சிறிய இடம்தான் என்றாலும்
நமக்கே சொந்தமாகி விடுகிறது.
விலைக்கிரயம் கிடையாது
மனைப்பட்டா கிடையாது
நிலப்பதிவு செய்ய
சார்பதிவு அலுவலகம் போகவேண்டிய
அவசியமும் கிடையாது.
புழுக்கம் இருக்கும் ஆனால்
மின் விசிறி தேவையிருக்காது
வெளிச்சமிருக்காது ஏனெனில்
சாளரங்கள் கிடையவே கிடையாது
வசதிகள் கிடையாதுதான் – ஆனால்
அதுவே நமக்கு போதுமானது
விருந்தினர் தொல்லை இல்லை
உறவுக்காரர்களின் பிடுங்கல்கள் இல்லை
புள்ளைக்குட்டி தொந்தரவு கிடையாது
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருக்கலாம்
அந்த இடத்துக்கு அப்படி என்னதான்
வசீகரமோ தெரியாது எனக்கு.
அங்கு போவதற்குத்தான்
ஒவ்வொருவரும் கிடந்து சாகிறார்கள்
ஆம்..
மண்ணறை விசாலம் இல்லைதான்
ஆனால் மண்ணறைதான் நம் விலாசம்