கனவுகள் விற்பனைக்கு அல்ல !!

Think

கனவு என்பது யாதென
கருத்தாய் சிந்தித்துப் பார்த்தேன் !
சிந்துபாத் படக்கதையென
நீண்டுக்கொண்டே சென்றது !

கனவுகள் கனவாகவே
இருக்கும் வரைதான்
கனவுகளுக்கு கனவென்று பெயர்

அது நிஜமாகிவிட்டாலோ
மதமாற்றம் ஆனதுபோல்
“நனவு” என்று பெயர் மாற்றம்
நிகழ்ந்துவிடும் !

கனவுதான் அழகு
நிஜத்தைக்காட்டிலும் !
கனவுகள் வானவில் மாதிரி !
தானே வரும்! தானே போகும்!
வண்ணமயமாய் ஜொலிக்கும் !
கனவுகள் ரஜினி மாதிரி
எப்ப வரும் யாருக்கும் தெரியாது !
கனவுகளை கண்காணிக்க
கமல் ஹாசனாலும் முடியாது. !
எந்த கண்காணிப்புக் காமிராவுக்கும்
அது அகப்படாது !

எதிர்ப்பார்ப்பே இல்லாமல்
இலவசமாய் எல்லோருக்கும் வருவது
கனவுமட்டும்தான் !
கனவுகளே ஓர் எதிர்ப்பார்ப்புதானே !

கனவுகள் பறவைகள் அல்ல
ஆனாலும் சிறகுகள் உண்டு !
கனவுகள் ஜோசியம் அல்ல
ஆனால் சிலதுகள் பலிக்கும் !
கனவுகள் கரன்சி அல்ல
ஆனாலும் செல்லுபடியாகும் !

கனவுகளுக்கு
எந்த அரசாங்கத்தாலும்
ஊரடங்கு சட்டம் போட முடியாது !
கனவுகளுக்கு
வீட்டுக்காவல் வைக்க
மோடி அரசாங்கத்தாலும் முடியாது !

கனவுகள்….
மானுட ஜாதியின் பிறப்புரிமை !
கனவுகளுக்கு
கர்ப்பத்தடை மாத்திரை
கண்டுபிடிக்கவே இல்லை !
கால்களே இன்றி நடப்பது
கனவுகள் மட்டும்தான் !

கனவுகளுக்கு பொழிப்புரை எழுத
கால்டுவெல்லாலும் முடியாது

கண்திறக்காமலேயே
கனவுகள் காணமுடியும் !
நீச்சல் தெரியாமலேயே
கனவுகளில் நீந்த முடியும் !
மூச்சடைக்காமலேயே
கனவுகளில் மூழ்க முடியும் !

கனவுகள் ….
சிலந்திவலையைக் காட்டிலும்
நாசுக்கானவை !
சட்டென்று கலைந்து விடுகின்றன !
கனவுக்கு வரைபடம் கிடையாது
அதற்குத்தான்
எல்லைக்கோடுகளே இல்லையே !

கனவுகள் பாரபட்சம்
பார்ப்பது கிடையாது
ஏழை பணக்காரன் என்றதற்கு
பிரித்துப் பார்க்கத் தெரியாது !

இருந்தபோதிலும் …
கனவுகள் மீது
கவிஞனெனக்கு கடுகளவும்
நல்லபிப்பிராயம் கிடையாது !
காரணம்….
கனவுகளை நம்பி
மோசம்போனவர்கள் உண்டு!
காஷ்மீரிகளைப் போல

கனவுகளின் தொன்மை
சத்தியமாய் தெரியாது !
ஆதாம் ஏவாளுக்கும்கூட
அது வந்திருக்கலாம் !

வெறும் கனவுகளூடே பயணித்து
வெறும் கனவுகளூடே லயித்து
வெறும் கனவுகளூடே வாழ்ந்து
விடைபெற்று போனோர் பலருண்டு

கனைவுகள் என்பது மாயை !
கனவுகள் மற்றொரு உலகம் !
கனவுகள் நிஜத்தின் கருவறை !
கனவுகள் நனவுகளின் கர்ப்பக்கிரகம் !

கனவுகளில் வரும் அரங்கமைப்பு
தோட்டாதரணியையும் தோற்கடிக்கும் !

இந்தியாவின் சுதந்திரம்
யாரோ கண்ட கனவுதான்!
இந்தியாவின் இறையாண்மை
யாரோ கண்ட கனவுதான் !
இந்தியாவின் மதச்சார்பின்மை
யாரோ கண்ட கனவுதான் !

என் கனவுகள்
எனக்கும் மட்டும்தான் !
கனவுகள் விற்பனைக்கு அல்ல !!

#அப்துல்கையூம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s