உலகின் மிகச்சிறந்த
பட்டய கணக்காளன் யாரென்றால்
இறைவன்தான்.
இவனது
கணக்கியல் நிறுவனத்திற்கு
கூட்டாண்மை கிடையாது
கணினி இல்லை
கணக்கியல் மென்பொருளில்லை
கணிப்பொறி இல்லை
பேரேடு இல்லை
என்றாலும்
கணக்கு வழக்குகள் யாவும்
கனக்கச்சிதம்தான் போங்க..
அவனுக்கு விரல்கள் இல்லை
ஆனாலும் வரவுச் செலவு கணக்கு
அவன் விரல் நுனியில்
அறிவைக் ‘கூட்டி’
பாவங்களை ‘கழித்து’
வாழ்க்கைப் பாதையை ‘வகுத்து’
செல்வத்தை ‘பெருக்கி’
சீராக வாழ வழிகாட்டும் கணக்காளன்.
ஐவேளைத் தொழுகைதான்
அவன் ஐந்தொகை கணக்கு
என் நன்மைகளின் வைப்புத்தொகை
அவனுக்கு மட்டுமே தெரியும்
நன்மைகளை வரவில் வைக்கவும்
பாவங்களை செலவில் சேர்க்கவும்தானே
நம் ஒவ்வொருவரின் விருப்பமும்
விண்ணப்பப் படிவமும்.
இங்கு காலி செய்துவிட்டு போகையில்
கடனாளிகள் பேரேட்டில்
நம் பேர்கள் இருக்கவே கூடாது
இறைபக்தியே மூலதனம்.
நன்மைகளே மதிப்புயர்வு
நம் வயதே தேய்மானம்
அவனது அருளே ஈவுத்தொகை
அதுவே நமக்கு முகமதிப்பு
இறுதிக் கணக்கே அவன் தீர்ப்பு
அருஞ்சொற்பொருள்:
கணக்கியல் : Accountancy
பட்டய கணக்காளன் : Chartered Accountant
ஐந்தொகை: Balance Sheet
கூட்டாண்மை: Partnership
கணிப்பொறி: Calculator
பேரேடு : Register
வரவுக்கணக்கு: Credit Account
செலவுக்கணக்கு: Debit Account
மூலதனம்: Capital
மதிப்புயர்வு: Appreciation
தேய்மானம் : Depreciation
ஈவுத்தொகை: Dividend
முகமதிப்பு: Face Value
இறுதிக்கணக்கு: Final Account