எம்.ஜி.ஆரும் கீழக்கரை வர்த்தகர்களின் தொடர்பும்

10885171_1014053881942809_1168570525514526043_n

ஆ.மு. அஹ்மது யாசீன் காக்கா சினிமாத் துறையில் செல்வாக்கு பெற்ற  மனிதராகத் திகழ்ந்த நேரமது. சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆர்., பாலாஜி போன்றவர்களின் படங்களுக்கு பணமுதலீடு தந்து உதவியவர்.

“சேனா ஆனா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்கள் நிறுவிய “கிரஸெண்ட் ரெசிடென்ஷியல் ஸ்கூல்” முதல் பேட்ச் மாணவர்கள் 19 பேர்களில் நானும் ஒருவன். ஒருசமயம் கால்பந்தாட்டம் விளையாடும்போது எனது ஒரு கண்ணில் பலமாக அடிபட்டு கண்திரை (Retinal Detachment) முழுவதுமாக கிழிந்து பார்வை பறிபோய்விட்டது.

எக்மோர் கண் ஆஸ்பத்திரியில் அந்தக் காலத்தில் மிகச்சிறந்த கண்மருத்துவர்களாக புகழ்பெற்றிருந்த டாக்டர் ஆபிரகாம் மற்றும் டாக்டர் C.P.குப்தா இவர்கள் அறுவை சிகிச்சை செய்து என்னை முழுவதுமாக குணப்படுத்தி பார்வையை மீட்டுத் தந்தார்கள். (லேசர் அறுவைசிகிச்சை நவீனமாக அறிமுகமான நேரம்)

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனை படுக்கையில் நான் கண்விழித்து பார்த்தபோது, ஆறுதல் கூற என்னருகே இரண்டு ஆளுமைகள் வெகுநேரம் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கல்வித்தந்தை பி.எஸ்.ரஹ்மான் அவர்கள். மற்றொருவர் யாசீன் காக்கா அவர்கள். தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவர்கள் கருதினார்கள்.

ஒருமுறை எனக்கு தமிழ்மொழியில் இருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு “நீ தமிழ் இலக்கியம் எடுத்துப்படி.  நீ நல்லா வருவே,,!” என்று ஆலோசனை நல்கியவர்” யாசீன் காக்கா.

கல்வித்தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் நிறுவிய சீதக்காதி டிரஸ்டுக்கு சொந்தமாக அப்போது பல நிறுவங்கள் இருந்தன. பாரி இண்டஸ்ட்ரீஸ், ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஒமேகா கேபிள்ஸ், பினாங்கில் UMPTC, இப்படி எத்தனையோ நிறுவனங்கள். ஒமேகா கேபிள்ஸ் நிர்வாகியாகவும் பங்குதாராராகவும் யாசீன் காக்கா செயல்பட்டார்கள்

அப்துல் ரஹ்மான்

மாணவர்களாகிய எங்களிடம் பொதுஅறிவு கேள்வி கேட்கும் சேனா ஆனா (உடனிருப்பவர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்)

இன்னொருமுறை “Which City is called Pink City?” என்று பொதுஅறிவு கேள்வி கேட்டுவிட்டு “ஜெய்ப்பூர்” என்று நான் சரியாக பதில் சொன்னதற்கு, அப்துல் வஹ்ஹாப் அவர்கள் எழுதிய “தித்திக்கும் திருமறை” என்ற நூலை கையொப்பமிட்டு பரிசாக அளித்தார்கள் சேனா ஆனா அவர்கள்.. அந்த மாமனிதரின் கையால் வாங்கிய நினைவுப்பரிசை இன்றும் போற்றி பாதுகாத்து வருகிறேன்.

கீழக்கரை முஸ்லீம் வணிகர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் சினிமா தொடர்பு உள்ளவர்களாக இருந்தார்கள். பிறகுதான் அது “ஹராம்” (இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று)  என்று கூறி ஒவ்வொருவராக சினிமாத்துறையிலிருந்து விலக ஆரம்பித்தனர். பிற்காலத்தில் முழுவதுமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.

வரலாறு கூறும் செம்பி நாடு மற்றும் சேதுச் சீமையை நினைவுறுத்தும் வகையில் “செம்பி பிலிம்ஸ்”, “சேது பிலிம்ஸ்”, என்று தங்கள் நிறுவனங்களுக்கு பெயர் சூட்டியிருந்தார்கள்.  பிறந்த மண்ணை போற்ற வேண்டும் என்பதற்கு அவர்கள் சிறந்த உதாரணம்.

வளநாடு சினி ரிலீஸ், கிரஸெண்ட் மூவீஸ், வச்சிர நாடு பிலிம்ஸ் , கிரவுன் அட்வைடைஸிங்  இவைகளும் திரைப்படத் துறையில் வெற்றிக்களம் கண்டன.

விநியோகத்திற்காக வாங்கும் படங்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி நடித்த படங்களாகவே இருக்கும். எம்.ஜி.ஆர்.,  சிவாஜி, படங்களைத் தவிர வேறு நடிகர்கள் நடித்த படங்களை வாங்க மாட்டார்கள். கையைக் கடித்துவிடும் என்பதால். 1970 – 1980 கால கட்டங்களில் தமிழகத்தில் வெளிவந்த ஏராளமான படங்கள் இவர்களின் தொடர்பு இல்லாமல் ‘ரிலீஸ்’ ஆனதில்லை.

திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் இவர்களின் விநியோகஸ்த நிறுவனங்கள் பரவலாக இருந்தன. திருச்சி பாலக்கரையில் உள்ள “வளநாடு சினி ரிலீஸ்” அலுவலத்திற்கும் மதுரையிலிருந்த “சேது பிலிம்ஸ்” அலுவலகத்திற்கும் நான் சென்றிருக்கிறேன்.

சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.

சேனா ஆனா, எம்.ஜி.ஆர்., நீதிபதி மு.மு.இஸ்மாயீல், யாசீன் காக்கா

மேற்கூறிய பல சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களின் பங்குதாரராக யாசீன் காக்காவும் இருந்தார்கள்.

பெரிய நடிகர்கள் இல்லாதபோதும், “யாருக்காக அழுதான்” படமெடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் படத்தயாரிப்புக்கும் வினியோகத்திற்கும் பணஉதவி புரிந்தவர் யாசீன் காக்கா.  பெருத்த நட்டம் அதில் ஏற்பட்டபோதும் அதைப்பற்றி சிறிதும் கவலையுறாது “வியாபாரத்தில் இதுவெல்லாம் சகஜம்” என்று கூறி தொடர்ந்து தன் பணியில் கவனம் செலுத்தியவர்.

நடிகர் கே.பாலாஜியின் “சுஜாதா சினி ஆர்ட்ஸ்” படங்களுக்கு பைனான்ஸ் செய்தது யாவுமே யாசீன் காக்காதான். அடிக்கடி எங்கள் பள்ளிக்கு அவர் வருவார். அவர் விநியோகம் செய்த திலிப் குமார் நடித்த “கோபி” இந்திப்படம், தயாரித்த எங்கிருந்தோ வந்தாள்”  போன்ற படங்களை PREVIEW THEATRE- ல் படம் வெளியாவதற்கு முன்னரே   பார்க்கின்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

எம்.ஜி.ஆர்.அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி  புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிகநெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதிதிரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.

“கல்வித் தந்தை” என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, சேனா அனா அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.

அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்கிறார்கள்.

unnamed

சேனா ஆனா குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆர். – ஜானகி

அதற்கு முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர் இவர்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் அவருக்கு ஒரு தொப்பியை அணிவித்திருக்கிறார். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக, முன்நெற்றியில் ஏறிக்கொண்டிருக்கும் தன் வழுக்கையை மறைப்பதற்கு, இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக இருந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம்.   அதேபோன்று கையோடு கைசேர்த்து, தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். 1. இரண்டாம் முறை பதவியேற்றபோது நீதிபதி மு.மு.இஸ்மாயில், 2. எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.

mgr

“சிரித்து வாழ வேண்டும் ” படத்தில் எம்.ஜி.ஆர்.

“ஜன்ஜீர்” என்ற இந்திப்படம் தமிழில் “சிரித்து வாழ வேண்டும்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அதில் பிரான் ஏற்று நடித்த முஸ்லீம் பாத்திரத்தில் மக்கள் திலகம் நடித்தார். தன் நண்பருக்கு விசுவாசம் காட்டும் விதத்தில் அந்த பாத்திரத்திற்கு அப்துல் ரஹ்மான் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.

அத்தோடு நிற்கவில்லை. பாடலாசிரியர் புலமைப் பித்தனை அழைத்து தன் நண்பரின் பெயர் வருமாறு பாட்டை அமைக்க உத்தரவிட்டார்.

மெல்லிசை மன்னர் இசையமைக்க, டி.எம்.எஸ். பாட ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற பாடலிது:

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்

அவனே அப்துல் ரஹ்மானாம்

ஆண்டான் இல்லை அடிமை இல்லை

எனக்கு நானே எஜமானாம்

உற்ற நண்பர் ஒருவருக்கு இதைவிட ஒரு அன்பான சமர்ப்பணம் வேறு என்ன செய்ய முடியும்..?

அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வரிகள் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இருவர்களுக்கும் இப்பவும் பொருந்தும்

வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா

உலகம் நினைக்க வேண்டும் ?

சொன்னான் செய்தான் ! என்றே நாளும்

ஊரார் சொல்ல வேண்டும் !!!

காலத்தால் அழியாத வரிகள் இவை. Hats-Off to புலமைப் பித்தன்.

“இதயக்கனி” மற்றும் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு பொருளாதார உதவி செய்தது பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்தான். கீழைநாடுகளில் அதற்கான தங்கும் வசதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி போன்றவைகள் பெற்றுத் தந்தது யாசீன் காக்கா அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் இவர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர்  “இதயம் பேசுகிறது” மணியன்.

அதற்கு முன்பு, மணியன் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்து பயணத் தொடர்கதை எழுதுவதற்கு அந்தந்த நாடுகளில் பலவகைகளிலும் உதவி செய்தவர்கள் இந்த கீழக்கரை பிரமுகர்கள். ஆனால் அவரது பயணத் தொடரில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதையும் மணியன் எழுதி வைத்ததாக எனக்கு நினைவில்லை.

1970-ஆம் ஆண்டில் “உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக “எங்கள் தங்கம்” படம் முடிந்த கையோடு புறப்பட வேண்டியிருந்தது. இங்கு அரசியல் சூழ்நிலையும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாசீன் காக்கா உறுதியளித்த பின்புதான் எம்.ஜி.ஆருக்கு உற்சாகமே பிறந்தது.

இந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது ஏன் அப்போது கடுமையான கோபம் கொண்டிருந்தார் என்பதற்கு காரணம் உள்ளது. அப்போது பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வாசித்தவர்களுக்கு நன்றாக நினைவிருக்கும்..

மூகாம்பிகை கோயிலில் எம்.ஜி.ஆர். தனக்கு மாலையிட்டு தன்னை மனைவியாக்கிக் கொண்டார் என்ற செய்தியை ஜெயா கசிய விட்டார். அதிர்ச்சியடைந்த வீரப்பன் இதனை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, கொதிப்படைந்து போன அவர் தன் சகாக்களுக்கு ஜெயலலிதாவை முற்றிலும் புறக்கணிக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு  கதாநாயகிகளாக மஞ்சுளா, லதா, சந்திரகலா ஆகியோர் தேர்வானபோது ஜெயலலிதா தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக பொங்கி எழுந்ததாகவும், விடாப்பிடியாக ஜெயலலிதா தன் தாயாருடன் ஜப்பான் புறப்பட்டுச் சென்றதாகவும், வீரப்பன் குழுவினர் அவரை எம்.ஜி.ஆருடன் சந்திக்க வாய்ப்பு தரவே இல்லை என்றும் அப்போதைய பத்திரிக்கைகள் “கிசுகிசு”க்களை அள்ளித் தெளித்தன. தான் நினத்ததை சாதித்துவிட வேண்டும் என்ற குணம் இயற்கையிலேயே இருந்ததை எல்லோரும் அறிவார்.

ஜெயா,  ஹாங்காங் வந்தால் அவரை யாரும் சந்திக்கவோ அவருக்கு வரவேற்போ அளிக்கக் கூடாது என்று யாசீன் காக்கா அவர்களுக்கு அன்புக்கட்டளை இட்டிருந்த செய்தியை அப்போது நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஹாங்காங்கில் ஜெயாவின் ரசிகர்கள் கூட்டம் சிறிய அளவில் ஒரு உணவகத்தில் தேநீர் விருந்து அளித்ததோடு சரி.  எம்.ஜி.ஆரின் உத்தரவு அங்கு நன்றாகவே வேலை செய்தது.

யாசீன் காக்கா, கலைஞர் அவர்களுக்கும் நெருக்கமாகவே இருந்தார். கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து. முரசொலி செல்வத்தை தயாரிப்பாளராக்கி, “அஞ்சுகம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் “பிள்ளையோ பிள்ளை” (1972)  படத்தை தயாரித்தபோது அதற்கான செலவு மொத்தம் 15 லட்சம்.

பிரபலமாகாத ஒரு புதுமுகத்தை  வைத்து எடுக்கும் ஒரு படத்திற்கு  யார்தான் தாமாகவே முன்வந்து பண முதலீடு செய்வார்கள்..?

இப்படத்திற்கான செலவை முன்கூட்டியே வழங்கி விநியோக உரிமையை பெற்றது கிரசெண்ட் மூவீஸ், சேது பிலிம்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ், ராசி அண்ட் கோ இந்த மூன்றும்தான். இந்த மூன்று நிறுவனங்களிலும் யாசீன் காக்கா அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தான சர்ச்சையில் துபாய் ETA நிறுவனத்தின் மேலாளர் சலாஹுத்தீன் அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற புகார் எழுந்தபோது,  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “பிள்ளையோ பிள்ளை” படம் எடுக்கப்பட்ட அந்தக் கால கதையை மறுபடியும் நினைவுபடுத்தி, சூசகமாகச் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை 2010-ஆம் ஆண்டு கோவை பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

ஜெயா இந்த கதையை இப்போது வெட்ட வெளிச்சம் ஆக்கியதற்கு பழைய “உலகம் சுற்றும் வாலிபன்” நிகழ்வும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, எத்தனையோ சாட்சிகளில்  யாசீன் காக்காவும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். உண்மையே பேசி பழக்கப்பட்ட யாசீன் காக்கா சர்க்காரியா கமிஷன் முன்பு வழங்கிய வாக்குமூலம் இதுதான்.

“சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன்.  எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”

அவரது இந்த வாக்குமூலம் அரசியல் வானில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது.  இச்செய்தி 31.03.2011 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் மாலைமலர் நாளிதழ்கள் வெளியிட்டு மீண்டும் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின.

ஒருமுறை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகன் திருமணைத்தின்போது கங்கை அமரனின் கச்சேரி ஏற்பாடு செய்யப்படிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது மக்கள் திலகம் வந்திருந்தார். வந்த சிறிது நேரத்திலேயே புறப்படவிருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து “கச்சேரி கேட்டுட்டு போங்களேன்” என்று கங்கை அமரன் சொல்ல,  “எவ்வளவு நேரம் கச்சேரி நடக்கும்?” என கேட்டிருக்கிறார். கங்கை அமரன் கையில் கைக்கடிகாரம் எதுவும் கட்டியிராததை கவனித்துவிட்டு, கங்கை அமரனின் கைகளை தாங்கிப் பிடித்த எம்.ஜி.ஆர். தனது வலது கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த “ஒமேகா” வாட்சை பரிசாக அளித்திருக்கிறார். ஒரு பேட்டியில் இன்னமும் பத்திரமாக அந்த கைக்கடிகாரத்தைப் பாதுகாக்கிறேன் என்று பெருமையாக கங்கை அமரன் கூறியிருக்கிறார்.

%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d

– — நாகூர் அப்துல் கையூம்

—– 27.10.2016

19 comments

  1. It is really interesting.. unheard news about Ponmana Chemmal
    MGR. Mr. Abdul should have more treasures in his kitties and I
    Am very much eager to read more about MGR et all. I’m waiting….
    #MUTHUMANI SHANMUGAN
    ATHAN, BANGALORE.
    Camp:Orlando.

    .

  2. நிறைவான நிகழ்வுகள் அடங்கிய பதிவு / பிரமிக்க வைக்கின்றது நீங்கள் சேகரிக்கும் செய்திகள்
    இதில் பல செய்திகள் நான் அறிவேன்

    “அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனை படுக்கையில் நான் கண்விழித்து பார்த்தபோது ஆறுதல் கூற என்னருகே இரண்டு ஆளுமைகள் வெகுநேரம் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கல்வித்தந்தை பி.எஸ்.ரஹ்மான் அவர்கள். மற்றொருவர் யாசீன் காக்கா அவர்கள். தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவர்கள் கருதினார்கள்.”

    1. அண்ணே.. ஒவ்வொரு முறையும் தாங்கள் அளிக்கும் உற்சாகம் என் எழுத்துக்களுக்கு உந்து சக்தி என்பது மறுக்க முடியாத உண்மை

  3. I am very eager to read this massage. Because of Bsa vaappa . Now I am as an electrical engineer in this everything given by AbdurRahman vappa and VNA Jalal sir . allah gives janah to both .inshaallah

  4. Since contributions of Muslims to the community delibratly avoided by governments & media, it is a DUTY for elders like you who are witnessed history to REGISTER in electronic media about the contributions of muslims in public domain…thank you for the article and we expect a lot from you sir..

  5. புதுப் புது செய்திகளுடன் நீங்கள் எதை எழுதினாலும் சுவராஸ்யமாக இருக்கிறது. தெளிவான நீரோட்டம் போன்ற உங்கள் எழுத்து நடை மிகவும் வசீகரமானது. தொடருங்கள்…தொடர்கின்றோம்….

  6. Financing film production and distribution from keelakarai. Merchants are similar to kozhikodu merchants who are still financing and distributing Malayalam films. But we were not aware of the fact Keelakarai merchants were closely associated with Tamil film industry. Similarly we were not aware of BSA family association with MGR
    Thank you for the historical facts.Those who know Janab BSA family will remember their silent contribution in all fields in Tamil Nadu .Hats off to them .

  7. It is a great collection of both the geat eminent figures in Tamilnadu. I had an opportunity to interact and travel with Yassin Kaka from Chennai to Mumbai may in the year 1988 or so. He stablished Pondicherry Oxygen co in Pondicherry. He would like to put a Dissolved acetylene plant there. Through some common frend he called me. I told him that I know the suppliers in Mumbai. But already they had received the quote from other supplier nemely Sanghi Orgnisation lead by Shri, M.K Sanghi. I said that did not matter we could go to him. So he took the flight ticket for me also and we both went to Mumbai. Mr. MK sanghi asked for full payment of money.. before shipment,
    Even though I told about the quality of Yasheen kaka’s honesty, keeping the promise etc Mr. M.K sanghi did not agree. Kaka told him that you send a small bolt and nut first to my address then I would pay the full advance.. Even he did not agree to supply the plant. Then Yassen Kaka asked me in Tamil whether any other supplier is there in Mumbai. I told him that his bother Mr. R.K sanghi was also manufcturing plants and Janab.(Late) Seyed Mohamed Maricar of London and me knew him very well. Then he bid good bye to M.K and I took him stright to Mr. R.K sanghi Residence at Napean sea road in Mumbai. He did not ask any advance and the payment can be made after the despatch and receipt of the plant at Pondi. He was very happy and ordered the plant.

    That was the occation where I learned lot about a business deal.The thing is that the judgement about the persons is very very important lesson one should know.which I learned from him.

    Hameed Sultan
    Kayalpatnam at present in Boisar Maharashtra .

  8. தயிருஞ்சோறும் மோருஞ்சோறும் உப்பு போடாம சாப்பிட்டவன் மணியன்… மற்றவர்களின் பணத்தில் இடைத்தரகு எனும் கமிஷன் வேலை பார்த்தவா…அவா… சுருக்கமாக சினிமா உலகில் மாமா வேலை பார்த்தவர்…அவா எப்படி வேற்று மதத்தவரின் சேலையை பார்ப்பனீய பத்திரிகையில் பிரசுரம் செய்வா?அப்பத்திரிக்கை ஆசிரியர் எப்படி ஏற்றுக்கொள்வார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s