வார்த்தைகள் தமிழ் மொழியை ஆக்கிரமித்த காலத்தில் கூட நாகூர் தன் தனித்தன்மையை இழக்காத வண்ணம் சங்ககால சொல் வழக்குகளை புழக்கத்தில் வைத்திருந்தது என்பது பெருமைக்குரிய ஒரு விஷயம்.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 16
====================================

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”

என்று பாடினான் பாரதி.

சமஸ்கிருதம், இலத்தீன், அராமாயிக் போன்ற மொழிகள் வழக்கொழிந்து போனதற்கு காரணம் புதிய கலைச்சொற்களை உள்வாங்கிக் கொள்ளாததினாலும், பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளாததினாலும் காலத்திற்கேற்ப தனது மொழியை விருத்தி செய்துக் கொள்ளாமல் போனதினாலும்தான்.

தமிழ் மொழியைப் பொறுத்தவரை அந்த தவறை இழைக்கவில்லை. பிறநாட்டு மொழிகள் பலவற்றையும் தன்னகத்தே ஏற்றுக்கொண்டு அதே சமயம் தனது சொந்த அடையாளத்தையும் இழக்கா வண்ணம் வீறுநடைபோட்டு செம்மொழியாக இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

தமிழகத்து சோழமண்டல பகுதிகளைப் பொறுத்தவரை பன்னாட்டு ஆட்சியின் கீழ் பல்வேறு கலாச்சாரத்தையும், பிறமொழி ஆதிக்கத்தையும் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அது காலத்தின் கட்டாயம்.

நாகூர் – நாகை அளவுக்கு ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாக திகழ்ந்த நகரம் தமிழகத்தில் வேறு எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒன்றா, இரண்டா? எத்தனை நாட்டுக்காரர்களின் ஆட்சியைக் காண வேண்டியிருந்தது? ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் ஆண்டி’ என்பதுபோல இங்கிருந்த சிற்றரசர்கள் தங்களின் வசதிக்கேற்றார்போல் நாகூர் – நாகை பகுதியை பிறநாட்டினருக்கு குத்தகைக்கு விட்டனர்.

போர்த்துகீசியர்கள் கிட்டத்தட்ட நாகூர் நாகை பகுதியை ஆண்டது சுமார் 158 வருடங்கள் (கி.பி. 1500 முதல் 1658 வரை.) வெறும் ஓராண்டுகாலம் வளைகுடா நாட்டுக்கு போய்வந்தவர்கள் திரும்பி வரும்போது “கல்லிவல்லி” “மாஃபி” “Zain”. “AIWA” என்று அரபி வார்த்தைகள் கலந்து பேசத் தொடங்கி விடுகிறார்கள்..

உண்மை நிலை இப்படியிருக்கையில் 158 ஆண்டுகள் நம்மை ஆண்ட ஒரு நாட்டினரின் மொழியானது நம் அன்றாட வழக்கு மொழியில் ஆதிக்கத்தை ஏற்படுத்தாமலா போகும்?

போர்த்துகீசிய மொழிச் சொற்கள் ஏராளமாக தமிழில் கலந்து அது தமிழ்ச் சொற்களாகவே உருமாறிப் போனது. சங்கத் தமிழ்ச் சொற்கள் இப்பகுதியில் எந்தளவுக்கு இடம் பெற்றிருக்கின்றனவோ அதுபோன்று பிறமொழிச் சொற்களும் ஒன்றரக் கலந்திருக்கின்றன.

கஞ்சனை “பிசினி” என்பார்கள். கையில் அவனிடம் காசானது பிசின் போல் ஒட்டிக் கொள்ளுமாம். “ஏண்டா இப்படி பிசுவுறே?” என்றால் “ஏன் இப்படி பேரம் பேசுவதில் கஞ்சத்தனம் காட்டுகிறாய்?” என்று பொருள்.

இப்பகுதியில் செருப்பு என்றோ காலணி என்றோ சொல்வதில்லை, சப்பாத்து என்பார்கள். அது Sapato என்ற போர்த்துகீசிய சொல். ஷூ போன்று அல்லாமல் சப்பையாக இருப்பதால் சப்பாத்து தமிழ்ச் சொல்லாகவே மாறிப் போனது. இதே சொல்தான் மலாய் மொழியிலும் Sepatu என்று அழைக்கப்படுகிறது.

கடப்பாறை என்று சொல்வதில்லை. அலவாங்கு (alavanca) என்பர். இதுவும் போர்த்துகீசிய மொழிச் சொல்.

துவாலை (toalha), அலமாரி (armario), கோப்பை (copo) பீப்பாய் (pipa) இப்படி எத்தனையோ போர்த்துகீசிய சொற்கள் தமிழ் மொழிக்கு இறக்குமதி ஆகியுள்ளன.

சமையலறையை கடற்கரையோர ஊர்களில் சமையற்கட்டு, அடுப்பாங்கரை அடுப்படி, அடுக்களை என்று கூறுகிறார்கள், சில ஊர்களில் குசினி என்று சொல்வதையும் கேள்விப்பட்டிருக்கிறேன் (போர்த்துகீசிய மொழியில் kozhina & ஆங்கில மொழியில் cuisine என்ற சொல்லிலிருந்து உருமாறியது)

Kettle என்ற ஆங்கில வார்த்தை கேத்தல் எனவும் Carrier என்ற ஆங்கிலச்சொல் கேரியர் அல்லது கேரியல் என்றும் ஆனது.

சோப்பு என்றோ வழலை என்றோ சொல்வதில்லை சவுக்காரக் கட்டி என்றே இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். இது தூயதமிழ்ச் சொல் என்றே நினைக்கின்றேன்.

அழுகணிச் சித்தர் பாடலில் இவ்வரிகளை காண முடிகிறது

எண்ணெய் எல்லாம் போக்குமடி
இருக்கும் சவுக்காரம்
சுண்ணமடி மேற்கவசம் – ஆத்தாளே
சொல்லுகிறேன் அப்புச்சுண்ணம்

நாகூரும் நற்றமிழும் பாகம் – 17
===================================

‘மைதான்” என்ற அரபு வார்த்தையிலிருந்துதான் “மைதானம்” என்ற தமிழ்ச் சொல் பிறந்தது என்று சொன்னதற்கு ஒரு நண்பர் என் மீது சினம் கொண்டார். தமிழ் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையான மொழி. அப்படியிருக்க எப்படி நீங்கள் இப்படிச் சொல்லலாம்? மைதானம் என்ற தமிழ் வார்த்தைதான் அரபி மொழிக்கு போயிருக்க வேண்டும் என்று கோபித்துக் கொண்டார்.

தமிழ் மொழி தன்னை வளப்படுத்திக் கொள்ள காலப்போக்கில் பிறமொழிகளிலிருந்து எத்தனையோ சொற்களை கடன் வாங்கியுள்ளது என்று சொன்னால் அது ஒருபோதும் தமிழ் மொழிக்கு இழுக்கு ஆகாது. “மைதானம்” என்ற சொல் மட்டுமல்ல, இப்படி எத்தனையோ பிறமொழிச் சொற்கள் தமிழில் ஒன்றோடு ஒன்று கலந்து அது தமிழ் மொழியாகவே பாவிக்கப்பட்டு வருகிறது

வேற்று மொழிகளிலிருந்து சொற்களை கடன் வாங்கியதற்கு காரணம் தமிழில் சொல்வளம் குறைவு என்று அர்த்தமாகாது. தமிழைப்போல் சொல்வளம் கொண்ட மொழியைக் காண்பது மிகவும் அரிது. தமிழுக்கு இதயம் பெரிது. அதனால்தான் பாகுபாடு பாராமல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தன் சொந்த அடையாளத்தையும் இழக்காமல் நிமிர்ந்து நிற்கிறது,

//இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா//

என்ற வைரமுத்து வரிகளில் வரும் பேனா போர்த்துகீசிய மொழி (Pena)

//என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்.//

என்ற வைரமுத்து வரிகளில் வரும் “ஜன்னல்” என்ற சொல் போர்த்துகீசிய மொழி (Janela). யாராவது சென்று அவரிடத்தில் நீங்கள் ஏன் போர்த்துகீசிய மொழியை பயன்படுத்துகிறீர்கள்? எழுதுகோல், சாளரம் என்று ஏன் எழுதவில்லை என்று கேட்டிருப்போமா? அந்த அளவுக்கு பல சொற்கள் தமிழ்மொழியோடு ஐக்கியமாகி விட்டன. என்பதே நிதர்சனமான உண்மை.

எங்க ஊரில் சக்கரம் என்ற வார்த்தையை பயன்படுத்தவதில்லை. ரோதை என்பார்கள். இதுவும் போர்த்துகீசியச் சொல். RODA என்பதிலிருந்து மருவியதுதான்.

1657-ஆம் ஆண்டு முதல் 1824 வரை கிட்டத்தட்ட 165 ஆண்டுகள் நாகை டச்சுக்கரார்களின் (ஆலந்துக்காரர்) பிடியில் இருந்தது. டச்சுக்காரர்களும் சரி போர்த்துகீசியக்காரர்களும் சரி இவர்களால் நம் நாட்டவருக்கு யாதொரு பயனுமில்லை., அவரவர் வணிக ரீதியாக ஆதாயம் தேடிக்கொண்டனர். அவ்வளவுதான். அவர்கள் விட்டுச்சென்றது அவர்களது மொழிகளின் சொற்கள் சிலவற்றைத்தான்.

“பாரு..பாரு… நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்தை பாரு”…என்ற குரல் 50 ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் ஒலிப்பதை நாம் கேட்டிருப்போம். ஒரு டப்பா புரொஜக்டர் பெட்டியை வைத்து ஒருவர் சிறுவர் சிறுமிகளிடம் பணம் வசூலித்து படம் காட்டிக்கொண்டிருப்பார். திரையில் ஓட்டப்படும் பிலிம் சுருள்கள், படத்தின் நீளத்தை குறைப்பதற்காக சிலநேரம் வெட்டிவிடுவார்கள். துண்டுகளாக வெட்டப்பட்ட பிலிம் சுருளை கொண்டுவந்து பயாஸ்கோப் காண்பிப்பார்கள்.

இப்பொழுது தகவல் பரிமாற்ற முன்னேற்றத்தால் “தபால்” என்ற போஸ்ட்மேனின் கூக்குரல் கேட்பதே அரிதாகி விட்டது, அண்மையில் கக்கூஸ் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. ஆங்கிலத்தில் டாய்லெட் என்றாலோ அல்லது லெட்ரின் என்றாலோ நம்மில் யாரும் முகஞ்சுளிப்பதில்லை. ஆனால் கக்கூஸ் என்ற பயன்பாட்டுச்சொல் நம்மை முகஞ்சுளிக்க வைத்துவிடும்.

இந்த பயாஸ்கோப், தபால், கக்கூஸ் இவையாவும் ஆலந்துக்காரர்கள் விட்டுச்சென்ற மொழி தடயங்கள்.

இந்த கொய்யா மரம் கூட நம் மண்ணுக்கு சொந்தமானது இல்லையாம், இதன் தாயகம் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் நாடுகள். GOIABA என்ற போர்த்துகீசிய மொழியிலிருந்து தான் இந்த கொய்யா நம் மொழியில் கலந்திருக்கின்றது. அடங்கொய்யாலெ..

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 18
================================

தமிழகத்து கடற்கரையோர முஸ்லீம்களின் தூய தமிழ் வழக்காடு சொற்களை ஆராய்ந்து பதிவிடுகையில் பொதுவாக மற்ற மொழிகளின் தன்மையையும், தமிழ் மொழியின் தொன்மையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகிறது.

உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழி சீன மொழி (மாண்டரின்) என்பது நமக்குத் தெரியும். காரணம் சீனாவின் மக்கட்தொகை. உலகில் இரண்டாவதாக, அதிகமான மக்களால் பேசப்படும் மொழி எதுவென்று கேட்டால் ஆங்கிலம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். “இல்லை” என்று மறுத்தால் பிரஞ்சு அல்லது அரபி மொழி எனச் சொல்வார்கள்.

இரண்டாவதாக உலகில் அதிகமாக பேசப்படும் மொழி நாம் சற்றும் ஊகிக்க முடியாதது. ஆம். ஸ்பானீஷ் மொழிதான் அந்த பெருமையை பெற்றிருக்கிறது. இத்தகவல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது..

சீன மொழி 1.3 பில்லியன், ஸ்பானிய மொழி 460 மில்லியன். ஆங்கிலம் 379 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. மெக்ஸிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகமாக பேசப்படுவதும் ஸ்பானிய மொழிதான்

உலகம் முழுவதும் ஆங்கில மொழி பரவலாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அது அனைத்து மொழிகளிலிருந்தும் கடன் வாங்கி தன்னை திடப்படுத்திக் கொண்டதுதான். வேறு எந்த மொழிகளிலும் இல்லாத அளவுக்கு 2,50.000 சொற்கள் ஆங்கில மொழியில் உள்ளன, 30 விழுக்காடுக்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொற்கள் பிரஞ்சு மொழியிலிருந்து ‘அபேஸ்’ பண்ணியதுதான். தமிழில் இருப்பது கிட்டத்தட்ட 1.7 லட்சம் சொற்கள் மட்டுமே.

எண்ணற்ற அரபி மொழிச் சொற்கள் தமிழில் கலந்திருக்கின்றன என்ற என் கருத்துக்கு ஒருமுகநூல் அன்பர் “கலந்ததா அல்லது கலக்கப்பட்டதா?” என்ற வினாவை கலக்கத்துடன் எழுப்பியிருந்தார். முஸ்லீம்கள் திட்டமிட்டு தமிழ் மொழியை அழிப்பதற்கு அரபி மொழியை புகுத்தினார்கள் என்ற தவறான புரிதலாகக் கூட இருக்கலாம்.

பிறமொழிகளின் கலப்பு என்பது அந்தந்த கால கட்டத்தில் ஏற்படும் காலத்தின் கட்டாயம். மூன்றே மூன்று மாதம் சிங்கப்பூர் போய் வந்த என் நண்பர் திரும்பி வந்தபோது வாட்-லா, நோ-லா. ஓகே-லா என்று ஏதோ ‘பாரட்லா’ பட்டம் பெற்று வந்ததுபோல் பேசினார். இப்பொழுது இளைஞர்கள் பேசும் சில்பான்ஸ், டுபாக்கூர், டகால்டி, மெர்சல், அப்பாட்டக்கர் போன்ற சொற்களை எதில் சேர்ப்பது? எத்தனை வார்த்தைகள் நம் மொழியில் ‘மெர்சல்’ ஆனாலும் தனித்தன்மையை இழக்கா வண்ணம் கொண்டு செல்வதே தமிழ் மொழிக்குச் சிறப்பைச் சேர்க்கும்.

எனவே தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்கள் கலந்திருப்பதற்கு நாம் வருத்தப் பட வேண்டியதில்லை. அவைகளை தவிர்ப்பதற்கு தூயதமிழ்ச் சொற்களை பயன்படுத்தவும் , புதுப்புது கலைச்சொற்களை சேர்க்கவும் செய்தால் போதுமானது.

தமிழ் மொழியில் வெறும் 1,500 அரபிச் சொற்கள் மாத்திரமே கலந்துள்ளன. ஸ்பானிய மொழியில் 4,000 க்கும் மேற்பட்ட அரபிச் சொற்கள் கலந்துள்ளன. ஸ்பானிய மொழி அழிந்து விட்டதா என்ன? ஸ்பானிய மொழி உலகத்தில் பேசப்படும் மொழியில் இரண்டாவது இடத்தில் தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது

அமெரிக்காவிலுள்ள ஒன்றரை மில்லியன் மக்கள் பிரஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான். அமெரிக்காவுக்கென தனியாக தேசிய மொழி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆங்கிலம் என்பது அவர்களாகவே அனுமானித்துக் கொண்ட ஒன்றுதான்.

உலகில் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. 2400 மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் இருவாரங்களுக்கு ஒரு மொழி என்ற விகிதத்தில் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

மொழிகள் பிறந்து 1,02,000 வருடங்கள் ஆகி விட்டன. உலகின் முதல் மொழி தமிழ் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தமிழ் மொழி 2,300 ஆண்டுகள் பழமையானது என்ற பொதுவான கருத்து இருந்தபோதிலும் அதைவிட பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது என்பதே நிதர்சனமான உண்மை. கிரேக்கம் இலத்தீன் ஆங்கிலத்திற்கும் மிகப் பழமையான மொழி தமிழ் மொழி என்பது மொழி ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.

சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று ஒளவை கேட்ட கதை நமக்குத் தெரியும். ஆங்கிலேயன் நம்மிடமிருந்து சுட்டுச் சென்ற சொற்கள் கட்டுக்கடங்காது. உதாரணத்திற்குச் சில:

Navy (நாவாய்) , Cash (காசு) , Anaconda (ஆனை கொன்றான்), Anaicut (அணைக்கட்டு), Curry (கறி) , Catamaran (கட்டுமரம்) , Cheroot (சுருட்டு) , Corundum (குருவிந்தம்), Mango (மாங்கா), Moringa (முருங்கை), Mulligatawny (மிளகுத் தண்ணி), Patchouli (பச்சை இலை), Pandal (பந்தல்), Moringa (முருங்கை), Pariah (பறையர்), Ginger (இஞ்சிவேர்) , Rice (அரிசி), Editorial (ஏடு இட்டோர் இயல்).. இன்னும் என்ணிலடங்காச் சொற்கள்.

சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமான மொழிகள் (தமிழ் உட்பட) 4 மொழிகள் என்பதை நாம் அறிவோம் தென்னாப்பிரிக்காவில் 11 மொழிகள் அதிகாரப் பூர்வமான மொழிகள். உலகில் பழமையான மொழியாக விளங்கும் தமிழ் மொழியையும் இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிங்கப்பா என்று நடுவண் அரசிடம் போராடிப் பெற தமிழனுக்கு நாதியில்லை.

பிரஞ்சு மொழி அளவுக்கு மொழியை பரவலாக்க பாடுபடுபவர்கள் வேறு யாருமிருக்க முடியாது.. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக பிரஞ்சு மொழிதான் உலகெங்கும் கற்பிக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் செலவிடும் தொகை அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 20,000 –க்கு மேற்பட்டபுதிய பிரஞ்சு கலைச்சொற்கள் இணைக்கப்படுகின்றன.

உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசப்படும் நம் தமிழ் மொழியில் புதுப்புது சொற்கள் இணைக்க நாம் காட்டும் ஆர்வம் மிகவும் குறைவு.

Stethoscope என்ற ஆங்கிலச் சொல்லுக்கு “மார்பாய்வி” என்று நான் எழுதியபோது ஒரு முகநூல் அன்பர் சிரி சிரி என்று சிரித்து “முடியலே” என்று கமெண்டியும் களிப்புற்றார். மார்பில்தான் Stethoscope வைத்துப் பார்ப்பார்களா? முதுகில் வைத்துப் பார்த்தால் அதற்குப் பெயர் முதுகாய்வியா? என்று நக்கல் செய்திருந்தார்.

கூடுதலாக பல மொழியைக் கற்பதில் பல நன்மைகள் உண்டு. ஞாபகத்தன்மையும் வாழ்நாளும் அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆங்கிலம் பேசுபவர்கள் இடது மூளையை மட்டும்தான் உபயோகிக்கிறார்களாம். ஆனால் சீன மொழி பேசுபவர்கள் மூளையின் இடது, வலது இரண்டையும் உபயோகிக்கிறார்களாம்.

என் பள்ளி வாத்தியார் “உனக்கு மண்டையில் மசாலா கிசாலா இருக்குதா.. இல்லையா?” என்று அடிக்கடி கேட்பார். மூளையின் மறுபக்கத்தையும் பயன்படுத்த என்ன செய்யலாம் என்று தீவிரமாக (தீவிரவாதியாக அல்ல) யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 19
==============================
மூடன் அல்லது மடையன் என்று குறிப்பிடுவதற்கு நாகூர் போன்ற ஊர்களில் அதிகம் பயன் படுத்தும் சொல் “பேயன்” என்ற அருமையான கருத்துள்ள சொற்பதம்.

“பேயன்” என்பது மலாய் மொழியும் அல்ல. இந்தோனேசிய மொழியும் அல்ல. தூய தமிழ்ச் சொல். ஆச்சரியமாக இருக்கிறதா?

விவேக சிந்தாமணி எனும் நூல் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ச் செய்யுள்களின் தொகுப்பு. இந்நூலில் காணப்படும் பாடல்கள் யாவும் அனுபவ மூதுரைகள். இந்த நூலை எழுதியவர் யார். இது எப்போது எழுதப்பட்டது என்ற விவரம் யாருக்கும் தெரியாது.

நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகி இருக்கலாம் என்பது சிலரின் கணிப்பே தவிர அறுதியிட்டு உறுதியாக யாரும் சொல்லவில்லை.

//கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்
கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்
ஒரு தொழிலான் இல்லாதான் முகடி ஆகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயனாகும்
பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பனாகும்
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே//

இப்பாடலின் பொருள் :
நல்ல நூல்களைக் கற்காதவன் முட்டாள்;
அளவோடு பேசாத்தெரியாதவன் கசடன்;
வேலை வெட்டி இல்லாமல் சுற்றுபவன் மூதேவி;
உதவாக்கரையாக இருப்பவன் சோம்பேறி;
மரத்தைப்போல, ஜடமாக, சொரணையற்று இருப்பவன் பேயன்/ பேப்பயல்.
தோனொழுக பேசுபவன் பசப்பன்.
பசித்தவருக்கு புசிக்கக் கொடுக்காதவன் பாவி.

மரத்தைப்போல ஜடமாக என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தடித்த தோல் கொண்டவனாக சொரணையற்று இருப்பவன் “பேயன்” என்பது நமக்கு இதிலிருந்து நன்கு விளங்குகிறது. இதைவிட தெளிவான விளக்கம் வேறு என்ன வேண்டும் சார்..?

எருமை மாட்டு மேலே மழை பெய்ஞ்ச மாதிரி என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். தோல் தடித்திருந்தால் அதுக்கு சொரணை இருக்காது என்பது நம் அனுமானம்.

வாழைப்பழ வகைகளில் “பேயன்” என்ற ஒரு வகை உண்டு. அதன் தோல் தடித்து இருக்கும். ஆதலால் அதன் பெயர் “பேயன் பழம்”

மனிதர்களில் பேயன் வகையில் உள்ளவர்கள் மந்தபுத்தி உடையவர்களாகவும் சொரணை அற்று தடித்த தோல் உடையவர்களாகவும் இருப்பதினாலேயே “பேயன்” என்ற இக்காரணப் பெயர் உருவானது..

மற்றபடி பேய்க்கும் பேயனுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. பரமசிவன், பேய்கள் உலாவும் சுடுகாட்டில் உலாவுவதாக கருதப்படுவதால் அவருக்கு ‘பேயன்’ என்ற ஒரு பெயர் உண்டு. ஆனால் இதற்கும் நாம் விளிக்கும் இந்தப் பேயனுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் பாகம் 20
================================

கக்கிலி
————-

நாகூரில் “கக்கிலி” என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. வரதட்சணையை இங்கு கக்கிலி என்பர். கைக்கூலி என்பது மருவி “கக்கிலி” ஆகிவிட்டது. “கக்கிலி” என்ற இச்சொல் முஸ்லிம் சமுதாயத்தினர் வாழும் சோழமண்டல கடற்கோரையோர ஊர்களில் பரவலாக காணப்படுகிறது.

கைக்கூலி என்றால் இலஞ்சம் என்பது நமக்குத் தெரியும். கைக்கூலி என்ற பெயரிலேயே ஒரு ஈனத்தனம் இருப்பதை நாம் காணலாம். அப்படியும் இப்பழக்கம் முழுவதுமாக ஒழியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

மற்றவர்கள் “வரதட்சணை” அல்லது “சீதனம்” என்று சொல்கிறார்கள். இரண்டுமே வடமொழிச் சொற்கள்தான். வரதட்சணை என்ற பெயரில் உள்ள தட்சணை என்ற சொற்பதத்தில் இழிவு ஒன்றும் கிடையாது. தட்சணை என்றால் காணிக்கை அல்லது அன்பளிப்பு என்ற பொருள் தரும்.

கல்யாணத்தின் போது மணமகன் வீட்டார் அடவாடித்தனம் செய்து கேட்டுப் பெறும் இந்த கெளரவப் பிச்சை எப்பொழுது கேவலமாக பார்க்கப் படுகிறதோ அப்பொழுதுதான் வரதட்சணை என்ற இந்த அவலம் முற்றிலுமாக ஒழியும். கேஸ் ஸ்டவ் வெடித்து புதுமணப்பெண்கள் அடுக்களையில் மடிந்து போகும் செய்திகளும் ஊடகங்களில் வராமல் தடுக்கப்படும்.

சீதனம் என்ற சொல்லும் தூய தமிழ்ச் சொல் அல்ல. நாம் நினைப்பது போல் இது “சீர்” என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததல்ல. ஸ்ரீதனம் என்பதே சீதனம் என்று ஆனது. ஸ்ரீ என்றால் செல்வத்தைக் குறிக்கும். மேலும், பெருமைக்குரிய, வணக்கத்திற்குரிய என்றும் பொருள்படும். தனம் என்றாலும் செல்வம் என்று பொருள். ஸ்ரீதனம் (சீதனம்) என்றால் பெருமைக்குரிய செல்வம் என்று பொருள்.

//தூமனத் தனனாய்ப் பிறவித்
துழதி நீங்க என்னைத்
தீமனங் கெடுத்தா யுனக்கென்
செய்கேனென் சிரீதரனே!//

என பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் திருவாய்மொழியில் பாடுவதை நாம் காண முடிகிறது.

வரதட்சணையை கைக்கூலி (கக்கிலி) என்று தூய தமிழில் அழைத்தால் மட்டும் போதாது. அதனை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இன்றைய இளைய சமுதாயம் முன்வரவேண்டும்,

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 21
=================================

பசியாறல்
—————–
எத்தனையோ தூய தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தமானச் சொல் இந்த “பசியாறல்” என்பது. இது பெரும்பாலும் காலை வேளை சிற்றுண்டிக்கே பயன்படுத்தப்படும் சொல்.

இரவு முழுவதும் உண்ணாமல் பசித்திருந்து அந்த நோன்பை துறப்பதற்கு உதவும் காலை உணவை ஆங்கிலத்தில் BREAK FAST (நோன்பைத் துற) என்று எப்படி அழகாகச் சொல்கிறார்களோ, அதேபோன்று “பசியாற வாங்க” “பசியாறிட்டுப் போங்க” என்ற சொல்லாடலைக் கேட்கையில் நம் காதில் தேன் வந்து பாய்வது போலிருக்கும். மனைவிமார்கள் கணவனிடம் “பசியாற வச்சிருக்கேன். சாப்பிட வாங்க” என்று அன்பொழுக அழைப்பார்கள்.

தலைநகர் சென்னையில் “நாஸ்தா துன்னுகினு போப்பா” என்பார்கள். நாஸ்தா உருது மொழி.

வேறு சிலர் “டிபன் சாப்பிடுங்க” என்பார்கள். TIFFIN என்ற வார்த்தையை நம் நாட்டில் பிரபலப்படுத்தியது ஆங்கிலோ இந்தியர்கள். Light Meals என்பதை Tiffin என்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் பொட்டலம் கட்டப்பட்ட சிற்றுண்டிக்கும் டிபன் என்றுதான் பெயர். சிற்றுண்டியை சுமந்துச் செல்லும் பாத்திரத்திற்கும் டிபன் என்றுதான் பெயர். மாலை வேலையில் காபி மிக்சருடன் புசிக்கும் கொறியலுக்கும் டிபன் என்றுதான் பெயர்.

ஆங்கிலேயர்கள் யாரும் காலை உணவை TIFFIN என்று குறிப்பிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் காலை உணவை சற்று தாமதமாக சாப்பிட்டால் BREAKFAST + LUNCH இவையிரண்டையும் சேர்த்து ஒரு புது வார்த்தையை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பெயர் BRUNCH. (Tiger & Lion இவையிரண்டுக்கும் பிறந்த குட்டி LIGER என்பதைப்போல)

நிறைய ஓட்டல்களில் கரும்பலகையில் “டிபன் ரெடி” என்று எழுதி வைத்திருப்பார்கள். அதற்கு “டிபன் கேரியர் ரெடியாக இருக்கிறது” என்று அர்த்தமல்ல. காலை உணவு தயாராக இருக்கிறது என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

//எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
கெத்தனைகொ லூனை நித்தம் – பசியாறல்//

அருணகிரிநாதரின் திருப்புகழில் இந்த பசியாறல் என்ற அழகுத் தமிழ்ச் சொல்லை காண்கிறோம்

எத்தனை விடா வெருட்டு, அங்கு எத்தனை வலாண்மை, பற்று அங்கு
எத்தனை கொல் ஊனை நித்தம் – பசி ஆறல்

என்று பதம் பிரித்து படிக்க வேண்டும்.

“பசியாறல்” ஒரு அழகுத்தமிழ் சொல்லாடல்

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 22
=============================
துறட்டி
———–

உயரக் கிளைகளில் உள்ள காய்கள், கனிகள், பூக்கள் பறிப்பதற்கு நீளமான கழிகளின் முனையில் வளைந்த சிறு கத்தி அல்லது கொக்கி போன்ற ஒன்றை பொருத்தி இருப்பார்கள். மற்ற ஊர்களில் இதனை “தொரடு” அல்லது “தொரட்டுக்கோல்” என்று அழைப்பதை நான் கேட்டிருக்கின்றேன்.

துறட்டி/ தோட்டி என்பதே சரியான சொல்லாடல். எங்க ஊரில் “துறட்டி” என்ற சங்கால சொற்கொண்டுதான் இதனை அழைக்கிறார்கள்

வேறு சில இடங்களில் அங்குசம் என்பார்கள். இது வடமொழிச் சொல். யானைப்பாகன் வைத்திருக்கும் இந்த ஆயுதத்திற்கும் அங்குசம் என்றுதான் அழைக்கிறார்கள்.

வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்
(சிலப்பதிகாரம்- 170)

சிலப்பதிகாரத்தில் அங்குசம் என்பதை தோட்டி என்றே இங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

யானைத்துறட்டி என்பதே சரியானச் சொல். துறட்டுக்கோல் என்றும் அழைப்பதுண்டு. சற்று நீளமாக இருந்தால் நெடுந்துறட்டி.

துப்புரவு தொழிலாளர்களை “தோட்டி” என்று அழைப்பார்கள். நாம் நினைப்பதுபோல் அது ஒரு இனத்தாரின் பெயரோ அல்லது இழிவானச் சொல்லோ அல்ல. இழிவானச் சொல்லாக ஆக்கப்பட்டுவிட்டது.

அக்காலத்தில் இந்த “பாம்பே கக்கூஸ்” (W.C) எல்லாம் கிடையாது. மனிதக்கழிவுகளை சிறிய துண்டுக்கதவு வாயிலாக அகற்றுவதற்கு இதுபோன்ற “துறட்டி” பயன்படுத்துவது வழக்கம். அதுவே மருவி “தோட்டி” என்று ஆகிவிட்டது.

காலப்போக்கில் சாதி என்ற பெயரில் “தோட்டி” என்ற ஒரு சாதியை உருவாக்கி அதை தமிழ்நாடு ஆதி திராவிடர் சாதிகள் பட்டியலிலும் சேர்த்து விட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

//உங்களைப்போல் அவர்களால் சில புத்தகங்களைப் படிக்க முடியாமல் இருக்கலாம்;சூட்டும் கோட்டும் போடுகின்ற உங்கள் “உடை நாகரீகம்” அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். அதனால் என்ன? எல்லா நாடுகளிலும் அவர்களே சமுதாயத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். இந்தக் கீழ்நிலை மக்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் நீங்கள் உணவையும் உடையையும் எங்கிருந்து பெறுவீர்கள்? கல்கத்தாவில் உள்ள தோட்டிகள் ஒரு நாளைக்கு வேலை நிறுத்தம் செய்தால் சர்வ குழப்பம் ஆகி விடாதா? மூன்று நாட்கள் வேலையை நிறுத்திவிட்டாலோ தொற்று நோய்களால் நகரமே காலியாகிவிடும். தொழிலாளிகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் உங்களுக்கு உணவும் உடையும் வருவது நின்றுவிடும். இதில்,அவர்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் உங்களைப் படித்தவர்கள் என்றும் கூறித் திரிகிறீர்கள்//

இதை நான் சொல்லவில்லை. இதைக் கூறியவர் சுவாமி விவேகானந்தர்

“தீண்டாமைச் சுவர்கள்” என்று பேச்சு அடிபடும் இந்நேரத்தில் இதனை நினைவுபடுத்துவது மிகவும் அவசியம்.

“எழுந்திரு! விழித்திரு!” என்ற சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பில் இது இடம் பெற்றிருக்கிறது ; (ஸ்ரீராமகிருஷ்ண மடம்,சென்னை: ஞானதீபம் சுடர் 6, பக்கம் 126)

#அப்துல்கையூம்

ஃபோபியா
============

ஒரு நண்பரோடு விவாதம் செய்துக் கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் நுணுக்கமான பொருள் உள்ளதைப்போல தமிழில் கிடையாது என்று வாதிட்டார்.

அவருக்கு தாய்மொழி தமிழ்தான். இருந்த போதிலும் அவர் தமிழை ஆழமாக படிக்கவில்லை என்பதை நான் அவர் பேச்சிலிருந்து புரிந்துக் கொண்டேன். அவர் மீது எனக்கு சற்றும் கோபம் ஏற்படவில்லை. புரிதல் இல்லாததின் வெளிப்பாடுதான் அந்த பிதற்றல் என்பதை விளங்கிக் கொண்டேன்.

தமிழில் “பயம்” என்ற ஒரே வார்த்தைக்கு ஆங்கிலத்தில் குறிப்பாக ஒவ்வொரு விதமான பயத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கின்றன என்பதே அவரது வாதம். அதேபோல் தமிழில் இருக்கிறதா? என்பதே அவரது கேள்வி.

அவரது வாதத்தை மெய்ப்பிப்பதற்காக இணையத்திலிருந்து கிட்டத்தட்ட நூறு விதமான பயத்திற்கு வெவ்வேறு பெயர்களை தரவிறக்கம் செய்து எடுத்துக்காட்டாக எனக்கு அனுப்பி இருந்தார்.

ஆங்கிலம் பல மொழிகளிலும் சொற்களை இறக்குமதி செய்து தன்னை வளப்படுத்திக் கொண்டது உண்மைதான் . அதை யாரும் மறுப்பதற்கில்லை. அவர் அனுப்பியிருந்த 100 விதமான பயம் (ஆங்கிலத்தில்)

1. Achluophobia = Fear of darkness
2. Acrophobia = Fear of heights
3. Aerophobia = Fear of flying
4. Algophobia = Fear of pain
5. Alektorophobia = Fear of chickens
6. Agoraphobia = Fear of crowds
7. Aichmophobia = Fear of needles or pointed objects
8. Amaxophobia = Fear of riding in a car
9. Androphobia = Fear of men
10. Anginophobia = Fear of choking
11. Anthophobia = Fear of flowers
12. Anthropophobia = Fear of society
13. Aphenphosmphobia = Fear of being touched
14. Arachnophobia = Fear of spiders
15. Arithmophobia = Fear of numbers
16. Astraphobia = Fear of thunder and lightning
17. Ataxophobia = Fear of untidiness
18. Atelophobia = Fear of imperfection
19. Atychiphobia = Fear of failure
20. Autophobia = Fear of being alone
21. Bacteriophobia = Fear of bacteria
22. Barophobia = Fear of gravity
23. Bathmophobia = Fear of stairs or steep slopes
24. Batrachophobia = Fear of amphibians
25. Belonephobia = Fear of pins and needles
26. Bibliophobia = Fear of books
27. Botanophobia = Fear of plants
28. Cacophobia = Fear of ugliness
29. Catagelophobia = Fear of being ridiculed
30. Catoptrophobia = Fear of mirrors
31. Chionophobia = Fear of snow
32. Chromophobia = Fear of colors
33. Chronomentrophobia = Fear of clocks
34. Claustrophobia = Fear of confined spaces
35. Coulrophobia = Fear of clowns
36. Cyberphobia = Fear of computers
37. Cynophobia = Fear of dogs
38. Dendrophobia = Fear of trees
39. Dentophobia = Fear of dentists
40. Domatophobia = Fear of houses
41. Dystychiphobia = Fear of accidents
42. Ecophobia = Fear of the home
43. Elurophobia = Fear of cats
44. Entomophobia = Fear of insects
45. Ephebiphobia = Fear of teenagers
46. Equinophobia = Fear of horses
47. Gamophobia = Fear of marriage
48. Genuphobia = Fear of knees
49. Glossophobia = Fear of speaking in public
50. Gynophobia = Fear of women
51. Heliophobia = Fear of the sun
52. Hemophobia = Fear of blood
53. Herpetophobia = Fear of reptiles
54. Hydrophobia = Fear of water
55. Hypochondria = Fear of illness
56. Iatrophobia = Fear of doctors
57. Insectophobia = Fear of insects
58. Koinoniphobia = Fear of rooms full of people
59. Leukophobia = Fear of the color white
60. Lilapsophobia = Fear of tornadoes and hurricanes
61. Lockiophobia = Fear of childbirth
62. Mageirocophobia = Fear of cooking
63. Megalophobia = Fear of large things
64. Melanophobia = Fear of the color black
65. Microphobia = Fear of small things
66. Mysophobia = Fear of dirt and germs
67. Necrophobia = Fear of dead things
68. Noctiphobia = Fear of the night
69. Nosocomephobia = Fear of hospitals
70. Nyctophobia = Fear of the dark
71. Obesophobia = Fear of gaining weight
72. Octophobia = Fear of the figure 8
73. Ombrophobia = Fear of rain
74. Ophidiophobia = Fear of snakes
75. Ornithophobia = Fear of birds
76. Papyrophobia = Fear of paper
77. Pathophobia = Fear of disease
78. Pedophobia = Fear of children
79. Philophobia = Fear of love
80. Phobophobia = Fear of phobias
81. Podophobia = Fear of feet
82. Pogonophobia = Fear of beards
83. Porphyrophobia = Fear of the color purple
84. Pteridophobia = ear of ferns
85. Pteromerhanophobia = Fear of flying
86. Pyrophobia = Fear of fire
87. Samhainophobia = Fear of Halloween
88. Scolionophobia = Fear of school
89. Selenophobia = Fear of the moon
90. Sociophobia = Fear of social evaluation
91. Somniphobia = Fear of sleep
92. Tachophobia = Fear of speed
93. Technophobia = Fear of technology
94. Tonitrophobia = Fear of thunder
95. Trypanophobia = Fear of needles or injections
96. Venustraphobia = Fear of beautiful women
97. Verminophobia = Fear of germs
98. Wiccaphobia = Fear of witches and witchcraft
99. Xenophobia = Fear of strangers or foreigners
100. Zoophobia = Fear of animals

இதில் “இஸ்லாமோஃபோபியா” (dislike of or prejudice against Islam or Muslims, especially as a political force.) போன்ற சொற்களையெல்லாம் ஏனோ இன்னும் அவர்கள் சேர்க்கவில்லை. அதுதானே இப்போது அவர்கள் மத்தியில் கூடுதலாக இருக்கிறது. ஆட்டியும் படைக்கிறது.

மேலைநாட்டினரின் சிலவிதமான பயத்தை நினைக்கையில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. Venustraphobia என்றால் அழகான பெண்களை பார்த்து ஏற்படுகின்ற பயமாம்.

ஏம்பா..! அழகான பெண்களைப் பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு ஏன் பயந்து சாக வேண்டும் என்று எனக்குப் புரியவேயில்லை.

இளங்கன்று பயமறியாது என்று இளமையிலேயே பயத்தைப் போக்கி வளர்க்கப்பட்டவர்கள் தமிழர்கள்.

//வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே//

என்று சிறுவர்களுக்குக் கூட பயத்தைப் போக்க பாடியவன் நம் ‘மக்கள் கவிஞன்’ பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

//உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே//

என்று பயத்தை தெளித்து பாடியவன் பாட்டுக்கோர் புலவன் பாரதி. ஆகவே தமிழனுக்கும் பயத்திற்கும் வெகுதூரம்.

சிறுபிராயத்தை வருணிப்பதாக இருந்தாலும் கூட “ஓடுற பாம்பை புடிக்கிற வயசு” என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

ஆங்கிலத்தில் தண்ணீர் பயம் , மழை பயம், சமையல் பயம், இந்த பயம், அந்த பயம் என்று ஒவ்வொரு பெயரை பயத்துக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது? அதிலென்ன “சொல்வளம்” இருக்கிறது..?

தமிழில் அப்படியல்ல. பயத்தின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அதில்தான் தமிழ்மொழி தனித்து நிற்கிறது.

அச்சம் தோன்றுவதற்கு முன்னர் ஏற்படக்கூடிய அறிகுறிக்கு……..
ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்று பெயர்.

அச்சம் தரக்கூடிய உணர்வு ஏற்பட்டபிறகு ஒருவித ஐயம் நம் உள்ளத்தை ஆக்கிரமிக்கும். அதற்குப் பெயர்…….
வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள்.

அச்சம் அடைந்தபின் உள்ளத்தில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு சிதிலமடைந்து நம்மை பாதிக்கும். அந்த உணர்வுக்கு……
கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று பெயர்.

உள்ளத்தில் ஒருவித பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதற்குப்பின் ஏற்படும் நடுக்கதிற்கு…விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு போன்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.

இந்த ஃபோபியா என்ற வார்த்தையின் பிறப்பிடமே தமிழிலிருந்து வந்ததுதான் என்கிறார்கள் ஆய்வாளார்கள். இந்த ஃபோபியா என்ற சொல்லே தமிழிலுள்ள மூன்று சொற்களின் கலவைதான் என்கிறார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. ?

பேம் + பீதி + பயம் இந்த மூன்று சொற்களின் கலவையிலிருந்துதான் ஃபோபியா என்ற வார்த்தையே பிறந்தது என்று கூறுகிறார்கள் தமிழ் மொழி ஆய்வாளர்கள். தமிழ் மொழியின் இதுபோன்ற சிறப்புகளுக்கு முன் மற்ற மொழிகள் எம்மாத்திரம்..?

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – பாகம் 23
===================================

யான், நான், யாம், நாம், இவை நான்கும் தன்மைப் பெயர்.

எல்லீர், நீயிர், நீவீர், நீர், நீ இவை ஐந்தும் முன்னிலைப் பெயர்.

நீர் என்று விளிப்பதையும், நீவீர் என்று விளிப்பதையும் சங்கத் தமிழாக நினைக்கும் நாம் “நீம்பர்” என்பதை கொச்சைத் தமிழ் என்றே நினைக்கிறோம்

நாகூரில் இந்த “நீம்பர்” என்ற வார்த்தையை எல்லோரும் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதைக் காண முடியும்.

“நீம்பர் நாலு மணிக்கு வாருங்கனி” என்றால் “நீர் நான்கு மணிக்கு வந்துவிடுவீராக” என்று பொருள்.

மீண்டும் ஒரு சஃபர் கதையில் “ஆனா நீம்பர் வரைஞ்சதுதான் பெஸ்ட்” என்று வட்டார வழக்குச் சொற்களை கையாண்டுள்ளார் நாகூர் எழுத்தாளர் ஆபிதீன்.

மற்றுமொரு நாகூர் எழுத்தாளர் அ.முஹம்மது இஸ்மாயில் திண்ணை மின்னேட்டில் “நாகூர் ஹந்திரி” என்ற சிறுகதையில் ‘அப்டீன்னா நீம்பர் தனியா விளக்கம் வச்சிருக்கீயோமா ?’ என்று எழுதுகிறார்.

நீர் என்பதை நீம் என்றே பகர்கின்றன சங்க இலக்கியங்கள். இந்த நீம் என்ற சொல்தான் நீம்பர் ஆனது

சீவக சிந்தாமணி (விமலையார் இலம்பகம்) இலக்கியத்தில் ஒரு பாடலைக் காண்போம்

“அன்றைப் பகலே அடியேன் வந்து அடைவல் நீமே
வென்றிக் களிற்றான் உழைச் செல்வது வேண்டும் என்றான்”

நீமே என்பது நீம்பரே என்றானது.

இதன் பொருள் :“அன்றையத்தினமே அடியேன் மாமனிடம் வந்து சேர்வேன். வென்றிக் களிற்றையுடைய மாமனிடம் நீர் செல்லுதல் வேண்டும்” என்று சீவகன் கூறுவதாக இடம்பெறும் பாடலிது.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் பாகம் – 24
===================================

“பே…. பே…….”
==============

(இந்த “பே” வுக்கும் அரபி எழுத்துக்கள் அலீஃப், “பே” –வுக்கும் யாதொரு சம்பந்தமில்லை)

பயத்தால் பேந்த பேந்த முழிக்கின்றவனை எங்கள் பகுதியில் “ஏண்டா.. பே.. பே.. ன்னு முழிக்கிறே? என்று வட்டார வழக்கில் சொல்வதுண்டு.

“பே” என்ற ஒற்றைச் சொல்லுக்கு அச்சம், பேதல் (அஞ்சுதல்), பேய் (அச்சம் தரும் தோற்றம்) என்று பொருள்கள் உண்டு,

பின்புறத்திலிருந்து சிறுவர், சிறுமியர்கள் ஓடி வந்து யாரையாவது விளையாட்டுக்காக பயமுறுத்துவதாக இருந்தால் “ஆ…..” என்றோ “ஊ……..” என்றோ ஊளையிட்டு பயமுறுத்துவதில்லை. மாறாக “பே…….!”: என்று உரக்க குரலெழுப்பி பயமுறுத்துவது கண்கூடு.

“பேய் மழை” என்று பத்திரிக்கைகள் தலைப்பிடுவதை நாம் காண்போம். பேய்மழைக்கும் சைத்தானுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அச்சம் தரும் மழை என்று பொருள் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

“பேது” அல்லது “பேதம்” என்றால் அச்சம்தரும் பிணத்தைக் குறிப்பதாகும் இந்த “பேதம்” என்ற சொல்தான் திரிந்து “ப்ரேதம் என்று வடமொழிக்கு ஏற்றுமதி ஆகி பின்னர் பிரேதம் என்று மீண்டும் தமிழுக்கு மணிப்பிரவாளா நடையாக இறக்குமதி ஆனது.

இப்படி எண்ணற்ற தமிழ்ச் சொற்கள் வடமொழிக்கு திரிந்துபோய் மீண்டும் தமிழுக்கே வளைத்தடி “பூமராங்” ஆக திரும்பி வந்துள்ளதை ஆராய்ந்து வைத்திருக்கிறேன். அவற்றை நூல் வடிவில் கொண்டு வர எண்ணமுள்ளது.

நாம் வடமொழி என்று நினைத்திருக்கும் எண்ணற்றச் சொற்களின் பிறப்பிடம் தமிழாகவே இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு முந்தைய மொழி தமிழ்மொழி என்பதை வலியுறுத்த இந்த ஆய்வுகள் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

“காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே”

கண்ணதாசன் கூறும் “பேதம்” என்ற சொல்லின் பொருள் வேறுபாடு (Differentiation) என்பது மட்டுமல்ல அச்சம் என்றும் பொருள்படும்.

//பேநா முருமென வரூஉங் கிளவி
யாமுறை மூன்று மச்சப் பொருள (68)//

“பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள்”என்கிறது தொல்காப்பியம்.

ஆகவே, Moral of the Story என்னவென்றால் யாராவது ஏதாவது நம்மை கேள்வி கேட்டு நமக்கு தெரியவில்லை என்றால் “பே…. பே…” என்று சங்ககால முறையில் பேந்த பேந்த பாண்டியராஜன் போல “ பேய்முழி” முழிப்பதில் தப்பேயில்லை.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் பாகம் – 25

பையப்பைய
==============

மதுரை நண்பரொருவர் என்னிடம் பேசுகையில் அடிக்கொருதரம் “பையப்பைய’ என்ற சொல்லை பயன்படுத்துவார். இந்த வட்டாரச் சொல் இரட்டைக்கிளவியா அல்லது அடுக்குத்தொடரா என்பது நம் கேள்வி அல்ல. “பையப் பைய” என்பது கொச்சைத்தமிழா அல்லது தூய தமிழா என்பதே நம் ஆய்வு.

நானும் ஆரம்பத்தில் இது கொச்சையான வட்டார வழக்கு என்றுதான் நினைத்திருந்தேன். “கொள கொளா..” “வளா வளா..” என்பதுபோல் இந்த “பையப்பைய” என்ற சொல்லாடல் என்று நினைத்திருந்தேன்.

பையப் பைய ஆராய்ந்து பார்த்தபோது இது சங்கத் தமிழ் என்பதை விளங்கிக் கொண்டு வியந்து போனேன்.

“பையப் பைய நடந்து போ” என்றால் “மெல்ல மெல்ல நடந்து போ” என்று பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும். சில ஊர்களில் “பதுக்க.. பதுக்க” என்று சொல்வார்கள்.

//பால்கொடுக்கிற பசுவுங்கூட – ஏலங்கிடி லேலோ
#பையப்பைய மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ//

இது ஒரு நாட்டுப் பாடல். இதே சொல் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் பாடலிலும், கவிஞர் வாலியின் பாடலிலும் காண முடிகிறது.

//கையக்கைய வளைக்காதே கண்ணைக் கண்டு மிரளாதே
#பையப்பைய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே//

“நீதிக்குப் பின் பாசம்” படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் மலர்ந்த கண்ணதாசன் பாடலிது.

//ஆண்டவனே சாமியோ! நீ கொடுத்த பூமியோ !
#பையப்பைய முன்னேற கையைக் கொஞ்சம் காமி !//

“கண் கண்டதெய்வம்” படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடலிது.

திரைப்படத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்தினால் எப்படி இது சங்கத் தமிழ் ஆகிவிடும்?” என்று நீங்கள் கேட்கக்கூடும்

//மை அணல் காளையொடு பைய இயலி//
என்கிறது ஐங்குறுநூறு (389/2)

//கை பிணி விடாஅது பைபயக் கழிமின்// (383)

மலைபடுகடாம் என்ற சங்கப் பாடலில் இச்சொல்லாடலைக் காண முடிகிறது. நாம் இன்றைக்கு வழக்கில் பயன்படுத்தும் அதே பொருளில் “பைபய” என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

சேக்கிழார் இன்னும் ஒரு படி மேலே சென்று “பையப்பைய” என்றே பயன் படுத்தியுள்ளார்.

//ஆதியார் தம் அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிடத்
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன #பையப்பைய//

இத்தனை புலவர்களையும் எடுத்துக்காட்டாக சொல்லியாகி விட்டது. நம்ம திருவள்ளுவர் மட்டும் இளைத்தவரா என்ன?

//அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.// (குறள் 1098)

யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்லச் சிரித்தாள்

என்று காமத்துப்பாலில் நம்ம ஆள் கலக்குகிறார்.

பையப் பைய உங்களுக்கும் புரிந்திருக்கும் இந்த “பையப் பைய” வெறும் மருதக்காரர்கள் பாஷையல்ல தூய தமிழ்ச்சொல் என்று.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் பாகம் – 26

===============================

எங்கள் ஊரில் யாரிடமாவது “உடம்பு எப்படி இருக்கிறது?” என்று வினவினால் “தேவலெ” என்பார்கள். வேறு சில ஊர்களில் “தேவலாம்” என்றும் சொல்லக் கேட்டதுண்டு

“இந்த உடம்பு எப்படி இருக்கிறது ?” என்ற கேள்வியிலும் இரண்டு வெவ்வெறு அர்த்தங்கள் உண்டு. இதே கேள்வியை சற்று பணிவாய் குசலமாய் வினவினால் “நலமாக இருக்கிறீர்களா?” என பொருள். சற்று விறைப்பாக அதிகாரத் தோரணையுடன் கேட்டால் “என்ன ரொம்பத்தான் துள்ளுகிறாய்?” என்று பொருள்.

இந்த “தேவலெ” என்பது சங்கத் தமிழ்ச் சொல்லா என்று கேட்டால் “ஆம்” என்பதே நம் பதில்.

தாவில்லை (தாவு + இல்லை)  என்பதே மருவி “தேவலை” என்றாகி விட்டது.   ஆகா.. என்ன ஒரு அருமையான சொல்லாடல் !!

“நா” என்பது நாவு ஆனதைப் போல “தா” என்பதும் தாவு ஆகிவிட்டது.

“தா” என்றால் சோகம், வருத்தம், துன்பம்  என்று பொருள் கொள்ளலாம்

” தாவே வலியும் வருத்தமும் ஆகும்”

“தா” என்ற சொல் இதோ தொல்காப்பியத்தில் காணக்கிடைக்கிறது. (தொல். — சொல் – 827)

தமிழில் மட்டும் 52 ஒற்றைச் சொற்களுக்கு தனித்தனி பொருளுண்டு. இந்த சிறப்பு வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

“கருங்கட் தாக் கலை” என்ற வரி குறுந்தகையில் நாம் காணலாம்  (குறுந்தொகை 69)  வருந்திய கலைமான் என்று இதற்குப் பொருள்

அகநானூறிலும் “தா” என்ற சொல் வருத்தம் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. (அகநானூறு 212)

“தாவில் நன்பொன்”  என்று அகநானூறில் காணப்படும் வரியின் பொருள் “கலப்பிட வருத்தம் இல்லாத நல்ல பொன்”  என்பதாகும்,

தாவு என்பது வலிமை என்ற பொருளிலும் கையாளப்படுகிறது. “உங்கூட பேசிப் பேசி தாவு கழன்றுடுச்சு” என்று கொச்சைத்தமிழில் பேசும் உரையாடலை நாம் காண்கிறோம்.

எனவே இனிமேல் யாராவது உங்களிடம் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தால் “சுகமாக இருக்கிறேன்”, “சூப்பரா இருக்கேன்” “ஜம்முன்னு இருக்கேன்” என்று சொல்வதைக் காட்டிலும் “தேவலை” என்று சங்கத்தமிழிலேயே மறுமொழி கூறலாம்.

#அப்துல்கையூம்

தமிழ் மொழியில் போர்த்துகீசியச் சொற்கள்

=========================================

போர்த்துகீசியர்கள் தமிழகத்தில் விட்டுச்சென்ற அடையாளங்களில் ஒன்று மைலாப்பூரிலுள்ள லஸ் பகுதியிலுள்ள 1516-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிரகாச மாதா ஆலயம். LUZ என்ற வார்த்தை “Nossa Senhora da Luz” என்ற போர்த்துகீசிய சொற்றொடரிலிருந்து பெறப்பட்டது. சென்னையில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயமும் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டதுதான்.

1618-ஆம் வருடத்திலிருந்தே போர்த்துகீசியர் தமிழக மண்ணில் காலூன்ற முயற்சி செய்தார்கள் என்ற போதிலும் 1620-ல்தான் அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற முடிந்தது.

நாகை மாவட்டத்தில் ஒரு காலத்தில் போர்த்துகீசியர் ஆதிக்கத்திலிருந்த தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களான பொறையார், காரைக்கால், திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம் பகுதிகளில் ஏராளமான போர்த்துகீசியச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன அவைகள் தமிழ்ச்சொற்களாக உருமாறி ஏட்டிலும் இடம்பெற்று விட்டன. தமிழ்க்கூறும் நல்லுலகத்தில் பரவலாக பேசப்படுகின்றன.

நாகை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி எனும் ஊரைப் பற்றி சற்று விரிவாகச் சொல்ல வேண்டியது அவசியம். .”தரங்கம்பாடி”…… ஆகா ..! என்ன ஒரு கலைநயமிக்க பெயரிது. இந்த பாழாய்ப்போன போர்த்துகீசியர்களின் வாயில் இந்த அழகான தமிழ்ப் பெயர் நுழையாததால் அலங்கோலமாகச் சிதைத்து Tranquebar என ஏதோ TASMAC BAR போன்று மாற்றித் தொலைத்து விட்டார்கள்.

“நீரலைகள் ராகம் பாடும் ஊர்” என்ற பொருளில் விளங்கிய தரங்கம்பாடி என்ற பெயரை டிரங்குபார் என்று பெயர் வைத்த போர்த்துகீசியரை நினைத்தால் நமக்கு பற்றிக்கொண்டு வருகிறது.,

ஆங்கியேர்கள் இங்கு காலூன்றுவதற்கு முன்பே போர்த்துகீசியர்கள் இங்கு தடம் பதித்து விட்டனர். 450 ஆண்டுகள் தொடர்பு என்றால் அதன் சுவடுகள் தெரியாமலா போய்விடும்?.

சப்பாத்து, துவாலை, ஜன்னல், வராந்தா, குசினி, கிராதி, அலமாரி, மேஜை, சாவி, ஜாடி, பீப்பாய், மேஸ்திரி, நிரக்கு, இதுபோன்று கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழ் மொழியோடு ஒன்றரக் கலந்து விட்டன.

இன்னும் எங்கள் ஊரில் செருப்பு, சப்பல், காலணி, ஸ்லிப்பர் என்று கூறுவதைக் காட்டிலும் “சப்பாத்து” என்ற சொல்லாடலைத்தான் பயன்படுத்துகிறார்கள். யாராவது வாலாட்டினால் “சப்பாத்து பிஞ்சு போயிடும் ஜாக்கிரதை” என்பார்கள்

சிற்சில சொற்கள் போர்த்துகீசியம் எது, தமிழ் எது என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு ஒன்றரக் கலந்து விட்டன என்ற கூற்று முற்றிலும் உண்மை.

//என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்

என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்//

என்றுதான் வைரமுத்து பாடுகிறாரே தவிர சாளரத்தைக் கேட்டுப்பார் என்று பாடவில்லை

“தரங்கம்” என்றால் நீரலைகள் எழுப்பும் சுகமான ராகம் என்று பொருள். தரங்கம் என்ற பெயரில் கர்நாடக இசையில் ஒரு ராகமே இருக்கிறது. ஜேசுதாஸின் பாடல் பதிவரங்கத்தின் பெயர் தரங்கிணி.. தரங்கம் என்ற வேர்ச் சொல்லிலிருந்துதான் “புல் புல் தாரா” என்ற இசைக்கருவியின் பெயரும் பிறந்தது.

பெரிய புராணத்தில் “நீர்த்தரங்க நெடுங்கங்கை” என்ற பயன்பாட்டைக் காண முடிகிறது (பெரியபுராணம். தடுத்தாட்கிண்ட புராணம். 165).

கடல் என்ற சொல் “தரங்கம் பரமபதம்” என்றும் கையாளப்பட்டுள்ளது. (அஷ்டப். திருவேங்கடத்தந்.56).

“ கத்தும் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் உளைந்து” என்ற சொற்பதம் பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழில் காண முடிகிறது.

சிலர் “திரங்கம்+பாடி” என்ற பெயரிலிருந்து மருவியதுதான் தரங்கம்பாடி என்று வாதிடுகிறார்கள். அவ்வாதத்தில் போதிய வலுவில்லை. “திரங்கம்” என்றால் வற்றிச் சுருங்குதல் என்று பொருள்.

“தெங்கின் மடல்போற் றிரங்கி” (மணி. 20, 57).

திரங்கு மரனாரிற் பொலியச் சூடி (மலைபடு. 431).

திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு (கம்பரா. காட்சி. 25).

மடமா னம்பிணை மறியொடு திரங்க (ஐங்குறு. 326)

இவையாவும் “திரங்கம்” என்ற சொல்லின் இலக்கியப் பயன்பாடுகள். வற்றிச்சுருங்குதல் என்ற பொருளில் இவ்வூர்ப் பெயர் ஏற்பட்டதல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

ஆனால் தரங்கம் என்ற சொல்லாடல் கடல் சம்பந்தப்பட்ட நீரலைகளைக் குறித்தே காணப்படுகின்றன. ஆகையால் “தரங்கம்பாடி” என்றால் “நீரலைகள் கவிபாடும் ஊர்” என்ற விளக்கமே சாலப்பொருந்தும்

இதோ கீழ்க்கண்ட பாடல்களில் “தரங்கம்” என்ற சொல்லாடல் பயன்பாட்டில் உள்ளதை உறுதிபடுத்துகின்றது

//இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-

புரம் காவல்(ல்) அழியப் பொடிஆக்கினான்—

தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்

குரங்காடூதுறைக் கோலக் கபாலியே//.

#தேவாரம் 5-63 (1)

//வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்

ஒண் தரங்க இசை பாடும் அளிஅரசே! ஒளி மதியத்-

துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!//

#தேவாரம் 1-60_(1)

//தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே//

#தேவாரம் 2-38(4)

//சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்//

#தேவாரம் 1-004 (6)

ஆகையால் தரங்கம்பாடிக்காரர்கள் தங்கள் ஊர் போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்தில் ஏதோ ஒரு காலத்தில் இருந்தாலும் தங்கள் ஊரின் பெயர் அழகான தமிழ்ப்பெயர் என்பதை நினைத்து பெருமைபட்டுக் கொள்ளலாம்.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – 27

சள்ளக்கடுப்பு

————————

சள்ளக்கடுப்பு என்ற சொல்லாடல் எங்கள் ஊர்ப் பகுதியில் மிகச் சர்வ சாதாரணம்.

சிற்சமயம் குளிர் ஜூரம் வரும்போது உடல் வலியும் சேர்ந்தே வரும். உடலை முறிக்கும். உடம்பில் பாரத்தை வைத்தாற்போல் அழுத்தும். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் இந்த உடல் உபாதைக்குப் பெயர் LUMBAGO

இதுபோன்ற ஒரு குளிர் ஜூரம் ஏற்பட்டால் “சள்ளக்கடுப்பு” என்று எங்கள் பக்கம் கூறுவார்கள்.

அதென்ன சள்ளக்கடுப்பு? கேட்கும்போதே நமக்கு கடுப்பாகிறது.

“சள்ளை” என்ற சொல் கொங்குநாட்டு பகுதியிலும் அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது. இம்சை, தொல்லை, நோவு என்ற பொருளில் கையாளப்படுகிறது. மேலும் நாஞ்சில் நாட்டிலும் “சள்ளை” என்ற வார்த்தையை பரவலாக பயன்படுத்துகிறார்கள்.

“அவன் சரியான சள்ளை”, “இது சள்ளை பிடிச்ச விவகாரம்” “இவனாலே பெரிய சள்ளையாப் போயிடுச்சு”.

இவை யாவும் என்னோடு பழகும் தக்கலை, தேங்காய்ப்பட்டினம், குளச்சல். நாகர்கோயில்காரர்கள் வாயிலிருந்து சகஜமாக வந்து விழும் வார்த்தைகள்.

“சள்ளை மீன்” என்று ஒருவகை மீன் உள்ளது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். குளங்களிலும் ஆறுகளிலும், நதிமுகத்துவாரங்களில் காணப்படும். தூண்டிலில் புழுவை வைத்து அதைப் பிடிக்க நினைத்தால் எளிதில் மாட்ட்து. புழுவை நைஸாக உருவி சாப்பிட்டுவிட்டு ஓடி விடும். சள்ளை மீனின் வாய் சிறியது. எனவே தூண்டில் முள்ளை அதனால் விழுங்க முடியாது. “டேக்கா” கொடுத்துவிட்டு ஓடி விடும். உண்மையில் பெயருக்கு ஏற்றார்போல் அது சள்ளையான மீன்தான்.

இந்த “சள்ளை” என்ற வார்த்தை தமிழ் வார்த்தையா? ஆம் தூயதமிழ்ச் சொல்.

“கல்யாண தேன் நிலா” என்ற திரைப்படப் பாடலில் வரும் இந்த கீழ்க்கண்ட வரிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் சேர்ந்து 7-8 ஆம் நூற்றாண்டில் எழுதிய இதே தேவாரப் பாடலில்தான் “சள்ளை” என்ற சொல் காணக்கிடைக்கிறது. .

சள்ளைவெள்ளை யங்குருகு தானதுவா மெனக்கருதி

வள்ளைவெண்மலரஞ்சி

(தேவா. 628, 4)

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – 28

லெஹட்டு

===========

அக்காலத்தில் தஞ்சை மாவட்டத்து கடலோரப் பகுதியில் வாழ்ந்த தமிழ் முஸ்லீம்கள் சுமத்ரா, மலாயா, சியாம் போன்ற நாடுகளுக்குச் சென்று பொருளீட்டினார்கள். இப்போது எப்படி அரபு நாடுகளுக்கு பணிநிமித்தம் சென்று திரும்பி வந்தவர்கள் “மாஃபி”, “கல்லிவல்லி” , “அய்வா” “Zain” போன்ற சொல்லாடல்களை பரப்புகிறார்களோ அதுபோன்று நிறைய மலாய் சொற்களை பேச்சுத்தமிழில் ஒன்றரக் கலந்தார்கள்.

பெரும் பணக்காரனை எங்க ஊரில் “லெஹட்டு” பணக்காரன் என்று குறிப்பிடுவார்கள். மலாய் மொழியில் “LAHAT” என்றால் EVERYTHING – “அனைத்தும்” என்று பொருள். அனைத்து வசதிகளும் நிரம்பப் பெற்ற பெரும் பணக்காரனை “லெஹட்டு பணக்காரன்” என்று அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் இந்த “லெஹட்டு” என்ற சொல் “பெரிய” என்ற பொருளில் பயன்படுத்தத் தொடங்கினார்கள் “லெஹட்டு சைஸ்” என்றால் பெரிய சைஸ் என்று பொருள்படலாயிற்று.

LAHAT என்ற பெயரில் மலேஷியாவிலுள்ள பெருநகரம் ஈப்போ அருகிலும் இந்தோனேசியா தென்சுமத்ரா பகுதியிலும் ஊர் விளங்குகின்றது.

#அப்துல்கையூம்

பீங்கான்

========

பீங்கான் சாதனைத்தை முதலில் தயாரித்தது சீனர்கள்தான். அதனால்தான் அதனை Chinese Porcelain, China Clay என்றெல்லாம் கூறுகிறோம். இந்த சீன சாதனமான பீங்கானை முதலில் இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது பாரசீகர்கள். அதன் பிறகு போர்த்துகீசியர்கள்.

பார்ஸி மொழியில் PINGAN என்றால் கோப்பை (BOWL) என்று அர்த்தம். ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்து ஒவ்வொரு மருத்துவ மனைகளிலும் கட்டாயமாக இந்த பீங்கான் BOWL காணப்பட்டது.

பாரசீக மொழியில் பிறந்த பீங்கான் என்ற சொல் ஸ்பானிய மொழிக்குத் தாவி அதன் பின்னர் போர்த்துகீசிய மொழியில் பலங்கானா (PALANGANA) என்று அழைக்கப்பட்டது. சிங்கள மொழியிலும் பலங்கானா என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. தெலுங்கு மொழியில் பீங்கானி. கொங்கனி மொழியில் பல்கன். மலையாளத்தில் சைனா பின்னன்னம்.

பீங்கான் என்றால் CERAMIC (சுட்டாங்கல்) என்று பொருள். இருந்தபோதிலும் பெரும்பாலும் செராமிக் பிளேட்டை குறிக்க இப்பெயர் பயன்படுகிறது. கலை நுணுக்கமிக்க, வேலைப்பாடுகள் நிறைந்த பீங்கான் தட்டை “சீப்பர்” என்று அழைத்தார்கள், சீப்பர் என்றால் “வேலைப்பாடுகள் நிறைந்த” என்று பொருள்.

ஒரு காலத்தில் பீங்கான் ஜாடிகள் இல்லாத வீடுகளே கிடையாது எனலாம். ஊறுகாய், உப்பு போன்றவற்றை பீங்கான் ஜாடியில்தான் அடைத்து வைப்பார்கள். 1908-ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் தொடங்கப்பட்ட PARRY & CO (PARRYWARE) இந்த பீங்கான் ஜாடியை தயாரித்து சந்தைப் படுத்தினார்கள். Ceramic Tiles என்பதை மக்கள் “பீங்கான் ஓடு” என்று அழைத்தார்கள்.

பீங்கான் ஜாடிகளின் பயன்பாடு இப்போது நம் வீடுகளில் வெகுவாக குறைந்து வருகிறது,. ஆனால் வெளிநாட்டினர் இதனை ANTIQUE சாதனம் என்று வாங்கி வரவேற்பேறையில் காட்சிப் பொருட்களாக வைத்து அழகு பார்க்கிறார்கள்,

அமேஸான் டாட் காமில் சென்று “PEENGAN JAADI” என்று தேடிப்பாருங்கள். நம்ம ஊரு பீங்கான் ஜாடியை யானை விலை, குதிரை விலையில் விற்கின்றார்கள்.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – 29

நண்டு சுண்டு , குஞ்சு குளுவான்

===================================

இவை யாவும் எதுகை மோனையுடன் நம் அன்றாட பயன்பாட்டில் உள்ள சொற்கள்.

//இவரைப் பத்தி கேட்டும் பாருங்க. ஊரிலுள்ள நண்டு சுண்டுகளுக்கு கூடத் தெரியும்// என்பார்கள்

நண்டு என்றால் நமக்குத் தெரியும். சுண்டு என்றால்?

“பொண்டுவளா பொண்டுவளா நண்டு கடிக்க

ஆம்பளைவுளா ஆம்பளைவுளா அல்லா வச்சு காப்பாத்த”

என்ற சொலவடை கூட எங்கள் ஊரில் உண்டு

சுண்டு என்றால் மிகச்சிறிய. என்று பொருள். அதனால்தான் நம் ஐந்து விரல்களில் மிகச் சிறிய விரலை “சுண்டு விரல்” என்கிறோம். தலைமுடியில் பேன் உண்டு. அதனினும் மிகச் சிறியதாக உள்ள பொடுகை “சுண்டு” என்பார்கள்.

//இந்தக் காலத்தில் “குஞ்சு குளுவான்கள்” கூட இதைப்பற்றி பேசத் தொடங்கி விட்டன// என்று சொல்வதைக் கேட்கிறோம்

குஞ்சு என்ற சொல்லாடல் வரும்போது கூடவே இந்த குளுவானும் கொரோனா போன்று தொற்றிக் கொண்டு வரும். குளுவான் என்றால் குட்டி நண்டு என்று பொருள். நண்டு வகைகளில் இந்த குளுவான் நண்டும் ஒன்று.

நண்டு சுண்டு, என்பதையும் குஞ்சு குளுவான் என்பதையும் தொடர்பு படுத்தி பார்த்தால் இவை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை நமக்கு புரியும்.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – 30

குலவும் குலவை
====================

“ரொம்பத்தான் குலவாதீங்க” இதுபோன்ற வழக்காடல் எம் பகுதியில் சகஜம். “குழைவு” என்ற சொல்தான் குலவு என்று மாறி விட்டதோ என்றுகூட நினைத்தேன். கிடையாது. சங்க காலப் பாடல்களில் “குழைவு” என்றில்லாமல் இப்போதுள்ள வழக்குச் சொற்கள் போலவே “குலவு” என்றே கையாளப்பட்டுள்ளது.
//குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்// (தேவாரம்)
//கடலிற் குலவுகின்றதோர் பொருளெலாம்// (கந்தபுராணம்)
//குலவுச்சினைப் பூக்கொய்து// (புறநானூறு)

குலவு என்றால் வளைந்து நெளிந்து கூழைக் கும்பிடு போடுவதையும், ஊடல், கொஞ்சுதல் போன்ற பொருளில் கையாளப்படுகிறது

//பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
கொய்பதம் உற்றன குலவுக்குரல் ஏனல்//

என்ற வரிகள் மலைபடுகடாம் (107-108) என்ற பழைய நூலில் காணப்படுகிறது.

வரகுக் கதிர்கள் ஒன்றோடொன்று தழுவிக்கொண்டும் பின்னிக்கொண்டும் இருப்பதை அவை குலவிக்கொண்டு இருப்பதாகப் புலவர் கவிநயத்துடன் பாடுகிறார்.

பாரதிகூட கொள்ளையின்பம் குலவு கவிதை என்று பாடுகிறான்,

அதேபோன்று நாக்கினை வளைத்து மடக்கி, வாயருகை கைகளை மறைத்து மகிழ்ச்சியொலியை குலவை என்கிறார்கள், இது பண்டைய தமிழரின் பழக்க வழக்கம். உழவு நேரத்தில், பூப்புனித நீராட்டு, திருமணம் ஏனைய சடங்குகளின்போது குலவை என்ற மங்கல ஒலியை நாம் கேட்க முடியும்.

அரபிகளிடத்திலும் இவ்வழக்கம் இருப்பதால் பண்டைய வணிகத் தொடர்பினை வைத்து அது இங்கிருந்து போன பழக்க வழக்கமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

#அப்துல்கையூம்

நாகூரும் நற்றமிழும் – 31

முகத்தைச் சுரித்து
=================

முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்தால் “ஏன் மூஞ்சி சுரிச்சிக்கிட்டு உக்காந்து இரிக்கிறே?” என்பார்கள். மூஞ்சி “சுளித்துக் கொண்டு” என்பதுதான் நாளடைவில் “சுரித்துக் கொண்டு” என்றாகி விட்டது என்று பலரும் நினைக்கக் கூடும்.

தமிழில் “சுளிக்க” , “சுரிக்க” – இந்த இரண்டு வார்த்தைகளும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு.

“சுளிக்க” என்றால் கோபத்தால் முகம் சுளித்துப் போவது, பிறரை வெறுப்பேற்றுவது.

எனவேதான் ஒளவையார் ஆத்திசூடியில் “சுளிக்கச் சொல்லேல்” என்று பாடினார்.

முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு இருப்பதற்கு “ஏன் மூஞ்சி சுரிச்சிக்கிட்டு இருக்குறே?” என்பதுதான் முறையான சொல்லாடல்.

நன்றாக மலர்ந்திருக்கின்ற பூ சுரித்துப் போவதை அகநானூற்றுப் பாடல் இங்ஙனம் கூறுகின்றது. இது ஆவூர் மூலங் கிழாரின் பாடல்.

தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகநானூறு 24:3

அதாவது “கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்” என்று பொருள் கொள்ளல் வேண்டும். பகன்றை என்பது கிலுகிலுப்பை என வகைப்படும் வெண்ணிற மலர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

#அப்துல்கையூம்

இரணம்
=========
“ரணம்” என்ற வடமொழிச் சொல் இகரம் சேர்த்து “இரணம்” என்று நம் பயன்பாட்டில் உள்ளது.
காயம்(Wound) என்ற பொருளில் இச்சொல் வழங்கப்படுகிறது. ஆனால் “இரணம்” என்ற இச் சொல் இஸ்லாமிய சமூகத்தாரிடம் மட்டுமே “உணவு” என்ற பொருளில் இன்றும் அன்றாட உபயோகத்தில் உள்ளது.
“இரணம்” என்றச் சொல்லை ஒளவையார் உட்பட பற்பல புலவர்களும் காயம், வடு, புண் , இரத்தக்கசிவு என்ற பொருளிலேயே கையாண்டுள்ளனர்.
பெற்றார், பிறந்தார், பெருநட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர், இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்
ஒளவையார் எழுதிய இப்பாடலின் பொருள்:
//பரந்த இவ்வுலகில் இன்னார் எம்மைப் பெற்றவர், இன்னார் எமக்குப் பிறந்தவர், இன்னார் என் நாட்டவர், இன்னார் எம் உறவினர், இவர் எமக்கு நேயமுடையவர் என்று யாரையும் விரும்பாத கஞ்சன்மார்கள் பிறர் தமக்கு உடம்பில் அடித்துப் புண்ணாக்குபவர்களுக்கு அள்ளியள்ளி கொடுப்பவர், முன்னே கூறப்பட்டவர் தன்னிடத்தில் வந்து அடைக்கலமாகப் புகுந்தாலும் அவருக்கு ஒன்றும் கொடுக்க மாட்டார்// என்பதாகும்.
“இரண வைத்தியம்” என்ற சொல்லாடலும் புண், காயம் இவைகளை மையப்படுத்திய வைத்தியமாகும்.
இரணம் என்றச் சொல் ‘இரை’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது.
பழந்தமிழ்ச் சுவடிகளில் “இரணம்” என்ற சொல்லாடல் இரை, உணவு, உப்பளம், ஒலி, கடன், பல், புண், போர், வேட்டை என்றெல்லாம் பொருளில் வழங்கப் பட்டிருக்கின்றது.
“அல்லாஹுத் தஆலா உங்களுக்கு இரண பரக்கத்தை தரட்டும்” என்ற வாழ்த்தை முஸ்லிம் பெரியவர்கள் கூற நாம் கேட்டதுண்டு.
“இரணம்” என்ற தூய தமிழ்ச்சொல் இஸ்லாமிய சமூகத்தினரிடம் மட்டுமே காணப்படுகிறதே . ஏன்?” என்ற ஐயத்தை யாராவது விளக்கினால் தேவலாம். மற்ற சமூகத்தினர் இச்சொல்லை இந்த அர்த்தத்தில் பயன்படுத்தி நான் கேட்டதில்லை. பெரும்பாலும் ரத்தக்கசிவு என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது.
#அப்துல்கையூம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s