ஜுஜூபி

jujube

“இதெல்லாம் எனக்கு ஒரு ஜூஜூபி மேட்டர்” என்று என் நண்பர்கள் அடிக்கடிச் சொல்வார்கள்.

“ஜூஜூபி” – நடிகர் சின்னி ஜெயந்த் பிரபலப்படுத்திய வார்த்தை.. “கில்மா”, “கில்பா” “சில்பான்ஸ்” இப்படி பல அர்த்தமிலா ‘பஞ்ச்’ வார்த்தைகளை பைந்தமிழுக்கு கொடையளித்த பாவலர் (?) .

அவர் என்னுடைய கல்லூரி நண்பர்தான். அதற்காக அவரை தேவநேயப் பாவாணர் ரேஞ்சுக்கு வைத்தா போற்றிப் புகழ முடியும்?

ஆங்கிலத்தில் “Its pea-nuts for me” என்ற சொற்றொடர் உண்டு. இதெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது. இந்தத் தொகை, எனக்கு வேர்க்கடலை வாங்குவதற்குச் சமம் என்று அர்த்தம்.

ஆங்கிலத்தில் ஜூஜூபி என்றால் இலந்தைப் பழம் என்று அர்த்தம். கண்ணதாசன் “எலந்தப்பயம் ..எலந்தப்பயம்” என்று கலீஜ் கலீஜாக பாட்டு எழுதினாரே, அதே பழம்தான்.

“இதெல்லாம் எனக்கு ஜூஜூபி” என்று சொன்னால் “எனக்கு இது ஒரு பெரிய மேட்டரே கிடையாது. நான் இலந்தைப் பழத்திற்காக செலவழிக்கின்ற தொகை. அவ்வளவுதான்” என்று பொருள்.

ஜூஜூபியை பிரபலப்படுத்தியது உண்மையிலேயே சின்னி ஜெயந்த் அல்ல. அந்தக் காலத்திலேயே அகத்தியர் ஜூஜூபியைப் புகழ்ந்து பாடி இருக்கிறார்.

“பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி
மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண்-மெத்த
உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்
இலந்தை நெறுங்கனியை யெண்”

என்று இலந்தைப் பழத்தின் மகிமையைப் பாடுகிறார் அகத்தியர்.

#அப்துல்கையூம்

Leave a comment