இன்று எதிர்பாராதவிதமாக ”சிராஜுல் மில்லத் சிந்தனைகள்” என்ற தலைப்பில் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் தொகுத்த தலையணை சைஸ் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த வேளையில், இந்திராகாந்தி அவர்களுக்கும் அப்துல் சமது அவர்களுக்குமிடையே ஏற்பட்ட சந்திப்பின்போது ஏற்பட்ட (இந்த நேரத்திற்கு தேவைப்படும்) இந்த நிகழ்வு என் கண்ணில் பட்டது.:
சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் அவர்களின் எழுத்தில் சொல்லப்படும் இதோ அச்சம்பவம் :
முஸ்லீம்களுடைய தனியார் சட்டம் என்று சொல்லப்படும் ஷரீஅத் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென முஸ்லீம்களுக்கு விரோதமான ஒரு கூட்டத்தினர் இடைவிடாமல் முயன்று வருகின்றனர். இதற்கு இந்திரா காந்தி அம்மையார் இணங்காததைக் கண்ட சிலர், நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மறைமுகமான சில வழக்குகளைத் தொடர்ந்து, ஷரீஅத் சட்டத்திற்கு முரண்பட்ட தீர்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள்.
விவாக விலக்கு தரப்பட்ட பெண்ணுக்கு, “இத்தா” காலம் முடியும் வரை கணவன் சம்ரட்சணை தரவேண்டுமென்பதுதான் ஷரீஅத் சட்டம். ஆனால் அப்படி விவாகரத்து பெற்றுவிட்டாலும், அந்தப் பெண் மறுவிவாகம் செய்யும் வரை அல்லது இறந்து போகும் வரை சம்ரட்சணை தரவேண்டுமென உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு வழக்கில் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும் என “முஸ்லீம் பர்சனல் லா போர்டு” நிர்வாகக் குழுவில் முடிவு எடுத்தோம். ஆனால் அது நாடு பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த வேளை. பஞ்சாப் கலவரம் ஒருபுறம்; இலங்கை படுகொலை மற்றொருபுரம், நாடாளுமன்ற மக்கள் அவையில் அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்மொழியப் பட்டிருந்த நாள்.
என்றாலும் மாலை 5 மணிக்கு எங்களைச் சந்திக்க அம்மையார் நேரம் தந்திருந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் இலங்கை பிரச்சினை பற்றி மக்கள் அவையில் அவர் பதிலளிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் மக்கள் அவையில் அமர்ந்திருந்தோம். இலங்கை பற்றிய அறிக்கை தந்துவிட்டு எங்களைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் சரியாக 5 மணிக்கு இருக்கையிலிருந்து திடீரென தம் அறைக்கு விரைந்து சென்றார்கள். நாங்களும் அவர் பின்னால் ஓடினோம்.
பிரச்சினையை எடுத்துக் கூறிய போது ஒரு விநாடியில் புரிந்துக் கொண்டு, “அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஷரீஅத்தில் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ தலையிடவே மாட்டோம். இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் வந்த நிலை. இத்தகைய தீர்ப்புகளினால் நீங்கள் மட்டுமல்ல; அரசாங்கமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதற்காக அரசு சார்பாக செய்ய வேண்டிய முயற்சிகளை நான் செய்வேன்” என்று உறுதியளித்தார்கள்.
சிறுபான்மை மக்களுடைய குறைபாடுகளைப் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டபோதெல்லாம், மெத்தப் பரிவுணர்ச்சியோடு அவரைக்கேட்டு பரிகாரங்கள் செய்த எத்தனையோ நிகழ்ச்சிகளை நான் நினைவுகூற முடியும்.
“மணிவிளக்கு” – நவம்பர். 1984
பின்குறிப்பு:
ஒரு சில எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கிய இந்திரா காந்தி அம்மையார், குறித்த நேரத்தில் (இக்கட்டான அரசியல் சூழ்நிலையின் போதும்), அவையிலிருந்து எழுந்து போய் , அவர்களைச் சந்தித்து சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக பேசி ஆறுதல் அளித்தது ஒருபுறம்…………………
நாட்டையே உலுக்கும் காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுகவின் அத்தனை எம்.பி.க்களும் (A party with third largest number of MPs in the Parliament) பிரதமரைச் சந்தித்து முறையிட சென்றபோது அவர்களை சந்திக்கவும் வாய்ப்பளிக்காத மதிப்பிற்குரிய பிரதமர் மோடி மற்றொருபுறம். ………….
(அதே நாள் அல்லது அடுத்த நாள் கால் மேல் கால் போட்டு பேசிக்கொண்டிருக்கும் நடிகை காஜோலுடன் ஜாலியாக பிரதமர் அரட்டை அடித்துக் கொண்டிருந்த படமும் பத்திரிக்கையில் வெளியானது)
இந்த இரண்டு ஆளுமைகளின் பண்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
(பி.கு. நான் காங்கிரஸ்காரனோ அல்லது காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தையும் ஆதரிப்பவனோ கிடையாது)