நனவாகா கனவுகள்

dreams

கனவுகளை நான் சேகரிக்கிறேன்
சில்லறைகளாக ஓர் உண்டியலில்
சேமித்து வைக்கிறேன் ….
நாளை அவை ஒவ்வொன்றையும்
நோட்டுக்கட்டுகளாக உருமாற்றத்தான்.

சில்லறைகள் ஒவ்வொன்றையும்
உண்டியலில் இடுகின்ற போதும்
“கிளிங்ங்ங்…” என்ற உலோக சப்தம்
என் உள்ளத்தில் கிலுகிலுப்பை ஆட்டும்

உண்டியளுக்குள்தான்
எத்தனை விதமான கனவுகள்..?
பால்ய வயதுக் கனவுகள்..
இளம்பிராயத்துக் கனவுகள்..
வாலிபக் கனவுகள்..
குடும்பஸ்தனின் கனவுகள்….

ஒவ்வொரு கனவுகளும்
ஒவ்வொரு மாதிரி…
சதுரமான; தட்டையான; உருண்டையான
செம்பு, பித்தளை, ஈயக்காசுகளைப் போல

ஒருநாள் உண்டியலை
குலுக்கிப் பார்த்தேன்..
அப்பப்பா,,,
என்ன ஒரு கனம்..?
திருப்பதி உண்டியலாய். கனக்கிறது…

உடைக்கலாமா..? வேண்டாமா?
ஊஹூம்.. தள்ளிப் போட்டேன்

அதற்கென்று ஒருநாள் வரும்
அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்

பாழாய்ப்போன முதுமை
அதற்குள் வந்து விட்டது..

உண்டியலில் உள்ள
சில்லறைகளை மாற்ற
ஒருநாள் எடுத்துச் சென்றேன்.

எல்லாமே செல்லாக் காசாம்..
எல்லோரும் சொன்னார்கள்

நான்தான்
காலம் கடத்திவிட்டேனோ..?

…அப்துல் கையூம்

Leave a comment